Siva and Narayana! | Drona-Parva-Section-202 | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : துருப்புகளை மீண்டும் அணிதிரட்டிய அர்ஜுனன், அஸ்வத்தாமனிடம் கடுமொழியில் பேசியது; ஆக்னேயாஸ்திரத்தை அழைத்த அஸ்வத்தாமன்; இயற்கையில் தோன்றிய கடும் சகுனங்கள்; பாண்டவப் படைக்கு நேர்ந்த பேரழிவு; பிரம்மாஸ்திரத்தை அழைத்து அஸ்வத்தாமனின் ஆயுதத்தைக் கலங்கடித்த அர்ஜுனன்; இயற்கையின் இயல்பு நிலை திரும்புவது; ஆக்னேயாஸ்திரத்தால் எந்தப் பாதிப்பையும் அடையாமல் வெளிவந்த அர்ஜுனனும், கேசவனும்; மனத்தளர்வுற்ற அஸ்வத்தாமன் களத்தைவிட்டு ஓடுவது; வழியில் வியாசரைச் சந்தித்து, வெல்லப்பட முடியாத ஆக்னேயாஸ்திரத்தின் தோல்வியைக் குறித்து வினவுவது; நாராயணனின் வரலாற்றை அஸ்வத்தாமனுக்குச் சொன்ன வியாசர்; மகாதேவனைத் துதித்த நாராயணன்; நாராயணனில் இருந்து உண்டாக்கப்பட்ட நரன்; அர்ஜுனனும், கிருஷ்ணனும் நரநாராயணர்களே என்பதைச் சொன்ன வியாசர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அந்தப் படை பிளக்கப்பட்டதைக் கண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமனைக் கொல்லும் விருப்பத்தில் அவனை எதிர்த்துச் சென்றான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}!, பிறகு அந்தப் படையானது கோவிந்தன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் முயற்சியின் பேரில் அணிதிரட்டப்பட்டு, அந்தப் போர்க்களத்தில் நின்றது.(2) சோமகர்களாலும், மத்ஸ்யர்களாலும் ஆதரிக்கப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்} மட்டுமே, கௌரவர்கள் மீது தன் கணைகளை ஏவி அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தான்[1].(3)
[1] இங்கே பம்பாய் பதிப்பைப் பின்பற்றியிருப்பதாகக் கங்குலி விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "பீபத்சு ஒருவனே சோமகர்களைச் சேர்ந்த மண்டலாதிபர்களோடும், மச்ச நாடர்களோடும் இன்னும் மற்றவர்களோடும் சேர்ந்து கௌரவர்களைக் குறித்து (யுத்தத்திற்குத்) திரும்பினான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அர்ஜுனன் போரிடத் திரும்பினான் என்றே இருக்கிறது.
பெரும் வில்லாளியும், தன் கொடியில் சிங்கவால் குறியைக் கொண்டவனுமான அஸ்வத்தாமனை வேகமாக அணுகிய அர்ஜுனன் அவனிடம்,(4) "உம்மிடம் உள்ள உமது வலிமையையும், சக்தியையும், அறிவையும், ஆண்மையையும், தார்தராஷ்டிரர்கள் மீது நீர் கொண்ட பாசத்தையும், எங்களிடம் நீர் கொண்ட வெறுப்பையும், உமது உயர்ந்த திறனையும் இப்போது என்னிடம் காட்டுவீராக. துரோணரைக் கொன்ற பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னனே} கூட இன்று உமது செருக்கைத் தணிப்பான்.(5,6) யுக நெருப்புக்கு ஒப்பானவனும், தன் எதிரிகளுக்கு யமனைப் போன்றவனுமான அந்தப் பாஞ்சால இளவரசனோடும் {திருஷ்டத்யும்னனோடும்}, கோவிந்தனோடு {கிருஷ்ணனோடும்} கூடிய என்னோடும் இப்போது மோத வாரும். போரில் உமது செருக்கை நீர் வெளிப்படுத்தினீர், ஆனால் அந்த உமது செருக்கை நான் தணிப்பேன்" என்றான் {அர்ஜுனன்}.(7)
திருதராஷ்டிரன், "ஓ! சஞ்சயா, ஆசானின் {துரோணரின்} மகன் {அஸ்வத்தாமன்} வலிமைகொண்டவனும், மரியாதைக்குத் தகுந்தவனுமாவான். அவன் {அஸ்வத்தாமன்} தனஞ்சயனிடம் பெரும் அன்பைக் கொண்டிருக்கிறான், உயர் ஆன்ம தனஞ்சயனும் {அர்ஜுனனும்} பதிலுக்கு அவனிடம் அன்பையே கொண்டிருக்கிறான்.(8) அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, இவ்வாறு துரோணர் மகனிடம் இதற்கும் முன்பு பேசியதில்லை. அப்படியிருக்கையில், அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் நண்பனிடம் ஏன் இத்தகு கடும் வார்த்தைகளால் பேசினான்?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(9)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இளைஞனான சேதியின் இளவரசன், பூரு குலத்தின் பிருஹத்க்ஷத்திரன் {விருத்தக்ஷத்திரன்}, ஆயுத அறிவியலை நன்கு அறிந்தவனான மாலவர்களின் தலைவன் சுதர்சனன் ஆகியோரின் வீழ்ச்சி, திருஷ்டத்யும்னன், சாத்யகி மற்றும் பீமன் ஆகியோர் அடைந்த தோல்வி ஆகியவற்றால் பெரும் வலியை உணர்ந்தும், யுதிஷ்டிரனின் வார்த்தைகளால் முக்கிய அங்கம் {இதயம்} பிளக்கப்பட்டும், தன் முந்தைய துயரங்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தும், இவ்வாறான தன் துயரின் விளைவாலும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எழுந்த கோபத்தை அந்தப் பீபத்சு {அர்ஜுனன்} தன்னுள் உணர்ந்தான்.(11,12) இதன் காரணமாகவே அவன் {அர்ஜுனன்}, அனைத்து மரியாதைக்கும் தகுந்த ஆசான் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்}, தகுதியற்ற, அநாகரீகமான, கசப்பான, கடும் மொழியில் ஓர் அற்பனைப் போலப் பேசினான்.(13)
கோபத்திலிருந்த பார்த்தனால், குரூரமான கடுமொழியில் பேசப்பட்டவனும், வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்}, குறிப்பாகக் கிருஷ்ணனிடமும் மிகுந்த கோபம் கொண்டான். தன் தேரிலேயே உறுதியான தீர்மானத்துடன் நின்ற வீர அஸ்வத்தாமன், நீரைத் தொட்டு {ஆசமனீயம் செய்து},(14,15) தேவர்களாலும் தடுக்கப்பட்ட முடியாத ஆக்னேய ஆயுதத்தை அழைத்தான். பகைவீரர்களைக் கொல்பவனும் சினத்தால் நிறைந்தவனுமான அந்த ஆசான் மகன் {துரோணர் மகன் அஸ்வத்தாமன்}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதும் {அபிமந்திரணம் செய்யப்பட்டதும்}, புகையற்ற நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு கணையைக் கொண்டு, கண்ணுக்குப் புலப்படுபவர்களும், புலப்படாதவர்களுமான தன் எதிரிகள் அனைவரையும் குறிபார்த்து, அஃதை அனைத்துப் பக்கங்களிலும் ஏவினான்.(17) அப்போது ஆகாயத்தில் இருந்த அதனில் இருந்து அடர்த்தியான கணைமாரி வெளிப்பட்டது. நெருப்புத் தழல்களைக் கொண்ட அந்தக் கணைகள் அனைத்துப் பக்கங்களிலும் பார்த்தனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டன.(18)
ஆகாயத்தில் இருந்து விண்கற்கள் கீற்றுகளாக விழுந்தன. திடீரெனப் (பாண்டவப்) படையை அடர்த்தியான இருள் மறைத்தது. திசைப்புள்ளிகள் அனைத்தும் இருளால் சூழப்பட்டன.(19) ஒன்றாகத் திரண்ட ராட்சசர்களும், பிசாசங்களும் கடுமையாகக் கூச்சலிட்டன. மங்கலமற்ற காற்று வீசத்தொடங்கியது. அதற்கு மேலும் சூரியன் எந்த வெப்பத்தையும் அளிக்கவில்லை.(20) அனைத்துப் பக்கங்களிலும் அண்டங்காக்கைகள் கரைந்தன. குருதியைப் பொழிந்தபடியே ஆகாயத்தில் மேகங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. பறவைகள், விலங்குகள், பசுக்கள் ஆகியவையும், உயர்ந்த நோன்புகளைக் கொண்டவர்களும், ஆன்மாக்களை முழுமையாகக் கட்டுக்குள் வைத்தவர்களுமான முனிவர்களும் அமைதியை இழந்தனர்.(22) {பஞ்ச}பூதங்களே கூடக் குழப்பமடைந்தவை போலத் தென்பட்டன. சூரியனும் திரும்பியவன் போலத் தென்பட்டான். வெப்பத்தால் எரிந்த அண்டமே பிணியுற்றிருப்பதைப் போலத் தென்பட்டது.(23) அச்சமடைந்த யானைகளும், நிலத்தின் பிற உயிரினங்களும், அவ்வாயுதத்தின் சக்தியால் எரிக்கப்பட்டு, அந்தப் பயங்கர சக்தியை எதிர்க்கும் பாதுகாப்பை அடைய விரும்பி, நெடிய பெருமூச்சுவிட்டுக் கொண்டே ஓடின.(24) தண்ணீரும் வெப்பமடைந்ததால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பூதத்தில் {நீர் என்ற பூதத்தில்} வசிக்கும் உயிரினங்கள் அமைதியை இழந்து எரிவதாகத் தெரிந்தன.(25) முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும், ஆகாயத்திலும், பூமியிலும் இருந்து, கூரியவையும், கடுமையானவையுமான கணைகளின் மாரிகள் கருடன் அல்லது காற்றின் மூர்க்கத்துடன் வெளிப்பட்டுப் பாய்ந்தன.(26)
இடியின் மூர்க்கத்தைக் கொண்ட அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட பகைவீரர்கள் அனைவரும் காட்டுத்தீயில் எரிந்த மரங்களைப் போலக் கீழே விழுந்தனர்.(27) அவ்வாயுதத்தால் எரிக்கப்பட்ட பெரும் யானைகள், மேகங்களைப் போன்ற உரத்த முழக்கங்களோடும் பூமியில் எங்கும் விழுந்து கொண்டிருந்தன.(28) அந்நெருப்பால் எரிந்த இன்னுப் பிற பெரும் யானைகள், காட்டுத்தீயின் மத்தியில் அகப்பட்டவை போல, அச்சத்தால் பிளிறிக் கொண்டே அங்கேயும் இங்கேயும் ஓடின.(29) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தின் சக்தியால் எரிந்த குதிரைகளும், தேர்களும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காட்டுத்தீயில் எரிந்த மரங்களின் தலைகளைப் போலத் தெரிந்தன. உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யுக முடிவில் அனைத்தையும் எரிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போல, அந்தத் தெய்வீகத் தலைவன் அக்னியே அந்தப் போரில் (பாண்டவப்) படையை எரிப்பதைப் போலத் தெரிந்தது.(31)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் பாண்டவப் படை இப்படி எரிவதைக் கண்ட உமது வீரர்கள்,(32) மகிழ்ச்சியால் நிறைந்து உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர். உண்மையில் வெற்றியை விரும்பிய உமது படையின் போராளிகள், மகிழ்ச்சியால் நிறைந்து, ஆயிரக்கணக்கான பல்வேறு வகை எக்காளங்களை முழக்கினர். அந்தக் கடும்போரின் போது உலகையே இருள் மூடியதும், பாண்டுவின் மகனான சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} கூடிய மொத்த பாண்டவப் படையையே காண முடியவில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சந்தர்ப்பத்தில் கோபத்தால் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} உண்டாக்கிய அந்த ஆயுதத்தைப் போல இதற்கு முன்பு நாம் கேட்டதோ, பார்த்ததோ இல்லை. அப்போது அர்ஜுனன், ஓ! மன்னா, தாமரையில் பிறந்தவனால் {பிரம்மனால்} ஏற்கனவே விதிக்கப்பட்டது போலவே, பிற ஆயுதங்கள் அனைத்தையும் கலங்கடிக்கவல்ல பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். ஒரு கணத்திற்குள்ளாக அந்த இருள் விலகியது.(33-37)
குளிர்ந்த தென்றல் வீசத்தொடங்கியது. திசைப்புள்ளிகள் அனைத்தும் தெளிவடைந்து பிரகாசமாகின. (பாண்டவத் துருப்புகளின்) ஒரு முழு அக்ஷௌஹிணியும் தரையில் கிடக்கும் அற்புதக் காட்சியை நாங்கள் அப்போது கண்டோம்.(38) அஸ்வத்தாமனின் ஆயுத சக்தியால் எரித்துக் கொல்லப்பட்டவர்களின் வடிவங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. பிறகு, வலிமைமிக்க வில்லாளிகளான கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன் ஆகிய அவ்விரு வீரர்களும், இருளில் இருந்து விடுபட்டு ஆகாயத்தில் இருக்கும் சூரியனையும், சந்திரனையும் போல ஒன்றாகக் காணப்பட்டனர். உண்மையில் காண்டீவதாரி {அர்ஜுனன்} மற்றும் கேசவன் ஆகிய இருவரும் காயம்படாதவர்களாக இருந்தனர்.(39,40) கொடிகள், கொடிமரம், குதிரைகள் மற்றும் அனுஷ்கரங்களுடன் கூடியதும், உமது வீரர்களுக்கு அச்சத்தைத் தருவதுமான அந்தத் தேர் எந்தப் பழுதும் இல்லாமல் அந்த இருளில் இருந்து விடுபட்டுக் களத்தில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.(41)
மகிழ்ச்சியில் நிறைந்த பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில், விரைவில் சங்கு மற்றும் பேரிகைகளின் முழக்கங்களுடன் கலந்து பல்வேறு விதங்களிலான ஒலிகள் அங்கே எழுந்தன.(42) இரு படைகளுமே கேசவனும், அர்ஜுனனும் அழிந்துவிட்டதாகவே நினைத்திருந்தனர். எனவே, (அவ்வாயுதத்தின் சக்தியில் இருந்தும் அந்த இருளில் இருந்து விடுபட்ட) கேசவனையும், அர்ஜுனனையும் கண்டு, அவர்கள் வேகமாக மீண்டும் தோன்றியதைக் கண்டு, பாண்டவர்கள் மகிழ்ச்சியாலும், கௌரவர்கள் ஆச்சரியத்தாலும் நிறைந்தனர்.(43) காயம்படாதவர்களாக முழு மகிழ்ச்சியுடன் இருந்த அவ்விரு வீரர்களும் தங்கள் சிறந்த சங்குகளை முழக்கினர். உண்மையில், மகிழ்ச்சியால் நிறைந்த பார்த்தர்களைக் கண்ட உமது படைவீரர்கள் மிகுந்த மனச்சோர்வையடைந்தனர்.(44)
துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த உயர் ஆன்மாக்கள் (கேசவனும், அர்ஜுனனும்) இருவரும் (தன் ஆயுத சக்தியில் இருந்து) விடுபட்டத்தைக் கண்டு மிகவும் உற்சாகத்தை இழந்தான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, என்ன நடந்தது என்பதை அவன் ஒரு கணம் சிந்தித்தான்.(45) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்தித்த பிறகு அவன் {அஸ்வத்தாமன்} துயரத்தாலும், கவலையாலும் நிறைந்தவனானான். நீண்ட வெப்பப் பெருமூச்சுகளை விட்ட அவன் மிகவும் உற்சாகத்தை இழந்தவனானான்.(46) தன் வில்லைக் கீழே வைத்துவிட்டுத் தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே இறங்கிய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, “ஓ! ச்சீ ச்சீ!, யாவையும் மெய்க்குப் புறம்பானவையே” என்று சொல்லி, போரில் இருந்து ஓடினான். சரஸ்வதியின் வசிப்பிடமானவரும், வேதங்ளைத் தொகுத்தவரும், அந்தச் சாத்திரங்களின் வசிப்பிடமானவரும், பாவத்தின் களங்கமற்றவரும், மழை நிறைந்த மேகத்தன் வண்ணத்தைக் கொண்டவருமான வியாசரை அவன் {அஸ்வத்தாமன்} வழியில் சந்தித்தான்.(48)
குரு குலத்தைத் தழைக்க வைத்தவரான அவர் {வியாசர்}, தன் வழியில் நிற்பதைக் கண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துயரால் தடைபட்ட குரலுடன், மிகவும் உற்சாகமற்ற ஒருவனைப் போல அவரை {வியாசரை} வணங்கி, அவரிடம்,(49) “ஓ! ஐயா {வியாசரிடம்}, ஓ! ஐயா {வியாசரே}, இதுவும் ஒரு மாயையோ! (அவ்வாயுதத்தின்) உறுதியின்மையோ! இஃது என்னவென்று நானறியேன். உண்மையில், என் ஆயுதம் ஏன் கனியற்றதானது? (அவ்வாயுதத்தை அழைக்கும் முறையில்) என்ன அத்துமீறல் நடந்துவிட்டது?(50) அல்லது, இவர்கள் இன்னும் வாழ்வதால் இஃது ஏதும் இயல்பற்றதன்மையா? அல்லது (இரு கிருஷ்ணர்களாலும் அடையப்பட்ட) இயற்கையின் மீதான வெற்றியா? காலம் தவிர்க்கப்பட முடியாதது என்பது தெரிகிறது.(51) அசுரர்களாலோ, கந்தர்வர்களாலோ, பிசாசங்களாலோ, ராட்சசர்களாலோ, உரகர்கள், யக்ஷர்கள், பறவைகள் அல்லது மனிதர்களோ,(52) என்னால் ஏவப்படும் இவ்வாயுதத்தைக் கலங்கடிக்க முடியாது. இருப்பினும், இவ்வாயுதம் வெறும் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளையே கொன்று தணிவடையச் செய்யப்பட்டிருக்கிறது.(53) என்னால் ஏவப்பட்ட இந்த மிகவும் கடுமையான ஆயுதம் அனைத்து உயிரினங்களையும் கொல்லவல்லதாகும். அப்படியிருக்கையில், மனிதர்களின் குணங்களையே கொண்டிருக்கும் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் இதனால் கொல்ல முடியாத காரணம் என்ன?(54) ஓ! புனிதமானவரே {வியாசரே}, என்னால் கேட்கப்படுவதற்கு எனக்கு உண்மையாகப் பதிலுரைப்பீராக. ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, இவை யாவையும் நான் விவரமாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(55)
வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, “ஆச்சரியத்தால் என்னிடம் நீ விசாரிக்கும் இந்தக் காரியம் உயர்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். அனைத்தையும் நான் சொல்வேன், கவனமாகக் கேட்பாயாக.(56) நாராயணன் என்று எவன் அழைக்கப்படுகிறானோ, அவன் பழமையானவர்களை விட மிகப் பழமையானவன் ஆவான். ஏதோ சில காரியங்களைச் சாதிப்பதற்காக அந்த அண்டப் படைப்பாளன் {நாராயணன்}, தர்மனின் மகனாகத் தன் பிறப்பை அடைந்தான்.(57) இமய மலைகளில் அவன் {நாராயணன்} கடுமையான தவத்துறவுகளைச் செய்தான். வலிமையும், சக்தியும் கொண்டு, (காந்தியின்) நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான அவன் தன் கரங்களை உயர்த்தியபடி அங்கே நின்று கொண்டிருந்தான்.(58) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன், அறுபத்தாறாயிரம் {66,000} ஆண்டுகள் காற்றை மட்டுமே உண்டு உடல் மெலிந்தான்.(59) மீண்டும் அதைப் போல இரண்டு மடங்கு {1,32,000} காலம் மற்றொரு வகையிலான கடும் தவத்தைச் செய்த அவன், பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடைப்பட்ட வெளியைத் தன் சக்தியால் நிறைத்தான்.(60)
ஓ! ஐயா {அஸ்வத்தாமா}, அந்தத் தவங்களால், பிரம்மனைப் போல {பிரம்மஸ்வரூபி} [2] ஆன அவன் {நாராயணன்}, அப்போது, அண்டத்தின் தலைவனும், தோற்றுவாயானவனும், பாதுகாவலனும், தேவர்கள் அனைவரின் தலைவனும், உயர்ந்த தெய்வமும், பார்க்கப்பட மிகக் கடினமானவனும், நுண்ணியதைவிட நுண்ணியமானவனும், பெரியதை விடப் பெரியவனும்,(61,62) ருத்ரன் என்று அழைக்கப்படுபவனும், மேன்மையானவர்களின் தலைவனும், ஹரன் என்றும் சம்பு என்றும் அழைக்கப்படுபவனும், தன் தலையில் சடாமுடி தரித்தவனும், ஒவ்வொரு வடிவத்திலும் உயிரை உட்புகுத்துபவனும், அசையாத மற்றும் அசையும் பொருட்கள் அனைத்தின் முதற்காரணனும்,(63) தடுக்கப்பட முடியாதவனும், அச்சந்தரும் தன்மை கொண்டவனும், கடும் கோபமும் பெரும் ஆன்மாவும் கொண்டவனும், அனைத்தையும் அழிப்பவனும், பெரிய இதயம் கொண்டவனும், தெய்வீக வில்லையும், இரண்டு அம்பறாத்தூணிகளையும் கொண்டவனும், தங்கக் கவசம் பூண்டவனும், அளவிலா சக்தி படைத்தவனும்,(64) பினாகை, வஜ்ரம், சுடர்மிக்கத் திரிசூலம், போர்க்கோடரி, கதாயுதம், ஒரு பெரிய வாள் ஆகியவறைத் தரித்தவனும், அழகிய புருவங்களைக் கொண்டவனும், சடைதரித்த கூந்தல் கொண்டவனும், கனமான குறுங்கதாயுதம் {பரிகம்} தரிப்பவனும், நிலவைத் தன் நெற்றியில் கொண்டவனும், புலித்தோல் உடுத்தியவனும், தண்டாயுதம் தரித்தவனும்,(65) அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், புனித நூலாக {யக்ஞோபவீதமாக} பாம்புகளைக் கொண்டவனும், அண்டத்தின் பல்வேறு உயிரினங்களாலும், எண்ணற்ற பூதகணங்களாலும் சூழப்பட்டவனும், ஒருவனே ஆனவனும், தவத்துறவிகளின் வசிப்பிடமானவனும், வயதால் முதிர்ந்த மதிப்புக்குரிய மனிதர்களால் உயர்வாகப் புகழப்படுபவனும்,(66) நீர், சொர்க்கம், வானம், பூமி, சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு ஆகியவை ஆனவனுமான அண்டத்தின் கால அளவே ஆனவனை {சிவனைக்} கண்டான்.
[2] “ஒருவன் உலகத்தோடு தொடர்பில்லாமல் இருந்து, உலகத்தோடு தொடர்புடைய அனைத்திலும் மேன்மையாக எழும் நிலையே அது {பிரம்மம் ஆகுதல்} என்று இதற்குப் பொருள் கொள்கிறார் நீலகண்டர்” என்ற இங்கே விளக்குகிறார் கங்குலி.
தீய நடத்தை கொண்ட மனிதர்களால், பிராமணர்களை வெறுப்பவர்கள் அனைவரையும் கொல்பவனும், முக்தியை அளிப்பவனுமான [3] அந்தப் பிறவியற்றவனின் {சிவனின்} காட்சியைப் பெறவே முடியாது.(67) அறநடத்தை கொண்டவர்களும், பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவர்களும், துயர் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டவர்களுமான பிராமணர்களால் மட்டுமே அவனைத் {சிவனைத்} தங்கள் மனக்கண்ணால் காண முடியும். மங்காதவனும், அறத்தின் வடிவமும், புகழத்தக்கவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான அவனது {சிவனது} காட்சியைத் தன் தவத்துறவுகளின் விளைவால் நாராயணன் அடைந்தான். அனைத்து வகைப் பிரகாசங்களின் அந்த உயர்ந்த வசிப்பிடமானவனும், அக்ஷங்களைத் தன் கழுத்தில் மாலையாக அணிந்தவனுமான அந்தத் தேவனைக் கண்ட வாசுதேவன் {நாராயணன்}, நிறைவடைந்த ஆன்மாவுடன், மகிழ்ச்சியால் நிறைந்து, அதை வார்த்தைகள், இதயம், அறிவு மற்றும் உடல் ஆகியவற்றால் வெளிப்படுத்த முயன்றான். பிறகு அந்தத் தெய்வீகத் தலைவனை {சிவனை}, அண்டத்தின் முதல் காரணனை, வரங்களை அளிப்பவனை, அழகான அங்கங்கள் கொண்ட பார்வதியுடன் விளையாடும் பலமிக்கவனை, பூத கணங்களின் பெருங்கூட்டத்தில் சூழப்பட்ட அந்த உயர்ந்த ஆன்மாவை,(68-70), பிறப்பற்றவனை, உயர்ந்த தலைவனை, வெளிப்படாத வடிவத்தை, அனைத்துக் காரணங்களின் சாரத்தை, மங்காத சக்தி கொண்டவனை {சிவனை} நாராயணன் வழிபட்டான்.
[3] “அம்ருதஸ்ய யோனிம் Amritasya yonim என்று இருக்கிறது. இதற்கு, அழிவின்மையின் மூலம் அல்லது அழிவின்மையின் காரணன் என்றும், அஃதாவது, அழிவின்மையில் உதித்தவன் என்றும் பொருளைக் கொள்ளலாம். எனவே, நீலகண்டரால் விளக்கப்பட்டுள்ளபடி, இந்த வரி ’விடுதலையடைந்து {முக்தி}, பரமாத்மாவைப் போல அழிவற்றவர்கள் ஆவோருக்கு விடிவுக்காலத்தின் தொடக்கமாக இருக்கும் நிலை’ என்பதையே சொல்கிறது” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
அசுரன் அந்தகனை அழித்தவனான ருத்ரனை {சிவனை} வணங்கிய தாமரைக் கண்ணன் நாராயணன், அர்ப்பணிப்பால் தன் இதயத்தை நிறைத்து, அந்த முக்கண்ணனை (இவ்வார்த்தைகளால்) துதிக்கத் தொடங்கினான்:(71) “ஓ! புகழத்தக்கவனே, ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, உமது முதல் படைப்பான பூமிக்குள் நுழைந்து அதைக் காத்தவர்களும், லோகபாலர்களுமான அனைத்தையும் படைப்பவர்கள் (பிரஜாபதிகள்) அனைவரும் உன்னில் இருந்தே எழுந்தனர்.(72) தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், ராட்சசர்கள் மற்றும் பிற உயிரினங்களோடு கூடிய மொத்த அண்டமும் உன்னில் இருந்தே எழுந்தன என்பதை அறிவோம்.(73) இந்திரன், யமன், வருணன், குபேரன், பித்ருக்கள், தாஷ்டிரி, சோமன் ஆகியோரை நிறைவுகொள்ளச் செய்யப்படும் அனைத்தும் உண்மையில் உனக்கே காணிக்கையளிக்கப்படுகின்றன. வடிவம் மற்றும் ஒளி, ஒலி மற்றும் வானம், காற்று மற்றும் தீண்டல், சுவை மற்றும் நீர், நறுமணம் மற்றும் பூமி[4],(74) காலம், பிரம்மன், வேதங்கள், பிராமணர்கள், இந்த அசையும் மற்றும் அசையாத பொருட்கள் யாவும், உன்னில் இருந்தே எழுந்தன. பல்வேறு நீர் கொள்ளிடங்களில் இருந்து எழும் ஆவிகளே {நீராவிகளே} மழைத்துளிகளாகி பூமியில் விழுந்து ஒன்றிலிருந்து ஒன்று பிரிகின்றன. பிரளயத்தின் போது ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிக்கப்பட்ட அந்தத் தனிப்பட்ட துளிகளே மீண்டும் இணைந்து, இந்தப் பூமியில் பெரும் நீர்ப்பரப்பாகின்றன[5].(75) இவ்வாறே அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும், அழிவையும் நோக்கும் கல்விமான், உன் ஒருமையைப் புரிந்து கொள்கிறான். இரண்டு பறவைகள் (ஈஸ்வரன் மற்றும் ஜீவன்), நான்கு அஸ்வதங்கள் {அரச மரங்கள்}, வார்த்தைகளாலான அவற்றின் கிளைகள் (வேதங்களும், அதன் கிளைகளும்)[6], ஏழு பாதுகாவலர்கள் (ஐம்பூதங்கள், இதயம் மற்றும் அறிவு)[6](76) ஆகியவையும், இந்நகரத்தைத் தாங்கும் வேறு பத்தும் (இந்த உடலில் உள்ள பத்து புலன்களும்) உன்னால் படைக்கப்பட்டவையே எனினும், அவற்றில் இருந்து தனித்தும், அவற்றின் சார்பும் இல்லாதவன் நீயே[7]. எவரும் எந்த ஆதிக்கமும் செலுத்த முடியாத கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியையும், ஏழு உலகங்களும், இந்த அண்டமும் ஆனவன் நீயே.(77) அர்ப்பணிப்புள்ள உமது புகழ்பாடியான என்னிடம் நீ அருள்கூர்வாயாக. என் இதயத்தில் தீய எண்ணங்களை உண்டாக்கி என்னைக் காயப்படுத்தாமல் இருப்பாயாக. ஆன்மாக்களின் ஆன்மாவான நீ அறியப்பட இயலாதவனாக இருக்கிறாய். அண்ட விதையாக உன்னை எவன் அறிவானோ அவன் பிரம்மத்தை அடைகிறான்.(78) ஓ! தேவர்களாலேயே புரிந்து கொள்ளப்பட முடியாதவனே, உன்னை வழிபடவிரும்பி உண்மையான உன் இயல்பை உறுதிசெய்யும் முயலும் நான் {நாராயணனாகிய நான்} உன்னைத் துதிக்கிறேன். என்னால் துதிக்கப்படும் நீ, அடைவதற்கரிதானவையும், நான் விரும்புபவையுமான வரங்களை எனக்கு அளிப்பாயாக. உன் மாயையில் உன்னை மறைத்துக் கொள்ளாதே {கபடம் செய்யாதே}” என்று வேண்டினான் {நாராயணன்}.(79)
[4] “ஐந்து புலன்களால் உணரப்படும் ஐந்து {புலன்நுகர்} தன்மைகள், அவைகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் இயற்கையான ஐம்பூதங்களிலேயே வெளிப்படுகின்றன என்பது பொருள்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.[5] வேறொரு பதிப்பில், “ஸமுத்திர ஜலத்தினின்று நீர்த்திவலைகள் எவ்வாறு வெளிப்பட்டு வேற்றுமையடைந்து, பிரளயகாலத்தில் எவ்வாறு மறுபடியும் அந்த ஸமுத்திரஜலத்தோடேயே ஒன்று சேர்கின்றனவோ அவ்வாறு கற்றறிந்தவர்கள் உம்மிடத்தினின்றே பிரபஞ்சத்தினுடைய உத்பத்தியையும் லயத்தையும் அறிகிறார்கள்” என்றிருக்கிறது.[6] வேறொரு பதிப்பில், “கீழாகப் பரவிச் செல்லுகின்ற கிளைகளோடு கூடிய ஸம்ஸாரரூபமான அரசமரமானது” என்றிருக்கிறது.[7] வேறொரு பதிப்பில், “வஸை, மாம்ஸம், ருதிரம், மேதஸ், மஜ்ஜை, அஸ்தி, சுக்லம்” என்று இவை விளக்கப்படுகின்றன.
வியாசர் {அஸ்வத்தாமனிடம்} தொடர்ந்தார், “அறியமுடியாத ஆன்மா கொண்டவனும், நீலத் தொண்டை கொண்ட தேவனும், பினாகைதாரியும், முனிவர்களால் எப்போதும் புகழப்படுபவனுமான அந்தத் தெய்வீகத் தலைவன் {சிவன்}, வரங்கள் அனைத்திற்கும் தகுந்தவனான வாசுதேவனுக்கு {நாராயணனுக்கு} வரங்களை அளித்தான்.(80) அந்தப் பெரும் தேவன் {சிவன் நாராயணனிடம்}, “ஓ! நாராயணா, என்னருளால், மனிதர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோருக்கு மத்தியில் நீ அளவிலா வலிமையும், ஆன்மாவும் கொண்டவனாக இருப்பாய். தேவர்களாளோ, அசுரர்களாலோ, பெரும் உரகர்களாலோ, பிசாசங்களாலோ, கந்தர்வர்களாலோ, மனிதர்களாலோ, ராட்சசர்களாலோ, பறவைகளாலோ, நாகர்களாலோ, அண்டத்தில் உள்ள எந்த உயிரினத்தாலோ உன் ஆற்றலைத் தாங்கிக் கொள்ள முடியாது. தேவர்களில் எவராலும் கூட உன்னைப் போரில் வெல்ல முடியாது.(81,83) என்னருளால், ஆயுதத்தாலோ, இடியாலோ, நெருப்பாலோ, காற்றாலோ, ஈரமான அல்லது உலர்ந்த எந்தப் பொருளாலோ, அசையும், அல்லது அசையாத எந்தப் பொருளாலோ எவராலும் உனக்கு எந்த வலியையும் உண்டாக்க முடியாது. எப்போதாவது என்னோடு நீ போரிட்டாலும், என்னிலும் மேன்மையானவனாகவே நீ இருப்பாய்” என்றான் {சிவன்}.(84,85) இவ்வாறே பழங்காலத்தில் சௌரியால் {நாராயணனால்} இவ்வரங்கள் அடையப்பட்டன. அந்தத் தேவனே {நாராயணனே}, தனது மாயையால் அண்டத்தை மயக்கி, இப்போது பூமியில் (வாசுதேவனாக) நடந்து கொண்டிருக்கிறான்.(86)
நாராயணனின் தவத்தால் நரன் என்ற பெயர் கொண்டவனும், நாராயணனுக்கே இணையானவனுமான ஒரு பெரு முனிவன் பிறந்தான். அர்ஜுனன், அந்த நரனே அன்றி வேறொருவனும் அல்ல என்பதை அறிந்து கொள்வாயாக.(87) பழமையான தேவர்களிலும் பழமையானவர்கள் என்று சொல்லப்படும் அந்த முனிவர்கள் இருவரும் {நாராயணனும்- நரனும்}, உலகக் காரியங்களுக்கு உதவி செய்வதற்காக யுகம்தோறும் பிறக்கின்றனர்.(88) ஓ! பெரும் இதயம் கொண்டவனே {அஸ்வத்தாமா}, நீயும் கூட உன் அறச்செயல்கள் அனைத்தின் விளைவாலும், உயர்ந்த தவத்துறவுகளின் விளைவாலும், பெரும் சக்தியும், கோபமும் கொண்ட ருத்ரனின் ஒரு பாகமாகவே பிறந்திருக்கிறாய்.(89) (முந்தைய வாழ்வில்) நீ பெரும் ஞானம் கொண்டவனாகவும், தேவனுக்கு இணையானவனாகவும் இருந்தாய். இந்த அண்டம் மகாதேவனை மட்டுமே கொண்டது என்று கருதிய நீ, அந்தத் தேவனை நிறைவு செய்யும் விருப்பத்தால் பல்வேறு நோன்புகளை மேற்கொண்டு உன்னை இளைத்துக் கொண்டாய் {மெலிதாக்கிக் கொண்டாய்}.(90) பெரும் காந்தியுடன் சுடர்விட்ட ஒரு மேன்மையான மனிதனின் வடிவத்தை ஏற்ற நீ, ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமனே}, மந்திரங்களாலும், ஹோமங்களாலும், காணிக்கைகளாலும் அந்தப் பெரும் தேவனை வழிபட்டாய்.(91) முந்தைய வாழ்வில் உன்னால் இப்படி வழிபடப்பட்ட அந்தப் பெரும் தேவன் {ருத்ரனாகிய சிவன்}, ஓ! கற்றவனே, உன்னில் மனநிறைவு கொண்டு, உன் இதயத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் எண்ணற்ற வரங்களை உனக்கு அளித்தான்.(92)
கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனைப் போலவே உன் பிறப்பு, செயல்கள் மற்றும் தவத்துறவுகள் ஆகியவையும் மேன்மையானவையே. அவர்களைப் போலவே, ஒவ்வொரு யுகத்திலும் நீயும் உன் வழிபாட்டில் அந்தப் பெருந்தேவனை {சிவனை} அவனது லிங்க வடிவில் துதிக்கிறாய்.(93) ருத்ரனில் இருந்து உதித்த இந்தக் கேசவனே {கிருஷ்ணனே}, அர்ப்பணிப்புள்ள ருத்ர வழிபாட்டாளனாவான். அவனது {சிவனது} லிங்க சின்னத்தையே அண்டத்தின் தோற்றமாகக் கருதும் கேசவன் {கிருஷ்ணன்}, எப்போதும் தலைவன் சிவனை வழிபட்டுக் கொண்டிருக்கிறான்.(94) அண்டத்துடன் கூடிய பிரம்மத்தின் அடையாளத்தைக் காணக்கூடியதும், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், அருகில் நடப்பவை, தொலைவில் நடப்பவை ஆகிய அனைத்தையும் தன் கண் முன்பாகக் காண்பதைப் போலவே அவனைக் காணச் செய்யும் அந்த அறிவு கேவசனில் {கிருஷ்ணனில்} எப்போதுமே நிலைத்திருக்கும். அண்டத்தில் உயர்ந்த மகாதேவனையே {சிவனையே} அடைந்ததால் தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும் கேசவனைத் {கிருஷ்ணனைத்} துதிக்கின்றனர். அழிவற்றவனான கிருஷ்ணன் வேள்விகளுடன் வணங்கப்பட வேண்டியவனாவான்.(95,96) தலைவன் கேசவன் {கிருஷ்ணன்} எப்போதும் சிவனை உயிரினங்கள் அனைத்தின் தோற்றமாகக் கொண்டு லிங்கச் சின்னத்திலேயே வழிபடுகிறான். காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தேவனும் {சிவனும்}, கேசவனை {கிருஷ்ணனை} உயர்வாக மதிக்கிறான்” என்றார் {வியாசர்}.(97)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “வியாசரின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ருத்திரனை வணங்கி, உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தவனாகக் கேசவனைக் {கிருஷ்ணனைக்} கருதினான்.(98) தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்ட அவன் {அஸ்வத்தாமன்}, மகிழ்ச்சியால் நிறைந்ததும், அவனது உடலில் அந்த அடையாளங்கள் தோன்றின {மயிர்ச்சிலிர்ப்பு ஏற்பட்டது}. அந்தப் பெரும் முனிவரை {வியாசரை} வணங்கிய அஸ்வத்தாமன், (குரு) படையின் மீது தன் கண்களைச் செலுத்தி, (இரவு ஓய்வுக்காக) அவற்றைத் திரும்ப அழைக்கச் செய்தான்.(99) உண்மையில், துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு, உற்சாகமற்ற குருக்கள் களத்தில் இருந்து ஓய்ந்த பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும் தங்கள் படைகளைத் திரும்ப அழைத்தனர்.(100) வேதங்களை நன்கறிந்த பிராமணரான அந்தத் துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து நாட்கள் போரிட்டு பேரழிவை ஏற்படுத்திவிட்டுப் பிரம்மலோகத்தை அடைந்தார்” {என்றான் சஞ்சயன்}.(101)
--------------------------------------------------------------------------------துரோணபர்வம் பகுதி 202-ல் உள்ள சுலோகங்கள் : 101
ஆங்கிலத்தில் | In English |