The car of Siva! | Karna-Parva-Section-34a | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : திரிபுரவாசிகளைக் கொல்ல சிவனைத் துதித்த பிரம்மன்; ஒற்றுமையாக இருக்கும் தங்கள் பலத்தில் பாதி அளவைக் கொண்டு அசுரர்களைக் கொல்ல சிவனை வேண்டிய தேவர்கள்; மஹாதேவன் என்று சிவன் அழைக்கப்படுவதற்கான காரணம்; போரிடத் தகுந்த தேர், வில் மற்றும் கணையை உண்டாக்குமாறு தேவர்களைப் பணித்த சிவன்; மூவுலகங்களின் பகுதிகள் அனைத்தையும் கொண்டு, விஸ்வகர்மனின் கைவண்ணத்தால் தேவர்கள் உண்டாக்கிய தேர், வில் மற்றும் கணை; தேரில் ஏறிய சிவன், தனக்குச் சாரதி யார் எனக் கேட்டது...
துரியோதனன் {சல்லியனிடம்}, “அந்த உயர் ஆன்ம தேவனால் {சிவனால்}, பித்ருக்கள், தேவர்கள் மற்றும் முனிவர்கள் கூட்டத்தின் அச்சங்கள் இவ்வாறு விலக்கப்பட்ட பிறகு, பிரம்மன், அண்டத்தின் நன்மைக்காக இவ்வார்த்தைகளால் சங்கரனை {சிவனைத்} துதித்தான்:(1) “ஓ! அனைவரின் தலைவா, உன்னருளால், உயிர்கள் அனைத்தின் தலைமையும் எனதாகியது. அந்தப் பதவியை அடைந்த நான் தானவர்களுக்குப் பெரும் வரத்தை அளித்துவிட்டேன்.(2) ஓ! கடந்த காலம் மற்றும் எதிர் காலங்களின் தலைவா, எவருக்கும் எம்மதிப்பையும் காட்டாத அந்தத் தீய அற்பர்களை அழிக்கும் வல்லமை உன்னைத்தவிர வேறு எவருக்கும் தகாது. ஓ! தேவா, உன் பாதுகாப்பை நாடுபவர்களும், உன்னை வேண்டுபவர்களுமான இந்தச் சொர்க்கவாசிகளின் எதிரிகளைக் கொல்லத்தகுந்த ஒரே ஒருவன் நீயே. ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, இவர்களுக்கு உன் அருளைத் தருவாயாக. ஓ! திரிசூலம் தரித்தவனே, தானவர்களைக் கொல்வாயாக.(3,4) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, உன் அருளால் அண்டம் மகிழ்ச்சியை அடையட்டும். ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவா, தஞ்சம் அளிப்பவன் எவனோ, அவன் நீயே. நாங்கள் அனைவரும் உன்னைத் தஞ்சமடைந்தோம்” என்றான் {பிரம்மன்}.(5)
ஸ்தாணு {சிவன்}, “உங்கள் எதிரிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். எனினும், தனியொருவனாக அவர்களை நான் கொல்லத் துணியேன். தேவர்களின் எதிரிகள் வலிமையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(6) எனவே, நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து என் வலிமையில் பாதியைக் கொண்டு உங்கள் எதிரிகளைப் போரில் எரிப்பீராக. ஒற்றுமையே பெரும்பலமாகும்” என்றான்.(7)
தேவர்கள் {சிவனிடம்}, “நாங்கள் ஏற்கனவே அவர்களது சக்தியையும், வலிமையையும் கண்டிருப்பதால், அவர்கள் சக்தியிலும், வலிமையிலும் எங்களைவிட இருமடங்கு அதிகமானவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றனர்.(8)
அதற்கு அந்தப் புனிதமானவன் {சிவன்}, “உங்களுக்கு எதிராகக் குற்றமிழைத்த அந்தப் பாவம் நிறைந்த அற்பர்கள் கொல்லப்பட வேண்டும். என் சக்தியிலும், வலிமையிலும் பாதியைக் கொண்டு அந்த உங்கள் எதிரிகள் அனைவரையும் கொல்வீராக” என்றான்.(9)
தேவர்கள் {சிவனிடம்}, “ஓ! மஹேஸ்வரா, உன் சக்தியில் பாதியை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. மறுபுறம், ஒற்றுமையுடன் உள்ள எங்களின் வலிமையில் பாதியைக் கொண்டு எங்கள் எதிரிகளை நீயே கொல்வாயாக” என்றனர்.(10)
அந்தப் புனிதமானவன் {சிவன்}, “உண்மையில் என் வலிமையில் பாதியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், ஒற்றுமையாக இருக்கும் உங்கள் சக்தியில் பாதியைக் கொண்டு நான் அவர்களைக் கொல்வேன்” என்றான்.(11)
துரியோதனன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “பிறகு தேவர்கள், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {சல்லியரே}, அந்தத் தேவர்களின் தேவனிடம் {சிவனிடம்} “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். அவர்கள் அனைவரிடம் இருந்தும் அவர்களது பாதிச் சக்தியை எடுத்துக் கொண்ட அவன், வலிமையில் மேன்மையானவன் ஆனான்.(12) உண்மையில், அந்தத் தேவன், அண்டத்தில் உள்ள அனைவருக்கும் வலிமையில் மேன்மையானவனாக ஆனான். அந்நேரத்தில் இருந்துதான் சங்கரன் மஹாதேவன் {பெருந்தேவன்} என்று அழைக்கப்பட்டான்.(13)
அப்போது மகாதேவன், “சொர்க்கவாசிகளே, வில்லையும், கணையையும் தரித்து என் தேரில் இருந்து கொண்டு, உங்கள் எதிரிகளான அவர்களைப் போரில் நான் கொல்வேன்.(14) எனவே, தேவர்களே, இந்த நாளே நான் அசுரர்களைப் பூமியில் வீழ்த்துமாறு, இப்போது எனக்குத் தேரையும், வில்லையும், கணையையும் ஏற்படுத்துவீராக” என்றான்[1].(15)
[1] வேறொரு பதிப்பில் இன்னும் விவரமாக இருக்கிறது. அது பின்வருமாறு, “என்னுடைய தேஜஸைத் தரிப்பதற்கு நீங்கள் சக்தியற்றவர்களாய் இருப்பீர்களேயாகில், நானே உங்களுடைய தேஜஸிற்பாதியோடு கூடியவனாக இந்தச் சத்துருக்களைக் கொல்லுவேன். தேவர்களே, நீங்கள் அனைவர்களும் ஒன்று சேர்ந்து என் பத்திற் பாதியை யுத்தத்தில் தாங்குவதற்கு சக்தியற்றவர்களாயிருப்பீர்களானால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அஸுரர்களும், தேவர்களுமான எல்லோரும் எனக்குச் சமம். தேவர்களே, நான் எல்லாப் பிராணிகளுக்கும் மங்களத்தை உண்டுபண்ணுகிறவனாய் இருக்கிறேன். அதனாலேதான் எனக்குச் சிவத்தன்மை. ஆனால், அந்தத் தேவச் சத்ருக்கள் அதர்மத்துடன் இருக்கின்றார்கள். அதனாலும் உங்களுக்கு ஹிதத்தைச் செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தினாலும் என்னால் அவர்கள் கொல்லத்தக்கவர்கள். என்னைச் சரணமடைந்தவர்களும், கருமத்தினால் ஜயம்பெற விருப்பமுள்ளவர்களுமான உங்களுக்கு யான் உதவிபுரியப் போகின்றேன். உங்களுடைய பகைவர்களைக் கொல்லப் போகிறேன். எல்லாத் தேவர்களும் தனித்தனியாகப் பலத்தில் பப்பாது எனக்குக் கொடுங்கள். துன்பத்தை அடைவிக்கபடுபவர்களான எல்லாப்பிராணிகளும் எனக்குப் பசுவாயிருக்கும் தன்மையை ஏற்படுத்திக் கொள்ளட்டும். தேவர்களே, பசுக்களுக்குப் பதியாயிருக்குந்தன்மையானது இப்பொழுது எனக்கு உண்டாகுக. இவ்வாறு தேவச்சத்துருக்களான பசுக்களைக் கொன்றும் நான் பாபத்தையடையமாட்டேன். திவ்யமான பதத்தையும் செல்லக்கூடிய தேர்க்குதிரைகளையும் வில்லையும் அம்பையும் சாரதியையும் ஏற்படுத்துங்கள். அந்த ஸர்க்கனங்களால் உங்களுடைய சத்துருக்களை நான் ஜயிப்பேன்” என்று கூறியதாக இருக்கிறது.
தேவர்கள், “ஓ தேவர்களின் தலைவா, மூவுலகங்களில் காணப்படும் வடிவங்கள் அனைத்தையும் திரட்டி, அவை ஒவ்வொன்றின் பகுதிகளை எடுத்துக் கொண்டு, பெரும் சக்தி கொண்ட ஒரு தேரை நாங்கள் உனக்கு அமைப்போம்.(16) விஸ்வகர்மனின் கைவண்ணத்தில், பெரும் நுண்ணறிவுடன் வடிமைக்கப்பட்ட பெரும் தேராக அஃது இருக்கும்” என்றனர். இதைச் சொன்ன அந்தத் தேவப்புலிகள், அந்தத் தேரைக் கட்டத் தொடங்கினர்.(17) மேலும் அவர்கள், அந்தச் சங்கரன் பயன்படுத்தும் கணையாக விஷ்ணு, சோமன் {சந்திரன்} மற்றும் ஹுதாசனன் {அக்னி} ஆகியோரைச் செய்தனர். ஓ! மன்னா {சல்லியரே}, கணைகளில் முதன்மையான அந்தக் கணையின் கைப்பிடியாக அக்னியும், தலையாகச் சோமனும், முனையாக விஷ்ணுவும் ஆகினர்.(18) பெரும் நகரங்கள், பட்டணங்கள், மலைகள், காடுகள், தீவுகள் ஆகியவற்றுடன் கூடியவளும், பல்வேறு உயிரினங்களுக்கு வீடானவளுமான பூமாதேவியே தேராக்கப்பட்டாள்.
மந்தரமலை அதன் அச்சாணியாக்கப்பட்டது; பெரும் ஆறான கங்கை[2] ஜங்கமானது {பக்கத்தடுப்புகள்}; முக்கிய மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகள் அந்தத் தேரின் ஆபரணங்களாகின.(20) நட்சத்திரக்கூட்டங்கள் அதன் சுழல்தண்டாகியது; கிருத யுகம் அதன் நுகத்தடியானது; பாம்புகளில் சிறந்த வாசுகி அந்தத் தேரின் கூபரம் ஆனான்.(21) இமய மற்றும் விந்திய மலைகள் அபஸ்கரம் மற்றும் அதிஷ்தானங்களாகின {தேரின் பாகங்களாகின}; உதய மற்றும் அஸ்த மலைகள், தேவர்களில் முதன்மையான அந்தத் தேவனின் {சிவனின்} தேருடைய சக்கரங்களாகின.(22) தானவர்களின் வசிப்பிடமான சிறந்த பெருங்கடலை அதன் மற்றொரு அச்சாணியாக அவர்கள் ஆக்கினார்கள். ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, அந்தத் தேரின் சக்கரங்களுக்குப் பாதுகாவலர்களானார்கள்.(23) கங்கை, சரஸ்வதி, சிந்து, வானம் ஆகியன அதன் துரமாக {தேரின் பகுதிகள்} ஆகின; பிற ஆறுகள் அனைத்தும் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும், அந்தத் தேரின் அங்கங்கள் {பகுதிகளை} பலவற்றைக் கட்டும் கயிறுகளாகின.(24) பகல், இரவு, காலத்தின் பல பிரிவுகளான கலைகள், காஷ்டைகள், பருவங்கள் ஆகியன அதன் அனுஷ்கரமாகின. சுடர்மிக்கக் கோள்களும், நட்சத்திரங்களும் அதன் மரத்தடுப்புகளாகின.(25)
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இது மஹாநதி என்று குறிப்பிடப்பட்டு அடைப்புக்குறிக்குள் கங்கை சொல்லப்பட்டிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் இங்கே மகாநதி என்ற ஆறே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே சரியாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் பின்னர் வரும் விவரிப்பில் மீண்டும் கங்கை சொல்லப்படுகிறது.
அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்று கலந்து அதன் திரிவேணுவாகின {தேரின் பகுதிகளை இணைக்கும் மூங்கில் கழிகள்}. மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்ட செடிகொடிகள் அதன் மணிகளாகின.(26) சூரியனும், சந்திரனும் சமமாக்கப்பட்டு, அவை அந்தத் தேர்களில் முதன்மையான தேரின் (வேறு இரண்டு) சக்கரங்களாகின. பகலும், இரவும் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உள்ள அதன் மங்கலமான சிறகுகளாகின.(27) திருதராஷ்டிரனை முதன்மையாகக் கொண்ட பத்து முதன்மையான பாம்புகள் அத்தனையும், அந்தத் தேரின் (மற்றொரு) சுழல்தண்டாகின. வானம் அதன் (மற்றொரு) நுகத்தடியாக்கப்பட்டது, சம்வர்த்தகம், வலாகம் என்று அழைக்கப்படும் மேகங்கள், அந்த நுகத்தடியின் தோல் இழைகளாகின. இரு சந்திப் பொழுதுகளும், திருதி, மேதை, ஸ்திதி, சந்நதி,[3] கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் விரவிக் கிடக்கும் ஆகாயம் ஆகியன அந்தத் தேரை மறைக்கும் தோல்களாகச் செய்யப்பட்டன. தேவர்கள், நீர்நிலைகள், இறந்தோர் மற்றும் பொக்கிஷங்கள் ஆகியவற்றுக்குத் தலைவர்களான லோகபாலர்கள் அந்தத் தேரின் குதிரைகளாக்கப்பட்டனர்[4].(29) காலபிருஷ்டன், நகுஷன், கார்க்கோடகன், தனஞ்சயன் மற்றும் இன்னும் பிற பாம்புகள், அந்தக் குதிரைகளின் பிடறிகளைக் கட்டும் கயிறுகளாகினர்.(30) முக்கிய மற்றும் துணைத்திசைகள் அந்தத் தேரின் குதிரைகளுடைய கடிவாளங்களாகின. வேதவொலியான வஷத்தானது {வஷத்காரமானது} தான்றுகோலானது {சாட்டை போன்றது}, காயத்ரி அந்தக் கோலுடன் இணைந்த இழையானது.(31)
[3] “இவை வீரம், நுண்ணறிவு, ஈர்ப்பு மற்றும் பணிவு ஆகியவற்றின் வடிவங்கள், அல்லது ஆளுருவகமாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பிபேக்திப்ராயின் பதிப்பில் இது மனோபலம், அறிவு, நிலைபேறு, பணிவு என்று சொல்லப்படுகின்றன.[4] “இவர்கள் முறையே இந்திரன், வருணன், யமன் மற்றும் குபேரனாவர்” என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
மங்கல நாட்கள் நான்கும் குதிரைகளின் சேணங்களாகின, அவற்றை ஆட்சி செய்யும் பித்ருக்கள் அதன் சங்கிலிகளாகவும், ஊசிகளாகவும் ஆகின[5].(32) செயல், உண்மை, தவநோன்புகள், பொருள் ஆகியன அந்தத் தேரின் கயிறுகளாக்கப்பட்டன. மனமானது அந்தத் தேர் நிற்கும் தரையானது, வாக்கே {பேச்சே} அது செல்லும் தடமானது.(33) பல்வேறு வண்ணங்களிலான கொடிகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மின்னலுடனும், அதனுடன் இணைந்த இந்திரவில்லுடனும் {வானவில்லுடனும்} அந்தச் சுடர்மிக்கத் தேரானது கடும் ஒளியை வெளியிட்டது. முன்பொரு சமயம், உயர் ஆன்ம ஈசானனின் வேள்வியில் ஒரு வருடம் என நிர்ணயிக்கப்பட்ட காலவெளியானது ஒரு வில்லானது, சாவித்ரி தேவி வில்நாண் கயிற்றின் உரத்த ஒலியானாள்.(35) விலைமதிப்பற்ற ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், ஊடுருவ முடியாததும், பிரகாசமானதும், காலச்சக்கரத்தில் இருந்து உதித்ததுமான ஒரு தெய்வீகக் கவசமும் உண்டாக்கப்பட்டது.(36) தங்க மலையான அந்த அழகிய மேரு, கொடிக்கம்பமானது, மின்னலின் கீற்றுகளைக் கொண்ட மேகங்கள் அதன் கொடிகளாகின.(37) இப்படி ஆயத்தம் செய்யப்பட்ட அந்தத் தேரானது, வேள்வி நடத்தும் புரோகிதர்களுக்கு மத்தியில் சுடர்விடும் நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட அந்தத் தேரைக் கண்ட தேவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(38)
[5] “இங்கே குறிப்பிடப்படும் நான்கு மங்கல நாட்களாவன, (1) முந்தைய சந்திர நாளின் ஒரு பகுதி நடந்து கொண்டிருக்கும் புதுநிலவு {சிநிவாலி என்றழைக்கப்படும் அமாவாசைக்கு முந்தைய நாள்}, (2) முந்தைய சந்திர நாளின் ஒரு பகுதி நடந்து கொண்டிருக்கும் முழுநிலவு {அநுமதி என்றழைக்கப்படும் பௌர்ணமிக்கு முந்தைய நாள்} (3) புதுநிலவு நாள் {குஹு என்று அழைக்கப்படும் அமாவாசை}, (4) முழுநிலவு நாள் {ராகை என்று அழைக்கப்படும் பௌர்ணமி} என இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஓ ஐயா {சல்லியரே}, மொத்த அண்டத்தின் சக்திகளும் ஒரே இடத்தில் ஒன்றாக இணைந்ததைக் கண்ட தேவர்கள் ஆச்சரியப்பட்டு, இறுதியாக அந்தச் சிறப்புமிக்கத் தேவனிடம் {சிவனிடம்} அந்தத் தேர் தயாராகிவிட்டது எனத் தெரிவித்தனர்.(39) ஓ! ஏகாதிபதி {சல்லியரே}, ஓ! மனிதர்களில் புலியே {சல்லியரே}, இவ்வாறு தேவர்களால் தங்கள் எதிரிகளைக் கலங்கடிப்பதற்காகத் தேர்களில் சிறந்த அந்தத் தேரானது கட்டமைக்கப்பட்டதும், அதில் சங்கரன் {சிவன்} தனது தெய்வீக ஆயுதங்களை வைத்தான். வானத்தையே அதன் கொடிக்கம்பமாக ஏற்படுத்திக் கொண்ட அவன், ஆவின வகையான தன் காளையை அதில் வைத்தான்.(41) பிரம்ம தண்டம், காலத் தண்டம், ருத்ர தண்டம், நோய் ஆகியன அந்தத் தேர் பக்கவாட்டுகளின் பாதுகாவலர்களாகி, அனைத்துப் பக்கங்களை நோக்கியும் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டன.(42) அதர்வனும் {அதர்வ வேதமும்}, அங்கீரசும் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் {சிவனின்} தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்களானார்கள். ரிக் வேதம், சாமவேதம், புராணங்கள் ஆகிய அந்தத் தேருக்கு முன்பாக நின்றன.(43) வரலாறுகளும், யஜுர்வேதமும் பின்புறத்தின் பாதுகாவலர்களாகின. ஓ! ஏகாதிபதி {சல்லியரே}, புனித உரைகள் அனைத்தும், அறிவியல்கள் அனைத்தும், பாடல்கள் அனைத்தும், வேதவொலியான வஷத்தும் {வஷத்காரமும்} கூட அதைச் சூழ்ந்து நின்றன.(44) ஓ! மன்னா {சல்லியரே}, ஓரசையான “ஓம்” என்ற சொல்லானது அந்தத் தேருக்கு முன்பாக நின்று அதை மிகவும் அழகாக்கியது.(45)
ஆறுபருவங்களால் அலங்கரிக்கப்பட்ட வருடத்தையே வில்லாகக் கொண்ட அவன் {சிவன்}, அந்தப் போரில் தன் நிழலையே அந்த வில்லின் உறுதியான நாண்கயிறாக்கினான்.(46) அந்தச் சிறப்பு மிக்க ருத்திரன் காலனேயாவான்; வருடமே அவனது வில்லானது; எனவே, ருத்திரனின் நிழலான நள்ளிரவானது {மரண இரவானது} அந்த வில்லின் அழிக்கப்பட முடியாத நாண்கயிறானது.(47) (ஏற்கனவே சொன்னது போல) விஷ்ணு, அக்னி மற்றும் சோமன் ஆகியோர் கணையாகினர். இந்த அண்டமானது, அக்னியையும், சோமனையும் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதே போல இந்த அண்டம் விஷ்ணுவைக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் விஷ்ணுவானவன், அளக்க முடியாத சக்தி கொண்ட புனிதமான பவனின் {சிவனின்} ஆன்மாவாவான். இதனாலேயே வில்லின் அந்த நாண்கயிறானது அசுரர்களுக்குத் தாங்கமுடியாததாக இருந்தது[6].(49) பிருகு, அங்கிரஸ் ஆகியோரின் கோபத்தில் தோன்றியதும், தாங்கிக் கொள்ளப்பட முடியாததும், கோப நெருப்பானதும், தடுக்கப்பட முடியாததுமான தன் கடுங்கோபத்தைச் சங்கரன் {சிவன்} அந்தக் கணையில் செலுத்தினான்.(50) அப்போது, நீலமும் சிவப்பும் ஆனவனும், அல்லது புகையானவனும், பத்தாயிரம் சூரியர்களைப் போலத் தெரிபவனும், மட்டுமீறிய நெருப்பால் சூழப்பட்டவனும், தோல்களை உடுத்தியவனுமான அந்தப் பயங்கரத் தேவன் {சிவன்} காந்தியால் சுடர்விட்டெரிந்தான்.(51)
[6] வேறொரு பதிப்பில், “உதாரமானமனத்தையுடைய விஸ்வகர்மா திவ்ய ரதத்தை ஏற்படுத்திய பிறகு, பாணத்தையும் அமைக்க ஆரம்பித்தான். அழிவற்றவரும், யஜ்ஞத்தை வாகனமாகக் கொண்டவருமான ஸ்ரீஹரியைத் தியானித்துப் பாணமாக அமைத்தான். ராஜரே, ராஜஸ்ரேஷ்டரே, பரிசுத்தமான கந்தத்துடன் கூடிய வாயுவை அந்தப் பாணத்துக்குச் சிறகாகவும், புங்கமாகவும் ஏற்படுத்தினான். உலகமனைத்தும் விஷ்ணுஸ்வரூபமென்றும், அக்நீஷோமஸ்வரூபமென்றும் சொல்லப்படுகிறதினாலே அக்நீஷோமர்களை அப்பொழுது பாணமுகத்தில் ஏற்படுத்தினான். ஷாட்குண்ய பரிபூர்ணரும், அளவற்ற தேஜஸையுடைவருமான ஈசுவரருக்கு மஹாவிஷ்ணுவானவர் ஆத்மாவாதலால், அந்த ருத்திர் விஷ்ணுமயமான பாணத்தைத் தனுஸிலுள்ள நாண்கயிற்றில் சேர்ப்பதை ஸஹித்தார்” என்றிருக்கிறது.
சங்கடப்படுத்த மிகக் கடினமானவனையும் சங்கடப்படுத்துபவனும், வெற்றியாளனும், பிரம்மத்தை வெறுப்போர் அனைவரையும் கொல்பவனும், ஹரன் என்றும் அழைக்கப்படுபவனும், நீதிமான்களை {அறவோரை} மீட்டு, நீதியற்றவர்களை {மறவோரை} அழிப்பவனுமான அந்தச் சிறப்புமிக்க ஸ்தாணு {சிவன்}, வலிமையும், பயங்கரமும் நிறைந்தவர்களும், பயங்கர வடிவங்களைக் கொண்டவர்களும், மனோ வேகம் கொண்டவர்களும், (எதிரிகள் அனைவரையும்) கலங்கடித்து நொறுக்க வல்லவர்களுமான பலரின் துணையுடன், தன்னைக் குறித்து விழிப்படையச் செய்யும் ஆன்மாவின் நுட்பமான பதினான்கு திறன்களுடன் கூடியவனைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(52,53) ஓ! மன்னா {சல்லியரே}, அவனது அங்கங்களையே தங்கள் புகலிடமாகக் கொண்ட இந்த மொத்த அண்டமும், அசையும் மற்றும் அசையாத உயிர்களுடன் சேர்ந்து மிக உயர்ந்த அற்புதமான தோற்றத்தைக் கொண்டு அழகாகத் தெரிந்தது.(54) முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட அந்தத் தேரைக் கண்ட அவன் {சிவன்}, தன் மேனியில் கவசம் பூண்டு கொண்டு, வில்லையும் தரித்துக் கொண்டு, சோமன், விஷ்ணு மற்றும் அக்னி ஆகியோரிடம் இருந்து உண்டான அந்தத் தெய்வீகக் கணையை எடுத்துக் கொண்டான்.(55)
பிறகு தேவர்கள், ஓ! மன்னா {சல்லியரே}, அந்தப் பலமிக்கத் தேவன் {சிவன்} மீது தான் கொண்டுள்ள நறுமணங்கள் அனைத்தையும் வீசும்படி தேவர்களில் முதன்மையான வாயுவுக்கு ஆணையிட்டனர்.(56) அப்போது மஹாதேவன் {சிவன்}, தேவர்களையே அச்சுறுத்தியபடி, பூமியையே நடுங்கச் செய்தபடி அந்தத் தேரில் உறுதியான தீர்மானத்துடன் ஏறினான்.(57) அந்தத் தேவர்களுக்குத் தேவன் {சிவன்}, அந்தத் தேரில் ஏறும்போது, பெரும் முனிவர்கள், கந்தர்வர்கள், தேவர்க்கூட்டங்கள், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் ஆகியோர் துதிபாடத் தொடங்கினர்.(58) வரமளிக்கும் அந்தத் தேவன் {சிவன்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களால் புகழப்பட்டும், பாணர்களாலும், ஆடற்கலையை நன்கறிந்த பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த நர்த்தகிகளான அப்சரஸ்களால் துதிக்கப்பட்டும், வாள், கணை மற்றும் வில்லைத் தரித்துக் கொண்டு மிக அழகாகத் தெரிந்தான். பிறகு புன்னகைத்த அவன் {சிவன்}, அந்தத் தேவர்களிடம், “எவன் எனது சாரதியாவான்?” என்று கேட்டான்.{என்றான் துரியோதனன்}.(59,60)
ஆங்கிலத்தில் | In English |