Garuda's pride cured! | Udyoga Parva - Section 105 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –34)
பதிவின் சுருக்கம் : சுமுகனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்த இந்திரனிடம் கருடன் கோபித்துக் கொள்வது; கருடன் விஷ்ணுவை அவமதித்துப் பேசுவது; கருடன் செருக்கழிந்து, விஷ்ணுவின் பாதம் பணிவது; இந்தக் கதையைச் சொல்லி துரியோதனனுக்குக் கண்வர் புத்தி புகட்டுவது; துரியோதனன் கண்வரை அவமதிக்கும் வகையில் தொடையில் அறைந்து கொள்வது...
கண்வர் {துரியோதனனிடம்} சொன்னார், "அதேவேளையில், ஓ! பாரதா {துரியோதனா}, நாகனான சுமுகனுக்குச் சக்ரன் {இந்திரன்} நீண்ட ஆயுளைக் கொடுத்ததைப் பலமிக்கக் கருடன் கேள்விப்பட்டான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட ஆகாய உலாவியான அந்தச் சுபர்ணன் {கருடன்}, தனது சிறகையடித்து எழுப்பப்பட்ட புயலால் மூன்று உலகங்களையும் அடித்தபடி வாசவனிடம் {இந்திரனிடம்} விரைந்து வந்தான்.
அந்தக் கருடன் {இந்திரனிடம்}, "ஓ! ஒப்பற்றவனே, என்னை அவமதித்து, எனது வாழ்வாதாரத்தில் நீ ஏன் தலையிடுகிறாய்? உனது சுயவிருப்பத்தின் படி எனக்கு வரத்தை அளித்துவிட்டு, பிறகு அதை நீ ஏன் பறிக்கிறாய்? எது எனது உணவு என, அனைத்து உயிரினங்களின் தலைவனால் {பிரம்மனால்} முன்பே விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தெய்வீக கட்டளையின் குறுக்கே நீ ஏன் நிற்கிறாய்? நான் இந்தப் பெரும் நாகனைத் {சுமுகனைத்} தேர்ந்தெடுத்து, {அவனுக்கான} காலத்தையும் குறித்திருக்கிறேன். ஏனெனில், ஓ! தேவா {இந்திரா}, அவனது உடலின் இறைச்சியை எனது எண்ணற்ற பிள்ளைகளின் உணவாக்க நான் நினைத்திருந்தேன். அவன் உன்னிடம் வரத்தைப் பெற்றுவிட்டதால், என்னால் அழிக்கப்பட முடியாதவன் ஆகிவிட்டான். எனவே, அவனது இனத்தைச் சேர்ந்த வேறொருவனை நான் இனிமேல் எவ்வாறு கொல்லத்துணிவேன்? ஓ! வாசவா {இந்திரா}, உனது விருப்பப்படி, இப்படியெல்லாம் நீ விளையாடுகிறாயா? இதனால், நானும் எனது குடும்ப உறுப்பினர்களும், என் இல்லத்தில் {இல்லத்தின் வேலைகளில்} நான் ஈடுபடுத்தியிருக்கும் எனது பணியாட்களும் இறந்துவிடுவோம். ஓ! வாசவா {இந்திரா}, அஃது உன்னை நிறைவாக்கும் என நான் நினைக்கிறேன். [1]
[1] இந்த இடத்தில் கங்குலி சிலவற்றை விட்டிருக்க வேண்டும். வேறு ஒரு பதிப்பில் கீழ்கண்ட சம்பவம் சுட்டப்படுகிறது.கருடனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட சுமுகன் தூமுகன் ஆனான். அதாவது விகார முகம் கொண்டவனான். அவன் நிறம் மாறி, பாம்பின் உருவத்தை அடைந்தான். பிறகு, விஷ்ணுவின் அருகில் சென்று, அவனது பாதத்தைச் சுற்றிக் கொண்டான். அப்போது இந்திரன், "ஓ! கருடா! இஃது என் செயலில்லை. நீ என்னிடம் கோபம் கொள்ளாதே. சுமுகனை விஷ்ணுவே பாதுகாத்தான்" என்றான். இனி கீழ்க்கண்டவை கங்குலியில் இருந்து... அதைத் தொடர்ந்து கருடன் பின்வருமாறு பேசுகிறான்.
உண்மையில், ஓ! வலனையும் விருத்திரனையும் கொன்றவனே {இந்திரா}, பலத்தால் மூன்று உலகங்களுக்கும் தலைவனாக இருக்கும் தகுதி இருந்தும், இன்னொருவனுக்குப் பணியாளாய் இருக்கச் சம்மதித்த எனக்கு இவை அனைத்தும் தகும். {இன்னமும் தகும்}. எனினும், ஓ! மூவுலகங்களின் ஏகாதிபதியே {இந்திரா}, எனது இந்தத் தாழ்மைக்கு விஷ்ணுவே காரணம். ஏனெனில், ஓ! வாசவா {இந்திரா}, நான் உனக்குச் சமமானவனாக இருந்தும், ஓ! தேவர்களின் தலைவா, மூவலகங்களின் அரசுரிமையும் உன்னிடம் இருக்கிறதல்லவா?
உன்னைப்போலவே, நானும் தக்ஷனின் மகளை {வினதையை} [2] எனக்குத் தாயாகவும், காசியபரை எனக்குத் தந்தையாகவும் கொண்டிருக்கிறேன். உன்னைப் போலவே, எந்தக் களைப்பும் இல்லாமல் மூவுலகங்களின் சுமையை என்னாலும் சுமக்க முடியும். எந்த உயிரினத்தாலும் தடுக்கப்பட முடியாத அளவிட முடியாத பலத்தை நானும் கொண்டிருக்கிறேன். தைத்தியர்களுக்கு எதிரான போரில் நானும் பெரும் செயல்களைச் செய்திருக்கிறேன். திதியின் மகன்களில் சுரூதஸ்ரீ, சுரூதசேனன், விவஸ்வான், ரோசனாமுகன், பிரசருதன், காலகாக்ஷன் ஆகியோர் என்னால் கொல்லப்பட்டனர்.
[2] இந்திரனின் தாய், தக்ஷனின் மகளான அதிதி ஆவாள். கருடனின் தாய் தக்ஷனின் இன்னொரு மகளான வினதையாவாள்.
உனது தம்பியுடைய {விஷ்ணுவுடைய} தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்து, நான் அதைக் {அந்தத் தேரைக்} கவனமாகப் போரில் பாதுகாக்கிறேன். சில சமயங்களில், நான் உனது தம்பியை {விஷ்ணுவை} எனது முதுகில் சுமக்கிறேன். இதன்காரணமாகத் தான் நீ என்னை அவமதிக்கிறாயோ? அவ்வளவு பாரமிக்கச் சுமைகளைச் சுமக்கும் வல்லமை இந்த அண்டத்தில் எவனுக்கு இருக்கிறது? எவன் என்னைவிடப் பலவானாக இருக்கிறான்? மேன்மையானவனான நான், உனது தம்பியையும் {விஷ்ணுவையும்}, அவனது நண்பர்களையும் எனது முதுகில் சுமக்கிறேன். எனினும் {நான் மேன்மையானவனாக இருப்பினும்}, எனது முதுகில் தன்னைச் சுமக்கச் செய்து, இதுவரை என்னை அவமதித்து வரும் உனது தம்பியைப் {விஷ்ணுவைப்} போலவே, எனது உணவில் தலையிட்டு, என்னை அவமதித்து, எனது கௌரவத்தை நீ அழித்துவிட்டாய். {என்று இந்திரனிடம் சொன்ன கருடன், பிறகு விஷ்ணுவிடம் திரும்பி}, உன்னைப் பொறுத்தவரை, ஓ! விஷ்ணுவே, அதிதியின் கருவறையில் பிறந்தவர்களான ஆற்றல் மிக்கவர்களும் பலமிக்கவர்களுமான அனைவரைக் காட்டிலும், பலத்தில் நீ மேன்மையானவனாகவே இருக்கிறாய். இருப்பினும், எனது இறகுகளில் ஒன்றைக் கொண்டே, எந்தக் களைப்பையும் அறியாமல், நான் உன்னைச் சுமக்கிறேன். ஓ! சகோதரா {விஷ்ணுவே}, நம்மில் யார் பலவான் என்று ஆற அமர சிந்தித்துப் பார்!" என்றான் {கருடன்}.
கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "ஆபத்தை அறிவிக்கின்ற அந்தப் பறவையானவனின் செருக்கு நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட சக்கரந்தாங்கி {விஷ்ணு}, தார்க்ஷியனை {கருடனை} மேலும் தூண்டும்படி, "ஓ! கருடா, மிகப் பலவீனமான நீ, ஏன் உன்னைப் பலவானாகக் கருதிக் கொள்கிறாய்? ஓ முட்டையிடும் இனத்தோனே {கருடா}, எங்கள் முன்னிலையில் இப்படித் தற்பெருமையடித்துக் கொள்வது உனக்குத் தகாது. மூன்று உலகமும் ஒன்று சேர்ந்தாலும் கூட, எனது உடலின் எடையை அவற்றால் தாங்க முடியாது. எனது சொந்த எடையையும், உனது எடையையும் தாங்குவது நானே. இப்போது வா, எனது வலது கரத்தின் எடையைத் தாங்கிவிடு {பார்ப்போம்}. உன்னால் இதை மட்டும் தாங்க முடிந்துவிட்டால், உனது தற்பெருமை அறிவுள்ளதாகக் {சரியானது என்றே} கருதப்படும்" என்றான் {விஷ்ணு}.
இதைச் சொன்ன அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, தனது கரத்தைக் அந்தக் கருடனின் தோள் மீது வைத்தான். பின்னவன் {கருடன்}, அதன் {அக்கரத்தின்} எடையால் பீடிக்கப்பட்டு, வெட்கமடைந்து, புலனுணர்வை இழந்து, கீழே விழுந்தான். மலைகளுடன் கூடிய பூமியின் முழு எடையினளவுக்கு விஷ்ணுவின் ஒரு கரத்து எடையே இருப்பதைக் கருடன் உணர்ந்தான். எனினும், எல்லையில்லா பெரும்பலமுடைய விஷ்ணு, அவனை மிகவும் துன்புறுத்தவில்லை. உண்மையில், அச்யுதன் {விஷ்ணு} அவனது {கருடனின்} உயிரை எடுக்கவில்லை.
அந்த விண்ணதிகாரி {கருடன்}, தாங்கமுடியாத சுமையால் பீடிக்கப்பட்டு, மூச்சுத் திணறி, தனது இறகுகளை உதிர்க்கத் தொடங்கினான். தன் ஒவ்வொரு அங்கமும் பலவீனமடைந்து, முழுதாய் கலக்கமடைந்த கருடன், கிட்டத்தட்ட தன் சுயநினைவையே இழந்தான். அந்தச் சிறகு படைத்த வினதையின் பிள்ளை {கருடன்}, இப்படியே கலக்கமடைந்து, கிட்டத்தட்ட நினைவற்றுப் போய், முழுதும் ஆதரவற்ற நிலையில், தன் சிரம் தாழ்த்தி விஷ்ணுவை வணங்கியபடி, அவனிடம் {விஷ்ணுவிடம்}, "ஓ! ஒப்பற்ற தலைவா, அண்டத்தையே தாங்கும் பலத்தின் சாரம், உனது இந்த உடலிலேயே வசிக்கிறது. எனவே, உனது ஒற்றைக் கரத்தால், உன் விருப்பப்படி நான் பூமியில் நசுக்கப்பட்டேன், அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஓ! தெய்வீகத் தலைவா, உனது கொடிக்கம்பத்தில் அமர்பவனும், பலத்தின் செருக்கால் போதையுண்டவனும், தற்போது முழுதும் ஆதரவற்ற நிலையில் இருப்பவனுமான இந்தச் சிறகு படைத்த உயிரினத்தை {கருடனான என்னை} நீ மன்னிப்பதே தகும். ஓ! தெய்வீகத் தலைவா {விஷ்ணுவே}, உனது பெரும் பலத்தை இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. அதன் காரணமாகவே எனது சொந்த பலம் நிகரற்றது என நான் கருதினேன்" என்றான் {கருடன்}.
இப்படிச் சொல்லப்பட்ட ஒப்பற்ற விஷ்ணு, மனம் நிறைந்து, கருடனிடம் பாசத்துடன், "உனது நடத்தை மீண்டும் இது போல ஆகாதிருக்கட்டும்" என்றான். இப்படிச் சொன்ன உபேந்திரன் {விஷ்ணு}, தனது பாதத்தின் கட்டைவிரலால் சுமுகனை கருடனின் மார்பில் தூக்கி எறிந்தான். ஓ! மன்னா {துரியோதனா}, அக்காலம் முதல், கருடன் அந்தப் பாம்புடன் {சுமுகனுடன்} நட்புடன் வாழ்ந்தான். இப்படியே, ஓ! மன்னா {துரியோதனா}, பலவானும், வினதையின் மகனுமான அந்த ஒப்பற்ற கருடன், விஷ்ணுவின் பலத்தால் பீடிக்கப்பட்டு, தனது செருக்கழிந்தான்"
கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இதே வழியில், ஓ! காந்தாரியின் மகனே, ஓ மகனே {துரியோதனா}, நீ எவ்வளவு நாள் பாண்டுவின் வீர மகன்களைப் போரில் அணுகாதிருக்கிறாயோ, அவ்வளவு நாள் வாழ்வாய். வாயுவின் பலமிக்க மகனும், அடிப்பவர்களில் முதன்மையானவனுமான பீமனாலும், இந்திரனின் மகனான தனஞ்சயனாலும் {அர்ஜுனனாலும்} போரில் கொல்லப்பட முடியாதவன் எவன் இருக்கிறான்? விஷ்ணு, வாயு, தர்மன், அசுவினிகள் ஆகிய இந்தத் தேவர்களும் கூட உனது எதிரிகளாகவே இருக்கின்றனர். அவர்களோடு நீ மோதுவது இருக்கட்டும், களத்தில் நிற்கும் அவர்களை நீ பார்க்கக்கூடத் திறனற்றவனாவாய்.
எனவே, ஓ! இளவரசே {துரியோதனா}, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே; வாசுதேவன் {கிருஷ்ணன்} மூலமாகச் சமாதானம் ஏற்படட்டும். இப்படியே நீ உனது குலத்தைக் காப்பதே உனக்குத் தகும். இந்தப் பெரும் முனிவரான நாரதர், விஷ்ணுவின் பெருமையை உணர்த்தும் (நான் சொன்ன} அந்தச் சம்பவத்தைத் தனது சொந்தக் கண்களால் கண்டிருக்கிறார். சக்கரத்தையும், கதையையும் தாங்குபவனான அந்த விஷ்ணு இந்தக் கிருஷ்ணனே ஆவான் என்பதை அறிவாயாக" என்றார் {கண்வர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அந்த முனிவரின் {கண்வரின்} வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், தனது புருவங்களைச் சுருக்கி, பெருமூச்சு விடத்தொடங்கினான். பிறகு, ராதையின் மகன் {கர்ணன்} மீது கண்களைச் செலுத்திய அவன், உரக்கச் சிரித்தான். அந்த முனிவரின் வார்த்தைகளை வீணாகச் செய்தவனும், இழிந்தவனுமான அந்தத் தீயவன் {துரியோதனன்}, யானையின் துதிக்கையைப் போன்றிருந்த தனது தொடையில் அறையத் தொடங்கினான். பிறகு அந்த முனிவரிடம், அவன், "ஓ பெரும் முனிவரே, படைத்தவன் எப்படிப் படைத்தானோ அப்படியே நான் இருக்கிறேன். எது நேருமோ, அது நடந்தே தீரும். எனது வழக்கில் என்ன நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதுவே நடக்க வேண்டும், என்னால் வேறுமாதிரியாகச் செயல்பட முடியாது. எனவே, முட்டாள்தனமான இந்தப் பிதற்றல்களால் {என்னை} என்ன செய்துவிட முடியும்?" என்றான் {துரியோதனன்} [3]
[3] கங்குலி இந்தக் காட்சியை இங்கேயே முடித்து, அடுத்தப் பகுதியில் நாரதர் பேச்சுக்குச் சென்று விடுகிறார். ஆனால் வேறு பதிப்புகளில் இன்னும் ஒரு சம்பவம் இந்தக் காட்சியில் இருக்கிறது. அது பின்வருமாறு.கோபத்தால் அறிவிழந்து இருக்கும் துரியோதனனைக் கண்ட கண்வர், "நீ இப்படித் தொடையில் அறைந்து கொள்வதால், தொடையொடிந்தே நீ இறப்பாய்" என்று அவனைச் சபித்ததாக வேறு பதிப்புகளில் இப்பகுதி நிறைவடைகிறது.