"War is the only way left!" said Krishna! | Udyoga Parva - Section 150 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –79)
பதிவின் சுருக்கம் : பெரியோர் சொல் கேளாத துரியோதனன் அவர்களை அவமதிக்கும் வகையில் சபையை விட்டு அகன்றது, பதினோரு அக்ஷௌஹிணி படையை குருக்ஷேத்திரத்திற்கு அனுப்பியது ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன், சாம, தான, பேதங்களைத் தான் துரியோதனனிடம் கௌரவச் சபையில் முயற்சித்துப் பார்த்துவிட்டதாகவும், இனி தண்டமே மீதி என்றும் சொன்னது...
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "இப்படி பீஷ்மர், துரோணர், விதுரர், காந்தாரி, திருதராஷ்டிரர் ஆகியோர் சொல்லியும், அந்தப் பொல்லாதவன் {துரியோதனன்} அறிவைப் பெறவில்லை. மறுபுறம், அந்தத் தீய துரியோதனன், கோபத்தால் கண்கள் சிவக்க, (அவையை விட்டு அகன்று), அவர்கள் அனைவரையும் அவமதித்தான். (அவனால் அழைக்கப்பட்டவர்களும்), தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்த மன்னர்கள் அனைவரும், அவனது {துரியோதனனின்} பின்னை தொடர்ந்து சென்றனர்.
"இன்று பூச நட்சத்திரக் கூட்டம் உச்சம் பெற்றிருக்கிறது {இன்று பூச நட்சத்திரமாகும்}. (இன்றே) குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் செல்லுங்கள்" என்று மன்னன் துரியோதனன், தீய இதயம் கொண்ட அந்த ஆட்சியாளர்களிடம், மீண்டும் மீண்டும் சொன்னான். விதியால் உந்தப்பட்ட அந்த ஏகாதிபதிகள், பீஷ்மரைப் படைத்தலைவராக {சேனாதிபதியாகக்} கொண்டு, தங்கள் படைவீரர்களுடன் மகிழ்ச்சியாகப் புறப்பட்டுச் சென்றனர்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கௌரவர்களுக்காக பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகள் கூடியிருக்கின்றன. அப்படையின் தலைமையில், பனைமரக் கொடியைத் தனது தேரில் கொண்டவரான பீஷ்மர் பிரகாசித்துக் கொண்டிருந்தார். எனவே, இதுவரை நடந்ததை நோக்கில் கொண்டு, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, எது சரியாகத் தோன்றுகிறதோ, அதைச் செய்யும். ஓ! மன்னா, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது முன்னிலையில், பீஷ்மர், துரோணர், விதுரர், காந்தாரி மற்றும் திருதராஷ்டிரர் ஆகியோர் சொன்னது அனைத்தையும் உமக்குச் சொல்லிவிட்டேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, (பூமியில் உள்ள) மக்களின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் இந்தக் {கௌரவக்} குலத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் நிமித்தமாக, ({பாண்டவர்களாகிய} உங்களுக்கும், {கௌரவர்களாகிய} உமது சகோதரர்களுக்கும் இடையில்) சகோதரப் பாசத்தை நிறுவும் விருப்பத்தால், சமரசப் பேச்சில் தொடங்கும் கலைகள் அனைத்தையும் {சாம வழி} முயன்றேன். சமரசம் தோற்றதும், கருத்து வேறுபாட்டை (உண்டாக்கும்) கலையை {பேத வழியை} முயன்று, பாண்டவர்களாகிய உங்கள் அனைவரின் இயல்பான மற்றும் இயல்புக்கு மிக்க {சாதாரண மற்றும் அசாதாரண} சாதனைகளைக் குறிப்பிட்டேன். உண்மையில், சுயோதனன் சமரசப் பேச்சுகளுக்கு எந்த மதிப்பையும் காட்டாத போதே, ஒன்றாகக் கூடியிருந்த மன்னர்களுக்கிடையில் (அவர்களுக்குள்) கருத்து வேறுபாட்டை உண்டாக்க முயற்சி செய்தேன் (பேசினேன்). ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, இயல்புக்கு மிக்க, மோசமான, பயங்கரமான மற்றும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட அறிகுறிகளை நான் என்னிடம் வெளிப்படுத்தினேன்.
ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, {பேத வழியில்} மன்னர்கள் அனைவரையும் கடிந்து கொண்டு, துரியோதனனைப் புல்லாக்கி {துரும்பாகச் சிறுமை செய்து}, ராதையின் மகனை {கர்ணனை} அச்சுறுத்தி, திருதராஷ்டிரர் மகன்களின் சூதாட்டத்துக்காக சுபலனின் மகனை {சகுனியை} மீண்டும் மீண்டும் நிந்தித்து, வார்த்தைகள் மற்றும் சூழ்ச்சிகள் ஆகிய இரண்டின் மூலமாகவும் மன்னர்கள் அனைவருக்குள்ளும் ஒற்றுமையின்மையை {கருத்த வேறுபாட்டை} ஏற்படுத்த மீண்டும் ஒருமுறை முயற்சித்த பிறகு, நான் மீண்டும் சமரசம் பேசினேன். {மீண்டும் சாம வழிக்குத் திரும்பினேன்}. குரு குலத்தின் ஒற்றுமைக்காகவும், (நெருங்கி வரும்) தொழிலுக்கான {போருக்கான} முக்கிய தேவைகளை நோக்கில் கொண்டும், நான் கொடையளிப்பது குறித்தும் {தானவழியிலும்} பேசினேன்.
உண்மையில் நான், "வீரர்களான அந்தப் பாண்டுவின் மகன்கள், தங்கள் பெருமையைத் துறந்து, திருதராஷ்டிரர், பீஷ்மர் மற்றும் விதுரரைச் சார்ந்தே வாழ்வார்கள். {துரியோதனனான} உனக்கே நாடு கொடுக்கபடட்டும். அவர்கள் {பாண்டவர்கள்} எந்த அதிகாரத்தையும் பெறாமல் இருக்கட்டும். மன்னன் (திருதராஷ்டிரர்), கங்கையின் மகன் (பீஷ்மர்), மற்றும் விதுரர் ஆகியோர் உனது நன்மைக்காகச் சொல்வது அனைத்தும் நடைபெறட்டும். நாடும் உனதாகட்டும். (பாண்டவர்களுக்கு) ஐந்து கிராமங்களை மட்டும் விட்டுக்கொடு. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, உனது தந்தையால் தாங்கப்படத் தகுந்தவர்கள் {ஆதரிக்கப்பட வேண்டியவர்கள்} அவர்கள் {பாண்டவர்கள்} என்பதில் ஐயமில்லை" என்றேன். {இப்படியே தான வழியில் பேசினேன்}.
இப்படிச் சொல்லப்பட்டும், அந்தத் தீய ஆன்மா கொண்டவன் {துரியோதனன்}, உமக்கு உங்கள் பங்கைத் தர மறுக்கிறான். எனவே, தண்டனையைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை. அதுவே, பாவம் நிறைந்தவர்களுக்கு எதிராகச் செய்யப்பட வேண்டிய வழியாக இப்போது இருக்கிறது [1]. உண்மையில், அந்த மன்னர்கள் அனைவரும், ஏற்கனவே குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் சென்றுவிட்டார்கள். குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, போரில்லாமல் உமக்கு அவர்கள் நாட்டைத் தரமாட்டார்கள். மரணம் அவர்களுக்கு முன் காத்திருப்பதால், உலக அழிவுக்கு அவர்கள் அனைவரும் காரணமாக விளங்குகிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}."
[1] சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளில் முதல் மூன்று வழிகளை முயன்றாகிவிட்டது. சமாதானத்தைத் துரியோதனன் ஏற்கவில்லை. எனவே, இனி நான்காவது வழியான தண்டமே மிச்சமிருக்கிறது என்கிறான் கிருஷ்ணன்.
வேறு பதிப்புகளில் இங்கேயே {உத்யோக பர்வம் பகுதி 150} உபபர்வமான பகவத்யாந பர்வம் முற்று பெற்று, மற்றொரு உபபர்வமான சைனியநிர்யாண பர்வம் ஆரம்பமாகிறது. கங்குலியிலோ பகவத்யாந பர்வம் முற்று பெறாமல் தொடர்கிறது. வழக்கம் போலவே நாம் கங்குலியின் பாதையில் தொடர்ந்தாலும், அடுத்தப்பதிவில் இருந்து பகவத்யாந பர்வம் அந்தத் தலைப்பின் அருகிலேயே {சைனியநிர்யாண பர்வம்} என்ற உபதலைப்பையிட்டுத் தொடர்வோம்.
_________________________________________________________________________________
திருக்குறள் 673:
பொருட்பால் - அமைச்சியல் - வினைசெயல்வகை
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
Translation:
When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.
Explanation:
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.
_________________________________________________________________________________
திருக்குறள் 673:
பொருட்பால் - அமைச்சியல் - வினைசெயல்வகை
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
Translation:
When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.
Explanation:
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.