The conch blare of Krishna in Kurukshetra! | Udyoga Parva - Section 152 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் – 81) {சைனியநிர்யாண பர்வம் -2}
பதிவின் சுருக்கம் : பாண்டவப் படை குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் சென்றதையும், உபப்லாவ்யத்தில் அவர்கள் செய்து சென்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வைசம்பாயனர் விவரிப்பது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணன் இதைச் சொன்னதும் அனைத்து ஏகாதிபதிகளும் மகிழ்ச்சியில் நிறைந்தனர். மகிழ்ச்சியடைந்த மன்னர்கள் அனைவராலும் எழுப்பப்பட்ட ஒலி பேரொலியாக {பிரம்மாண்டமானதாக} இருந்தது. "அணிவகுப்பீராக, அணிவகுப்பீராக" என்று சொல்லி அத்துருப்புகள் பெரும் வேகத்துடன் நகரத் தொடங்கின. எங்கும் கேட்ட குதிரைகளின் கனைப்புகளும், யானைகளின் பிளிறல்களும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், சங்கொலிகளும், துந்துபிகளின் ஒலியும், அங்கே ஒரு மிகப்பெரிய ஆரவாரத்தை உண்டாக்கியது. தேர்களாலும், காலாட்படைவீரர்களாலும், குதிரைகளாலும், யானைகளாலும் நிரம்பியிருந்ததும், இங்கும் அங்கும் அணிவகுத்து நகர்ந்து சென்றதும், கவசங்களை அணிந்தபடி போர் கர்ஜனைகளுடன் சென்றவர்களைக் கொண்டதுமான பாண்டவர்களின் வெல்லப்பட முடியாத அந்தப் படையைக் காண, கடுமையான எதிர்ச்சுழிகளாலும், அலைகளாலும் கலங்கிச் செல்லும் பூரணமான {நிறைந்த அளவை எட்டிய} கங்கையின் மூர்க்கமான நீரூற்றைப் போலத் தெரிந்தது.
கவசம் தரித்தவர்களான பீமசேனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் ஐந்து மகன்கள், பிரஷத குலத்தைச் சார்ந்த திருஷ்டத்யும்னன் ஆகியோர் அந்தப் படையின் முன்னணியில் சென்றார்கள். பிரபத்ரகர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் பீமசேனனுக்குப் பின்னே அணிவகுத்துச் சென்றார்கள். அப்படி அணிவகுத்துச் சென்ற படையின் ஆரவாரம், அமாவாசையின் போது மிக உயரமாக எழும் கடலின் {கடல் அலையின்} கர்ஜனையைப் போல, மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. உண்மையில் அந்த அமளி சொர்க்கத்தையே {வானத்தையே} எட்டுவதாகத் தெரிந்தது. பகைவரின் படையணியை உடைக்கவல்லவர்களும், கவசம் அணிந்தவர்களுமான அந்த வீரர்கள் மகிழ்ச்சியில் நிறைந்து இப்படியே அணிவகுத்துச் சென்றார்கள்.
அவர்களுக்கு மத்தியில் குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தேர்களையும், போக்குவரத்துக்குத் தேவையான பிற வாகனங்களையும், உணவு மற்றும் தீவனப் பைகளையும், கூடாரங்களையும் [1], வண்டிகளையும், பணப்பெட்டகங்களையும், இயந்திரங்களையும், ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, அறுவைசிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செல்லுபடியாகதவர்கள், மெலிந்த பலவீனமான போர்வீரர்கள், ஆகியோரையும், பணியாட்கள் மற்றும் முகாம்களில் இருப்போர் {பணிசெய்வோரையும்} அனைவரையும் எனத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
[1] வேசிகளின் கூடாரங்கள் என்கிறது ஒரு பதிப்பு.
பாஞ்சால இளவரசியான உண்மை நிறைந்த திரௌபதி, வீட்டில் இருக்கும் பெண்களின் துணையோடும், ஊழியர்களும், பணிப்பெண்கள் சூழவும் உபப்லாவ்யத்திலேயே இருந்தாள். தங்கள் நிதி மற்றும் மங்கையரைப் பாதுகாக்கும்படி, தங்கள் படைவீரர்களில் சில அமைப்புகளை நிரந்தரச் சுற்றரணாக அமர்த்தியும், அங்கிருந்து சற்றுத் தூரத்தில் சிலரையும் நிறுத்திய பாண்டவர்கள், தங்கள் பெரும்படையுடன் புறப்பட்டுச் சென்றனர். {**பாண்டவர்கள், கோட்டை முதலிய அரண்களையும், வாயில்காப்போர் முதலிய படைவீரர்களாலும் செல்வம் மற்றும் மங்கையர் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு, பெரிய படையுடன் சென்றார்கள்}.
பசுக்களையும், தங்கத்தையும் அந்தணர்களுக்குக் கொடையளித்துவிட்டு, அவர்களை வலம் வந்து, ஆசிகளைப் பெற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு, தங்கள் தேர்களில் ஏறி அணிவகுப்பைத் தொடங்கினார்கள்.
கேகய இளவரசர்கள், திருஷ்டகேது, காசிகள் {காசி நாட்டு} மன்னனின் மகன் {அபிபூ}, சிரேணிமாத், வசுதானன், வெல்லப்பட முடியாத சிகண்டி ஆகிய அனைவரும் நலத்துடனும், இதயப்பூர்வமாகவும், கவசம்பூட்டி, ஆயுதங்கள் தாங்கிக் கொண்டும், ஆபரணங்களால் தங்ககளை அலங்கரித்துக் கொண்டும், யுதிஷ்டிரனைத் தங்கள் மத்தியில் கொண்டு அவனுக்கு {யுதிஷ்டிரனுக்குப்} பின்னால் அணிவகுத்துச் சென்றனர்.
விராடன், சோமக குலத்தின் யக்ஞசேனன் மகன் (திருஷ்டத்யும்னன்), சுசர்மன், குந்திபோஜன், திருஷ்டத்யும்னனின் மகன்கள் ஆகியோரும், நாற்பதாயிரம் {40,000} தேர்களும், அதைப் போல ஐந்து மடங்கு {2,00,000} குதிரைகளும், அதைவிட {குதிரைகளைவிட} பத்துமடங்கு {20,00,000} அதிக எண்ணிக்கையில் காலாட்படையும், அறுபதாயிரம் {60,000} யானைகளும் {படையின்} பின்னே சென்றன. அனாதிருஷ்டி, சேகிதானன், திருஷ்டகேது, சாத்யகி ஆகியோர் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} சூழ்ந்தபடி அணிவகுத்துச் சென்றார்கள்.
போர் வரிசையிலான தங்கள் படைகளுடன் குருக்ஷேத்திரக் களத்தை அடைந்தவர்களும், அடிப்பவர்களுமான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, காளைகளைப் போலக் கர்ஜிப்பவர்களாகத் தெரிந்தார்கள். களத்தில் புகுந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் தங்கள் சங்குகளில் ஒலியெழுப்பினர். வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் சங்குகளிலும் ஒலியை எழுப்பினர். இடி உருளும் ஓசைக்கு நிகரானதும், பஞ்சஜன்யம் {Panchajanya} என்று அழைக்கப்பட்டதுமான அந்தச் சங்கின் ஒலியைக் கேட்ட (பாண்டவப் படையின்) போர்வீரர்க்ள அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தார்கள். கரங்கள் மற்றும் அசைவில் வேகத்தைக் கொண்ட அந்தவீரர்களின் சிம்மகர்ஜனைகள், சங்கொலிகள் மற்றும் துந்துபிகளின் ஒலிகள் ஆகியவை கலந்து, முழுப் பூமியையும், வானத்தையும், கடல்களையும் எதிரொலிக்கச் செய்தன."
**பாண்டவர்கள், கோட்டை முதலிய அரண்களையும்,....
திருவள்ளுவர் வாக்கு:
திருக்குறள்/ பொருட்பால்-அதிகாரம்: அரண்
குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
தமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :
காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.
"அணிவகுப்பீராக, அணிவகுப்பீராக" என்று சொல்லி அத்துருப்புகள் பெரும் வேகத்துடன் நகரத் தொடங்கின..........
திருவள்ளுவர் வாக்கு:
திருக்குறள்/ பொருட்பால்-அதிகாரம்: படைச்செருக்கு
குறள் 778:
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
தமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டாம் என்று அரசன் சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.