The capital was like an ocean! | Udyoga Parva - Section 154 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் – 83) {சைனியநிர்யாண பர்வம் -4}
பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தில் இருந்து கிருஷ்ணன் புறப்பட்டதும், தங்களுக்குள் ஆலோசித்த துரியோதனன், கர்ணன், துச்சாசனன் மற்றும் சகுனி ஆகியோர், போர் நிச்சயம் என்பதை உறுதி செய்து கொண்டு, அடுத்த நாள் படை புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தீர்மானித்தது; கௌரவப்படையின் மன்னர்களும், வீரர்களும் போருக்குக் கிளைம்பிய விதம்; மக்கள் கூட்டத்தால் நிரம்பிய ஹஸ்தினாபுரத்தின் தோற்றம்...
வைசம்பாயணரும் ஜனமேஜயனும் |
ஜனமேஜயன் {வைசம்பயனரிடம்} சொன்னான், "போரை விரும்பி, தனது துருப்புகளை அணிவகுக்கச் செய்து, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பாதுகாக்கப்பட்டு, விராடன் மற்றும் துருபதன், மற்றும் அவர்களுடைய மகன்கள் {விராடன் மற்றும் துருபதனின் மகன்கள்} ஆகியோர் துணையுடன், கேகயர்கள், விருஷ்ணிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பிற மன்னர்கள் என ஆதித்தியர்களால் பாதுகாக்கப்படும் பெரும் இந்திரனைப் போல, பலமிக்க எண்ணற்ற தேர்வீரர்களால் கவனிக்கப்பட்டு வந்த யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரத்தில் முகாமிட்டுவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டதும், மன்னன் துரியோதனன் என்ன ஆலோசித்தான்? என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தான்?
ஓ! உயர் ஆன்மா கொண்டவரே {வைசம்பாயனரே}, அந்தப் பயங்கரச் சந்தர்ப்பத்தில் குருஜாங்கலத்தில் {கௌரவ நாடு = குருஜாங்கலம்} நடந்தது அனைத்தையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். வாசுதேவன் {கிருஷ்ணன்}, விராடன், துருபதன், பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, பலமிக்க யுதாமன்யு, பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஆகியோர் தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவர்களும், இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களுக்கே சிக்கலைக் கொடுக்கவல்லவர்களுமாவர். எனவே, ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் பாண்டவர்கள் ஆகியோரின் செயல்களை அனைத்தையும், அவை நடந்தவாறே விபரமாகக் கேட்க நான் விரும்புகிறேன்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குருக்களின் சபையில் இருந்து) தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} புறப்பட்டதும், கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோரிடம் பேசிய மன்னன் துரியோதனன், "தனது நோக்கத்தைச் சாதிக்க இயலாத கேசவன் {கிருஷ்ணன்}, பிருதையின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றுவிட்டான். கோபத்தால் நிறைந்த அவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களை நிச்சயம் தூண்டிவிடுவான். எனக்கும், பாண்டவர்களுக்குமான போரை வாசுதேவன் {கிருஷ்ணன்} மிகவும் விரும்புகிறான். பீமசேனனும், அர்ஜுனனும் எப்போதும் அவனைப் {கிருஷ்ணனைப்} போன்ற மனம் கொண்டவர்களே. மேலும், யுதிஷ்டிரனோ, எப்போதும் பீமசேனனின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பவன். தம்பிகள் அனைவருடனும் கூடிய இந்த யுதிஷ்டிரன் முன்னர் என்னால் துன்புறுத்தப்பட்டிருக்கிறான்.
நான் பகைமை பாராட்டி வந்த விராடனும், துருபதனும் வாசுதேவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கீழ்ப்படிந்து, யுதிஷ்டிரனின் படையில் தலைவர்களாக இருக்கிறார்கள். எனவே, கடுமையானதும், பயங்கரமானதுமான போர் நடக்கப் போகிறது. எனவே, சோம்பல் அனைத்தையும் கைவிட்டு, மோதலுக்கான அனைத்து தயாரிப்புகளைச் செய்வீர்களாக. (எனது கூட்டாளிகளான) மன்னர்கள் அனைவரும், குருக்ஷேத்திரத்தில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தங்கள் பாசறைகளை அமைக்கட்டும். அகன்றதும், எதிரிகளால் அணுகமுடியாததும், நீரும், விறகும் நிறைந்ததும், செய்திகள் மற்றும் பொருட்களை எதிரிகள் தடுக்க முடியாத வகையில் உள்ளதுமான இடங்களில், பல்வேறு வகை ஆயுதங்கள், கொடிகள் மற்றும் கொடிச்சீலைகள் நிறைந்ததுமான பாசறைகளை அமைப்பீர்களாக. நமது நகரத்தில் இருந்து அந்த முகாமுக்குச் செல்லும் சாலைகள் சமமாக ஆக்கப்படட்டும். இன்றே, தாமதமில்லாமல் இஃது அறிவிக்கப்பட்டு, *நாளை நமது அணிவகுப்பு தொடங்கட்டும்" என்றான் {துரியோதனன்}.
(மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட) அவர்கள், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்கள். அடுத்த நாளில் அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {கர்ணன், துச்சாசனன் மற்றும் சகுனி ஆகியோர்}, தாங்கள் ஏவப்பட்டபடியே, அந்த ஏகாதிபதிகளுக்குத் தேவையான தங்குமிடங்கள் மற்றும் அனைத்துத் தேவைகளையும் செய்தனர்.
(அதே வேளையில்) அந்த ஏகாதிபதிகள் அனைவரும் மன்னனின் {துரியோதனனின்} கட்டளையைக் கேட்டு, அவனது நோக்கங்களை உணர்ந்து, தங்கள் விலையுயர்ந்த இருக்கைகளில் இருந்து கோபத்துடன் எழுந்தனர். அவர்கள் கதாயுதம் {பரிகாயுதம்} போன்றவையும், தங்கத் தோள்வளைகளால் சுடர்விடுவனவுமான தங்கள் கரங்களில் சந்தனக் குழம்பையும், மற்ற பிற வாசனைத் திரவியங்களையும் {கோரோசனை} மெதுவாகப் பூச ஆரம்பித்தனர். தாமரை போன்றன தங்கள் கரங்களால், தலைப்பாகைகளையும் அரை {கீழ்} மற்றும் மேலாடைகளையும், பல்வேறு வகை ஆபரணங்களையும் அணிந்து கொண்டனர்.
தேர்வீரர்களில் முதன்மையான பலர் தங்கள் தேர்களை மேற்பார்வையிட்டனர். குதிரை மரபுகளை அறிந்தவர்கள், தங்கள் குதிரைகளைப் பூட்ட ஆரம்பித்தனர், யானைகள் சம்பந்தமான காரியங்களை அறிந்தவர்கள், பெரிய விலங்குகளான அவற்றில் சாதனங்களைப் பொருத்தினர். பிறகு அந்த வீரர்கள் அனைவரும் பல்வேறு விதமாக அழகிய கவசங்களை அணிந்து கொள்ளவும், பல்வேறு விதமான ஆயுதங்களால் தங்களைத் தயார் செய்து கொள்ளவும் தொடங்கினர். காலாட்படை வீரர்கள் பல்வேறு விதமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, தங்கத்தாலான பல்வேறு விதமான கவசங்களைத் தங்கள் உடல்களில் அணிந்து கொண்டனர்.
ஓ! பாரதா {ஜனமேஜயா}, மகிழ்ச்சியான கோடி {1,00,00,000} பேரால் நிறைந்திருந்த துரியோதனனின் அந்த நகரம் {ஹஸ்தினாபுரம்}, பண்டிகை காலத்தைப் போலப் பிரகாசமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, குருக்களின் அந்தத் தலைநகரம் {ஹஸ்தினாபுரம் = நாகபுரம்}, நிலவு தோன்றும்போது காணக்கிடைக்கும் கடலைப் போலத் தெரிந்தது. மனித குலத்தின் பெரும் கூட்டத்தால் அது {ஹஸ்தினாபுர நகரம்}, எதிர்ச்சுழிப்புகளைக் கொண்ட கடலின் நீர் போலவும்; தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன மீன்களாகவும்; சங்குகள் மற்றும் துந்துபிகளின் ஒலி, அதன் {அக்கடலின்} கர்ஜனை போலவும்; பொக்கிஷ சாலைகள், அதன் ரத்தினங்கள் மற்றும் கற்களைப் போலவும்; பல்வேறு விதமான ஆபரணங்களும் கவசங்களும் அதன் அலைகளாகவும்; பிரகாசமான ஆயுதங்கள் அதன் வெண் நுரையாகவும்; வீடுகளின் வரிசைகள் கடற்கரையில் இருக்கும் மலைகளைப் போலவும்; சாலைகளும், கடைவீதிகளும் {ஹஸ்தினாபுரம் என்ற கடலில் கலக்கும்} ஏரிகளைப் போலவும் தெரிந்தன.
*நாளை நமது அணிவகுப்பு தொடங்கட்டும்" என்றான் {துரியோதனன்}...
திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைமாட்சி/ குறள்:762.உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது.தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா :தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.