Rukmi rejected by the two sides! | Udyoga Parva - Section 159 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் – 88) {சைனியநிர்யாண பர்வம் - 9}
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களின் முகாமுக்குள் ருக்மி வருவது; ருக்மியின் முன் கதை சுருக்கம்; மூன்று பெரும் விற்களான காண்டீவம், சாரங்கம் மற்றும் விஜயம் ஆகியவற்றின் வர்ணனையும் அவற்றை உடையவர்கள் குறித்த செய்தியும்; ருக்மி அர்ஜுனனிடம் தனது உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு சொல்வது; அர்ஜுனன் அவனைப் புறக்கணிப்பது; ருக்மி துரியோதனனிடம் அதே கோரிக்கையுடன் சென்றது; துரியோதனனும் ருக்மியைப் புறக்கணித்தது; போரில் இருந்து விலகிய ருக்மி...
கிருஷ்ணன் ருக்மிணியை கடத்தி வந்த போது பின்தொடர்ந்த அண்ணன் ருக்மி |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்த நேரத்தில் அங்கே பாண்டவப் பாசறைக்குள், பீஷ்மகனின் மகனும், உண்மைநிறைந்த தீர்மானத்தைக் கொண்டவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான ருக்மி என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவன் வந்தான். வேறு பெயரில் ஹிரண்யரோமன் என்றும் அழைக்கப்பட்டவனான உயர் ஆன்ம பீஷ்மகன் {ருக்மியின் தந்தை} இந்திரனுக்கு நண்பனாக இருந்தான். போஜர்களின் வழித்தோன்றல்களில் பெரும் சிறப்புமிக்கவனாகவும், தென்னாடு முழுமைக்கும் ஆட்சியாளனாகவும் {தக்ஷிணதேசத்தாருக்குப் பதியுமாக} அவன் {பீஷ்மகன்} இருந்தான்.
கந்தமாதன மலைகளைத் தனது வசிப்பிடமாகக் கொண்டவனும், துரோணன் {துருமன்} என்ற பெயரில் அறியப்பட்டவனுமான கிம்புருஷர்களில் சிங்கம் போன்றவனுக்குச் {துருமனுக்கு} ருக்மி சீடனாக இருந்தான். அவன் {ருக்மி}, தனது ஆசானிடம் {துருமனிடம்} நான்கு பிரிவுகளுடன் கூடிய ஆயுத அறிவியலை முழுமையாகக் கற்றான். வலிய கரங்களைக் கொண்ட அந்தப் போர்வீரன் {ருக்மி}, காண்டீவம் மற்றும் (கிருஷ்ணனால் தரிக்கப்படும்) சாரங்கத்திற்கு இணையான சக்தி கொண்டதும், பெரும் இந்திரனுக்குச் {மகேந்திரனுக்குச்} சொந்தமானதும், தெய்வீகத் தொழில்நுட்பம் வாய்ந்ததுமான விஜயம் என்ற பெயரைக் கொண்டதுமான வில்லை {துருமனிடமிருந்து} அடைந்தான்.
வருணனுடைய காண்டீவம், இந்திரனுடைய விஜயம் என்று அழைக்கபட்ட வில், பெரும் சக்தி கொண்டதான விஷ்ணுவின் தெய்வீகமான வில் {சாரங்கம்} ஆகிய மூன்றும் சொர்க்கவாசிகளுக்குச் சொந்தமான தெய்வீக விற்களாக இருந்தன. பகை வீரர்களின் இதங்களில் பயத்தை உண்டாக்கும் இந்தக் கடைசி வில் (சாரங்கம்) கிருஷ்ணனால் தரிக்கப்பட்டது. காண்டவத்தை எரித்த நிகழ்வின் போது அக்னியிடம் இருந்து காண்டீவம் என்று அழைக்கப்பட்ட வில்லை இந்திரனின் மகன் (அர்ஜுனன்) பெற்றான். அதே வேளையில், விஜயம் என்ற வில்லைப் பெரும் சக்தி கொண்ட ருக்மி, {கிம்புருஷனான} துரோணனிடம் {துருமனிடம்} இருந்து பெற்றான்.
முரனின் சுருக்குகளை {பாசங்களை} கலங்கடித்து, அந்த அசுரனைத் {முரனைத்} தனது ஆற்றலால் கொன்றவனும், பூமியின் {பூமாதேவியின்} மகனான நரகனை வீழ்த்தியவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பதினாறாயிரம் {16,000} பெண்களையும், பல்வேறு வகையான ரத்தினங்கள் மற்றும் கற்களையும், (அதிதியின்) மணிக்குண்டலங்களை மீட்ட போது, சாரங்கம் என்று அழைக்கப்பட்ட அந்த அற்புதமான வில்லையும் அடைந்தான்.
மேகங்களின் கர்ஜனைக்கு நிகரான நாணொலி கொண்ட விஜயம் என்ற வில்லை அடைந்த ருக்மி, அச்சத்தால் முழு அண்டத்தையும் கலங்கடித்தபடி பாண்டவர்களிடம் வந்தான். தனது கரங்களின் வலிமையில் செருக்கு கொண்டவனான அந்த ருக்மி, முன்னதாக {முன்பு ஒரு காலத்தில்}, தனது தங்கை ருக்மிணி புத்திமானான வாசுதேவனால் {கிருஷ்ணனால்} கடத்தப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், "ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} கொல்லாமல் திரும்புவதில்லை" என்ற உறுதிமொழியை நோற்று அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றான்.
அழகான கவசங்களைத் தரித்து, பல்வேறு வகையான ஆயுதங்களையும் தரித்து, பெருகியோடும் கங்கையின் நீரோட்டத்தைப் போலப் பாய்வதும், (அணிவகுத்துச் செல்லும்போது) பூமியின் ஒரு மிகப்பெரிய பகுதியை ஆக்கிரமிப்பதுமான நால்வகைப் படைகளின் துணையுடன் வந்தவனும், ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {ருக்மி}, விருஷ்ணி குலத்தோனான வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்தான்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, தவத்துறவுகளால் அடையத்தக்க அனைத்துக்கும் தலைவனான அந்த விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} வந்த ருக்மி, அவனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டு அவமானம் அடைந்தான். அதன் காரணமாக அவன் {ருக்மி}, (தனது நகரான) குண்டினத்திற்குத் [1] {Kundina} திரும்பவில்லை. பகை வீரர்களைக் கொல்பவனான அவன் {ருக்மி} கிருஷ்ணனால் எந்த இடத்தில் வீழ்த்தப்பட்டானோ, அதே இடத்தில் போஜகடம் {Bojakata} என்ற பெயரில் ஓர் அற்புத நகரத்தைக் கட்டினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் படைகளுடனும், யானைகள் மற்றும் குதிரைகளுடனும் நிரம்பியிருக்ககும் அந்த நகரம், உலகத்தில் அந்தப் பெயராலேயே {போஜகடம் என்ற பெயராலேயே} பரந்து அறியப்பட்டது.
குருசேத்திரம், இந்திரபிரஸ்தம், உபப்லாவ்யம், விராடபுரி, குண்டினம், போஜகடம் |
[1] நளனின் தலைநகரம் இதே குண்டினபுரம்தான். நளனின் நாடு நிடத {நைஷாத} நாடு என்று அழைக்கப்பட்டதாக வன பர்வத்தின் நளோபாக்யான பர்வத்தில் நாம் ஏற்கனவே கண்டோம். இங்கே அதே குண்டினத்தைத் தலைநகரமாகக் கொண்ட ருக்மியின் நாடு போஜர்களின் நாடாகச் சொல்லப்படுகிறது.
கவசம் பூண்டு, விற்கள், கையுறைகள், வாட்கள், அம்பறாத்தூணிகள் ஆகியவற்றைத் தரித்திருந்த அந்தப் பெரும் சக்தி கொண்ட வீரன் {ருக்மி}, ஓர் அக்ஷௌஹிணி படையுடன் {உபப்லாவ்யத்தில் இருந்த} பாண்டவ முகாமுக்குள் விரைவாக நுழைந்தான். சூரியனைப் போன்று நிலையான சுடரொளியுடன் இருந்த அந்தப் {பாண்டவப்} பெரும்படைக்குள் நுழைந்த ருக்மி, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்கத்தக்கதைச் செய்ய விரும்பிய பாண்டவர்களிடம் தன்னை அறியச் செய்து கொண்டான். சில எட்டுகள் முன் வந்த மன்னன் யுதிஷ்டிரன், அவனுக்கு {ருக்மிக்குத்} தனது வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். முறையாக வழிபடப்பட்டு, பாண்டவர்களால் புகழப்பட்ட ருக்மி, பிறகு, தனது பதில் வணக்கத்தைத் தெரிவித்து, தனது துருப்புகளுடன் சிறிது நேரம் ஓய்ந்திருந்தான்.
*பிறகு, அவன் {ருக்மி}, கூடியிருந்த வீரர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியின் மகனான அர்ஜுனனிடம், "ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அச்சப்படுகிறாயெனில், போரில் உனக்கு உதவிகளை அளிக்க நான் இங்கு இருக்கிறேன். நான் உனக்குத் தரும் உதவியை, உனது எதிரிகளால் தாங்கிக் கொள்ள இயலாது. ஆற்றலில் எனக்கு நிகரான எந்த மனிதனும் இவ்வுலகில் கிடையாது. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உனது எதிரிகளில் யாரை நீ எனக்கு ஒதுக்குகிறாயோ அவர்களை நான் கொல்வேன். துரோணர், கிருபர், பீஷ்மர் மற்றும் கர்ணன் ஆகிய வீரர்களில் ஒருவரை நான் கொல்வேன். அல்லது, பூமியின் மன்னர்களான இவர்கள் அனைவரும் ஒரு புறம் நிற்கட்டும். உனது எதிரிகளை நானே கொன்று, இந்தப் பூமியை நான் உனக்கு அளிக்கிறேன்" என்றான் {ருக்மி}.
நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் முன்னிலையிலும், (கூடியிருந்த) ஏகாதிபதிகளும், (முகாமில்) இருந்த அனைவரும் கேட்கும்படியும் இதைச் சொன்னான். பிறகு, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோர் மீது தனது கண்களைச் செலுத்திய குந்தியின் புத்திசாலி மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, புன்னகைத்தவாறே, நட்பு கலந்த குரலில், "குரு {கௌரவக்} குலத்தில் பிறந்து, அதிலும் குறிப்பாகப் பாண்டுவின் மகனாகப் பிறந்து, எனது ஆசான் என்று துரோணரின் பெயரைச் சொல்லிக் கொண்டு, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனது கூட்டாளியாக வைத்துக் கொண்டு, அதையெல்லாம் விடக் காண்டீவம் என்று அழைக்கப்படும் வில்லையும் கொண்டிருக்கும் நான், அஞ்சுகிறேன் என்று எப்படிச் சொல்வேன்?
ஓ! வீரா {ருக்மியே}, கால்நடைகளைக் கணக்கெடுத்த நிகழ்வில் {கோஷ யாத்ரையின் போது} பலமிக்கக் கந்தர்வர்களுடன் நான் போரிட்டபோது, எனக்கு உதவி செய்ய எவன் இருந்தான்?
காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} ஒன்று சேர்ந்து பெரும் எண்ணிக்கையில் வந்த தேவர்களுடனும், தானவர்களுடனும் பயங்கர மோதல் ஏற்பட்டு, நான் அவர்களுடன் போரிடுகையில், எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?
மேலும், நிவாதகவசர்களுடனும், காலகேயர்கள் என்று அழைக்கப்பட்ட பிற தானவர்களுடனும் நான் போரிட்டபோது, எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?
மேலும், விராட நகரத்தில், எண்ணற்ற குருக்களுடன் நான் போரிட்ட போது, அந்தப் போரில் எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?
போரின் நிமித்தமாக ருத்ரன், சக்ரன் {இந்திரன்}, வைஸ்ரவணன் {குபேரன்}, யமன், வருணன், பாவகன் {அக்னி}, கிருபர், துரோணர், மாதவன் {கிருஷ்ணன்} ஆகியோருக்கு எனது மரியாதைகளைச் செலுத்துபவன் நான்.
ஓ! மனிதர்களில் புலியே {ருக்மியே}, ஏந்துவதற்குக் கடினமானதும், பெரும் சக்தி கொண்டதும், காண்டீவம் என்றழைக்கப்படுவதுமான தெய்வீக வில்லைத் தரித்துக் கொண்டு, வற்றாத அம்புகள் மற்றும் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டிருக்கும் என்னைப்போன்றவன், புகழனைத்தையும் திருடிவிடக்கூடிய {இழந்துவிடக்கூடிய} "நான் அஞ்சுகிறேன்" என்ற வார்த்தைகளை வஜ்ரத்தைத் தாங்கியிருக்கும் இந்திரனிடம் கூட எப்படிச் சொல்வான்?
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் அஞ்சவில்லை, உனது உதவிக்கான எந்தத் தேவையும் எனக்கில்லை. எனவே, செல். அல்லது தங்கு. உனக்கு விருப்பமானதையோ, தகுந்ததையோ செய்துகொள்வாயாக {எதை வேண்டுமானாலும் செய்து கொள்}" என்றான் {அர்ஜுனன்}.
அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ருக்மி, கடல் போன்று பரந்திருந்த தனது படையுடன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனிடம் சென்றான் {ருக்மி}. அங்கே சென்ற மன்னன் ருக்மி, துரியோதனனிடமும் இந்த வார்த்தைகளேயே திரும்பச் சொன்னான். தனது வீரத்தில் செருக்குக் கொண்ட அம்மன்னனும் {துரியோதனனும்}, அதே வழியில் {அர்ஜுனனைப் போலவே} அவனை {ருக்மியை} நிராகரித்தான்.
இப்படியே, ஓ! மன்னா {ஜனமேஜயா}, விருஷ்ணி குலத்து ரோகிணியின் மகன் (ராமன் {பலராமன்}), மன்னன் ருக்மி ஆகிய இருவரும் போரில் இருந்து விலகினர். ராமன் {பலராமன்} தீர்த்த யாத்திரைக்குப் புறப்படவும், பீஷ்மகனின் மகன் ருக்மி இப்படி விலகவும் செய்த பிறகு, மீண்டும் ஒருமுறை பாண்டுவின் மகன்கள் ஒருவருக்குள் ஒருவர் ஆலோசிக்க அமர்ந்தனர். எண்ணிலடங்கா ஏகாதிபதிகள் நிறைந்ததும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் தலைமை தாங்கப்பட்டதுமான அந்தச் சபை, சிறிய ஒளி பொருட்ளாலும் {கோள்களாலும்}, அவற்றுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனாலும் அலங்கரிக்கப்பட்ட வானம் போலச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது."
*********************************************************************************
*********************************************************************************
*ருக்மிணியின் அண்ணன் ருக்மி அர்ஜுனனிடம், "ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அச்சப்படுகிறாயெனில், போரில் உனக்கு உதவிகளை அளிக்க நான் இங்கு இருக்கிறேன். உனது எதிரிகளை நானே கொன்று, இந்தப் பூமியை நான் உனக்கு அளிக்கிறேன்" என்றான் {ருக்மி}. இத்தகு வார்த்தைகளால் அர்ஜுனன் ருக்மியை நிராகரித்தான். துரியோதனனும், அதே வழியில் அர்ஜுனனைப் போலவே ருக்மியை நிராகரித்தான்...திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: அமைச்சியல்/ அதிகாரம்: சொல்வன்மை/ குறள்: 644திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங்கு இல்.தமிழில் விளக்கவுரை - சாலமன் பாப்பையா உரை: எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: அரசியல்/ அதிகாரம்: குற்றங்கடிதல்/ குறள்: 439வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினை.தமிழில் விளக்கவுரை - சாலமன் பாப்பையா உரை:எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.