Sikhandin was born as a girl! | Udyoga Parva - Section 191 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 18)
பதிவின் சுருக்கம் : சிகண்டியின் பிறப்பு குறித்துத் துரியோதனன் பீஷ்மரிடம் கேட்பது; பீஷ்மர் சொல்வது; துருபதன் பிள்ளையில்லாதிருந்தது; பீஷ்மரை அழிக்கும்பொருட்டு ஒரு மகன் வேண்டுமெனச் சிவனை நோக்கி தவமிருந்த துருபதன்; சிவன் ஆணும் பெண்ணுமான ஒரு குழந்தை துருபதனுக்குப் பிறக்கும் என்று சொன்னது; துருபதனின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுத்து மகன் பிறந்ததாக வெளியிட்டது; துருபதனும் உண்மையை மறைத்து அக்குழந்தைக்கு மகனுக்கு உரிய சடங்குகளையே செய்து சிகண்டி என்று பெயரிட்டது...
துரியோதனன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! கங்கையின் மகனே, ஓ! போர்வீரர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, மகளாக முன்னர்ப் பிறந்த சிகண்டி, பின்னர் ஆணாக ஆனது எப்படி என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, மன்னன் துருபதனின் அன்பிற்குரிய மூத்த ராணி, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, (முதலில்) குழந்தையற்றவளாக இருந்தாள். அந்த ஆண்டுகளில், மன்னன் துருபதன், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, என் அழிவுக்காகத் தன் மனதில் ஆலோசித்தும், சந்ததியின் பொருட்டும், தேவன் சங்கரனுக்குத் {சிவனுக்கு} தனது துதியைச் செலுத்தி, தவத்துறவை பயின்றுவந்தான். அவன் {துருபதன்} மகாதேவனிடம் {சிவனிடம்}, "மகளன்றி ஒரு மகனே எனக்குப் பிறக்கட்டும். ஓ தேவா {சிவனே}, பீஷ்மனைப் பழிதீர்க்கும் ஒரு மகனையே நான் விரும்புகிறேன்" என்று இரந்து வேண்டினான்.
அதன்பேரில் அந்தத் தேவர்களுக்குத் தேவன் {சிவன்} அவனிடம் {துருபதனிடம்}, "பெண்ணாகவும், ஆணாகவும் உள்ள குழந்தையையே நீ பெறுவாய். ஓ! மன்னா {துருபதா}, {தவத்தில் இருந்து} விலகுவாயாக; அது {ஒருபோதும்} வேறாகாது" என்று சொன்னான். பிறகு தனது தலைநகருக்குத் திரும்பிய அவன் {துருபதன்}, தனது மனைவியிடம், "ஓ! பெரும் தேவியே, என்னால் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தவத்துறவுகளில் ஈடுபட்டு, நான் சிவனைத் துதித்தேன். (முதலில்) பெண்ணாக இருக்கும் என் குழந்தை அதன் தொடர்ச்சியாக ஆணாக மாறுவாள் என்று அந்தச் சம்புவால் {சிவனால்} சொல்லப்பட்டது. நான் அவனை {சிவனை} மீண்டும் மீண்டும் வேண்டிய போது, "இதுவே விதியால் விதிக்கப்பட்டது" என்றான் அவன் {அந்தச் சிவன்}. இது வேறாகாது. விதிக்கப்பட்டது நடந்தே தீரும்", என்றான் {துருபதன் தன் மனைவியிடம்}.
பிறகு, பெரும் சக்தி படைத்த பெண்ணான மன்னன் துருபதனின் ராணி, தனது பருவ காலத்தில் {ருது காலத்தில்} (தூய்மை குறித்த) கட்டுப்பாடுகள் அனைத்தையும் நோற்று {நியமத்துடன் இருந்து} துருபதனை அணுகினாள். குறித்த காலத்தில் பிருஷதனின் {துருபதனின்} அந்த மனைவியானவள் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் கருத்தரித்தாள். இது குறித்து, ஓ! மன்னா {துரியோதனா}, நாரதர் எனக்குச் சொன்னார்.
தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண்மணி, தனது கருவறையில் அந்தக் கருவைச் சுமக்க ஆரம்பித்தாள். மேலும், ஓ! குருகுலத்தின் மகனே {துரியோதனா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னன் துருபதன், {பிறக்கப் போகும் குழந்தையின் மீது தான் கொண்ட} தந்தை பாசத்தால், தன்னுயிர் மனைவிக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான். மேலும், ஓ! கௌரவ்யா {துரியோதனா}, குழந்தையற்றவளும், பூமியின் தலைவனான அந்த அரசன் துருபதனின் மனைவியுமான அவள் {அந்த ராணி} தனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் பெற்றாள். குறித்த நேரத்தில், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, துருபதனின் ராணியான அந்தத் தேவி {goddess}, பெரும் அழகுடன் கூடிய ஒரு மகளை ஈன்றெடுத்தாள்.
அப்போது, மனோபலம் கொண்ட அந்த மன்னனின் {துருபதனின்} மனைவி, குழந்தையற்ற துருபதனிடம், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, தான் ஈன்றெடுத்த குழந்தை ஒரு மகன் என்று வெளியிட்டாள். ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, பிறகு, மன்னன் துருபதன், தவறாகப் பொருள்கொள்ளப்பட்ட தன் மகளுக்கு, ஏதோ அவள் ஒரு மகனைப் போல, ஓர் ஆண் குழந்தைக்குக் கடமையாகச் சொல்லப்பட்ட சடங்குகள் அனைத்தையும் செய்வித்தான். அந்தக் குழந்தை ஒரு மகனே என்று சொன்ன துருபதனின் மனைவி தனது ஆலோசனைகளை மிகக் கவனமாகப் பாதுகாத்தாள்.
பிருஷதனைத் {துருபதனைத்} தவிர, அந்நகரில் உள்ள வேறு எந்த மனிதனும், அக்குழந்தையின் பாலினத்தை அறிந்திருக்கவில்லை. மங்கா சக்தி கொண்ட அந்தத் தெய்வத்தின் {சிவனின்} இந்த வார்த்தைகளை நம்பிய அவனும் {துருபதனும்}, "அவள் ஒரு மகன்" என்று சொல்லி தனது குழந்தையின் உண்மையான பாலினத்தை மறைத்தான். மேலும், ஓ! மன்னா {துரியோதனா}, குழந்தைக்குச் செய்யப்படும் அனைத்துச் சடங்குகளையும் ஒரு மகனுக்குப் உரிய வகையில் அந்தக் குழந்தைக்குச் செய்த அவன் {துருபதன்}, அவளுக்குச் சிகண்டி என்ற பெயரைச் சூட்டினான். என் ஒற்றர்கள் மூலமாகவும், நாரதரின் வார்த்தைகளில் இருந்தும் நான் மட்டுமே இந்த உண்மையை அறிந்தேன். ஏற்கனவே நான் தேவனின் {சிவனின்} வார்த்தைகளையும், அம்பையின் தவத்துறவுகளையும் குறித்த தகவல்களையும் அறிந்தே இருந்தேன்" என்றார் {பீஷ்மர்}.