Indications of those who will be victorious! | Bhishma-Parva-Section-003c | Mahabharata In Tamil
(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் –3)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் வியாசரிடம் தன் நிலையை விளக்கிக் கூறுவது; வியாசரின் உத்தரவின் பேரில் தனது மனத்தில் இருப்பதைத் திருதராஷ்டிரன் கேட்பது; வெற்றி பெறப் போகும் வீரர்களிடம் காணப்படும் அறிகுறிகளையும், தோல்வியுறுபவர்களின் அறிகுறிகளையும் வியாசர் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; படை சிதறுவதற்கான காரணங்களை வியாசர் சொல்வது...
{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் தொடர்ந்தார்}, "அந்த அந்தணர்களில் சிறந்தவர் {வியாசர்}, சோகம் நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, பேச்சுக் கலையை அறிந்தவனும், அம்பிகையின் மகனுமான திருதராஷ்டிரன், மீண்டும் ஒருமுறை அவரிடம் {வியாசரிடம்}, "வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றைக் குறித்த என் அறிவு உமக்கு ஒத்ததாகவே இருக்கிறது. இவற்றின் உண்மையை நான் அறிவேன். எனினும், சுய விருப்பங்களைக் கருத்தில் கொள்ளும் மனிதன், நீதியை இழக்கிறான். ஓ! ஐயா {வியாசரே}, நான் ஒரு சாதாரண மனிதன் என்பதை அறிவீராக. நீரோ அளவிலா சக்தி படைத்தவர். உமது சக்தியை {கருணையை} எங்களுக்கு அளிக்குமாறு நான் உம்மிடம் வேண்டுகிறேன். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள நீரே எங்களுக்குப் புகலிடமும், வழிகாட்டியும் ஆவீர். ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, எனது மகன்கள் எனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இல்லை. எனது அறிவும் பாவம் இழைக்கத் துணியவில்லை. பாரதர்களின் புகழ், சாதனைகள் மற்றும் அறத்துணிவு ஆகியவற்றுக்கு நீரே காரணமாவீர். குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவருக்கும் நீர் மதிப்புமிக்கப் பாட்டனாவீர்" என்றான் {திருதராஷ்டிரன்}.
வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! விசித்திரவீரியனின் அரச மகனே {திருதராஷ்டிரா}, உனது மனதில் இருப்பதைத் தாராளமாக என்னிடம் சொல்வாயாக. நான் உனது ஐயங்களை விலக்குவேன்" என்றார்.
திருதராஷ்டிரன், "ஓ! புனிதமானவரே {வியாசரே}, போரில் வெற்றி பெறுபவர்களின் அடையாளங்கள் அனைத்தையும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்" என்றான்.
வியாசர், "(புனித) நெருப்பு, உற்சாகமான பிரகாசத்தை வகிக்கிறது {நிர்மலமான காந்தியைக் கொண்டிருக்கிறது}. அதன் ஒளி மேல்நோக்கி உயர்கிறது. அதன் சுடர் வலமாக {சுற்றி} வளைகிறது. புகையற்று அது சுடர்விடுகிறது. அதில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகள் {நெய்} நறுமணத்தைக் கொடுக்கிறது. இவையே எதிர்கால வெற்றிக்கான அடையாளங்களாகச் சொல்லப்படுகிறது. சங்குகளும், மிருதங்கங்களும், ஆழ்ந்த மற்றும் உரத்த ஒலியைக் கொடுக்கின்றன. சூரியனும், சந்திரனும் தூய கதிர்களைக் கொடுக்கிறார்கள். இவையே எதிர்கால வெற்றிக்கான அடையாளங்களாகச் சொல்லப்படுகிறது. காகங்கள் நின்று கொண்டிருந்தாலோ அல்லது சிறகடித்துக் கொண்டிருந்தாலோ கூட ஏற்புடைய வகையிலேயே கரைகின்றன. பின்னால் இருப்பவை, {காக்கைகள்}, போர்வீரர்களை முன்னேறத் தூண்டுகின்றன; அதே வேளையில் முன்னால் இருப்பவையோ, முன்னேற்றம் அனைத்தையும் தடுக்கின்றன [1].
[1] வேறு பதிப்பில் இந்த வரிகள், "பயணத்திற்குப் புறப்படுபவர்களுக்கும், பயணத்தில் இருப்பவர்களுக்கும், காக்கைகளின் வாக்குகள் வெளிப்படுதல் விரும்பத்தக்கதாகும். புறப்படுகின்றவர்களுக்குப் பின்புறத்தில் இருந்து கத்துகின்ற காக்கைகள், போகின்றவர்களைத் துரிதப்படுத்துகின்றன. புறப்படப் போகிறவர்களுக்கு முன்னால் இருந்து கத்துகின்ற காக்கைகள் பயணத்தைத் தடுக்கின்றன" என்றிருக்கிறது. கங்குலியோ, "67ம் சுலோகத்தின் இரண்டாவது வரி மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது. மொழிபெயர்ப்பதில் நான் நீலகண்டரைப் பின்பற்றியிருக்கிறேன். காகங்கள் ஒரு படைக்குப் பின்னால் பறக்கும்போது, அது மங்கலமான அறிகுறி என்றும்; அவை முன்னால் இருப்பதைக் கண்டால், அது அமங்கலக்குறி என்றும் பொருள் தருவதாகப் படுகிறது. ye என்ற சுட்டுப்பெயரை {pronoun-ஐ} காக்கைகளாகவே எடுத்துக் கொள்வதில் நீலகண்டர் செய்தது சரியா என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இல்லை" என்கிறார்.
கழுகுகள், அன்னங்கள், கிளிகள், மரங்கொத்திகள் {அன்றில்கள்} ஆகியவை எங்கே இனிமையாக ஒலியெழுப்பி வலமாகச் சுற்றுகின்றனவோ, அவர்கள் {அங்கே உள்ளவர்கள்} போரில் வெல்வது உறுதி என்று அந்தணர்கள் சொல்கிறார்கள். ஆபரணங்கள், கவசங்கள், கொடிக்கம்பங்கள் அல்லது குதிரைகளின் இனிமையான கனைப்பொலி ஆகியவை எவருடைய படைப்பிரிவுகளில் காண முடியாத அளவுக்குப் பிரகாசிக்கின்றனவோ, அவர்கள் எப்போதும் எதிரிகளை வெல்வார்கள். ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, எவருடைய வீரர்கள் உற்சாகமாக முழக்கமிடுகிறார்களோ, எவருடைய சக்திகள் தணிக்கப்படாமல் இருக்கிறதோ, எவருடைய மாலைகள் வாடாமல் இருக்கின்றவோ அவர்கள் எப்போதும் போர்க்கடலைக் {போர் எனும் கடலைக்} கடப்பார்கள். எதிரியின் படைப்பிரிவுகளைத் துளைத்துக் கொண்டு எவர் உற்சாகமாக முழக்கமிட்டுக் கொண்டு, எதிரியிடம் கூட அன்பான வார்த்தைகளைச் [2] சொல்கிறார்களோ, எவர் அடிப்பதற்கு முன்பே எதிரியை எச்சரிக்கிறார்களோ அவர்கள் வெற்றியை அடைகிறார்கள்.
[2] "போரிடாதே. ஏனெனில் நீ விரைவில் இறந்தவனாவாய்" என்பது போன்ற வார்த்தைகளாக இருக்கலாம் என்கிறார் கங்குலி
கேள்வி {காது கேட்கும் திறன்}, பார்வை, சுவை, தொடுதல் மற்றும் மணம் ஆகியவை மோசமான எந்தவித மாற்றத்திற்கும் ஆளாகாமல் இருந்தால் அவை மங்கலமாகும். போராளிகளுக்கு எப்போதும் இன்பமாயிருப்பதும், ஒரு வெற்றிகரமான படையின் அடையாளமாகும். வீசும் காற்றும், மேகங்களும், பறவைகளும் உதவிகரமாக இருப்பதும்; அதே வேளையில் (உதவிகரமாக இருக்கும்) மேகங்களும், வானவில்லும் நன்மையான மழையைப் பொழிவதும் வெற்றியின் மற்றொரு அடையாளமாகும் [3]. {மேகங்கள் நன்மையான மழையைப் பொழிதலும், வானவில் பின்தொடர்ந்து வருதலும் வெற்றியாளர்களின் அடையாளமாகும்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, வெற்றியால் மகுடந்தரிக்கப்படும் படைகளின் அடையாளங்கள் இவை. அதே வேளையில் ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, அழிவுக்குள்ளாவோருக்கு இவை அனைத்தும் மாறுபட்டு அமையும்.
[3] வேறு பதிப்புகளில், "காற்றுகள் அனுசரித்து வீசுதலும், அவ்வாறே மேகங்களும், பறவைகளும், இந்திரவில்களும் {வானவில்களும்} பின்தொடர்ந்து செல்லுதலும் வெற்றியாளர்களின் அடையாளங்களாகும்" என்று இருக்கிறது.
படை சிறியதோ, பெரியதோ, போராளிகளின் குணமாக உற்சாகம் இருக்குமேயானால், அதுவே நிச்சயம் வெற்றியின் அடையாளம் ஆகும். பீதியடைந்த படைவீரன் ஒருவன், ஒரு பெரிய படையே அச்சத்துள்ளாகி பின்வாங்குவதற்குக் காரணமாக இருக்க முடியும். ஒரு படையானது பீதிக்குள்ளாகி பின்வாங்கினால், வீரமிக்கப் போர்வீரர்களும் அச்சங்கொள்ளக் காரணமாக அதுவே அமையும். ஒரு முறை உடைக்கப்பட்டு, விரட்டப்படும் ஒரு பெரும்படை அச்சத்தால் சிதறியோடும் மான்கூட்டத்தைப் போலவோ, வலிமைமிக்க ஊற்றுக் கொண்ட நீரைப் போலவோ தடுக்க {திருப்ப} முடியாததாகும். ஒரு பெரும்படை ஒருமுறை விரட்டப்பட்டாலே, அதை மீண்டும் திரளச் செய்வது இயலாது; மறுபுறம், அப்படி உடைக்கப்பட்ட அந்தப் படையினால், ஓ! பாரதா {திருதராஷ்டிரா} போரில் நன்கு திறம்பெற்றவர்கள் கூட உற்சாகத்தை இழப்பார்கள்.
அச்சத்தால் பீடிக்கப்பட்டு ஓடும் வீரர்களைக் காண்பதால், அந்தப் பீதி பல்வேறு திசைகளிலும் பரவி, விரைவில், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, முழுப் படையும் உடைந்து, அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடும். ஒரு படை இப்படி விரட்டப்படும்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, நால்வகைப் படைகளைக் கொண்ட பெரும் பிரிவுகளின் தலைமையில் இருப்போரான துணிச்சல் மிக்கத் தலைவர்களால்கூட அவர்களை {மீண்டும்} அணிதிரட்ட முடியாது. சுறுசுறுப்புடன் எப்போதும் உழைக்கும் ஒரு புத்திசாலி மனிதன், வழிகளின் {உபாயங்களின்} துணை கொண்டு (வெற்றியை அடைய) முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலமோ {சாமம் மூலமோ}, பிற வழிகளிலோ {தானம் மூலமோ} வெல்லப்படும் வெற்றியே மிகச் சிறந்ததெனச் சொல்லப்படுகிறது. (எதிரிகள் மத்தியில்) வேறுபாட்டை உண்டாக்கி {பேதம் மூலம்} பெறப்படுவது பொருட்படுத்தத்தக்கது அல்ல {சாதாரணமானதே}. அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, போரின் மூலமாகப் பெறப்படும் வெற்றி இழிவானது.
போரில் பல தீமைகள் இருக்கின்றன. அதில் முதன்மையானதாகப் படுகொலை சொல்லப்படுகிறது. ஒருவரை ஒருவர் அறிந்தவர்களும், துக்கப்படாதவர்களும், குடும்பப் பந்தங்களில் இருந்து விடுபட்டவர்களும், உறுதியான தீர்மானம் கொண்டவர்களுமான ஐம்பது துணிவுமிக்க வீரர்களால் மட்டுமேகூட ஒரு பெரும் படையை நசுக்கிவிட முடியும். புறமுதுகிடாத ஐந்து, ஆறு அல்லது ஏழு பேரால் கூட வெற்றியை அடைந்துவிட முடியும். வினதையின் மகனான கருடன், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, பறவைகளின் பெருங்கூட்டத்தைக் கண்டாலும்கூட, (அவர்களை வீழ்த்த) பல தொண்டர்களின் துணையைக் கேட்க மாட்டான். எனவே ஒரு படையில் இருக்கும் வீரர்களுடைய எண்ணிக்கையின் பலம் மட்டுமே எப்போதும் வெற்றியைத் தந்துவிடாது. வெற்றி உறுதியற்றதாகும் {நிச்சயமற்றதாகும்}. அது வாய்ப்பைச் {சந்தர்ப்பத்தைச்} சார்ந்தே இருக்கிறது. வெற்றி அடைந்தவர்கள் கூட இழப்பை ஏற்க வேண்டியிருக்கும்" என்றார் {வியாசர்}.
ஆங்கிலத்தில் | In English |