என் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களிடம் தவிர மொழிபெயர்ப்புக்கென நான் இதுவரை வேறு எந்தத் தனிநபரிடமும் பணம் பெற்றதில்லை. இதற்கு முன் நுங்கம்பாக்கம் அரிமா சங்கத்தால் கொடுக்கப்பட்ட அன்பளிப்பான ரூ.25,000/-ஐப் பெற்றிருக்கிறேன்.
நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களுக்கு தொடர்ந்து வரும் தொலைபேசி அழைப்புகளைக் கருத்தில் கொண்டு, அவர் என்னிடம் "ஏன் நீங்கள் நமது வலைப்பூவில் உங்கள் வங்கிக் கணக்கெண்ணைப் பதியக்கூடாது?" என்று கேட்டார்.
"பணத்திற்காகச் செய்யப்படும் வேலை இது என்ற சொல் நமக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக நீங்கள்தானே ஆரம்பம் முதலே இது வேண்டாம் என்று சொல்லி வந்தீர்கள்! எனக்கு நீங்கள் தருவதே போதுமானது" என்று நான் அவரிடம் சொன்னேன்.
அவர், "இல்லை. எனக்குத் தொடர்ந்து வரும் அழைப்புகளில், சிலர் கூறும் விளக்கங்கள் எனக்கு நியாயமாகவே படுகிறது. எனவே, நமது வலைப்பூவில், "என்னைத் தொடர்பு கொள்ள என்ற பக்கத்தில்" யாரிடமும் எந்தக் கோரிக்கையும் வைக்காமல், சும்மா வெறுமனே உங்கள் வங்கிக் கணக்கையும் போடுங்கள். என்னை அழைக்கும் சிலருக்கு நான் அந்தப் பக்கத்தைப் பார்க்கும்படி சொல்கிறேன். அவர்கள் விரும்புவதைச் செய்யட்டும். நாம் தடுக்க வேண்டாம். தப்பில்லைங்க" என்றார்.
அப்படியே நானும் கோரிக்கை ஏதும் வைக்காமல் அவர் சுட்டிய பக்கத்தில் என் வங்கிக் கணக்கின் விபரங்களை இட்டிருந்தேன்.
மேற்கண்டது நடந்தது ஒரு வாரத்திற்கு முன்பு.
நேற்று , முதல் நபராக அமெரிக்காவில் இருக்கும் திரு.ஹரிஷ்குமார்மோகன் என்ற வாசக நண்பர், என் வங்கிக் கணக்கில் ரூ.20,000/- செலுத்தி எனக்கு மின்னஞ்சலிலும் தெரிவித்திருந்தார்.
திரு. ஹரிஷ்குமார் அவர்களுக்கு நன்றி.