'Krishna is the Supreme Being!" Bhishma! | Bhishma-Parva-Section-067 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 25)
பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குக் கிருஷ்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பீஷ்மர்...
துரியோதனன் {பீஷ்மரிடம்}, "அனைத்து உலகங்களிலும் வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள் {மஹாபூதஸ்வரூபி} எனச் சொல்லப்படுகிறான். ஓ! பாட்டா {பீஷ்மரே}, அவனது {கிருஷ்ணனது} தோற்றத்தையும் {ஆகமத்தையும்}, மகிமையையும் {பிரதிஷ்டையையும்} நான் அறிய விரும்புகிறேன்" என்றான்.
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள். தேவர்கள் அனைவரின் தேவன் அவன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட {புண்டரீகாக்ஷனான} அவனுக்கும் மேன்மையானவன் எவனும் காணப்படவில்லை. கோவிந்தனை {கிருஷ்ணனை}, அற்புதம் நிறைந்தவன் என்றும், மிக உயர்ந்தவன் என்றும் அனைத்துமானவன் என்றும், ஆத்மத்திரள் என்றும், உயர்ந்த ஆன்மா என்றும், பரம புருஷன் என்றும் மார்க்கண்டேயர் சொல்கிறார்.
நீர், காற்று மற்றும் நெருப்பு ஆகிய மூன்றையும் படைத்தவன் அவனே. உலகங்கள் அனைத்தின் தலைவனான அந்தத் தெய்வீக உரிமையாளனே இந்தப் பூமியைப் படைத்தான். ஒப்பற்ற ஆன்மா கொண்ட அந்தப் பரம்பொருள் தன்னை நீரில் கிடத்தி {சயனம்} கொண்டான். அனைத்து வகைச் சக்திகளாலான அந்தப் பரம்பொருள் {சர்வதேவஸ்வரூபி}, அங்கே யோகத்துயில் கொண்டான்.
தன் வாயிலிருந்து நெருப்பையும், சுவாசத்தில் இருந்து காற்றையும் உண்டாக்கினான். மங்கா மகிமை கொண்ட அவன் தன் வாயிலிருந்து பேச்சையும், வேதங்களையும் உண்டாக்கினான். இப்படியே முதலில் அவன் உலகங்களையும், தேவர்களையும், பல்வேறு வகையான முனிவர்களையும் படைத்தான். பிறகு அவன் அனைத்து உயிர்களின் சிதைவையும், மரணத்தையும், பிறப்பையும், வளர்ச்சியையும் படைத்தான்.
அறமும் அவனே, அற ஆன்மாவும் அவனே. வரங்களையும், (நமது) விருப்பங்கள் அனைத்தையும் அளிப்பவன் அவனே. செயல்படுபவனும், செயலும் அவனே. தெய்வீக உரிமையாளன் அவனே. முன்பே கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைப் படைத்தவன் அவனே; அண்டத்தைப் படைத்தவன் அவனே. ஒப்பற்ற ஆன்மா கொண்டவன் அவனே; மங்கா மகிமை கொண்ட உரிமையாளன் அவனே.
அனைத்து உயிர்களுக்கும் முன்பு பிறந்த சங்கர்ஷணனைப் படைத்தவன் அவனே. மலைகளுடன் கூடிய உலகத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் தாங்குபவனும், அனந்தன் என்று அறியப்படுபவனுமான தெய்வீக சேஷனைப் படைத்தவன் அவனே. பரமசக்தி படைத்த அவனையே மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} தங்கள் யோகத் தியானத்தின் மூலம் அறிகிறார்கள். அவனது செவிகளின் சுரப்பில் {அழுக்காக இருக்க வேண்டும்} இருந்து {கர்ணமலத்திலிருந்து} உதித்தவனும், கடுமையானவனும் கொடுஞ்செயல்கள் புரிபவனும், மது என்ற பெயரால் அறியப்பட்டவனுமான பெரும் அசுரன், பிரம்மனை அழிக்க முயன்ற போது அந்தப் பரம்பொருளால் கொல்லப்பட்டான். ஓ! ஐயா {துரியோதனா}, அந்த மது படுகொலை செய்யப்பட்டதன் விளைவாகத் தேவர்கள், தானவர்கள், மனிதர்கள், முனிவர்கள் ஆகியோர், ஜனார்த்தனனை மதுசூதனன் {மதுவைக் கொன்றவன்} என்று அழைக்கிறார்கள்.
வராக அவதாரம் |
நரசிம்ம அவதாரம் |
வாமன அவதாரம் |
கடமையுணர்வுடன் அவனுக்காகக் காத்திருந்து, நோன்புகள் நோற்று முழு நிலவிலும் {பௌர்ணமியிலும்}, புது நிலவிலும் {அமாவாசையிலும்} தியானிக்கும் ஒருவன், பிரம்மம் மற்றும் யோகத்தின் சாரமானவனும், வடிவம் கொண்ட உயிரினங்கள் அனைத்துக்கும் புகலிடமாக இருப்பவனுமான அந்தத் தெய்வீகக் கேசவனை நிச்சயமாக அடைவான் [1]. கேசவன், உயர்ந்த சக்தி வாய்ந்தவனும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனும் ஆவான். ஓ! மன்னா {துரியோதனா}, முனிவர்கள் அவனை ரிஷிகேசன் (புலன்களின் தலைவன்) என்று அழைக்கிறார்கள். அவனை ஆசானாகவும், தந்தையாகவும், உரிமையாளனாகவும் அனைவரும் அறிய வேண்டும்.
[1] வேறு பதிப்பில் இந்த வரி வேறு விதமாக இருக்கிறது. அது பின்வருமாறு: தவத்தில் நிலைபெற்றவனும், ஒளியுள்ளவனும், அனைத்துயிர்களுக்கும் ஆதாரமானவனும், அமாவாசையில் பிரம்மரூபியாகவும், பௌர்ணமியில் யோகரூபியாகவும் இருக்கும் கேசவனை வழிபடுபவன் அதிக நன்மையை அடைவான்.
எவனிடம் கிருஷ்ணன் மனநிறைவு கொள்கிறானோ, அவனால் அழியாத (அருள்) உலகங்கள் வெல்லப்படுகிறது. அச்சந்தரும் இடத்தில் கேசவனின் பாதுகாப்பை நாடுபவனும், இந்த விளக்கத்தைப் படிப்பவனும் மகிழ்ச்சியை அடைந்து அனைத்து செழிப்புகளையும் அடைவான். கிருஷ்ணனை அடைந்த மனிதர்கள் எவரும் வஞ்சிக்கப்பட்டதில்லை. பெரும் பயங்கரங்களில் மூழ்கிவிட்டவர்களை எப்போதும் காப்பவன் ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} ஆவான்.
ஓ! பாரதா {துரியோதனா}, உள்ளபடி இதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன், தன் முழு ஆன்மாவுடன், பூமியின் தலைவனும், யோகத்தின் தலைவனும், உயர்வான அருள் நிறைந்தவனுமான கேவசனின் {கிருஷ்ணனின்} பாதுகாப்பை நாடியிருக்கிறான்" {என்றார் பீஷ்மர்}.
ஆங்கிலத்தில் | In English |