The weapons called Pramohana & Prajna! | Bhishma-Parva-Section-077b | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 35)
பதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னனைக் கொல்லத் தன் தம்பிகளைத் தூண்டிய துரியோதனன்; திருஷ்டத்யும்னன் பயன்படுத்திய பிரமோகனாயுதம்; துருபதனை விரட்டிய துரோணர்; பிரக்ஞாயுதத்தைப் பயன்படுத்திக் கௌரவரின் மயக்கத்தைத் தெளிவித்த துரோணர்; பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன் நிலை குறித்து அஞ்சிய யுதிஷ்டிரன்; சூசீமுக வியூகம்; திருஷ்டத்யும்னன் விற்களை ஒடித்த துரோணர்; திருஷ்டத்யும்னன் குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்ற துரோணர்...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} அப்போது அந்தப் பயங்கரப் போரில் தன் தம்பிகளிடம் வந்த உமது மகன் {துரியோதனன்}, அவர்களிடம், "தீய ஆன்மா கொண்ட இந்தத் துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இப்போது பீமசேனனுடன் சேர்ந்திருக்கிறான். நாம் அனைவரும் சேர்ந்து அவனைக் கொல்வதற்கு அணுகுவோம். (போருக்காக) எதிரி நமது படையணிகளை அணுகாதிருக்கட்டும்", என்றான். இவ்வார்த்தைகளைக் கேட்ட தார்தராஷ்டிரர்கள், தங்கள் அண்ணனின் {துரியோதனனின்} உத்தரவால் உந்தப்பட்டு, (எதிரியைச்) சந்திக்க இயலாமல், அண்ட அழிவுகாலத்தின் கடுமையான எரிக்கோள்களைப் போல, திருஷ்டத்யும்னனைக் கொல்வதற்காக வேகமாக விரைந்தனர்.
தங்கள் அழகிய விற்களை எடுத்த அந்த வீரர்கள், தங்கள் வில்லின் நாணொலியாலும், தங்கள் தேர்களின் சடசடப்பொலியாலும், இந்தப் பூமியை நடுங்கச் செய்தபடி, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது கணைகளைப் பொழிந்தார்கள்.
மறுபுறம், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதனின் இளமையான மகன் {திருஷ்டத்யும்னன்}, போரில் தன் முன் நின்ற உமது வீரமகன்களைக் கண்டான். போரில் தன்னைக் கொல்வதற்காக இயன்ற வரை முயன்று வரும் அவர்களைப் பிரமோகனம் {மோகனாஸ்திரம்} என்று அழைக்கப்படும் கடும் ஆயுதத்தால் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, தானவர்களுடன் மோதும் இந்திரனைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் மீது அஃதை {மோகனாஸ்திரத்தை} ஏவினான்.
பிரமோகன ஆயுதத்தால் புத்தியும், பலமும் பீடிக்கப்பட்ட அந்தத் துணிவுமிக்க வீரர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். தங்கள் {அழிவு} காலம் வந்ததைப் போல உணர்வுகளை இழந்து மயக்கத்தில் ஆழ்ந்த உமது மகன்களைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் தங்கள் குதிரைகளோடும், யானைகளோடும், தேர்களோடும் அனைத்துப் புறங்களிலும் ஓடினார்கள் [1].
[1] வேறு பதிப்பில் இதன் பிறகு: அடிப்பவர்களில் சிறந்தவனான பீமன் இந்நேரத்தில் அமிர்தம் போன்ற சுவையுள்ள நீரைக் குடித்து இளைப்பாறி மீண்டும் போர்புரிந்து, திருஷ்டத்யும்னனோடு கூடி அந்தக் கௌரவப் படையை ஓடச் செய்தான் என்று இருக்கிறது. இந்தச் செய்தி கங்குலியில் இல்லை.
அதேவேளையில், ஆயுதங்கள் தரித்த அனைவரிலும் முதன்மையான துரோணர், துருபதனை அணுகி, மூன்று கடுங்கணைகளால் அவனைத் துளைத்தார். துரோணரால் ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த ஏகாதிபதி துருபதன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்}) ஏற்பட்ட தனது பழம்பகையை நினைவுகூர்ந்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தை விட்டு விலகினான். அதன்பேரில், துருபதனை இப்படி வீழ்த்தியவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான துரோணர் தனது சங்கை முழக்கினார். அவரது {துரோணரின்} சங்கொலியைக் கேட்ட சோமகர்கள் அனைவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். பிறகு, பெரும் சக்தி கொண்டவரும், ஆயுதங்கள் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், பிரமோகன ஆயுதத்தால் போரில் உணர்விழந்திருக்கும் உமது மகன்களைக் குறித்துக் கேள்விப்பட்டார்.
பிறகு, அந்த இளவரசர்களை மீட்க விரும்பிய பரத்வாஜர் மகன் {துரோணர்}, களத்தின் அந்தப் பகுதியை விட்டகன்று உமது மகன்கள் இருந்த இடத்திற்குச் சென்றார். வலிமைமிக்க வில்லாளியும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, அந்தப் பெரும்போரில் திரிந்து கொண்டிருக்கும் திருஷ்டத்யும்னனையும், பீமனையும் கண்டார். மேலும், தங்கள் உணர்வை இழந்திருக்கும் உமது மகன்களையும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {துரோணர்} கண்டார். பிறகு துரோணர் பிரக்ஞம் என்ற அழைக்கப்பட்ட ஆயுதத்தை எடுத்து, (திருதஷ்டத்யும்னனால் ஏவப்பட்ட) பிரமோகன ஆயுதத்தைச் சமன் செய்தார் {பிரமோகனாயுதத்தின் உக்கிரத்தைத் தணித்தார்}. தங்கள் உணர்வுகளை மீண்டும் அடைந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள் மீண்டும் பீமனோடும், பிருஷதன் மகனோடும் {திருஷ்டத்யும்னனோடும்} போரிடத் தொடங்கினர்.
பிறகு யுதிஷ்டிரன், தனது தனிப்பட்ட துருப்புகளிடம், "கவசம் தரித்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பனிரெண்டு {12} தேர்வீரர்கள், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} தலைமையாகக் கொண்டு, தங்களால் வலிமை முழுவதையும் பயன்படுத்தி, பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகியோர் சென்ற வழியில் பின்தொடர்ந்து செல்லட்டும். (அவ்விரண்டு வீரர்களைக் குறித்து அறியப்படட்டும். என் இதயம் கலக்கமுறுகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.
மன்னனால் {யுதிஷ்டிரனால்} இப்படி உத்தரவிடப்பட்டவர்களும், போரில் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான அவ்வீரர்கள், தங்கள் ஆண்மையில் செருக்குடன், "சரி" என்று சொல்லி, நடுவானைச் சூரியன் அடைந்ததும் அங்கு சென்றார்கள். எதிரிகளைத் தண்டிப்பவர்களான கைகேயர்கள் {கேகயர்கள்}, திரௌபதியின் மகன்கள், பெரும் ஆற்றல்படைத்த திருஷ்டகேது ஆகியோர், சூசிமுகம் [2] என்று அழைக்கப்பட்ட வியூகத்தில் தங்களைத் தாங்களே அணிவகுத்துக் கொண்டு, அந்தப் போரில் தார்தராஷ்டிரர்களின் தேர்பிரிவுக்குள் ஊடுருவினர்.
[2] சூசீமுகம் என்றால் ஊசி வாய் என்று பொருளாகும். சூசீமுகம் என்பது, மெலிதானதோ, எதிரியை நோக்கி திரும்பி இருக்கும் கூர்முனையைக் கொண்டதோவான ஆப்பு போன்ற ஒரு மரம் ஆகும்.
பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டும், திருஷ்டத்யும்னனால் உணர்வுகள் இழுந்தும் இருந்த உமது துருப்புகளால், அபிமன்யு தலைமையில் (விரைந்து) வந்த வலிமைமிக்க வில்லாளிகளைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தெருக்களில் உள்ள மங்கையரைப் போல அவர்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தனர். தங்க வேலைப்பாடுகள் கொண்ட, பல்வேறு நிறத்திலான கொடிமரங்களைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளிகள், திருஷ்டத்யும்னனையும், விருகோதரனையும் {பீமனையும்} மீட்பதற்காகப் (கௌரவப் படையணிகளைப்) பிளந்து கொண்டு பெரும் வேகத்துடன் சென்றனர்.
அபிமன்யுவின் தலைமையிலான அந்த வலிமைமிக்க வில்லாளிகளைக் கண்ட பின்னவர்கள் {திருஷ்டத்யும்னனும், பீமனும்}, மகிழ்ச்சியால் நிறைந்து, உமது படையணிகளை அடிப்பதைத் தொடர்ந்தனர். அதேவேளையில், பாஞ்சாலத்தின் வீர இளவரசனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன்னை நோக்கிப் பெரும் வேகத்துடன் வரும் தனது ஆசானைக் {துரோணரைக்} கண்டதும், உமது மகன்களைக் கொல்ல அதற்கு மேலும் விரும்பவில்லை. பிறகு, கைகேயர்களின் {கேகயர்களின்} மன்னன் தேரில் விருகோதரனை {பீமனை} ஏறச் செய்த அவன் {திருஷ்டத்யும்னன்}, கணைகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்த துரோணரை எதிர்த்து பெருங்கோபத்துடன் விரைந்தான்.
எதிரிகளைக் கொல்பவரான பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, ஒரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் பிருஷதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} வில்லைத் துண்டித்தார். தன் தலைவனிடம் {துரியோதனனிடம்} தான் உண்ட சோற்றை நினைவுகூர்ந்தும் {செஞ்சோற்றுக் கடனுக்காகவும்}, துரியோதனனுக்கு நல்லது செய்ய விரும்பியும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது அவர் நூற்றுக்கணக்கான கணைகளை ஏவினார்.
அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மற்றொரு கணையை எடுத்து, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான எழுபது {70} கணைகளால் துரோணரைத் துளைத்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவரான துரோணர் மீண்டும் ஒருமுறை அவனது வில்லைத் துண்டித்து, நான்கு அற்புதக் கணைகளால், அவனது {திருஷ்டத்யும்னனின்} நான்கு குதிரைகளை யமலோகத்திற்கு அனுப்பி, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தினால் அவனது தேரோட்டியையும் கொன்றார்.
வலிய கரங்களைக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைந்து இறங்கி, அபிமன்யுவின் பெருந்தேரில் ஏறினான். பிறகு, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்ட பாண்டவப் படையைப் பீமசேனன் மற்றும் பிருஷதனின் புத்திசாலி மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்வைக்கெதிரிலேயே நடுங்கச் செய்தார்.
அளவிலா சக்தி கொண்ட துரோணரால், இப்படிப் பிளக்கப்பட்ட அந்தப் படையைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவராலும் அஃது ஓடுவதைத் {அந்தப் படை ஓடுவதைத்} தடுக்க முடியவில்லை. துரோணரின் கூரிய கணைகளால் இப்படிக் கொல்லப்பட்ட அந்தப் படை {பாண்டவப் படை}, கலங்கிய கடலைப் போல அங்கே சுழலத் தொடங்கியது. அந்தப் (பாண்டவப்) படையை அப்படிப்பட்ட நிலையில் கண்ட உமது துருப்பினர் மகிழ்ச்சியால் நிறைந்தனர். கோபத்தால் தூண்டப்பட்டு, எதிரியின் படையணிகளை இப்படி எரித்துக் கொண்டிருந்த ஆசானை {துரோணரைக்} கண்ட உமது வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உரக்க முழக்கமிட்டபடி, துரோணரைப் புகழ்ந்தனர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |