Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 56)
பதிவின் சுருக்கம் : தோல்விக்கு வருந்திய துரியோதனன், பீஷ்மர் ஆயுதத்தைத் தவிர்த்துவிட்டுப் போரில் இருந்து விலகிக் கொண்டால் பாண்டவர்களைத் தானே வெல்வதாகக் கூறிய கர்ணன்; கர்ணனைப் போரிட அனுமதிக்கும்படி பீஷ்மரிடம் வேண்டிய துரியோதனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மன்னன் துரியோதனன், சுபலனின் மகன் சகுனி, உமது மகன் துச்சாசனன், வெல்லப்படமுடியாத சூதனின் மகன் (கர்ணன்) ஆகியோர் ஒன்றுகூடி பின்வருமாறு ஆலோசித்தனர். “போரில் தங்களைப் பின்தொடர்வோருடன் கூடிய பாண்டுவின் மகன்களை வெற்றிக் கொள்வது எப்படி?” என்ற இஃதே அவர்களது ஆலோசனையின் பொருளாக இருந்தது.
பிறகு, சூதனின் மகனிடமும் {கர்ணனிடமும்}, வலிமைமிக்கச் சகுனியிடமும் பேசிய மன்னன் துரியோதனன், அந்தத் தனது ஆலோசகர்கள் அனைவரிடமும், “துரோணர், பீஷ்மர், கிருபர், சல்லியன், சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர் பார்த்தர்களை {பாண்டவர்களைத்} தடுக்கவில்லை. இத்தகைய (அவர்களது) நடத்தையின் காரணம் என்ன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. இவர்கள் யாராலும் கொல்லப்படாத பாண்டவர்கள் எனது படைகளை அழிக்கிறார்கள். எனவே, ஓ! கர்ணா, நான் வலிமை குன்றி வருகிறேன், மேலும், எனது ஆயுதங்களும் குறைந்து வருகின்றன [1]. தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களான வீரப்பாண்டவர்களால் நான் வஞ்சிக்கப்படுகிறேன். போரில் அவர்களைத் தாக்கி எப்படி வெல்லப் போகிறேன் என்ற ஐயம் உண்மையில் என் மனத்தை நிறைக்கிறது” என்றான் {துரியோதனன்}.
[1] இதன்பிறகு, “ராதையின் மகனே {கர்ணா}, நானும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே துரோணருக்கு எதிரிலேயே என் தம்பிகள் பீமசேனனால் கொல்லப்பட்டார்கள்” என்றும் துரியோதனன் சொல்வதாக வேறு பதிப்புகளில் இருக்கின்றன. ஆனால் கங்குலியில் இந்த வரி இல்லை.
இப்படிச் சொன்ன அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} பதிலளிக்கும் வகையில், ஓ! பெரும் ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, “ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, வருந்தாதே. உனக்கு ஏற்புடையது எதுவோ, அதை நானே செய்வேன். சந்தனுவின் மகனான பீஷ்மர் இந்தப் பெரும்போரில் இருந்து விரைவில் விலகட்டும். தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, போரில் இருந்து அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} விலகியதும், அந்தப் பீஷ்மர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சோமகர்கள் அனைவருடன் கூடிய பார்த்தனை [2] {அர்ஜுனனை} நான் கொல்வேன். ஓ! மன்னா {துரியோதனா}, உண்மையாகவே இந்த உறுதியை நான் ஏற்கிறேன். உண்மையில், ஒவ்வொரு நாளும் பாண்டவர்களுக்குக் கருணை காட்டுகிறார் பீஷ்மர். இதைத்தவிரவும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை வெற்றிக் கொள்ள இயலாதவராகவும் அவர் {பீஷ்மர்} இருக்கிறார். போரில் பீஷ்மர் தன் ஆற்றலைக் காட்டி பெருமை கொள்பவராவார். மேலும் அவர் {பீஷ்மர்} போரை மிகவும் விரும்புபவருமாவார். ({பாண்டவர்களைக்
கொன்றுவிட்டால்} பிறகு போரே முடிந்து விடுமாகையால்) ஒன்றுகூடியிருக்கும்
பாண்டவர்களை அவர் ஏன் வெல்லப் போகிறார்? [3] எனவே, தாமதிக்காமல் பீஷ்மரின்
பாசறைக்குச் சென்று, மரியாதைக்குரிய அந்த முதிர்ந்த திருவாளரை {பீஷ்மரை}
ஆயுதங்களைக் கீழே வைக்கச் செய்வாயாக. அவர்
ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்ட பிறகு, ஓ! பாரதா {துரியோதனா}, நண்பர்கள்
மற்றும் சொந்தங்களுடன் கூடிய பாண்டவர்கள் என் ஒருவனாலேயே ஏற்கனவே
கொல்லப்பட்டதாக நினைப்பாயாக” என்றான் {கர்ணன்}.
[2] வேறு பதிப்புகளில் பார்த்தர்கள் {பாண்டவர்கள்} என்றிருக்கிறது.
[3] வேறு ஒரு பதிப்பில் இந்த இடத்தில் பின்வருமாறு இருக்கிறது: அந்தப் பீஷ்மர் பாண்டவர்களின் மீது எப்பொழுதும் தயை பாராட்டுகிறாரல்லவா? பீஷ்மர் போரில் இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களை வெல்வதற்கு சக்தியற்றவரா? அவர் போரில் நல்ல அபிமானம் உள்ளவர்; எப்போதும் போரில் விருப்பமுள்ளவர். ஐயா! அவர் ஒன்றுசேர்ந்த பாண்டவர்களை யுத்தத்தில் எவ்வாறு வெல்வார்?
இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட உமது மகன் துரியோதனன், தன் தம்பி துச்சாசனனிடம், “ஓ! துச்சாசனா, என் அணிவரிசையில் நடப்போர் அனைவரையும் தாமதமில்லாமல் {நன்கு} உடுத்திக் கொள்ளச் செய்வாயாக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனிடம் பேசிய மன்னன் {துரியோதனன்}, “மனிதர்களில் முதன்மையான பீஷ்மரை இஃதை ஏற்கச்செய்துவிட்டு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கர்ணா}, தாமதமில்லாமல் நான் உன்னிடம் வருவேன். போரில் இருந்து அந்தப் பீஷ்மர் விலகிய பிறகு, போரில் நீ (எதிரியைத்) தாக்குவாயாக” என்றான்.
பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களுடன் (கூடிய) நூறு வேள்விகளைச்செய்தவன் {இந்திரனைப்} போலத் தன் தம்பிகளுடன் தாமதமில்லாமல் புறப்பட்டான். அப்போது, அவனது தம்பியான துச்சாசனன், புலியின் ஆற்றலைக் கொண்ட அந்த மன்னர்களில் புலியை {துரியோதனனை} குதிரையில் ஏறச் செய்தான். உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கணங்களோடும், தலையில் கிரீடத்தோடும், தன் கைகளில் பிற ஆபரணங்களோடும் தெருக்களில் சென்ற போது பிரகாசமாக ஒளிர்ந்தான்.
பந்தி {மஞ்சிஷ்டா} மலரின் [4] நிறம் கொண்ட நறுமணமிக்கச் சந்தனக்குழம்பைப் பூசி புடம்போட்ட தங்கம் போலப் பிரகாசமாக, தூய ஆடைகள் உடுத்திக் கொண்டு, சிங்கம் போன்ற விளையாட்டு {வீர} நடையுடன் கூடிய அந்தத் துரியோதனன், ஆகாயத்தில் பிரகாசமான ஒளியுடன் கூடிய சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான். அந்த மனிதர்களில் புலி {துரியோதனன்},
பீஷ்மரின் பாசறையை நோக்கிச் சென்ற போது, உலகத்தில் கொண்டாடப்படும்
வலிமைமிக்க வில்லாளிகள் பலர் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். வாசவனுக்குப் {இந்திரனுக்குப்} பின்னால் நடக்கும் தேவர்களைப் போல, அவனது தம்பிகள் அவனுக்குப் பின் அணிவகுத்து நடந்தனர்.
[4] கங்குலி Bhandi flower என்கிறார். வேறொரு பதிப்பில் மஞ்சிஷ்டா என்று கண்டேன். மஞ்சிட்டி, செவ்வெல்லி, செங்கண் மலர் என்றும் தமிழில் அழைக்கப்படும் இந்த மலரின் தாவரவியல் பெயர் Rubia cordifolia என்பதாகும். இதன் வேர் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுவதாகும். நெசவில், துணிகளில் சாயமேற்றுவதற்கும் இந்தச் செடி பயன்படுகிறது.
மனிதர்களில் முதன்மையான சிலர் குதிரைகளின் மீதும், சிலர் யானைகளின் மீதும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிலர் தேர்களின் மீதும் ஏறிக் கொண்டு அனைத்துப் புறங்களிலும் அவனை {துரியோதனனைச்} சூழ்ந்து கொண்டனர். அவனது {துரியோதனனின்} நலன் விரும்பியோரில் பலர், அரசனான அவனது பாதுகாப்புக்காக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, சொர்க்கத்தில் சக்ரனை {இந்திரனைச்} சூழ்ந்திருக்கும் தேவர்களைப் போலப் பெரும் எண்ணிக்கையில் அங்குத் தோன்றினர். கௌரவர்கள் அனைவராலும் புகழப்படும் வலிமைமிக்க அந்தக் குருக்கள் {கௌரவர்கள்} தலைவன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகழ்பெற்ற கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இருக்கும் இடத்தை {பாசறையை}நோக்கி இப்படியே சென்றான்.
தன் உடன்பிறந்த தம்பிகளால் எப்போதும் பின்தொடரப்பட்டும், சூழப்பட்டும் இருந்த அவன் {துரியோதனன்}, எதிரிகள் அனைவரையும் தடுக்கவல்லதும், யானையின் துதிக்கையைப் போன்றதும், பெரியதுமானத் தன் வலக்கரத்தை அடிக்கடி உயர்த்தியபடியே சென்றான். அந்தத் தனது கரத்தால், அனைத்துப் புறங்களில் இருந்தும் தன்னை நோக்கிக் கூப்பிய கரங்களை உயர்த்தியபடி வழியில் நின்றோரின் மரியாதைகளை {அவர்களால் தனக்கு அளிக்கப்படும் மரியாதைகளை} ஏற்றுக் கொண்டான்.
அப்படி அவன் {துரியோதனன்} சென்ற போது, பல்வேறு நாட்டு குடிமக்களின் இனிய குரல்களைக் கேட்டான். பெரும்புகழைக் கொண்ட அவன் {துரியோதனன்}, பாணர்களாலும், மாகதர்களாலும் {புகழ்பாடிகளாலும்} துதிக்கப்பட்டான். பதிலுக்கு அந்தப் பெரும் மன்னன் {துரியோதனன்} அவர்கள் அனைவருக்கும் தன் மரியாதைகளைச் செலுத்தினான் {அவர்கள் அனைவரையும் கௌரவித்தான்}. நறுமணத் தைலங்கள் ஊற்றப்பட்டுத் தங்கத்தாலான ஒளிவிளக்குகளுடன் உயர் ஆன்ம மனிதர்கள் {கிங்கரர்கள்} பலர் அவனைச் {துரியோதனனைச்} சூழ்ந்து நின்றனர். அந்தத் தங்க விளக்குகளால் சூழப்பட்ட மன்னன் {துரியோதனன்}, சுடர்மிக்கக் கோள்களுடன் கூடிய சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். தங்கத்தால்
அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையைக் கொண்டோர் (பணியாட்கள்), கைகளில்
பிரம்புகளுடனும், ஜரிஹாரங்களுடனும் {Jhariharas [5]} மென்மையாகச்
சுற்றிலும் இருந்த கூட்டத்தை வழிவிடச் செய்தார்கள்.
[5] இந்தச் சொல்லின் பொருளை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வேளை சாட்டைப் போன்ற ஒன்றாக இருக்கலாம். வேறொரு பதிப்பில் இந்த வரி பின்வருமாறு இருக்கிறது: “சட்டையும், தலைப்பாகையும் தரித்தவர்களும், பிரம்பினால் சுரசுரப்பான உள்ளங்கைகளை உடையவர்களுமான கிங்கரர்கள் திசைகள் அனைத்திலும் மக்களை மெதுவாக விலக்கினார்கள்.
பீஷ்மரின் சிறப்பான வசிப்பிடத்தை அடைந்த மன்னன் {துரியோதனன்} தன் குதிரையில் இருந்து இறங்கினான். அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்}, பீஷ்மரின் முன்னிலையை அடைந்து, பீஷ்மரை வணங்கிய பின், தங்கத்தாலானதும், அழகானதும், விலையுயர்ந்த போர்வை விரிக்கப்பட்டதுமான ஒரு சிறந்த இருக்கையில் அமர்ந்தான். கூப்பிய கரங்களுடன், கண்ணீரில் குளித்த கண்களுடன், துயரத்தில் அடைபட்ட குரலுடன் கூடிய அவன் {துரியோதனன்}, பீஷ்மரிடம், “ஓ! எதிரிகளைக் கொல்பவரே {பீஷ்மரே}, நாங்கள் இந்தப் போரில் உமது பாதுகாப்புடன் இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களையும் அசுரர்களையும் கூட வெல்லத் துணிவோம். அப்படி இருக்கும் போது, சொந்தங்கள், நண்பர்களோடு கூடிய பாண்டவர்களைப் பற்றி, அவர்கள் வீரர்களாகவே இருந்தாலும், சொல்ல என்ன இருக்கிறது? எனவே, ஓ! கங்கையின் மைந்தரே, ஓ! தலைவா {பீஷ்மரே}, எனக்குக் கருணை காட்டுவதே உமக்குத் தகும்.
பாண்டுவின் துணிச்சல்மிக்க மகன்களைத் தானவர்களைக் கொல்லும் மகேந்திரனைப் {இந்திரனைப்} போலக் கொல்வீராக. “ஓ! மன்னா {துரியோதனா}, சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும், கேகயர்களுடன் கூடிய காருஷர்களையும் நான் கொல்வேன்” இவையே, ஓ! பாரதரே {பீஷ்மரே}, நீர் என்னிடம் சொன்ன வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகள் உண்மையாகட்டும். ஒன்று கூடியிருக்கும் பார்த்தர்களையும், வலிமைமிக்க வில்லாளிகளான அந்தச் சோமகர்களையும் கொல்வீராக. ஓ பாரதரே {பீஷ்மரே}, உமது வார்த்தைகளை உண்மையாக்குவீராக.(பாண்டவர்கள் மீது கொண்ட) கருணையாலோ, ஓ! மன்னா {பீஷ்மரே}, கெடுபேறு கொண்ட {அதிர்ஷ்டமற்ற} என் மீது நீர் கொண்ட வெறுப்பினாலோ பாண்டவர்களை நீர் {கொல்லாமல்} விடுகிறீரெனில், போரின் ரத்தினமான கர்ணனைப் போரிட அனுமதிப்பீராக. அவன் {கர்ணன்}, பார்த்தர்களையும், அவர்களோடு கூடிய அவர்களது நண்பர்கள் மற்றும் சொந்தங்களையும் போரில் வெல்வான்” என்று சொன்னான் {துரியோதனன்}.
மன்னனான உமது மகன் துரியோதனன் இதைச் சொன்ன பிறகு, பயங்கர ஆற்றலைக் கொண்ட பீஷ்மரிடம் மேலும் வேறெதையும் சொல்லாமல் தன் உதடுகளை {வாயை} மூடிக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |