Bhishma wished his own death! | Bhishma-Parva-Section-120a | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 78)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரை ஒன்றுகூடித் தாக்கிய பாண்டவர்கள்; போர்க்களத்தில் அந்திகால நெருப்பாய்த் திரிந்த பீஷ்மர்; பீஷ்மரின் விற்களை மீண்டும் மீண்டும் வெட்டிய அர்ஜுனன்; தன் மரணத்தை விரும்பிய பீஷ்மர்; அம்முடிவை அங்கீகரித்த முனிவர்களும், வசுக்களும்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படியே பாண்டவர்கள் அனைவரும், சிகண்டியைத் தங்கள் முன் கொண்டு அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு மீண்டும் மீண்டும் அவரைத் துளைத்தனர். ஒன்றுசேர்ந்த சிருஞ்சயர்கள் அனைவரும், பயங்கரமான சதக்னிகளாலும், பரிகங்களாலும், போர்க்கோடரிகளாலும், முத்கரங்களாலும், குறுகிய தடிமனான உலக்கைகளாலும், பராசங்களாலும், க்ஷேபணீயங்களாலும் {ஏவுகணை போன்ற பிற ஆயுதங்களாலும்}, தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகளாலும், ஈட்டிகளாலும், தோமரங்களாலும், கம்பனங்களாலும், நாராசங்களாலும், வத்ஸதந்தங்களாலும், புசுண்டிகளாலும் {எறிகணைகளாலும்} அவரை {பீஷ்மரைத்} தாக்கினர். இப்படிப் பலவற்றால் பீடிக்கப்பட்ட அவரது {பீஷ்மரது} கவசம் எங்கும் துளைக்கப்பட்டிருந்தது. ஆனால், முக்கியப் பகுதிகள் அனைத்திலும் துளைக்கப்பட்டிருந்தாலும் பீஷ்மர் வலியை உணரவில்லை.
மறுபுறம், யுகத்தின் முடிவில் (அனைத்தையும் அழிக்கும்படி) எழும் நெருப்பின் தோற்றத்தில் அவர் {பீஷ்மர்} தன் எதிரிகளுக்குக் காட்சியளித்தார். அவரது வில்லும் கணைகளும் (நெருப்பாலானவை போல) {அந்நெருப்பின்} சுடர்விடும் தழல்களைக் கொண்டிருந்தன. அவரது {பீஷ்மரது} ஆயுதங்களின் வீச்சு அதனுடன் {அந்நெருப்புத் தழலுடன்} (நட்புடன்) கூடிய தென்றலாக இருந்தன {The flight of his weapons constituted its (friendly) breeze}. அவரது {பீஷ்மரது} தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி வெப்பமாகவும், வலிமைமிக்க ஆயுதங்கள் அதன் {அந்நெருப்பின்} காந்தியாகவும் இருந்தன. அவரது அழகிய வில் அதன் {அந்நெருப்பின்} கடும் நாக்காக இருந்தது, வீரமிக்கப் போர்வீரர்களின் உடல்கள் அதன் அபரிமிதமான எரிபொருளாகின. அந்த மன்னர்களின் தேர்க்கூட்டங்களுக்கு மத்தியில் திரிபவராகவோ, அல்லது சில நேரங்களில் (அதன் நெருக்கத்தில் இருந்து) வெளியே வருபராகவும், அல்லது மீண்டும் அவர்களின் மத்தியில் திரிபவராகவும் பீஷ்மர் காணப்பட்டார்.
பாஞ்சாலர்களின் மன்னனையும் {துருபதனையும்}, திருஷ்டகேதுவையும் அலட்சியப்படுத்திய அவர் {பீஷ்மர்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படைக்கு மத்தியில் ஊடுருவினார். பிறகு அவர் {பீஷ்மர்} சாத்யகி, பீமன், பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, துருபதன், விராடன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகிய ஆறு பாண்டவ வீரர்களை, அனைத்து வகைக் கவசங்களையும் ஊடுருவவல்லவையும், பெரும் மூர்க்கத்துடன் செல்பவையும், “விஸ்” என்ற பயங்கர ஒலியுடன் செல்பவையும், பெரும் கூர் கொண்டவையுமான அற்புதக் கணைகள் பலவற்றால் துளைத்தார். எனினும், அந்தக் கூரிய கணைகளைத் தடுத்து, பெரும் சக்தியுடன் பீஷ்மரைப் பீடித்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் ஒவ்வொருவரும் பத்து {பத்து பத்து} கணைகளால் அவரை {பீஷ்மரைத்} துளைத்தனர்.
பெரும் தேர்வீரனான சிகண்டியால் ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச்சிறகுகள் கொண்டவையுமான வலிமைமிக்க அந்தக் கணைகள் பீஷ்மரின் உடலுக்குள் விரைவாக ஊடுருவின. பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்டு பீஷ்மரை நோக்கி விரைந்து, பின்னவரின் {பீஷ்மரின்} வில்லை அறுத்தான்.
அதன் பேரில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணர், கிருதவர்மன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், பகதத்தன் ஆகியோரால் அர்ஜுனனின் அந்தச் செயலை {பீஷ்மரின் வில்லை வெட்டிய செயலைப்} பொறுக்கமுடியவில்லை. சினத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர். உண்மையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தெய்வீக ஆயுதங்களை இருப்புக்குத் தூண்டி அழைத்து, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பெருங்கோபத்துடன் பாய்ந்து, தங்கள் கணைகளால் அவனை மறைத்தனர். பல்குனனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி அவர்கள் விரைந்த போது, அவர்களால் உண்டான ஒலியானது, யுகத்தின் முடிவில் சினத்துடன் பொங்கும் கடலுக்கு ஒப்பானதாக இருந்தது.
பல்குனனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி, “கொல்”, “(நம் படைகளைக்) கொண்டு வா”, “எடு”, “துளை”, “வெட்டு” என்ற இது போன்ற சீற்றமிகுந்த கூச்சல்களே கேட்டன. அந்தச் சீற்றமிக்கக் கூச்சல்களைக் கேட்டப் பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனைப் பாதுகாப்பதற்காக முன்னோக்கி விரைந்தனர்.
சாத்யகி, பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரும், ராட்சசன் கடோத்கசன், கோபக்கார அபிமன்யு ஆகியோரே அவர்கள். சினத்தால் தூண்டப்பட்ட அந்த எழுவரும் அற்புத விற்களைத் தரித்துக் கொண்டு பெரும் வேகத்துடன் விரைந்தனர். இவர்களுக்கும், கடுமையான கௌரவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தானவர்களுடன் நடந்த தேவர்களின் போருக்கு ஒப்பாக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
தேர்வீரர்களில் முதன்மையான சிகண்டி, கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்} போரில் பாதுகாக்கப்பட்டு அம்மோதலில் பீஷ்மரைத் துளைத்து, பிறகு, பத்து கணைகளால் பின்னவரின் {பீஷ்மரின்} வில்லையும் அறுத்தான். மேலும் அவன் {சிகண்டி}, பிற கணைகளால் பீஷ்மரின் தேரோட்டியைத் தாக்கி, ஒரு கணையால் பின்னவரின் {பீஷ்மரின்} கொடிமரத்தை வெட்டினான்.
பிறகு அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} மேலும் கடுமையான மற்றொரு வில்லை எடுத்தார். அதையும் மூன்று கணைகளால் பல்குனன் {அர்ஜுனன்} வெட்டினான். உண்மையில், இடது கையாலும் வில்லை வளைக்கவல்லவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அர்ஜுனன், சினத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மர் எடுத்த அனைத்து விற்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெட்டினான்.
பிறகு, இப்படி விற்கள் வெட்டப்பட்ட பீஷ்மர், சினத்தால் தூண்டப்பட்டு, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, மலையையே பிளக்கவல்ல ஓர் ஈட்டியை எடுத்தார். சினத்தால் அவர் {பீஷ்மர்}, அதைப் பல்குனனின் தேர் மீது வீசினார். சொர்க்கத்தின் வஜ்ரத்தைப் போன்று அது தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் பாண்டவர்களை மகிழ்விப்பவன் {அர்ஜுனன்}, ஐந்து கூரிய பல்லங்களை (தன் வில்லின் நாணில்) பொருத்தினான். கோபக்கார அர்ஜுனன் அவ்வைந்து பல்லங்களைக் கொண்டு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் கைகளால் ஏவப்பட்ட அந்த ஈட்டியை ஐந்து துண்டுகளாக வெட்டினான். கோபம் நிறைந்த அர்ஜுனனால் இப்படி வெட்டப்பட்ட அந்த ஈட்டி மேகத்திரள்களில் இருந்து பிரிந்த மின்னலின் கீற்றுகளைப் போல விழுந்தது. தன் ஈட்டி வெட்டப்பட்டதைக் கண்ட பீஷ்மர் சினத்தால் நிறைந்தார்.
அவர் {பீஷ்மர்}, “வலிமைமிக்க விஷ்ணு [1] {கிருஷ்ணன்} பாண்டவர்களின் பாதுகாவலனாக இல்லையெனில், ஒரே வில்லைக் கொண்டே அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் என்னால் கொல்ல முடியும். எனினும், பாண்டவர்களின் கொல்லப்படாத் தன்மை [2] மற்றும் சிகண்டியின் பெண்தன்மை ஆகிய இரண்டு காரணங்களுக்காக நான் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} போரிட மாட்டேன். முன்பு, என் தந்தை {சந்தனு} காளியை {சத்தியவதியை} மணந்த போது, (என்னிடம்) மனம் நிறைந்த அவர் {சந்தனு}, போரில் நான் கொல்லப்படாதவனாக இருப்பேன் என்றும், என் மரணமானது எனது சொந்த விருப்பத்தைச் சார்ந்தது என்றும்” இரண்டு வரங்களைக் கொடுத்தார். எனினும், இதுவே தகுந்த நேரமாதலால், நான் இப்போது என் மரணத்தை விரும்ப வேண்டும்” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் {பீஷ்மர்}.
[1] வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் வாசுதேவன் என்றிருக்கிறது. மேலும் அடிக்குறிப்பாக மூலத்தில் “விஷ்வக்ஸேந:” என்ற சொல் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தப் பெயர் “விசக்சேனன் (கிருஷ்ணன்) Visaksena (Krishna) என்று இருக்கிறது.[2] வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் “இந்த வாசுதேவர் உலகங்கள் அனைத்தாலும் வெல்லத்தகாதவர் என்பது என் எண்ணம். பாண்டவர்கள் கொல்லத்தகாதிருப்பதும், சிகண்டி பெண்ணாயிருப்பதும் ஆகிய இவ்விரண்டு காரணங்களைக் கருதும் நான் பாண்டவர்களுடன் போர்புரியேன்” என்று இருக்கிறது.
வானத்தில் நின்றிருந்த முனிவர்களும், வசுக்களும், அளவிலாத சக்தி கொண்ட பீஷ்மரின் தீர்மானம் இதுவே என்பதை உறுதி செய்து கொண்டு, “ஓ! மகனே {பீஷ்மா}, நீ எதைத் தீர்மானித்திருக்கிறாயோ, அதை நாங்களும் அங்கீகரிக்கிறோம். ஓ! மன்னா {பீஷ்மா}, உன் தீர்மானத்தின்படியே செயல்படுவாயாக. போரில் இருந்து உன் இதயத்தை விலக்குவாயாக” என்றனர். இந்த வார்த்தைகளின் முடிவில், நறுமணமிக்கதும், மங்கலகரமானதும், நீர்த்துளிகள் நிறைந்ததுமான தென்றல் இயல்பான திசையிலேயே வீசத் தொடங்கியது. தேவ துந்துபிகளும் பேரொலியோடு முழங்கத் தொடங்கின. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் மீது பூமாரியும் பொழிந்தது.
எனினும், முனிவர்களும், வசுக்களும் கூறிய வார்த்தைகள், பீஷ்மரைத் தவிர வேறு யாராலும் கேட்கப்படவில்லை. {வியாச} முனிவர் எனக்குக் கொடுத்த சக்தியால் {சஞ்சயனாகிய} நானும் அவற்றைக் கேட்டேன். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்து உலகங்களுக்கும் பிடித்தமானவரான அந்தப் பீஷ்மர் தேரில் இருந்து விழப்போகிறார் என்ற நினைப்பாலேயே தேவர்களின் இதயங்களில் நிறைந்த துயரம் பெரிதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |