The setting out of Karna! | Drona-Parva-Section-002 | Mahabharata In Tamil
(துரோணாபிஷேக பர்வம் – 02)
பதிவின் சுருக்கம் : கௌரவப் படைவீரர்களுக்கு ஆறுதல் கூறிய கர்ணன்; படைவீரர்கள் மத்தியில் கர்ணன் செய்த சூளுரை; போருக்குப் புறப்படத் தயாரான கர்ணன்; வேண்டிய உபகரணங்களைத் தன் தேரோட்டியிடம் கேட்ட கர்ணன்; பீஷ்மர் இருக்குமிடம் சென்ற கர்ணன்...
கர்ணன் |
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, பீஷ்மர் கொல்லப்பட்டதை அறிந்த சூத சாதியைச் சேர்ந்த அதிரதன் மகன் {கர்ணன்}, துயரத்தில் விழுந்திருந்ததும், அடியற்ற கடலில் மூழ்கும் படகுக்கு ஒப்பானதுமான உமது மகனின் {துரியோதனனின்} படையை, ஒரு சகோதரனைப் போலக் காக்க விரும்பினான். [உண்மையில்], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கலங்கடிப்பவனும், வில் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரரும், மனிதர்களில் முதன்மையானவரும், மங்காப் புகழ் கொண்ட வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} (அவரது தேரிலிருந்து) வீழ்த்தப்பட்டதைக் கேள்விப்பட்டு (போர்க்களத்திற்கு) விரைந்து வந்தான். தேர்வீரர்களில் சிறந்தவரான பீஷ்மர் எதிரியால் கொல்லப்பட்ட பிறகு, தன் பிள்ளைகளைக் காக்க விரும்பும் தந்தையைப் போல, கடலில் மூழ்கும் படகுக்கு ஒப்பான அந்தப் படையைக் காக்க விரும்பி கர்ணன் அங்கே வந்தான்.
கர்ணன் (படைவீரர்களிடம்), “உறுதி, புத்திக்கூர்மை, ஆற்றல், வீரியம், உண்மை, தற்கட்டுப்பாடு, வீரர்களின் அனைத்து அறங்கள், தெய்வீக ஆயுதங்கள், பணிவு, அடக்கம், ஏற்புடைய பேச்சு, தீமையில் இருந்து விடுதலை ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பீஷ்மர், சந்திரனில் லட்சுமி இருப்பது போல இத்தகைய குணங்களை நிரந்தரமாகப் பெற்றவரும், எப்போதும் நன்றியுடன் இருந்தவரும், பிராமணர்களின் எதிரிகளைக் கொல்பவருமான அந்தப் பீஷ்மர், ஐயோ, பகை வீரர்களைக் கொல்பவரான அந்தப் பீஷ்மர் எப்போது தன் விடுதலையை {மரணத்தை} அடைந்தாரோ, அப்போதே பிற வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.
செயலுடன் (பொருள்கள் அனைத்தும்) கொண்ட நிலையான தொடர்பின் விளைவால், இவ்வுலகில் அழிவில்லாதது என எதுவும் இருப்பதில்லை. {வினைப்பயன் என்பது நிலையற்றதாகையால், ஒரு பொருளும் இவ்வுலகில் அழிவில்லாமல் இருப்பதில்லை}. உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரே கொல்லப்பட்டாரெனில், சூரியன் நாளை உதிப்பான் என எவன்தான் உறுதியாகச் சொல்வான்? வசுக்களின் ஆற்றலுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவரும், வசுக்களின் சக்தியால் பிறந்தவரும், பூமியின் ஆட்சியாளருமான அவர் {பீஷ்மர்} மீண்டும் வசுக்களுடன் இணைந்துவிட்டார், எனவே, உங்கள் உடைமைகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், இந்தப் பூமிக்காவும், குருக்களுக்காகவும், இந்தப் படைக்காகவும் துயரடைவீராக [1].
[1] இந்தப் பத்தி “இத்தகைய ஒருவர் கொல்லப்பட்டாரெனில் இந்தப் பூமியில் அழிவுக்கு உட்படாதது எதுதான் உள்ளது. எனவே, உங்கள் செல்வங்கள், பிள்ளைகள் மற்றும் அனைத்தும் ஏற்கனவே அழிந்துவிட்டன என்று கவலையடைவீராக” என்ற பொருளைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பெரும் வலிமைமிக்கவரும், வரமளிக்கும் வீரரும், உலகத்தின் தலைவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்ந்ததும், அதன் தொடர்ச்சியாகப் பாரதர்கள் வீழ்ந்ததும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடிய கர்ணன், கண்ணீரால் நிறைந்த கண்களுடன் (தார்தராஷ்டிரர்களுக்கு) ஆறுதல் சொல்லத் தொடங்கினான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ராதையின் மகனுடைய {கர்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட உமது மகன்களும் உமது துருப்புகளும் உரக்க அழத்தொடங்கி, அந்த அழுகையின் பேரொலியால் அதிக வருத்தத்தை அடைந்து கண்ணீரை அதிகமாக வடித்தனர் [2]. எனினும், அந்தப் பயங்கரப் போர் மீண்டும் தொடங்கி, மன்னர்களால் தூண்டப்பட்ட கௌரவப் படைப்பிரிவுகள் பேரொலியோடு மீண்டும் முழங்கிய போது, வலிமைமிக்கத் தேர்வீரர்களில் காளையான கர்ணன், (கௌரவப் படையின்) பெரும் தேர்வீரர்களிடம் பேசி, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கும் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:
[2] இந்தச் சுலோகத்தின் பம்பாய் உரையில் சிறு வேறுபாடு காணப்படுகிறது. அனைவரும் இறக்கவேண்டிய நிர்பந்தம் இருப்பதால், கடமையைச் செய்ய நான் ஏன் அஞ்ச வேண்டும்? என்ற பொருளில் அஃது இருக்கிறது என்று இங்கே கங்குலி விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு உமது மகன்களும், படைவீரர்களும் ஒருவரையொருவர் அலறி அழைத்தார்கள்; அடிக்கடி அழுகைக்குரலோடு கூடவே துக்கத்தினால் உண்டான கண்ணீரையும் கண்களால் அப்போது வடித்தார்கள்” என்று இருக்கிறது.
{கர்ணன்}, “நிலையற்ற இந்த உலகில் (காலனின் {மரணத்தின்} கோரப் பற்களை நோக்கியே) அனைத்தும் {அனைத்துப் பொருட்களும்} தொடர்ந்து வலம் வருகின்றன. இஃதை எண்ணி, அனைத்தையும் குறுகிய காலம் கொண்டவையே என நான் கருதுகிறேன். எனினும், நீங்கள் அனைவரும் இங்கிருந்த போதே, மலைபோல அசையாமல் நிற்கும் குருக்களில் காளையான பீஷ்மர் எவ்வாறு தனது தேரில் இருந்து வீசப்பட்டார்? வலிமைமிக்கத் தேர்வீரரான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்த்தப்பட்டு, (ஆகாயத்தில் இருந்து) விழுந்த சூரியனைப் போல இப்போது தரையில் கிடக்கிறார் என்றால், மலைக்காற்றைத் தாங்கவொண்ணா மரங்களைப் போலவே, குரு மன்னர்கள் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கிஞ்சிற்றும் தாங்க இயன்றவர்கள் இல்லை [3].
[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, “மலையைத் தூக்கிச் செல்லும் காற்றை மரங்களால் தாங்க முடியாததைப் போல, மன்னர்கள் தனஞ்சயனைத் தாங்க சக்தியற்றவர்களே” என்று இருக்கிறது.
எனினும், இப்போது அந்த உயர் ஆன்மா கொண்டவர் {பீஷ்மர்} செய்ததைப் போலவே, {படையின்} முதன்மையான வீரர்கள் எதிரியால் கொல்லப்பட்டதும், உற்சாகமற்ற முகங்களைக் கொண்டதுமான ஆதரவற்ற இந்தக் குரு படையை நான் காப்பேன். இந்தச் சுமை இப்போது என் பொறுப்பாகட்டும். அந்த வீரர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} போரில் கொல்லப்பட்டதால் இந்த அண்டமே நிலையற்றதென நான் காண்கிறேன். {எனவே}, போருக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்? ஆகவே, களத்தில் திரிந்த படியே என் நேரான கணைகளால் அந்தக் குரு குலக் காளைகளை (பாண்டவர்களை) நான் யமலோகம் அனுப்புவேன். இவ்வுலகில் புகழையே உயர்ந்த நோக்கமாகக் கருதும் நான், போரில் அவர்களை {பாண்டவர்களை} கொல்வேன், அல்லது எதிரியால் கொல்லப்பட்டுக் களத்தில் உறங்குவேன்.
யுதிஷ்டிரன், உறுதியும், புத்திக்கூர்மையும், அறமும், வலிமையும் கொண்டவனாவான். விருகோதரன் {பீமன்}, ஆற்றலில் நூறு யானைகளுக்கு இணையானவனாவான், அர்ஜுனனோ இளமையானவனாகவும், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} மகனாகவும் இருக்கிறான். எனவே, அந்தப் பாண்டவப் படை தேவர்களாலும் எளிதாக வீழ்த்தப்பட முடியாததாகும். யமனுக்கு நிகரான இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்} எந்தப் படையில் இருக்கிறார்களோ, தேவகியின் மகனும் {கிருஷ்ணனும்}, சாத்யகியும் எந்தப் படையில் இருக்கிறார்களோ, அந்தப் படை காலனின் {மரணத்தின்} கோரப் பற்களைப் போன்றதாகும். அஃதை அணுகும் எந்தக் கோழையும் உயிருடன் திரும்ப மாட்டான்.
பெருகியிருக்கும் தவச் சக்தியை தவத் துறவுகளாலேயே விவேகிகள் எதிர்கொள்வதைப் போல, படையும் {சக்தியும்} படையாலேயே {சக்தியாலேயே} எதிர்க்கப்பட வேண்டும். எதிரியை எதிர்த்து, என் தரப்பைக் காப்பதில் என் மனத்தில் உறுதியடைந்திருக்கிறேன். ஓ! தேரோட்டியே, அன்று நான் எதிரியின் வல்லமையைத் தடுத்து, போர்க்களத்தை அடைந்ததுமே அவனை வீழ்த்தப் போகிறேன். இந்த உள் {குடும்பப்} பகையை நான் பொறுக்க மாட்டேன். துருப்புகள் பிளக்கப்படும்போது, அணிவகுக்க (உதவ) முயற்சி செய்யும் ஒருவனே நண்பனாவான் {நான் அந்தச் சிறந்த நண்பனாகவே இருப்பேன்}.
ஒன்று, நான் ஒரு நேர்மையான மனிதனுக்குத் தகுந்த நீதிமிக்கச் சாதனையை அடைவேன், அல்லது என் உயிரைத் துறந்து பீஷ்மரைத் தொடர்வேன். ஒன்று, நான் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் என் எதிரிகள் அனைவரையும் கொல்வேன், அல்லது அவர்களால் கொல்லப்பட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலகங்களுக்குச் செல்வேன்.
ஓ! தேரோட்டியே, பெண்களும், குழந்தைகளும் உதவிக்காகக் கூச்சலிடும்போதோ, துரியோதனனின் ஆற்றல் தடுக்கப்படும்போதோ நான் இதையே செய்ய வேண்டும் என்பதை நான் அறிவேன் [4]. எனவே, எதிரியை நான் இன்று வெல்வேன். இந்தப் பயங்கரப் போரில் என் உயிரைக் குறித்துக் கவலை கொள்ளாமல், குருக்களைப் பாதுகாக்கும் நான், பாண்டுவின் மகன்களைக் கொல்வேன். என் எதிரிகள் அனைவரையும் ஒன்றாகச் சேர்த்துப் போரில் கொல்லும் நான், திருதராஷ்டிரர் மகனுக்கு {துரியோதனனுக்கு} (மறுப்பதற்கிடமில்லா) அரசுரிமையை அளிப்பேன்.
[4] மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ! தேரோட்டியே, பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவிக்காக உரக்க அலறும்போதும், தார்தராஷ்டிரர்களின் {செருக்கு} பெருமை இழிவுபடுத்தப்படும்போதும் இதைச் செய்யவே நான் கடமைப்பட்டுள்ளதாக உண்மையில் நான் கருதுகிறேன்.” என்று இருக்கிறது.
அம்பறாத்தூணி |
பல்வேறு வண்ணங்களிலானதும், சிறந்ததும் தங்கத்தாலானதும், தாமரையின் பிரகாசத்தைக் கொண்டதும், யானை கட்டும் சங்கிலி பொறிக்கப்பட்ட {கொடியைக் கொண்டதுமான} என் அழகிய கொடிமரம், மென்மையான துணியால் துடைக்கப்பட்டு, அற்புதமான மாலைகளாலும், மெல்லிய இழைகளாலும் அலங்கரிப்பட்டு என்னிடம் கொண்டு வரப்படட்டும். ஓ! தேரோட்டியின் மகனே, பழுப்பு மேகங்களின் நிறத்தாலானவையும், மெலிதாக இல்லாதவையும் {பருத்தவையும்}, மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட நீரில் குளித்தவையும், பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான வேகமான குதிரைகள் சிலவும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும்.
தங்க மாலைகளாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், சூரியனையோ, சந்திரனையோ போலப் பிரகாசமானதும், ஆயுதங்கள், மற்றும் சிறந்த விலங்குகள் பூட்டப்பட்டுத் தேவையான அனைத்தையும் கொண்டதுமான சிறந்த தேர் ஒன்றும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். பெரும் தாங்கும் திறனைக் கொண்ட பல சிறந்த விற்களும், (எதிரியைத்) தாக்க வல்ல சிறந்த நாண்கயிறுகள் பலவும், பெரியதும், கணைகள் நிறைந்ததுமான அம்பறாத்தூணிகள் சிலவும், என் உடலுக்கான கவசங்கள் சிலவும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். தயிர்க்கடைசல்கள் நிறைந்தவையும், பித்தளை மற்றும் தங்கத்தாலானவையுமான குடங்களும், வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் தேவைப்படும் (மங்கலமான) பொருட்கள் அனைத்தும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். மலர்களாலான மாலைகள் கொண்டுவரப்படட்டும், அவை என் உடலின் (தகுந்த) அங்கங்களில் சூடப்படட்டும். வெற்றிக்கான பேரிகைகள் முழங்கப்படட்டும்.
ஓ! தேரோட்டியே, கிரீடியும் (அர்ஜுனனும்), விருகோதரனும் {பீமனும்}, தர்மனின் மகனும் (யுதிஷ்டிரனும்), இரட்டையர்களும் {நகுலனும், சகாதேவனும்} எங்கிருக்கிறார்களோ, அந்த இடத்திற்கு விரைவாகச் செல்வாயாக. அவர்களோடு போரில் மோதி, ஒன்று நான் அவர்களைக் கொல்வேன், அல்லது எதிரிகளான அவர்களால் கொல்லப்படும் நான் பீஷ்மரைப் பின்தொடர்வேன். அர்ஜுனன், வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, சிருஞ்சயர்கள் ஆகியோரைக் கொண்ட அந்தப் படை மன்னர்களால் வெல்லப்படமுடியாதது என நான் நினைக்கிறேன். அனைத்தையும் அழிக்கும் காலனே, முரட்டுத்தனமான கண்காணிப்புடன் கிரீடியை {அர்ஜுனனைப்} பாதுகாத்தாலும், அவனுடன் மோதி அவனைக் கொல்வேன், அல்லது பீஷ்மரின் வழியில் நானும் யமனுலகு செல்வேன். அவ்வீரர்களுக்கு மத்தியில் நானே செல்வேன் என்று நிச்சயமாக நான் சொல்கிறேன். உட்பகையைத் தூண்டாதோரும், என்னிடம் பலவீனமான பற்று கொள்ளாதோரும், நீதியற்ற ஆன்மா கொள்ளாதோருமே (மன்னர்களே) எனக்குக் கூட்டாளிகளாவர்[5]” {என்றான் கர்ணன்}.
[5] உட்பகையைத் தூண்டுபவர்களோ, என்னிடம் உறுதியான பற்றில்லாதவர்களோ, கெட்ட எண்ணம் கொண்டவர்களோ எனக்குக் கூட்டாளிகளாக மாட்டார்கள் என்பது இங்கே பொருள்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சிறந்த ஏர்க்காலைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மங்கலகரமானதும், கொடிமரத்துடன் கூடியதும், காற்றின் வேகத்தைக் கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், பெரும் பலம் கொண்டதும், விலையுயர்ந்ததுமான சிறந்த தேரைச் செலுத்திய கர்ணன் வெற்றிக்காக (போரிடச்) சென்றான்.
இந்திரனை வழிபடும் தேவர்களைப் போலக் குரு தேர்வீரர்களில் முதன்மையானோரால் வழிபடப்பட்டவனும், சூரியனைப் போல அளவிலா சக்தி கொண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான அந்தக் கடும் வில்லாளி {கர்ணன்}, தங்கம், ரத்தினம் மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த கொடிமரத்தைக் கொண்டதும், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், மேகங்களின் முழக்கத்திற்கு இணையான சடசடப்பொலி கொண்டதுமான தேரில், போர்க்களத்தின் எவ்விடத்தில் அந்தப் பாரதக் குலக்காளை (பீஷ்மர்) இயற்கைக்கான தன் கடனைச் செலுத்தினாரோ {ஆன்ம விடுதலையை விரும்பி உயிர் துறந்தாரோ} அந்த இடத்திற்குச் சென்றான். நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அழகான மேனியுடன் கூடியவனும், பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தெய்வீகத் தேரைச் செலுத்தும் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல, நெருப்பின் ஒளியைக் கொண்ட தன் அழகிய தேரில் ஏறி ஒளிர்ந்தான்.
ஆங்கிலத்தில் | In English |