Karna encouraged the Kauravas! | Drona-Parva-Section-004 | Mahabharata In Tamil
(துரோணாபிஷேக பர்வம் – 04)
பதிவின் சுருக்கம் : கர்ணனுக்கு அனுமதி அளித்த பீஷ்மர்; களத்திற்கு வந்து கௌரவர்களுக்கு ஊக்கமளித்த கர்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படிப் பேசிக் கொண்டிருந்த அவனிடம் {கர்ணனிடம்}, முதிர்ந்தவரான குரு பாட்டன் {பீஷ்மர்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், காலம் மற்றும் இடம் ஆகிய இரண்டிற்கும் ஏற்றவகையில் இவ்வார்த்தைகளைச் சொன்னார் {பீஷ்மர் கர்ணனிடம்}: “ஆறுகளுக்குப் பெருங்கடலும், அனைத்து ஒளிரும் கோள்களுக்குச் சூரியனும், உண்மைக்கு நேர்மையானவர்களும் {நல்லோரும்}, விதைகளுக்கு வளமான நிலமும், அனைத்து உயிரினங்களுக்கு மேகங்களும் போலவே உன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீ இருப்பாயாக. ஆயிரங்கண் கொண்டவனை {இந்திரனைச்} சார்ந்த தேவர்கள் போலவே உன் சொந்தங்கள் உன்னைச் சார்ந்து இருக்கட்டும் [1]. உன் எதிரிகளை அவமதிப்பவனாகவும், உன் நண்பர்களின் இன்பத்தை அதிகரிப்பவனாகவும் நீ இருப்பாயாக. சொர்க்கவாசிகளுக்கு விஷ்ணுவைப் போலவே கௌரவர்களுக்கு நீ இருப்பாயாக.
[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “இனிய கனியுள்ள மரத்தை அண்டிப் பிழைக்கும் பறவைகளைப் போல, பந்துக்கள் உன்னை அண்டிப் பிழைக்கட்டும்” என்றிருக்கிறது.
திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்ய விரும்பிய நீ, ஓ! கர்ணா, ராஜபுரத்திற்குச் சென்று, உன் கரங்களின் வல்லமை மற்றும் ஆற்றலினால் காம்போஜர்களை வீழ்த்தினாய். கிரிவ்ரஜத்தில் தங்கியிருந்த நக்னஜித் முதலான மன்னர்கள் பலர், அம்பஷ்டர்கள், விதேஹர்கள், கந்தர்வர்கள் [2] ஆகியோர் அனைவரும் உன்னால் வீழ்த்தப்பட்டனர். ஓ! கர்ணா, இமயத்தின் காட்டரண்களில் வசிப்போரான மூர்க்கமாகப் போரிடும் கிராதர்கள், உன்னால் முன்பொரு சமயம், துரியோதனனின் ஆளுகைக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்கப்பட்டனர். அதே போல, உத்கலர்கள், மேகலர்கள், பௌண்ட்ரர்கள், கலிங்கர்கள், ஆந்திரர்கள், நிஷாதர்கள், திரிகர்த்தர்கள், பாஹ்லீகர்கள் ஆகியோர் அனைவரும் உன்னால் போரில் வீழ்த்தப்பட்டனர்.
[2] வேறொரு பதிப்பில் இது காந்தாரர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
ஓ! கர்ணா, துரியோதனனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்ட நீ, பிற நாடுகள் பலவற்றிலும், ஓ! வீரா, பெரும் சக்தி கொண்ட பல மன்னர்களையும், குலங்களையும் வீழ்த்தினாய். ஓ! குழந்தாய் {கர்ணா}, சொந்தங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் துரியோதனன் எப்படியோ, அப்படியே நீயும் கௌரவர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருப்பாயாக. மங்கலகரமான வார்த்தைகளால் நான் உனக்கு உத்தரவிடுகிறேன், போ! எதிரிகளுடன் போரிடுவாயாக. போரில் குருக்களை வழிநடத்தி வெற்றியை துரியோதனனுக்கு அளிப்பாயாக. துரியோதனனைப் போலவே நீயும் எங்களது பேரனே {எங்களுக்குப் பேரன் போன்றவனே}. விதிப்படி துரியோதனனுக்கு நாங்கள் அனைவரும் எப்படியோ அப்படியே உனக்கும் ஆகிறோம்.
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கர்ணா}, ஒரே கருவில் பிறந்தோர் உறவைவிட, நேர்மையாளர்களிடம் நேர்மையாளர்கள் {நல்லோருடன் நல்லோர்} கொள்ளும் தோழமையே மேன்மையானது என்று விவேகிகள் சொல்கின்றனர். எனவே குருக்களுடன் நீ கொண்ட உறவை பொய்யாக்காமல், கௌரவப் படையை உனதாகவே கருதி, துரியோதனனைப் போலவே அதைப் பாதுகாப்பாயாக” {என்றார் பீஷ்மர்}.
இவ்வார்த்தைகளைக் கேட்ட விகர்த்தனன் {சூரியன்} மகன் கர்ணன், பீஷ்மரின் பாதத்தை வணங்கி, (அவரிடம் விடைபெற்று) கௌரவ வில்லாளிகள் அனைவரும் இருக்கும் இடத்திற்கு வந்தான். பரந்திருந்த அந்தப் பெரும் படையின் ஒப்பற்ற முகாமைக் கண்ட அவன் {கர்ணன்}, நல்ல ஆயுதங்களைத் தரித்தோரும், அகன்ற மார்புகளை உடையோருமான அந்த வீரர்களை (ஊக்க வார்த்தைகளால்) உற்சாகப்படுத்தத் தொடங்கினான். துரியோதனன் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.
வலிய கரங்களும், உயர் ஆன்மாவும் கொண்ட கர்ணன், போருக்காக, அந்த முழுப் படையின் தலைமையில் தன்னை நிறுத்திக் கொண்டதைக் கண்ட கௌரவர்கள் உரத்த கூச்சல்களாலும், {தங்கள்} கக்கங்களைத் {தோள்களைத்} தட்டும் ஒலிகளாலும், சிங்க முழக்கங்களாலும், விற்களின் நாணொலிகளாலும், இன்னும் பிற பல்வேறு ஒலிகளாலும் அவனை {கர்ணனை} வரவேற்றனர்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |