The prowess of Abhimanyu! | Drona-Parva-Section-014 | Mahabharata In Tamil
(துரோணாபிஷேக பர்வம் – 14)
பதிவின் சுருக்கம் : துரோணர் செய்த போர்; வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்போர்கள்; ஜெயத்ரதனால் அபிமன்யுவிடம் இருந்து உயிர்தப்பிய பௌரவன்; ஜெயத்ரதனை வீழ்த்திய அபிமன்யு; அபிமன்யுவின் ஆற்றல்; சல்லியன் அபிமன்யு மோதல்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவப்படையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய துரோணர், (காட்டு) மரங்களை எரிக்கும் தீயைப் போல அதனூடே {பாண்டவப்படையினூடே} திரிந்து கொண்டிருந்தார். தங்கத்தேரைக் கொண்ட அந்தக் கோபக்கார வீரர் {துரோணர்} பெருகும் காட்டுத்தீயைப் போலத் தங்கள் படையணிகளை எரிப்பதைக் கண்ட சிருஞ்சயர்கள் (அச்சத்தால்) நடுங்கினர். பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரரால் {துரோணரால்} தொடர்ந்து வளைக்கப்பட்ட வில் உண்டாக்கிய நாணொலியானது இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக அந்தப் போரில் கேட்கப்பட்டது. கர நளினம் {லாகவம்} கொண்ட துரோணரால் ஏவப்பட்ட கடுங்கணைகள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய தேர்வீரர்களையும், குதிரைவீரர்களையும், யானைவீரர்களையும், காலாட்படை வீரர்களையும் நசுக்கத் தொடங்கின.
வேனிற்காலத்தின் முடிவில் முழங்கும் மேகங்கள் காற்றின் உதவியோடு ஆலங்கட்டிகளைப் பொழிவதைப் போலக் கணைகளைப் பொழிந்த அவர் {துரோணர்}, எதிரியின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தினார். (பகையணிகளின் ஊடாகத்) திரிந்து துருப்புகளைக் கலங்கடித்த வலிமைமிக்கத் துரோணர், எதிரியிடம் இயல்புக்குமீறிய அச்சத்தை அதிகமாக்கினார். வேகமாக நகரும் அவரது தேரில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில் கார்மேகத் திரளுக்கு மத்தியில் மின்னலின் கீற்றுக்கு ஒப்பாக அடிக்கடி தென்பட்டது.
உண்மையில் {சத்தியத்தில்} உறுதியானவரும், விவேகம் கொண்டவரும், நீதிக்கு எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்} யுகத்தின் முடிவில் தென்படும் கோப ஊற்றாலான பயங்கர ஆறு ஒன்றை அங்கே பாயச் செய்தார். துரோணருடைய கோபத்தின் வேகத்தில் இருந்த அந்த ஆற்றின் ஊற்றுக் கண் ஊனுண்ணும் உயிரினங்களால் மொய்க்கப்பட்டிருந்தது. போராளிகள் அதன் முழுப் பரப்பிலான அலைகளாக இருந்தனர். வீரமிக்கப் போர்வீரர்கள் அதன் ஊற்றால் வேர்கள் தின்னப்பட்டு, அதன் கரைகளில் நிற்கும் மரங்களாக இருந்தனர்.
அந்தப் போரில் சிந்தப்பட்ட குருதி அதன் நீரானது, தேர்கள் அதன் நீர்ச்சுழலாகவும், யானைகளும் குதிரைகளும் அதன் கரைகளாகவும் அமைந்தன. கவசங்கள் அதன் அல்லிகளாகவும், உயிரினங்களின் இறைச்சி அதன் படுகையில் உள்ள சகதியாகவும் இருந்தன. (வீழ்ந்த விலங்குகள் மற்றும் மனிதர்களின்) கொழுப்பு, மஜ்ஜை, எலும்புகள் அதன் மணற்பரப்பாகவும், தலைப்பாகைகள் அதன் நுரைகளாகவும் அமைந்தன. மேலும் அங்கே நடைபெற்ற போரானது அதன் பரப்புக்கு மேலுள்ள கவிகையாகியது. வேல்கள் எனும் மீன்களால் அது நிறைந்திருந்தது. பெரும் எண்ணிக்கையில் (கொல்லப்பட்ட) மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றின் விளைவால் (அதில் விழுந்ததால்) அஃது அடைவதற்கரிதானதாக இருந்தது.
ஏவப்பட்ட கணையின் வேகம் அதன் நீரூற்றாக இருந்தது. கொல்லப்பட்ட உடல்கள் அதில் மிதக்கும் மரங்களாகின. தேர்கள் அதன் ஆமைகளாகின. தலைகள், அதன் கரைகளில் சிதறிக் கிடக்கும் கற்களாகின, வாள்கள் மீன்களாக அபரிமிதமாக இருந்தன. தேர்களும், யானைகளும், அதன் தடாகங்களாகின. மேலும் அது பல்வேறு ஒப்பனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அதன் நூற்றுக்கணக்கான நீர்ச்சுழல்களாகினர். பூமியின் புழுதி அதன் அலைவரிசைகளாகின. பெரும் சக்தி கொண்டோரால் எளிதில் கடக்கத்தக்கதாகவும், மருண்டவர்களால் கடக்கமுடியாததாகவும் அஃது இருந்தது.
உயிரற்ற உடல்களின் குவியல்கள் அதன் ஓட்டத்தைத் தடுக்கும் மணற்படுகைகளாகின. கங்கங்கள், கழுகுகள் மற்றும் இரைதேடும் பிற பறவைகள் மொய்க்கும் இடமாக அஃது இருந்தது. ஆயிரக்கணக்கான வலிமைமிக்கத் தேர்வீரர்களை அது யமலோகத்திற்கு அடித்துச் சென்றது. நீண்ட ஈட்டிகள் அதன் பாம்புகளாக அதில் பரவிக் கிடந்தன. உயிருடன் இருந்த போராளிகள் அதன் நீர்களில் விளையாடும் நீர்வாழ் உயிரிகளாகினர். கிழிந்த குடைகள் அதன் பெரிய அன்னங்களாகின. கிரீடங்கள் அதை அலங்கரித்த (சிறு) பறவைகளாகின. சக்கரங்கள் அதன் ஆமைகளாகவும், கதாயுதங்கள் அதன் முதலைகளாகவும், கணைகள் அதன் சிறு மீன்களாகவும் இருந்தன. காகங்கள், கழுகுகள் மற்றும் நரிகளின் பொழுதுபோக்கிடமாக அஃது இருந்தது.
ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஆறு போரில் துரோணரால் கொல்லப்பட்ட உயிரினங்களை நூற்றுக்கணக்கில் பித்ருலோகத்திற்கு அழைத்துச் சென்றது. (அதில் மிதக்கும்) நூற்றுக்கணக்கான உடல்களால் தடுக்கப்பட்ட அது (கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் விலங்குகளின்) முடிகளைப் பாசிகளாகவும், புற்களாகவும் கொண்டிருந்தது. துரோணர் அங்கே ஓடச்செய்த ஆறு இப்படியே மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது.
அங்கேயும் இங்கேயும் எனத் துரோணர் பகையணியை இப்படிக் கலங்கடித்துக் கொண்டிருந்தபோது, யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவ வீரர்கள் அந்த வீரரை {துரோணரை} நோக்கி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் விரைந்து சென்றனர். அவர்கள் இப்படி (துரோணரை நோக்கி) விரைவதைக் கண்ட உறுதியான ஆற்றல் கொண்ட உமது படையின் துணிச்சல்மிகு போராளிகள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர். அதன்பிறகு அங்கே தொடர்ந்த போரானது மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
நூறு வகைகளிலான வஞ்சனைகள் நிறைந்த சகுனி, சகாதேவனை நோக்கி விரைந்து, கூர்முனைக் கணைகள் பலவற்றால் பின்னவனின் {சகாதேவனின்} தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேரினைத் துளைத்தான். எனினும், அதிகமாகத் தூண்டப்படாத சகாதேவன், கூரிய கணைகளால் சுபலனின் கொடிமரம், வில், தேரோட்டி மற்றும் தேர் ஆகியவற்றை வெட்டி, அறுபது {60} கணைகளால் சுபலனையும் {சகுனியையும்} துளைத்தான். அதன் பேரில், சுபலனின் மகன் {சகுனி}, கதாயுதத்தை எடுத்துக் கொண்டு தன் சிறந்த தேரில் இருந்து கீழே குதித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சகாதேவனின் தேரோட்டியைப் பின்னவனின் {சகாதேவனின்} தேரில் இருந்து கீழே வீழ்த்தினான். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தேரை இழந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் {சகுனியும், சகாதேவனும்} இருவரும் கதாயுதத்தைத் தரித்துக் கொண்டு, மலைகளின் முகடுகள் இரண்டைப் போலப் போரில் விளையாடினர்.
துரோணர், பாஞ்சாலர்களின் ஆட்சியாளனை {துருபதனைப்} பத்துக் கணைகளால் துளைத்துவிட்டுப் பதிலுக்குப் பின்னவனால் {துருபதனால்} பல கணைகளால் துளைக்கப்பட்டார். பிறகு, மீண்டும் பின்னவன் {துருபதன்} துரோணரால் பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் துளைக்கப்பட்டான் [1].
[1] வேறொரு பதிப்பில இந்தப் பத்தி, “துரோணர் கூர்மையான அம்புகளால் பாஞ்சால ராஜகுமாரனை {திருஷ்டத்யும்னனை} அடித்தார். அந்த யுத்தகளத்தில் அவ்விருவருடைய அம்பு மழையாலும் ஆகாயமானது இரவில் மின்மினிப்பூச்சிகளால் பிரகாசிப்பதைப் போலப் பிரகாசித்தது” என்று இருக்கிறது. கங்குலியில் the ruler of Panchalas என்றே இருக்கிறது. எனினும் இது துருபதனில்லாமல், திருஷ்டத்யும்னனாகவும் இருக்கலாம். ஏனெனில் இங்கே குறிப்பிடப்படும் தனிப்போர்களில் துருபதன் பகதத்தனோடு போரிட்டதாக இதே பகுதியில் பின்னர் ஓர் இடத்தில் வருகிறது.
பீமசேனன் கூரிய கணைகளால் விவிம்சதியைத் துளைத்தான். எனினும் பின்னவன் {விவிம்சதி}, இப்படித் துளைக்கப்பட்டாலும் நடுங்காதிருந்தது பெரும் ஆச்சரியமாகத் தெரிந்தது. பிறகு விவிம்சதி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திடீரெனப் பீமசேனனை அவனது குதிரைகளையும், கொடியையும், வில்லையும் இழக்கச் செய்தான். அதன்பேரில் துருப்புகள் அனைத்தும் அந்தச் சாதனைக்காக அவனை {விவிம்சதியை} வழிபட்டன. எனினும், வீரபீமசேனன், போரில் தன் எதிரி ஆற்றலை வெளிப்படுத்துவதைப் பொறுத்துக் கொள்ளவில்லை. எனவே, தன் கதாயுதத்தால், விவிம்சதியின் நன்கு பயிற்சியைப் பெற்ற குதிரைகளைக் கொன்றான். பிறகு வலிமைமிக்க விவிம்சதி, (வாளோடு கூடிய) ஒரு கேடயத்தை எடுத்துக் கொண்டு, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து கீழே குதித்து, மதங்கொண்ட எதிராளியை {யானையை} எதிர்த்து விரையும் மதங்கொண்ட யானையைப் போலப் பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.
வீர சல்லியன், சரசம் செய்பவனைப் போலச் சிரித்துக் கொண்டே தன் அன்புக்குரிய மருமகனான நகுலனின் கோபத்தைத் தூண்டுவதற்காகப் பல கணைகளால் அவனை {நகுலனைத்} துளைத்தான். எனினும், வீர நகுலன், தன் மாமனின் {சல்லியனின்} குதிரைகள், குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் வில் ஆகியவற்றை வெட்டி தன் சங்கை முழக்கினான்.
{சேதி மன்னன்} திருஷ்டகேது, கிருபருடன் {போரில்} ஈடுபட்டு, பின்னவர் {கிருபர்} தன்னை நோக்கி ஏவிய பல்வேறு வகைகளிலான கணைகளை வெட்டி, பிறகு, எழுபது{70} கணைகளால் கிருபரைத் துளைத்தான். பிறகும், மூன்று கணைகளால் கிருபரின் கொடிமரத்திலுள்ள பொறியை {கொடியை} அவன் வெட்டினான். எனினும், கிருபர், அடர்த்தியான கணை மழையால் அவனை {திருஷ்டகேதுவை} எதிர்க்கத் தொடங்கினார். இவ்வழியில் திருஷ்டகேதுவைத் தடுத்த அந்தப் பிராமணர் {கிருபர்}, அவனுடன் {தொடர்ந்து} போரிட்டுக் கொண்டிருந்தார்.
சாத்யகி, சிரித்துக் கொண்டே ஒரு நாராசத்தைக் கொண்டு கிருதவர்மனின் நடு மார்பைத் துளைத்தான். மேலும் எழுபது {70} கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்த அவன் {சாத்யகி} மீண்டும் பிறவற்றால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். எனினும் அந்தப் போஜப் போர்வீரன் {கிருதவர்மன்}, கூர்முனைகளைக் கொண்ட எழுபது கணைகளால் சாத்யகியைப் பதிலுக்குத் துளைத்தான். வேகமாகச் செல்லும் காற்று ஒரு மலையை அசைப்பதில் தோற்பதைப் போல, கிருதவர்மனால் சாத்யகியை அசைக்கவோ, அவனை நடுங்கச் செய்யவோ இயலவில்லை.
{துரியோதனன் தம்பியான} சேனாபதி, {பாண்டவத் தரப்பின்} சுசர்மனை அவனது முக்கிய அங்கங்களில் ஆழமாகத் தாக்கினான். சுசர்மனும் ஒரு வேலால் தன் எதிராளியின் தோள்ப்பூட்டில் தாக்கினான் [2].
[2] இந்த இடத்தில் வேறொரு பதிப்பில், “சேனாதிபதியான திருஷ்டத்யும்னன் {திரிகர்த்த மன்னன்} சுசர்மனை மர்மஸ்தானங்களில் மிகவும் அடித்தான், அவனும், அவனைத் தோமராயுதத்தால் தோள்பூட்டில் அடித்தான்” என்று இருக்கிறது.
விராடன், பெரும் சக்தி கொண்ட மத்ஸ்ய வீரர்களின் உதவியால், அந்தப் போரில் விகர்த்தனன் மகனை {கர்ணனைத்} தடுத்தான். (மத்ஸ்ய மன்னனின்) அந்தச் சாதனை மிகவும் அற்புதமானதாகத் தெரிந்தது. சூத மகனின் {கர்ணனின்} பங்குக்கு, அவன் தனியாகவே தன் நேரான கணைகளின் மூலம் மொத்தப்படையையும் தடுத்ததால், அது பெரும் வீரச் செயலாகக் கருதப்பட்டது.
மன்னன் துருபதன், பகதத்தனோடு {போரில்} ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அந்த இருவீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் போரானது காண்பதற்கு மிக அழகாக இருந்தது [3]. மனிதர்களில் காளையான பகதத்தன், நேரான கணைகள் பலவற்றால், மன்னன் துருபதன், அவனது தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேர் ஆகியவற்றைத் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட துருபதனோ, ஒரு நேரான கணையால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனின் {பகதத்தனின்} நடு மார்பைத் துளைத்தான்.
[3] இந்தப் பகுதியில் மேலே ஓர் இடத்தில் துரோணரோடு பாஞ்சாலர்களின் ஆட்சியாளன் போரிட்டான் என்ற ஒரு குறிப்பு இருக்கிறது.
ஆயுதங்களை அறிந்த பூமியின் போர்வீரர்களில் முதன்மையான சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} மற்றும் சிகண்டி ஆகியோர் இருவரும் கடும்போரில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டது உயிரினங்கள் அனைத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்தது. வீர பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யக்ஞசேனன் மகனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் சிகண்டியை அடர்த்தியான கணைமழையால் மறைத்தான். பிறகு, ஓ!ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட சிகண்டி, தொண்ணூறு {90} கணைகளால் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசைத்} துளைத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனை {பூரிஸ்ரவசை} நடுங்கச் செய்தான்.
கடும் செயல்களைப் புரியும் ராட்சசர்களான ஹிடிம்பையின் மகனும் {கடோத்கசனும்}, அலம்புசனும், ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி, மிக அற்புதமாகப் போரிட்டனர். நூறு மாயைகளை உண்டாக்கவல்லவர்களும், செருக்கு பெருகியவர்களுமான அவ்விருவரும், தங்கள் மாய சக்திகளை நம்பி ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி தங்களுக்குள் மிக அற்புதமாகப் போரிட்டனர்.
மூர்க்கமான சேகிதானன், அனுவிந்தனோடு போரிட்டான். சில நேரங்களில் மறைந்து பெரும் அற்புதங்களை ஏற்படுத்தியபடியே அவர்கள் களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.
{துரியோதனன் மகன்} லக்ஷ்மணன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் (அசுரன்) ஹிரண்யாக்ஷனோடு போரிட்ட விஷ்ணுவைப் போலவே , {திருஷ்டத்யும்னன் மகன்} க்ஷத்ரதேவனோடு கடுமையாகப் போரிட்டான்.
பௌரவன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வேகமான தன் குதிரைகளோடு கூடிய தேரில் வந்து, அபிமன்யுவை நோக்கி முழங்கினான். பெரும் வலிமை கொண்ட அந்தப் பௌரவன் போரிட விரும்பி அபிமன்யுவை நோக்கி விரைந்தான். பிறகு எதிரிகளைத் தண்டிப்பவனான அபிமன்யு அந்த எதிரியோடு {பௌரவனோடு} கடுமையாகப் போரிட்டான். பௌரவன் அடர்த்தியான கணை மழையால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} மறைத்தான். அதன் பேரில், அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, தன் எதிராளியின் {பௌரவனின்} கொடிமரம், குடை மற்றும் வில் ஆகியவற்றைப் பூமியில் வீழ்த்தினான். பிறகு ஏழு கணைகளால் பௌரவனைத் துளைத்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஐந்து கணைகளால் பின்னவனின் {பௌரவனின்} தேரோட்டி மற்றும் குதிரைகளைத் துளைத்தான். இப்படித் தன் துருப்புகளை மகிழ்ச்சியடையச் செய்த அவன் {அபிமன்யு}, சிங்கம் போல மீண்டும் மீண்டும் கர்ஜனை செய்தான்.
பிறகு அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பௌரவனின் உயிரை நிச்சயம் எடுக்க வல்ல கணை ஒன்றை தன் வில்லின் நாணில் விரைவாகப் பொருத்தினான். எனினும் அபிமன்யுவின் வில்லின் நாணில் பொருத்தப்பட்ட அந்தக் கணையின் பயங்கரத் தோற்றத்தைக் கண்ட ஹ்ருதிகன் மகன் {கிருதவர்மன்}, இரண்டு கணைகளால் அந்த வில்லையும், கணையையும் அறுத்தான். பிறகு, பகைவர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, உடைந்த வில்லை வீசியெறிந்து, பளபளக்கும் வாள் ஒன்றையும், கேடயம் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். பல நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கேடயத்தைப் பெரும் வேகத்தோடு சுழற்றி, அந்த வாளையும் சுழற்றியபடியே தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டு அவன் {அபிமன்யு} களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.
தன் முன்னே அவற்றை {கேடயத்தையும் வாளையும்} சுழற்றிக் கொண்டும், பிறகு அவற்றை உயர்த்திச் சுழற்றியும், அவற்றை அசைத்தும் {உதறியும்}, உயரக் குதித்தும் அவ்வாயுதங்களை அவன் கையாண்ட விதத்தால், தாக்கும் மற்றும் தற்காக்கும் அந்த ஆயுதங்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் (அவனிடம்) காண முடியவில்லை. பிறகு, திடீரெனப் பௌரவனின் தேர் ஏர்க்காலில் குதித்து ஏறிய அவன் {அபிமன்யு} உரக்க முழங்கினான். பிறகு அவனது தேரில் ஏறிய அவன் {அபிமன்யு}, பௌரவனின் தலைமயிறைப் பிடித்துக் கொண்டு, ஓர் உதையால் பின்னவனின் {பௌரவனின்} தேரோட்டியைக் கொன்று, தன் வாள் வீச்சால் அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். அந்தப் பௌரவனைப் பொறுத்தவரை, நீரைக் கலக்கி கடலின் அடியில் உள்ள பாம்பை உயர்த்தும் கருடனைப் போல அபிமன்யு அவனை {பௌரவனை} உயர்த்தினான்.
அதன் பேரில், மன்னர்கள் அனைவரும், சிங்கத்தால் கொல்லப்படும் தருணத்தில் உணர்வுகளை இழந்து நிற்கும் எருதைப் போலக் கலைந்த தலைமயிறோடு கூடிய (ஆதரவற்று நின்ற) பௌரவனைக் கண்டனர். இப்படிக் கிடத்தப்பட்ட பௌரவன், அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} வசத்தில் அகப்பட்டு, ஆதரவற்ற நிலையில் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட ஜெயத்ரதனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு வாளையும், மயில் பொறிக்கப்பட்டு வரிசையான சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்ட ஜெயத்ரதன், தன் தேரில் இருந்து கீழே குதித்து உரக்க முழங்கினான். பிறகு, சுபத்திரையின் மகன் (அபிமன்யு), சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கண்டு, பௌரவனை விட்டுவிட்டு, பின்னவனின் தேரில் இருந்து ஒரு பருந்தைப் போல உயரக் குதித்து, பூமியில் விரைவாக இறங்கினான்.
அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளால் ஏவப்பட்ட வேல்கள், பட்டிசங்கள் மற்றும் வாள்களைத் தன் வாளினால் வெட்டவோ, தன் கேடயத்தால் விலக்கவோ செய்தான். இப்படித் தன் கரங்களின் வலிமையை வீரர்கள் அனைவருக்கும் காட்டிய அந்த வலிமைமிக்க (வீர) அபிமன்யு, மீண்டும் தன் பெரிய வாளையும், கேடயத்தையும் உயர்த்தி, தன் தந்தையின் {அர்ஜுனனின்} உறுதியான எதிரியான விருத்தக்ஷத்திரன் மகனை {ஜெயத்ரதனை} நோக்கி, யானையை எதிர்த்துச் செல்லும் புலியைப் போலச் சென்றான். புலியும் சிங்கமும் தங்கள் பற்களாலும், நகங்களாலும் தாக்கிக் கொள்வதைப் போல ஒருவரை ஒருவர் அணுகிய அவர்கள் தங்கள் வாள்களால் தாக்கிக் கொண்டனர்.
சுழன்று வீசுதல் {அபிகாதம்}, வாள்களை இறக்குதல் {ஸ்ம்பாதம்} மற்றும் கேடயங்களை இறக்குதல் {நிபாதம்} ஆகியவற்றைப் பொறுத்தவரை, அந்த மனிதர்களில் சிங்கங்களான இருவருக்குள்ளும் எந்த வேறுபாட்டையும் யாராலும் காண முடியவில்லை [4]. வெளிநோக்கியும், உள்நோக்கியும் அழகாக நகர்ந்து அந்த இரு வீரர்களும் சிறகுகள் படைத்த இரு மலைகளைப் போலத் தெரிந்தனர். ஜெயத்ரதன், புகழ்பெற்ற அபிமன்யு அவனை நோக்கி வாளை வீசிய போது பின்னவனின் {அபிமன்யுவின்} கேடயத்தைத் தாக்கினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனின் பெரிய வாளானது, தங்கத் தகட்டால் மறைக்கப்பட்ட அபிமன்யுவின் கேடயத்தில் சிக்கிக் கொண்டு, அதைச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பலமாக உருவ முயற்சித்த போது உடைந்தது.
[4] வேறொரு பதிப்பில், “ஸ்ம்பாதங்களிலும் {எதிராக வீசுதல்}, அபிகாதங்களிலும் {நான்கு பக்கத்திலும் சுழற்றியடித்தல்}, நிபாதங்களிலும் {பதுங்கி அல்லது சாய்ந்து வீசுதல்} மனிதர்களில் சிறந்தவர்களான அவ்விருவருக்குமுள்ள வித்தியாசத்தை ஒருவரும் காணவில்லை” என்று இருக்கிறது.
தன் வாள் உடைந்ததைக் கண்ட ஜெயத்ரதன், விரைவாக ஆறு எட்டுகள் பின்வாங்கி, கண் இமைக்கும் நேரத்திற்குள் தன் தேரில் ஏறுவது தெரிந்தது [5]. பிறகு, வாள் போர் முடிந்ததும் அர்ஜுனனின் மகனும் {அபிமன்யுவும்} தன் சிறந்த தேரில் ஏறினான். குரு படையின் மன்னர்கள் பலர் ஒன்று சேர்ந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். எனினும், அந்த வலிமைமிக்க அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஜெயத்ரதனைப் பார்த்துக் கொண்டே தன் வாளையும், கேடயத்தையும் சுழற்றி உரக்க கர்ஜித்தான். சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} வீழ்த்தியவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பிறகு, உலகை எரிக்கும் சூரியனைப் போலக் கௌரவப் படையின் அந்தப் பிரிவை எரிக்கத் தொடங்கினான்.
[5] வேறொரு பதிப்பில் ஆறு எட்டுகள் பின்னோக்கி முதலில் தேரில் ஏறியது அபிமன்யு என்று இருக்கிறது. கங்குலியின் வர்ணனையே இங்கு விரிவானதாகத் தெரிகிறது.
பிறகு அந்தப் போரில் சல்லியன், முழுக்க இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்புத் தழலின் சுடருக்கு ஒப்பானதுமான கடும் ஈட்டி ஒன்றை அவன் {அபிமன்யு} மீது வீசினான். அதன் பேரில், அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, மேலிருந்து விழும் வலிமைமிக்கப் பாம்பைப் பிடிக்கும் கருடனைப் போல அந்த ஈட்டியை உயரக் குதித்துப் பிடித்தான். இப்படி அதைப் {ஈட்டியைப்} பிடித்த அபிமன்யு தன் வாளை உறையில் இருந்து எடுத்தான். அளவிலா சக்தி கொண்ட அந்தப் போர்வீரனின் {அபிமன்யுவின்} வலிமையையும் பெரும் சுறுசுறுப்பையும் சாட்சியாகக் கண்ட மன்னர்கள் அனைவரும் சேர்ந்து சிங்க கர்ஜனை செய்தனர்.
பிறகு, பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கரங்களின் வலிமையைக் கொண்டு, பெரும் காந்தியுடன் கூடியதும், வைடூரியக் கற்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த ஈட்டியைச் சல்லியன் மீதே ஏவினான். சமீபத்தில் சட்டை உரித்த பாம்புக்கு ஒப்பான அந்த ஈட்டி, சல்லியனின் தேரை அடைந்து, பின்னவனின் {சல்லியனின்} தேரோட்டியைக் கொன்று, அவனையும் அந்த வாகனத்தின் தட்டில் இருந்து கீழே விழச் செய்தது. பிறகு, விராடன், துருபதன், திருஷ்டகேது, யுதிஷ்டிரன், சாத்யகி, கேகயன், பீமன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோர் அனைவரும், “அருமை! அருமை!” என்று சொல்லி வியந்தனர். பின்வாங்காதவனான அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} மகிழ்விக்கும் வண்ணம், கணைகள் ஏவும் பல்வேறு விதங்களிலான ஒலிகளும், சிங்க முழக்கங்கள் பலவும் அங்கே எழுந்தன.
எனினும், எதிரியின் வெற்றிக்கான அறிகுறிகளை உமது மகன்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிறகு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} திடீரெனச் சூழ்ந்த அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைகளின் மாரியால் அவனை {அபிமன்யுவை} மறைத்தனர். பிறகு எதிரிகளைக் கொல்பவனான அர்தாயனி {ரிதாயனன் மகன்} (சல்லியன்), உமது மகன்களுக்கு நன்மையை விரும்பி, தன் தேரோட்டி வீழ்ந்ததையும் நினைவுகூர்ந்து, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து சினத்துடன் விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |