The standards of kings! | Drona-Parva-Section-023 b | Mahabharata In Tamil
(சம்சப்தகவத பர்வம் – 07)
பதிவின் சுருக்கம் : வீரர்கள் ஒவ்வொருவரும் கொண்ட கொடிமரங்களின் தன்மைகள் குறித்து விவரித்துச் சொன்ன சஞ்சயன்; பாண்டவர்கள் கொண்டிருந்த விற்களின் பெயர்கள்; களத்தில் ஆங்காங்கே நடைபெற்ற தனிப்போர்கள் குறித்த வர்ணனை: நகுலனின் மகன் சதானீகனால் கொல்லப்பட்ட பூதகர்மன்; துரியோதனனின் தம்பி பீமரதனால் கொல்லப்பட்ட சால்வன்...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “தெய்வீக வடிவங்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான பிரபத்ரகர்கள், பல்வேறு சிறந்த நிறங்களிலான குதிரைகளில் போரிட முன்னேறினர். தங்கக் கொடிமரங்களைக் கொண்ட அவர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மூர்க்கமாகப் போராடத் தயாராக இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகளின் அம்சங்களை அணிந்து பீமசேனனுடன் முன்னேறினர். ஒன்று கூடியிருந்த அந்தப் பிரபத்ரகர்களின் கூட்டம் திருஷ்டத்யும்னனால் மிகவும் விரும்பப்பட்டது.
எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்}, வீரர்கள் அனைவரையும் காந்தியில் விஞ்சினார். அவரது கொடிமரமானது, மேலே கருப்பு மானின் தோல் {கிருஷ்ணாஜினம் கொடி} படபடக்க, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதில் இருந்த அழகிய நீர்க்குடத்துடன் {கமண்டலத்துடன்} மிக அழகாகத் தெரிந்தது.
பீமசேனனின் கொடிமரமானது, வைடூரியத்தாலான கண்களைக் கொண்டதும், வெள்ளியாலானதுமான பெரிய சிங்கத்தைக் கொடியில் கொண்டு மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது.
பெரும் சக்தியுடைய யுதிஷ்டிரனின் கொடிமரமானது, கோள்கள் சூழ இருக்கும் தங்கச் சந்திரனைக் கொடியில் கொண்டு மிக அழகாகத் தெரிந்தது. நந்தம் மற்றும் உபநந்தம் என்று அழைக்கப்பட்ட அழகிய இரண்டு பெரிய மிருதங்கங்கள் அதனுடன் கட்டப்பட்டிருந்தன. இயந்திரங்களால் இயக்கப்பட்ட இவை [1] கேட்பவர் அனைவரின் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும் சிறந்த இசையை உண்டாக்கின.
[1] இது கவனிக்கத்தக்கது தானியங்கி மிருதங்கங்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றன.
எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் உயரமானதும் கடுமையானதுமான நகுலனின் தேரில் பொருத்தப்பட்டிருந்த கொடிமரமானது, தங்கத்தாலான முதுகைக் கொண்ட சரபத்தைக் கொடியில் தாங்கியிருந்தது.
மணிகளுடன் கூடிய அழகிய வெள்ளி அன்னப்பறவையும், எதிரியின் துயரத்தை அதிகரிக்கும் பயங்கரமான கொடியும் சகாதேவனின் கொடிமரத்தில் காணப்பட்டது.
திரௌபதியின் மகன்கள் ஐவரின் கொடிமரங்களும் தர்மன், மாருதன், சக்ரன் {இந்திரன்}, அசுவினி இரட்டையர்கள் ஆகியோரின் அற்புதமான வடிவங்களைக் கொண்ட கொடியைச் சுமந்திருந்தன.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இளைஞனான அபிமன்யுவின் தேரில் புடம்போட்ட தங்கம் போலப் பிரகாசிக்கும் தங்க மயிலைத் தாங்கிய கொடியைக் கொண்ட அற்புதக் கொடிமரம் ஒன்று இருந்தது.
கடோத்கசனின் கொடிமரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒரு கழுகு பிரகாசமாக மின்னியது, அவனது குதிரைகள், பழங்காலத்தின் ராவணனுடைய குதிரைகளைப் போல நினைத்த இடங்களுக்குச் செல்ல வல்லவையாக இருந்தன.
யுதிஷ்டிரனின் கரங்களில் மஹேந்திரம் என்று அழைக்கப்படும் தெய்வீக வில் இருந்தது, பீமசேனனின் கைகளிலோ, ஓ! மன்னா வாயவ்யம் என்று அழைக்கப்படும் தெய்வீக வில் இருந்தது. மூன்று உலகங்களின் பாதுகாப்புக்காகப் பிரம்மன் ஒரு வில்லைப் படைத்தான். அந்த அழிக்கமுடியாத தெய்வீக வில்லை {காண்டீவத்தைப்} பல்குனன் {அர்ஜுனன்} கொண்டிருந்தான். வைஷ்ணவ வில்லை நகுலன் கொண்டிருந்தான், அஸ்வினம் என்றழைக்கப்படும் வில்லைச் சகாதேவன் கொண்டிருந்தான்.
பௌலஸ்தியம் என்றழைக்கப்படும் பயங்கரமான தெய்வீக வில்லைக் கடோத்கசன் கொண்டிருந்தான்.
திரௌபதியின் மகன்கள் ஐவரால் கொள்ளப்பட்ட விற்களில் ரத்தினங்களான ஐந்து விற்களும் முறையே, ரௌத்ரம் {ருத்திரன்}, ஆக்னேயம் {அக்னி}, கௌபேரயம் {குபேரன்}, யமயம் {யமன்}, கிரிசம் {கிரிசன்} என்று அழைக்கப்பட்டன. ரௌத்ரம் என்று அழைக்கப்பட்டதும், விற்களில் சிறந்ததுமான அற்புதமான வில்லானது ரோஹிணியின் மகனால் {பலராமனால்} பெறப்பட்டது, பின்னவன் {பலராமன்}, உயர் ஆன்ம சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} மனநிறைவு கொண்டு அவனுக்கே {அபிமன்யுவுக்கே} அஃதை அளித்தான்.
துணிச்சல் மிக்க வீரர்களுக்குச் சொந்தமான இவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இன்னும் பல கொடிமரங்கள் அனைத்தும் அவர்களது எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பனவாகவே இருந்தன.
துரோணரால் தலைமைதாங்கப்பட்ட படையானது, எண்ணிக்கையில் ஒரு கோழையையேனும் கொள்ளாமல், ஓ! ஏகாதபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தைத் தடுக்கும் வகையில் ஒன்றாக உயர்ந்த எண்ணற்ற கொடிமரங்களுடன் இருந்ததைக் காண, ஓவியம் தீட்டும் துணியில் உள்ள படங்களைப் போலவே இருந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் துரோணரை நோக்கி விரையும் துணிச்சல் மிக்க வீரர்களின் பெயர்களையும், அவர்களது வம்சாவளியையும் {கோத்திரங்களையும்}, ஒரு சுயம்வரத்தில் கேட்கப்படுவதைப் போலவே நாங்கள் அங்கே கேட்டோம் [2] [3].
[2] ஒரு போர்வீரன் மற்றொருவனைத் தாக்கும்போது, அப்படித் தாக்குவதற்கு முன்பாக அவனது பெயரையும், அவனது வம்சாவளியையும் சொல்ல வேண்டியது தவிர்க்க முடியாத சடங்காகும் என்று கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த இடத்திலேயே இந்தப் பகுதி {துரோண பர்வம் பகுதி 23} முடிந்து விடுகிறது.
[3] இதன்பிறகு கங்குலியில் இல்லாததும் வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் 24வது அத்தியாயமாகக் காணப்படுவதுமான வர்ணனை பின்வருமாறு:
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சஞ்சயா, விருகோதரனை {பீமனைத்} தலைமையாகக் கொண்டு போரிட வந்த இந்த மன்னர்கள் தேவர்களுடைய படையையும் துன்பமடையச் செய்வார்கள். மனிதன் அதிர்ஷ்டங்களுடன் கூடியவனாகப் பிறக்கிறான். அந்த அதிர்ஷ்டத்திலேயே பற்பலவிதமான எல்லாப் பயன்பாடுகளும் காணப்படுகின்றன. யுதிஷ்டிரன் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டு நீண்ட காலம் சடையும், மான்தோலும் தரித்து வனத்தில் திரிந்து கொண்டிருந்தான்; பின்பு உலகத்தாலறியப்படவும் இல்லை. அந்த யுதிஷ்டிரனே என் பிள்ளைகளின் அழிவின் பொருட்டுப் பெரிய படையையும் போர்க்களத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்துவிட்டான். இது தெய்வ செயலேயன்றி வேறென்ன?
மனிதன் புண்ணியத்தோடு சேர்ந்தே பிறக்கிறானென்பது நிச்சயம். அந்த மனிதன் தான் விரும்பாமலே அந்தப் புண்ணியத்தினால் இழுக்கப்படுகிறான். சூதாட்டமாகிய துயரத்தை அடைந்து யுதிஷ்டிரன் துன்பப்படுத்தப்பட்டானல்லவா? அந்த யுதிஷ்டிரனே மறுபடியும் அதிர்ஷ்டத்தினால் நண்பர்களைப் பெற்றான். ஓ! சூதா {சஞ்சயா}, முற்காலத்தில் புத்தியில்லாதவனான துரியோதனன் என்னை நோக்கி, “ஐயா, கேகயர்களிற்பாதியும், காசிகளில் பாதியும், கோசல நாட்டவரும், சேதி நாட்டவரில் பாதியும் இன்னும் மற்றுள்ள நாட்டவர்களும் என்னையே அடைந்துவிட்டனர். எனக்கு மிகுதியான பூமியிருக்கிறது. தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அவ்வளவு இல்லை” என்று சொன்னான். அந்தப் படையால் நன்றாகக் காக்கப்பட்ட துரோணர் போர்க்களத்தில் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார். அதிர்ஷ்டத்தைத் தவிர வேறென்ன இருக்கிறது.
பெரும் கைவன்மையுள்ளவரும், போரைக் கொண்டாடுபவரும், அஸ்திரவித்தைகளின் கரைகள் அனைத்தையும் கண்டவருமான துரோணரை மன்னர்களுக்கிடையில் எவ்விதமான எதிரி அடைந்தான்? மிகுந்த துயரத்தை அடைந்த நான் மிக்க மோசத்தை அடைந்தேன். பீஷ்மரும் துரோணரும் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கேட்டு நான் உயிரோடிருப்பதற்கு விரும்பவில்லை.
அப்பா! சூத! என்னை மகனிடம் பேராசையுள்ளவன் என்று நன்கு அறிந்த விதுரன் சொன்னவையெல்லாம் என்னாலும், துரியோதனனாலும் அடையப்பட்டன. அப்பா! கொடூரனான துரியோதனனை மட்டும் இழந்து மற்ற மகன்களை மிச்சமாக்க விரும்புவேனாகில் அனைவரும் மரணத்தை அடைய மாட்டார்கள். எந்த மனிதன் தர்மத்தைவிட்டுப் பொருளைப் பிரதானமாகக் கொள்வானோ அவன் இவ்வுலகத்தில் குறைவை அடைகிறான்; அற்பத்தன்மையையும் அடைகிறான்.
இப்போதும் அழிவடைந்த இந்த நாடு, துரோணர் கொல்லப்பட்டும் கூட மிகுந்திருக்கப் போவதாக நான் எண்ணவில்லை. பொறுமையுடையவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான எவர்களை எப்பொழுதும் அண்டிப் பிழைக்கிறோமோ அப்படிப்பட்ட பொறுப்புள்ள துரோணரும் பீஷ்மரும் காலம் சென்ற பிறகு, (நம்மவர்கள்) எவ்விதமாக மிகுந்திருப்பார்கள்? எவ்வாறு போர் நடந்ததென்பதை விளக்கமாகவே எனக்குச் சொல். எவர்கள் போரிட்டார்கள்? எவர்கள் தடுத்தனர்? எந்த அற்பர்கள் பயத்தால் ஓடினர்? வலிமைமிக்கத் தேர்வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} எதை எதைச் செய்தானோ அதை அதையும் எனக்குச் சொல். எதிரியாய் இருக்கும் அந்த அர்ஜுனனிடத்திலும் அந்த விருகோதரனிடத்திலும் {பீமனிடத்திலும்} நமக்கு அதிகப் பயமுண்டு. சஞ்சயா! பாண்டவர்கள் (போரிடத்} திரும்பியவந்தவுடன் மிகுந்திருக்கிற என்னுடைய படையை மிகவும் பயங்கரமாகக் கேடு எவ்விதம் விளைந்ததோ அதையும் எனக்குச் சொல். அப்பா, அப்பொழுது (பகைவர்கள்) திரும்பி வந்திருக்கும் காலத்தில் உங்களுடைய மனம் எவ்விதமிருந்தது? நம்மைச் சேர்ந்தவர்களுள் வீரர்களான எவர்கள், அங்கே அவர்களை எதிர்த்தனர்” என்றான் {திருதராஷ்டிரன்}.
{இதுவரை ஓர் அத்தியாயமாகவும் {24ம் அத்தியாயமாகவும்}, அடுத்து வருவது மற்றொரு அத்தியாயமாகவும் {25ம் அத்தியாயமாகவும்} வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் உள்ளது}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “பாண்டவர்கள் போருக்குத் திரும்பி வந்தவுடன், மேகங்களால் சூரியன் மறைக்கப்படுவது போல அந்தப் பாண்டவ வீரர்களால் துரோணர் மறைக்கப்படுவது கண்டு எங்களுக்குப் பெரிய அச்சமுண்டாயிற்று. மேலும், அவர்களால் மேலே எழுப்பிவிடப்பட்ட அதிகமான தூசியானது உம்முடைய படையை மறைத்துவிட்டது. பிறகு, பார்வையானது தடைப்பட்ட பொழுது துரோணரை மாண்டவராகவே நாங்கள் எண்ணினோம். கொடூரமான காரியத்தைச் செய்ய எண்ணங்கொண்டவர்களும், பெரிய வில்லையுடையவர்களும், வீரர்களுமான அந்தப் பாண்டவ வீரர்களைக் கண்டு துரியோதனன், “மன்னர்களே, நீங்கள் உங்களுடைய ஆற்றலுக்கும், ஊக்கத்துக்கும், ஆண்மைக்கும் தக்கபடி, பாண்டவர்களுடைய சேனையைத் தகுந்த உபாயத்தோடு தடுத்து யுத்தம் செய்யுங்கள்” என்று சொல்லி விரைவாகத் தன் படையை ஏவினான்.
பிறகு, உம்முடைய குமாரனான துர்மர்ஷணன், தூரத்தில் பீமசேனனைக் கண்டு துரோணருடைய உயிரைக் காப்பாற்ற விரும்பியவனாக (அவன் மீது) அம்புகளை இறைத்துக் கொண்டு எதிர்த்து வந்து போர்க்களத்தில் யமன் போலக் கோபங்கொண்டு அம்புகளாலே அவனையும் {பீமனையும்} மூடினான். அந்தத் துர்மர்ஷணனையும் பீமன் அம்புகளால் துன்பமடையும்படி செய்தான். அப்போது கைகலந்த பெரிய போர் நடந்தது. கற்றறிந்தவர்களும் அடிக்கும் திறமையுள்ளவர்களுமான அந்தச் சூரர்கள் அரசனான துரியோதனனால் கட்டளையிடப்பட்டு நாட்டையும், மரணப் பயத்தையும் விட்டுப் போர்க்களத்தில் எதிரிகளை எதிர்த்து நின்றனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மனாவன், துரோணரை எதிர்க்க எண்ணங்கொண்டு வருகின்றவனும், போரில் பிரகாசிப்பவனும், சினியின் பேரனுமான சாத்யகியைத் தடுத்தான். கோபங்கொண்டவனும், சினியின் பேரனுமான சாத்யகி, கோபங்கொண்ட அந்தக் கிருதவர்மனை கணைமாரியால் தடுத்தான். மதங்கொண்ட யானை மதங்கொண்ட யானையை எதிர்ப்பது போல, கிருதவர்மனும் சாத்யகியை எதிர்த்தான்.
பயங்கரமான வில்லையுடைய சிந்து மன்னனான ஜெயத்ரதன், முயற்சியுள்ளவனாக வருகின்ற மகாவில்லாளியான க்ஷத்ரவர்மனைக் கூர்மையான அம்புகளாலே துரோணரிடத்தில் செல்லவொட்டாமல் தடுத்தான். க்ஷத்ரவர்மனோ, சிந்துக்களின் மன்னுடைய {ஜெயத்ரதனுடைய} கொடியையும், வில்லையும் அறுத்துக் கோபங்கொண்டு பத்துக் கணைகளாலே உயிர்நிலைகள் அனைத்தையும் அடித்தான். பிறகு அந்தச் சைந்தவன் {ஜெயத்ரதன்} கைத்தேர்ச்சியுள்ளவன் போல வேறு வில்லை எடுத்துப் போர்க்களத்தில் முழுவதும் இரும்பினாற் செய்த அம்புகளாலே க்ஷத்ரவர்மாவை அடித்தான்
பாண்டவர்களின் நன்மைக்காக முயற்சி செய்பவனும், பெரும் தேர்வீரனும், பரதக் குலத்தில் தோன்றியவனும், வீரனுமான யுயுத்சுவை, சுபாகு முயற்சியோடு துரோணரிடத்தினின்று தடுத்தான். யுயுத்சு, பிரயோகம் செய்கின்ற சுபாகுவின் வில்லோடும், அம்புகளோடுக் கூடியவைகளும் பரிகாயுதம் போன்றவைகளுமான இரண்டு கைகளையும் அராவித் துவைந்தவைகளான இரண்டு பாணங்களால் வெட்டினான்.
பாண்டவர்களுள் சிறந்தவனும், தர்மாத்மாவுமான மன்னன் யுதிஷ்டிரனை மத்ர மன்னன் சல்லியன், பொங்கிவரும் பெருங்கடலைக் கரை தடுப்பது போலத் தடுத்தான். யுதிஷ்டிரனோ உயிர்நிலைகளைப் பிளக்கின்ற பல கணைகளை அவன் மீது இறைத்தான். மத்ர மன்னனானவன் அறுபத்து நான்கு {64} கணைகளால் அந்தத் தர்மனின் மகனை அடித்து அதிகமாகச் சிம்மநாதம் செய்தான். பாண்டவர்களுள் மூத்தவனான யுதிஷ்டிரன் அடிக்கடி சிம்மநாதம் செய்யும் மத்ர நாட்டு மன்னனின் {சல்லியனின்} கொடிமரத்தையும், வில்லையும் இரண்டு கணைகளே அறுத்தான். பிறகு மக்கள் பேரொலி எழுப்பினர்.
அவ்வாறே, பாஹ்லிக நாட்டு மன்னன், படையோடு சேர்ந்து, படையோடு கூடி ஓடி வரும் மன்னன் துருபதனை அம்புகளால் தடுத்தான். படையை உடையவர்களும், வயதில் முதிர்ந்தவர்களுமான அவ்விருவருக்கும் மதப்பெருக்குள்ளவைகளும் பெரிய யூதபதிகளுமான இரண்டு யானைகளுக்கு யுத்தம் நேருவது போலக் கோரமான அவ்வித யுத்தம் நடந்தது" என்று இருக்கிறது. இதன் பிறகு அடியில் உள்ள செய்திகளே 25ம் அத்தியாயமாக அவற்றில் தொடர்கின்றன.
பிறகு அரசனான துருபதன், ஒரு வலிமைமிக்கப் படைப்பிரிவின் தலைமையில் இருந்த அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். தங்கள் தங்கள் படைகளின் தலைமையில் இருந்த அந்த இரண்டு கிழவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது, இரண்டு யானைக்கூட்டங்களில் உள்ள மதப்பெருக்குடைய வலிமைமிக்கத் தலைமையானைகள் இரண்டுக்கு இடையில் ஏற்படும் மோதலைப் போலப் பயங்கரமாக இருந்தது.
அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், பழங்காலத்தில் இந்திரனும், அக்னியும், (அசுரன்) பலியுடன் மோதியதைப் போலத் தன் படைகளுக்குத் தலைமையில் இருந்த மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் விராடனுடன் மோதினர். குதிரைகளும், தேர்வீரர்களும், யானைகளும் மிகவும் அச்சமற்ற வகையில் ஈடுபட்ட மோதலான மத்ஸ்யர்களுக்கும், கேகயர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கர மோதல், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பானதாக இருந்தது.
நகுலனின் மகனான சதானீகன் கணைமாரியை இறைத்தபடி முன்னேறியபோது, சபாபதி என்றும் அழைக்கப்பட்ட பூதகர்மன் {!} [4] துரோணரிடம் இருந்து அவனை {சதானீகனை} விலக்கியே வைத்தான். பிறகு அந்த நகுலனின் வாரிசானவன் {சதானீகன்}, பெரும் கூர்மையுள்ள மூன்று பல்லங்களால் அந்தப் போரில் பூதகர்மனின் இரு கரங்களையும் அவனது தலையையும் இழக்கச் செய்தான்.
[4] இவன் யார் என்பது தெரியவில்லை. இவனது பெயர் வேறு எங்கும் காணப்படவில்லை.
பெரும் ஆற்றலைக் கொண்ட {பீமனின் மகன்} சுதசோமன் கணைகளின் மாரியை இறைத்தபடி துரோணரை நோக்கி முன்னேறியபோது, விவிம்சதி அவனைத் தடுத்தான். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட சுதசோமன், தனது சிற்றப்பன் விவிம்சதியை நேரான கணைகளால் துளைத்து, கவசம் பூண்டு மோதலுக்குத் தயாராக நின்றான்.
(துரியோதனனின் தம்பியான) பீமரதன், முழுவதும் இரும்பாலான மிக வேகமான ஆறு கூரிய கணைகளால் சால்வனை {!} [5] அவனது குதிரைகளோடும், தேரோட்டியோடும் யமனுலகு அனுப்பிவைத்தான்.
[5] கிருஷ்ணனுக்கு எதிரியான சால்வன் மகாபாரதப் போருக்கும் முன்பே, அதாவது வன பர்வத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே கிருஷ்ணனால் கொல்லப்பட்டான். இது வேறு சால்வனாக இருக்க வேண்டும்.
{துரியோதனனின் தம்பி} சித்திரசேனனின் மகன் [6], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மயில்களைப் போலத் தெரிந்த குதிரைகளால் தாங்கப்பட்ட உமது பேரன் சுருதகர்மனை எதிர்த்தான். போரில் வீழ்ப்பட்ட கடினமானவர்களான உமது பேரர்கள் இருவரும், தங்கள் தங்கள் தந்தையரின் நோக்கங்களின் வெற்றிக்காக ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி தீவிரமாகப் போரிட்டனர்.
[6] இங்கே உமது மகன் சித்திரசேனன் என இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வேறொரு பதிப்பில் அப்படியே இருக்கிறது.
[6] இங்கே உமது மகன் சித்திரசேனன் என இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வேறொரு பதிப்பில் அப்படியே இருக்கிறது.
அந்தப் பயங்கரப்போரில் முன்னணியில் நின்று கொண்டிருந்த பிரதிவிந்தியனைக் கண்ட துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), தன் தந்தையின் கௌரவத்தைக் காக்க விரும்பி, முன்னவனை {பிரதிவிந்தியனைத்} தன் கணைகளால் தடுத்தான். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட பிரதிவிந்தியன், சிங்க வால் கொடியைச் சுமந்த கொடிமரத்தைக் கொண்டவனும், தன் தந்தைக்காகப் போரிடுபவனுமான அஸ்வத்தாமனைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். திரௌபதியின் (மூத்த) மகன் {பிரதிவிந்தியன்}, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, விதைக்கும் காலத்தில் மண்ணில் விதைகளைத் தூவும் உழவனைப் போலத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது கணைகளின் மாரியை இறைத்தான்.
துச்சாசனனின் மகன் {துர்மர்ஷனன்}, வலிமைமிக்கத் தேர்வீரனும், திரௌபதியின் மூலமான அர்ஜுனன் மகனுமான சுருதகீர்த்தித் துரோணரை நோக்கி விரைந்த போது, பின்னவனை {சுருதகீர்த்தியைத்} தடுத்தான். எனினும் அர்ஜுனனுக்கே இணையானவனான அந்த அர்ஜுனன் மகன் {சுருதகீர்த்தி}, பெரும் கூர்மை கொண்ட பல்லங்கள் மூன்றினால் முன்னவனின் {துச்சாசனன் மகனின்} வில், கொடிமரம் மற்றும் தேரோட்டியை வெட்டி துரோணரை எதிர்த்து விரைந்தான்.
துரியோதனனின் மகன் லக்ஷ்மணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரண்டு படைகளாலும் துணிச்சல் மிக்கோரில் துணிச்சல்மிக்கவன் என்று கருதப்பட்ட படச்சரர்களைக் கொன்றவனைத் {!} [7] தடுத்தான். எனினும், பின்னவன், லக்ஷ்மணனின் வில் மற்றும் கொடி மரம் ஆகிய இரண்டையும் அறுத்து, அவன் மீது கணைகள் பலவற்றைப் பொழிந்து காந்தியுடன் சுடர்விட்டான்.
[7] இதற்கு முந்தைய பகுதியிலும் {துரோண பர்வம் பகுதி 23அ} இவனைக் குறித்த குறிப்பொன்று உண்டு, அதிலும் இவனது பெயர் இல்லை. ஒருவேளை இது அபிமன்யுவைக் குறிப்பதாக இருக்கலாம். படச்சரர்கள் என்பதற்குத் திருடர்கள் என்ற பொருளும் உண்டு. அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
பெரும் விவேகியான இளமைநிறைந்த விகர்ணன், அந்தப் போரில் யக்ஞசேனனின் {துருபதனின்} இளமை நிறைந்த மகன் சிகண்டி முன்னேறிய போது பின்னவனை {சிகண்டியைத்} தடுத்தான். யக்ஞசேனன் மகனோ கணைகளின் மழையால் முன்னவனை {விகர்ணனை} மறைத்தான்.
{துரியோதனன் தம்பியான} அங்கதன், அந்தப் போரில் துரோணரை நோக்கி விரைந்த {பாஞ்சால} வீரன் உத்தமௌஜஸ்சை கணைமாரியால் தடுத்தான். மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கிடையில் நடந்த மோதலானது அச்சம்நிறைந்ததாக இருந்தது, அது {அம்மோதல்} அவ்விருவரையும், துருப்புகளையும் பேரார்வத்தால் நிரப்பியது.
பெரும் வில்லாளியும், பெரும் வலிமைகொண்டவனுமான {துரியோதனன் தம்பி} துர்முகன், துரோணரை நோக்கிப் புருஜித் {குந்திபோஜன்} முன்னேறியபோது, தன் கணைகளால் பின்னவனை {புருஜித்தைத்} தடுத்தான். புருஜித் ஒரு நாராசத்தால் {நீண்ட கணையால்} துர்முகனை அவனது புருவங்களுக்கு இடையில் தாக்கினான். அதன்பேரில், துர்முகனின் முகமானது தண்டுடன் கூடிய தாமரையைப் போல அழகாகத் தெரிந்தது.
கர்ணன், சிவப்புக் கொடிமரங்களைக் கொண்டோரும், துரோணரை நோக்கிச் சென்றோருமான, கேகயச் சகோதரர்கள் ஐவரைத் தன் கணைகளின் மாரியால் தடுத்தான். கர்ணனின் கணை மாரியால் எரிக்கப்பட்ட அந்த ஐந்து சகோதரர்களும் தங்கள் கணைகளால் கர்ணனை மறைத்தனர். பதிலுக்குக் கர்ணனோ கணை மாரியால் அவர்களை மீண்டும் மீண்டும் மறைத்தான். கணைகளால் மறைக்கப்பட்ட கர்ணனோ, அந்த ஐந்து சகோதரர்களோ அவர்களது குதிரைகள், தேரோட்டிகள், கொடிமரங்கள் மற்றும் தேர்கள் ஆகியவையோ காணப்படவில்லை {கணைகளால் மறைக்கப்பட்டதால் கண்களுக்குப் புலனாகவில்லை}.
உமது மகன்களான துர்ஜயன், ஜயன் மற்றும் விஜயன் ஆகியோர், {மகிஷ்மதியின் ஆட்சியாளன்} நீலன், காசிகளின் ஆட்சியாளன் {அபிபூ}, {மகத மன்னன்} ஜெயத்சேனன் ஆகிய மூவரை எதிர்த்துத் தடுத்தனர். அந்த வீரர்களுக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்து, சிங்கம், புலி மற்றும் ஓநாய் ஒருபுறத்திலும், கரடி, எருமைக்கடா, காளை ஆகியன மறுபுறத்திலும் இருந்து போரிட்டது போலப் பார்ப்பவர்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டின.
சகோதரர்களான க்ஷேமதூர்த்தி மற்றும் பிருஹந்தன் ஆகியோர், துரோணரை எதிர்த்துச் சாத்வத குலத்தின் சாத்யகி சென்ற போது, தங்கள் கூரிய கணைகளால் பின்னவனை {சாத்யகியைச்} சிதைத்தனர். அவர்கள் இருவர் ஒரு புறத்திலும், சாத்யகி மறுபுறத்திலும் நின்று அவர்களுக்குள் நடைபெற்ற போரானது காட்டில் ஒரு சிங்கத்திற்கும், இரண்டு வலிமைமிக்க யானைகளுக்கும் இடையில் நடைபெறும் மோதலைப் போலக் காண்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.
கோபத்தால் தூண்டப்பட்டவனும், பல வீரர்களைத் துளைத்துக் கொண்டிருந்தவனுமான சேதிகளின் மன்னனை {திருஷ்டகேதுவை}, போரில் எப்போதும் மகிழ்பவனான மன்னன் அம்பஷ்டன் துரோணரிடம் இருந்து விலக்கி வைத்தான். பிறகு மன்னன் அம்பஷ்டன், எலும்புகளையே ஊடுருவவல்ல ஒரு நீண்ட கணையால் தன் எதிராளியை {திருஷ்டகேதுவைத்} துளைத்தான். அதன் பேரில் பின்னவன் {திருஷ்டகேது}, வில் மற்றும் கணையில் இருந்த தன் பிடி தளரத் தன் தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.
சரத்வானின் மகனான உன்னதமான கிருபர், (போரில்) கோபத்தின் வடிவமான விருஷ்ணி குலத்தின் வார்த்தக்ஷேமியை குறுங்கணைகள் பலவற்றால் அடித்தார். போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்த வீரர்களான கிருபரும் வார்த்தக்ஷேமியும் ஒருவரோடொருவர் மோதிக்கொள்வதைக் கண்டவர்கள் அதிலேயே தங்கள் கவனம் குவிந்ததால் வேறு எதையும் கவனிக்க முடியாதவர்கள் ஆனார்கள்.
துரோணரின் மகிமையை மேம்படுத்துபவனான சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் சுறுசுறுப்புடைய மன்னன் மணிமான் போரிட வந்த போது பின்னவனை {மணிமானைத்} தடுத்தான். பிறகு மணிமான், அந்தச் சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவசின்} நாண்கயிறு, கொடிமரம், கொடி, தேரோட்டி, குடை ஆகியவற்றை அறுத்து, அவற்றைப் பின்னவனின் {பூரிஸ்ரவசின்} தேரில் இருந்து விழச் செய்தான். தன் கொடிமரத்தில் வேள்விப்பீடக் கொடியைக் கொண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, தன் தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்துத் தன் பெரும் வாள்களைக் கொண்டு தன் எதிராளியின் {மணிமானின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேரை வெட்டி வீழ்த்தினான். பிறகு தன் தேரில் மீண்டும் ஏறிய அவன் {பூரிஸ்ரவஸ்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன் குதிரைகளைத் தானே செலுத்திக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்தப் பாண்டவப் படையை எரிக்கத் தொடங்கினான்.
சாதிக்கத் தகுதிவாய்ந்த (கர்ணனின் மகன்) விருஷசேனன், அசுரர்களை அடிக்க அவர்களைப் பின்தொடரும் இந்திரனைப் போலப் போரிட விரையும் மன்னன் பாண்டவனை {?} [8] கணைகளின் மழையால் தடுத்தான்.
[8] இங்கு ஏதோ அச்சுப் பிழையாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் King Pandava என்றே இருக்கிறது. வேறொரு பதிப்பில் பாண்டியன் என்று இருக்கிறது. எனவே இது பாண்டிய மன்னன் சாரங்கத்வஜனைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.
கதாயுதங்கள், பரிகங்கள், வாள்கள், கோடரிகள், கற்கள், குறுந்தடிகள், உலக்கைகள், சக்கரங்கள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, போர்க்கோடரிகள் [9] ஆகியவற்றையும், புழுதி, காற்று, நெருப்பு, நீர், சாம்பல், செங்கற்கட்டிகள், வைக்கோல், மரங்கள் ஆகியவற்றையும் கொண்டு பீடித்து, அடித்து, உடைத்து, கொன்று, எதிரியை முறியடித்து, பகையணிகளின் மீது அவற்றை {மேற்கண்ட ஆயுதங்கள்} வீசிக் கொண்டும், அவர்களை அச்சுறுத்திக் கொண்டும், துரோணரைப் பிடிக்கும் விருப்பத்தோடு அங்கே கடோத்கசன் வந்தான். எனினும், சினத்தால் தூண்டப்பட்ட ராட்சசன் அலம்புசன், பல்வேறு ஆயுதங்களாலும், பல்வேறு போர்க்கருவிகளாலும் அவனை {கடோத்கசனை} எதிர்கொண்டான். ராட்சசர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் நடந்த போரானது பழங்காலத்தில் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.
[9] வேறொரு பதிப்பில் இவ்வாயுதங்கள், "கதாயுதங்கள், பரிகங்கள், நிஸ்த்ரிம்சங்கள், பட்டசங்கள், அயோகனங்கள், கற்கள், தடிகள், புசுண்டிகள், பிராசங்கள், தோமரங்கள், அம்புகள், முசலங்கள், முத்கரங்கள், சக்கரங்கள், பிண்டிபாலங்கள், கோடாலிகள்" எனக் குறிக்கப்படுகின்றன.
நீர் அருளப்பட்டிருப்பீராக, இப்படியே அந்தப் பயங்கரப் போருக்கு மத்தியில் உமது படையைச் சேர்ந்த தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோருக்கும் அவர்களுடையவர்களுக்கும் இடையில் நூற்றுக்கணக்கான தனிப்போர்கள் நடந்தன. துரோணரை அழிப்பது, {துரோணரை} பாதுகாப்பது என்பதைக் குறியாகக் கொண்ட அந்த வீரர்களுக்கு இடையில் அப்போது நடந்த இது போன்ற ஒரு போரானது, உண்மையில், அதற்கு முன்னர்ப் பார்க்கப்பட்டதோ, கேள்விப்படப்பட்டதோ கிடையாது. உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, களத்தின் பகுதிகள் அனைத்திலும் காணப்பட்ட மோதல்கள் பலவாகும், அவற்றில் சில பயங்கரமானதாகவும், சில அழகானதாகவும், சில மிகக் கடுமையானதாகவும் இருந்தன” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |