Bhagadatta slained! | Drona-Parva-Section-027 | Mahabharata In Tamil
(சம்சப்தகவத பர்வம் – 08)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனைத் தாக்கிய பகதத்தன்; சுப்ரதீகத்தின் கவசத்தைப் பிளந்த அர்ஜுனன்; வைஷ்ணவாஸ்திரத்தை ஏவிய பகதத்தன்; அர்ஜுனனை மறைத்து வைஷ்ணவாஸ்திரத்தை மார்பில் தாங்கிய கிருஷ்ணன்; அந்த ஆயுதம் பகதத்தனுக்குக் கிடைத்த வரலாற்றைச் சொன்ன கிருஷ்ணன்; சுப்ரதீகத்தைக் கொன்ற அர்ஜுனன்; பகதத்தனைக் கொன்ற அர்ஜுனன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சினத்தால் தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் பார்த்தன் {அர்ஜுனன்}, பகதத்தனை என்ன செய்தான்? அதே போல, பிராக்ஜோதிஷர்களின் மன்னனும் {பகதத்தனும்} பார்த்தனை என்ன செய்தான்? ஓ! சஞ்சயா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனிடம் இப்படிப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள் காலனின் கோரப் பற்களுக்கிடையே இருப்பதாகவே உயிரினங்கள் அனைத்தும் கருதின. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் யானையின் கழுத்தில் இருந்த பகதத்தன், தங்கள் தேரில் இருந்த கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவர் மீதும் கணைகளின் மாரியை இறைத்தான்.
கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், முழுவதும் இரும்பாலானவையும், முழுவதும் வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகள் பலவற்றால் அவன் {பகதத்தன்}, தேவகியின் மைந்தனை {கிருஷ்ணனைத்} துளைத்தான். நெருப்பின் தீண்டலைக் கொண்டவையும், அழகிய இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பகதத்தனால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் தேவகியின் மகனை {கிருஷ்ணனை} ஊடுருவி பூமிக்குள் நுழைந்தன.
அப்போது, பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தப் பகதத்தனின் வில்லை அறுத்து, அடுத்ததாக அவனது யானையைப் பக்கத்தில் இருந்து {விலாப்புறத்தில்} பாதுகாத்த வீரனையும் கொன்று, ஏதோ விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல அவனோடு {பகதத்தனோடு} போரிட்டான். பிறகு பகதத்தன், சூரியக் கதிர்களைப் போன்று பிரகாசித்தவையும், கூர்முனை கொண்டவையுமான பதினான்கு வேல்களை அவன் {அர்ஜுனன்} மீது ஏவினான். எனினும், அர்ஜுனன் அந்த வேல்கள் ஒவ்வொன்றையும் மூன்று {மூன்று மூன்று} துண்டுகளாக வெட்டிப் போட்டான்.
பிறகு அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, அடர்த்தியான கணைமாரியின் மூலம் அந்த யானையின் கவசத்தைப் பிளந்து தளர்த்தினான். இப்படி வெட்டப்பட்ட அந்தக் கவசம் கீழே பூமியில் விழுந்தது. கவசம் பிளக்கப்பட்ட அந்த யானை {சுப்ரதீகம்}, அர்ஜுனன் ஏவிய கணைகளால் அதீதமாகப் பீடிக்கப்பட்டு, மார்பில் பாயும் நீர்க்கோடுகளுடன், மேகங்கள் எனும் ஆடையை இழந்த மலைகளின் இளவரசனைப் போலத் தெரிந்தது [1].
[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “சிதறிய கவசத்தையுடைய அந்த யானையானது, அம்புகளால் மிகவும் பீடிக்கப்பட்டு, வர்ஷதாரையினால் நனைக்கப்பட்டும், மேகமில்லாமலும் இருக்கிற பர்வத ராஜனைப் போல விளங்கியது” என்றிருக்கிறது.
பிறகு பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் முழுதும் இரும்பாலானதுமான ஈட்டி ஒன்றை வாசுதேவன் மீது ஏவினான். அந்த ஈட்டியை அர்ஜுனன் இரண்டாக வெட்டினான். பிறகு அந்த மன்னனின் {பகதத்தனின்} கொடிமரத்தையும், குடையையும் தன் கணைகளால் அறுத்த அர்ஜுனன், சிரித்துக் கொண்டே விரைவாக அந்த மலைப்பகுதிகளின் ஆட்சியாளனை {[பர்வதேசுவரன்] பகதத்தனைப்} பத்து கணைகளால் துளைத்தான். கங்கப்பறவையின் இறகுகளாலான அழகிய சிறகுகளைக் கொண்ட அர்ஜுனனின் அந்தக் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட பகதத்தன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} அதிகக் கோபம் கொண்டான்.
பிறகு அவன் {பகதத்தன்}, அர்ஜுனன் மீது சில வேல்களை ஏவிவிட்டு உரக்கக் கர்ஜித்தான். அந்த வேல்களின் விளைவால் அர்ஜுனனின் கிரீடம் {பின்புறமாகத்} திருப்பப்பட்டது. தன் கிரீடத்தைச் சரியாகப் பொருத்திய அர்ஜுனன், அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனிடம் {பகதத்தனிடம்}, “இந்த உலகத்தை நன்றாகப் பார்த்துக் கொள்” என்றான். அவனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட பகதத்தன் சினத்தால் நிறைந்து, பிரகாசமான வில்லொன்றை எடுத்து, அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்} மற்றும் கோவிந்தன் {கிருஷ்ணன்} ஆகிய இருவர் மீதும் தன் கணைமாரியைப் பொழிந்தான்.
பிறகு அவனது {பகதத்தனின்} வில்லையும், அம்பறாத்தூணிகளையும் வெட்டிய பார்த்தன் {அர்ஜுனன்}, எழுபத்திரண்டு கணைகளால் விரைவாக அவனைத் தாக்கி, {அவற்றால்} அவனது முக்கிய அங்கங்களைப் பீடிக்கச் செய்தான். இப்படித் துளைக்கப்பட்ட அவன் {பகதத்தன்} அதீதமான வலியை உணர்ந்தான். சினத்தால் நிறைந்த அவன் {பகதத்தன்}, தன் அங்குசத்தை மந்திரங்களால் வைஷ்ணவ ஆயுதமாக மாற்றி, அதை அர்ஜுனன் மார்பின் மீது ஏவினான் [2]. கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனை மறைத்துக் கொண்டு, பகதத்தனால் ஏவப்பட்ட அந்த அனைத்தையும் கொல்லும் ஆயுதத்தை {வைஷ்ணவாஸ்திரத்தைத்} தன் மார்பிலே ஏற்றான். அதன் பேரில் அந்த ஆயுதமானது கேசவனின் {கிருஷ்ணனின்} மார்பில் வெற்றி மாலையாக விழுந்தது.
[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அடிக்கப்பட்டவனும், அதனால் அதிகமான துன்பத்தை அடைவிக்கப்பட்டவனுமான பகதத்தன் கோபம் மூண்டு வைஷ்ணவாஸ்திர மந்திரத்தை உச்சரித்து அங்குசத்தை அபிமந்திணஞ்செய்து பாண்டவனுடைய மார்பிலே பிரயோகித்தான்” என்றிருக்கிறது.
பிறகு உற்சாகமற்ற அர்ஜுனன், கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! பாவமற்றவனே, ஓ! தாமரைக்கண்ணா {கிருஷ்ணா}, போரிடாமல் என் குதிரைகளை மட்டுமே வழிநடத்தப் போவதாக நீ சொல்லியிருக்கிறாய். பிறகு, ஏன் நீ உன் வாக்குறுதியை மீறுகிறாய்? நான் துயரத்தில் மூழ்கினாலோ, கலங்கடிக்க முடியாதவனானாலோ, எதிரியைத் தடுக்கவோ, ஆயுதத்தைத் தடுக்கவோ முடியாதவனானாலோ, நீ அவ்வாறு செயல்படலாமே அன்றி நான் இப்படி நிற்கும்போதல்ல. வில்லுடனும், கணைகளுடனும் இருக்கும் நான், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகியவர்களுடன் கூடிய இந்த உலகங்களையே வெல்லத்தகுந்தவன் என்பதை நீ அறிவாயே” என்றான் {அர்ஜுனன்}.
அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பார்த்தா, ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இரகசியமும், பழைய வரலாறுமான இதை உள்ளபடியே கேட்பாயாக. உலகங்களைப் பாதுகாப்பதில் நித்தியமாக ஈடுபடும் எனக்கு நான்கு வடிவங்கள் இருக்கின்றன. என்னையே பிரித்துக் கொண்டு நான் உலகங்களுக்கு நன்மையைச் செய்கிறேன். பூமியில் தங்கி தவத்துறவுப் பயிற்சிகளில் ஈடுபடுவது எனது வடிவத்தில் {மூர்த்திகளில்} ஒன்றாகும் [3]. உலகத்தில் ஏற்படும் நல்ல மற்றும் தீயச் செயல்களை {சாட்சியாக இருந்து} காண்பது {காணும் வடிவம்} மற்றொன்றாகும். மனிதர்களில் உலகத்திற்கு வந்து செயலில் ஈடுபடுவது எனது மூன்றாவது வடிவமாகும் [4]. எனது நான்காவது வடிவம் ஆயிரம் வருடங்கள் உறங்கிக் கிடப்பதாகும் [5]. ஆயிர வருட முடிவில் உறக்கத்தில் இருந்து விழிக்கும் எனது வடிவம், அப்படி விழித்த உடனேயே தகுந்தோருக்கு சிறந்த வரங்களை அருள்கிறது.
[3] பதரி ஆசிரமத்தில் உள்ள நாராயணன். [4] ராமன், கிருஷ்ணன் முதலிய வடிவங்கள், [5] நீரில் சயன கோலத்தில் உள்ள விஷ்ணு என்பது பழைய உரை என வேறொரு பதிப்பில் காணப்படுகிறது
(ஒரு சமயத்தில்) காலம் வந்துவிட்டது என்பதை அறிந்த பூமாதேவி (அவளது மகன்) நரகனுக்காக என்னிடம் வரமொன்றைக் கேட்டாள். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்த வரம் யாது என்பதைக் கேட்பாயாக. “வைஷ்ணவ ஆயுதத்தை அடையும் எனது மகன் {நரகன்} தேவர்களாலும், அசுரர்களாலும் கொல்லத்தகாதவன் ஆக வேண்டும். அந்த ஆயுதத்தை எனக்கு அருள்வதே உமக்குத் தகும்” என்று கேட்டாள். பழங்காலத்தில் அவளது வேண்டுதலைக் கேட்ட நானும், தலைமையானதும், தவறிழைக்காததுமான {தவறாததுமான} வைஷ்ணவாயுதத்தைப் பூமியின் மகனுக்கு {நரகனுக்குக்} கொடுத்தேன். அந்த நேரத்தில் நான் இவ்வார்த்தைகளையும் சொன்னேன், “ஓ! பூமியே {பூமாதேவியே}, நரகனைப் பாதுகாப்பதில் இந்த ஆயுதம் தவறாததாக இருக்கட்டும். அவனை யாராலும் கொல்ல இயலாது. இந்த ஆயுதத்தால் பாதுகாக்கப்படும் உனது மகன் {நரகன்}, அனைத்து உலகங்களிலும் வெல்லப்பட முடியாதவனாக எப்போதும் இருந்து கொண்டு, எதிரிப்படைகள் அனைத்தையும் நசுக்குவான்” {என்றேன்}. தன் விருப்பம் ஈடேறிய அந்தப் புத்திசாலி தேவியும் {பூமாதேவியும்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிச் சென்றுவிட்டாள். நரகனும் வெல்லப்படமுடியாதவனாக, எப்போதும் தன் எதிரிகளை எரித்தான் [6].
[6] வேறொரு பதிப்பில் இதே பத்தி வேறு மாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு: “பிராணிகளைத் தரிப்பவளும், சர்வ பிராணிகளையும் போஷிப்பவளுமான பூதேவியானவள் காமமுடையவளா லோககர்த்தாவான ஸ்ரீமந்நாராயணரை அடைந்தாள். அந்தப் பகவான் அவளுடன் சேர்ந்து பிரீதியடைந்து அவளுக்கு வரத்தையும் கொடுக்க ஆரம்பித்தார். அந்தப் பூதேவி விஷ்ணு துல்யனான புத்திரனையும், வைஷ்ணவாஸ்திரத்தையும் வேண்டினாள். அந்தப் பூதேவிக்கு நரகன் என்று பிரசித்தனான ஒரு மகன் பிறந்தான். அந்த நரகனுக்கு நாராயணர் தாமாகவே வைஷ்ணவாஸ்திரத்தையும் கொடுத்தார். இவ்வாறு சர்வசத்ரு நாசகமான இந்த நாராயணாஸ்திரமானது நரகாசுரனுக்குக் கிடைத்திருந்தது” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே உள்ளது.
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்த நரகனிடம் இருந்தே இந்த எனது ஆயுதத்தைப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} அடைந்திருக்கிறான். ஓ! ஐயா {அர்ஜுனா}, இந்திரன், ருத்ரன் ஆகியோரையும் சேர்த்து இவ்வுலகில் இந்த ஆயுதத்தால் கொல்லத்தகாதவர் எவரும் இல்லை. எனவே, உனக்காகவே நான் என் வாக்குறுதியை மீறி அதைக் {வைஷ்ணவாஸ்திரத்தைக்} கலங்கடித்தேன். அந்தப் பெரும் அசுரன் {பகத்தன்} இப்போது அந்தத் தலைமையான ஆயுதத்தை இழந்திருக்கிறான். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, முன்பு, உலகங்களின் நன்மையைக் கருதி அசுரன் நரகனை நான் கொன்றது போலவே, தேவர்களுக்குப் பகைவனும், வெல்லப்பட முடியாத உனது எதிரியுமான பகதத்தனை இப்போது நீ கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.
உயர் ஆன்ம கேசவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கூராக்கப்பட்ட கணைகளாலான மேகத்தில் திடீரெனப் பகதத்தனை மூழ்கடித்தான். பிறகு, வலிமைமிக்கக் கரங்களையும், உயர் ஆன்மாவையும் கொண்ட அர்ஜுனன், தன் எதிரியின் யானையுடைய முன்நெற்றிக் கும்பங்களுக்கு இடையில் நாராசமொன்றை அச்சமற்றவகையில் அடித்தான். மலையைப் பிளக்கும் இடியைப் போல யானையைப் பிளந்த அந்தக் கணை, எறும்புப் புற்றுக்குள் ஊடுருவும் பாம்பைப் போல அதன் உடலில் ஊடருவி விலாப்புறம் வரை சென்றது. பகதத்தனால் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டாலும், ஓர் ஏழை மனிதனின் {தரித்திரனின்} மனைவியானவள், அவளது தலைவனுக்குக் கீழ்ப்படியாதது போலவே அந்த யானையும் கீழ்ப்படிய மறுத்தது. அங்கங்கள் செயலிழந்த அது {அந்த யானை}, தன் தந்தங்களால் பூமியை முட்டியபடி கீழே விழுந்தது. துன்பக்குரலில் அலறிய அந்தப் பெரும் யானை தன் ஆவியையும் விட்டது [7].
[7] வேறொரு பதிப்பில் இதற்பிறகும் ஒரு செய்தி இருக்கிறது. அது பின்வருமாறு: “பிறகு, கேசவன் {கிருஷ்ணன்}, காண்டீவத்தை வில்லாகக் கொண்ட அர்ஜுனனை நோக்கி, “பார்த்தா {அர்ஜுனா}, இவன் மேன்மைபெற்றவன்; நரையினால் நன்கு மூடப்பட்டவன்; மடித்த சதையினாலே நன்றாக மறைக்கப்பட்ட கண்களுள்ளவன்; எவ்விதத்தாலும் வெல்லப்பட முடியாதவன்; இவ்வரசன் கண்கள் திறந்திருப்பதற்காகப் பட்டுத் துணியால் (தூக்கிக்) கட்டிக் கொண்டிருக்கிறான்” என்று சொன்னான். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய வாக்யத்தைக் கேட்டு அம்பினாலே அந்தத் துணியை நன்றாக அறுத்தான். அஃது அறுக்கப்படவுடன், அந்தப் பகதத்தன் கண்கள் மறைக்கப்பட்டவனானான். பிரதாபசாலியான பகதத்தன் உலகத்தை இருள்மயமாக எண்ணினான்” என்று இருக்கிறது. இந்தச் செய்தி கங்குலியில் பதிப்பிலும் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இல்லை. இஃது அதிகபாடமாக இருக்க வேண்டும்.
பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் பிறைவடிவத் தலைக் கொண்ட நேரான கணை {அர்த்தச்சந்திரக் கணை} ஒன்றால் மன்னன் பகதத்தனின் மார்பைத் துளைத்தான். கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) தன் மார்பில் துளைக்கப்பட்ட மன்னன் பகதத்தன் உயிரை இழந்து தன் வில்லையும், கணைகளையும் நழுவவிட்டான். அவனுக்கு {பகதத்தனுக்குத்} தலைப்பாகையாக இருந்த மதிப்பு மிக்கத் துணியானது, தண்டைப் பலமாகத் தாக்கியதும், தாமரையில் இருந்து விழும் {தாமரை} இதழ் ஒன்றைப் போல அவனது தலையில் இருந்து தளர்ந்து விழுந்தது. பொன்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அவனும் {பகதத்தனும்}, மலர்ந்திருக்கும் கின்சுகமானது {பலாச மரமானது}, காற்றின் வேகத்தில் முறிந்து மலையின் உச்சியில் இருந்து விழுவதைப் போலத் தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பெரும் யானையில் இருந்து கீழே விழுந்தான். ஆற்றலில் இந்திரனுக்கு ஒப்பானவனும், இந்திரனின் நண்பனுமான அந்த ஏகாதிபதியை {பகதத்தனைக்} கொன்ற இந்திரனின் மகன், வலிமைமிக்கக் காற்றானது வரிசையான மரங்களை முறிப்பதைப் போல வெற்றியடையும் நம்பிக்கையில் இருந்து உமது படையின் பிற வீரர்களையும் பிளந்தான்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |