The boon by Mahadeva to Jayadratha! | Drona-Parva-Section-040 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 10)
பதிவின் சுருக்கம் : அபிமன்யுவைப் பின்தொடர்ந்து சென்ற பாண்டவ வீரர்கள்; பாண்டவர்களைத் தடுத்த ஜெயத்ரதன்; முற்காலத்தில் ஜெயத்ரதன் செய்த தவம்; ஜெயத்ரதனுக்கு வரமளித்த மகாதேவன்; முந்தைய வரத்தின் பலனாகப் பாண்டவர்களைப் போர்க்களத்தில் தடுத்த ஜெயத்ரதன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வயதால் வெறும் குழந்தையும் {பாலனும்}, பெரும் ஆடம்பரத்துடன் வளர்க்கப்பட்டவனும், தன் கரங்களின் வலிமையில் செருக்குடையவனும், போரில் சாதித்தவனும், பெரும் வீரம் கொண்டவனும், தன் குலத்தைத் தழைக்க வைப்பவனும், தன் உயிரைவிடத் தயாராக இருந்தவனுமான அந்த அபிமன்யு, உற்சாகமும் தீரமும் கொண்ட அவனது மூன்று வயது குதிரைகளால் சுமக்கப்பட்டுக் கௌரவப் படைக்குள் ஊடுருவிய போது, அந்த அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} யுதிஷ்டிரப் படையின் பெரும் தேர்வீரர்கள் எவரேனும் பின்தொடர்ந்து சென்றனரா?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "யுதிஷ்டிரன், பீமசேனன், சிகண்டி, சாத்யகி, இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவன், திருஷ்டத்யும்னன், விராடன், துருபதன், கேகயன்{ர்கள்}, திருஷ்டகேது ஆகியோர் அனைவரும், மத்ஸ்ய வீரர்களும் கோபத்தால் நிறைந்து போருக்கு விரைந்தனர். உண்மையில், எதிரிகளைத் தாக்குபவர்களான அபிமன்யுவின் தந்தைமாரும், தாய்மாமன்களும், அபிமன்யுவைக் காக்க விரும்பி, போருக்காக அணிவகுத்து, அவன் {அபிமன்யு, வியூகத்தைப் பிளந்து} உண்டாக்கிய அதே பாதையில் சென்றனர். அவ்வீரர்கள் விரைந்து வருவதைக் கண்ட உமது துருப்புகள் போரில் இருந்து பின்வாங்கின.
அப்போது, பெரும் சக்தி கொண்ட உமது மருமகன் {ஜெயத்ரதன்}, போரில் இருந்து உமது அந்தப் பெரும்படை திரும்புவதைக் கண்டு, அவர்களை அணிதிரட்டுவதற்காக விரைந்தான். உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனான மன்னன் ஜெயத்ரதன், தங்கள் மகனைக் காக்க விரும்பிய பார்த்தர்களையும், அவர்களைப் பின் தொடர்பவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினான். கடுமையானவனும், பெரும் வில்லாளியுமான அந்த விருத்தக்ஷத்திரன் மகன் {ஜெயத்ரதன்}, தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்து, பள்ளத்தாக்கில் விளையாடும் யானையைப் போலப் பாண்டவர்களைத் தடுத்தான்” {என்றான் சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சஞ்சயா, தங்கள் மகனைக் காக்க விரும்பிய கோபக்காரப் பாண்டவர்களைத் தனி ஒருவனாகத் தடுத்து நின்ற சிந்துக்களின் ஆட்சியாளன் மீது கனமான சுமை ஏற்றப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். சிந்துக்கள் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} வலிமையும், வீரமும் மிக அற்புதமானது என்று நான் நினைக்கிறேன். அந்த உயர் ஆன்ம வீரனின் ஆற்றலையும், அவன் அந்த முதன்மையான அருஞ்செயல்களை எப்படிச் சாதித்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக. அவன் {ஜெயத்ரதன்}, கோபத்தால் தூண்டப்பட்டிருந்த பாண்டவர்களைத் தடுப்பதில் வென்றது எதன் விளைவாக? அவன் என்ன தானங்களைச் செய்தான்? என்ன நீர்க்காணிக்கைகளை ஊற்றினான் {என்ன ஆகுதி செய்தான்}? என்ன வேள்விகளைச் செய்தான்? என்ன தவத்துறவுகளை மேற்கொண்டான்? [1]” என்று கேட்டான்.
[1] வேறொரு பதிப்பில் இவ்வரிகள், “பெரும் பலவானான அந்த ஜயத்ரதனுடைய வீர்யத்தையும், உத்தமமான செய்கையையும் எனக்கு நீ சொல்லு. அந்த ஜயத்ரதன் என்ன ஜபம், ஹோமம், அல்லது யாகம் செய்தான்? என்ன தவம் செய்தான்? உத்தமனே! ஐம்பொறி அடக்கலா? பிரம்மசர்யமா? அல்லது இவன் வேறு என்ன செய்தான்? விஷ்ணு, ஈசானர், பிரம்மா (இம்மூவருள்) எந்தத் தேவதையை ஆராதித்து, சிந்துராஜன், மகனிடம் பற்றுள்ளவர்களும், கோபமுள்ளவர்களுமான பார்த்தர்களைச் சிந்துராஜன் தடுத்தான்? அவர் ஒருவனாகவே இருந்து கொண்டு பாண்டவர்களைத் தடுத்தது போன்ற பெரிய காரியமானது, பீஷ்மராலும் அவ்வாறு செய்யப்படவில்லை; நான் அறிவேன்” என்று திருதராஷ்டிரன் கேட்பதாக இருக்கிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஜெயத்ரதன், திரௌபதியை அவமதித்த நிகழ்வின் போது, பீமசேனனால் அவன் வீழ்த்தப்பட்டான். தான் பட்ட அவமானத்தை ஆழமாக உணர்ந்த அந்த மன்னன் {ஜெயத்ரதன்}, ஒரு வரத்தை விரும்பி கடும் தவத்தைச் செய்தான். புலன்களுக்கு விருப்பமான பொருட்களில் இருந்து அவற்றை {புலன்களை} விலக்கி, பசி, தாகம் மற்றும் வெப்பத்தைத் தாங்கிக் கொண்ட அவன் {ஜெயத்ரதன்}, புடைக்கும் நரம்புகள் தெரியும்வண்ணம் தன் உடலைக் குறைத்தான். வேதங்களின் அழியாத வார்த்தைகளை உச்சரித்த அவன் {ஜெயத்ரதன்}, தெய்வமான மகாதேவனுக்கு {சிவனுக்குத்} தன் வழிபாட்டைச் செலுத்தினான். தன்னை வழிபடுவோரிடம் {தன் பக்தர்களிடம்} எப்போதும் கருணை கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, இறுதியாக அவனிடம் {ஜெயத்ரதனிடம்} அன்புகூர்ந்தான்.
உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} கனவில் தோன்றிய ஹரன் {சிவன்}, அவனிடம் {ஜெயத்ரதனிடம்}, “நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ! ஜெயத்ரதா, நான் உன்னிடம் மனம்நிறைந்தேன். நீ எதை விரும்புகிறாய்?” என்று கேட்டான். மஹாதேவனால் {சிவனால்} இப்படிக் கேட்கப்பட்ட சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், கூப்பிய கரங்களுடனும், ஒடுங்கிய ஆன்மாவுடனும் அவனை {சிவனைப்} பணிந்து, “தனித்தேரில் ஒருவனாக இருக்கும் நான், பயங்கர சக்தியும் ஆற்றலும் கொண்ட பாண்டு மகன்கள் அனைவரையும் போரில் தடுக்க வேண்டும்” என்று கேட்டான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அவன் கேட்ட வரம் இதுவேயாகும்.
இப்படி வேண்டப்பட்டதும், ஜெயத்ரதனிடம் அந்த முதன்மையான தேவன் {சிவன்}, “ஓ! இனியவனே, நான் {அந்த} வரத்தை அளிக்கிறேன். பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர, பாண்டுவின் மற்ற நான்கு மகன்களையும் போரில் நீ தடுப்பாய் [2]” என்றான். “அப்படியே ஆகட்டும்” என்று தேவர்களின் தலைவனிடம் {சிவனிடம்} சொன்ன ஜெயத்ரதன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிறகு தன் குறைத்தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தான்.
இப்படி வேண்டப்பட்டதும், ஜெயத்ரதனிடம் அந்த முதன்மையான தேவன் {சிவன்}, “ஓ! இனியவனே, நான் {அந்த} வரத்தை அளிக்கிறேன். பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர, பாண்டுவின் மற்ற நான்கு மகன்களையும் போரில் நீ தடுப்பாய் [2]” என்றான். “அப்படியே ஆகட்டும்” என்று தேவர்களின் தலைவனிடம் {சிவனிடம்} சொன்ன ஜெயத்ரதன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிறகு தன் குறைத்தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தான்.
[2] வேறொரு பதிப்பில் இவ்வரிகள், “சௌம்ய, பிருதையின் மகனான தனஞ்சயனைத் தவிர மற்ற பாண்டவர்கள் நார்வரையும் போரில் ஒரு தினம் நீ தடுப்பாய்; இந்த வரத்தை உனக்கு யான் கொடுக்கிறேன்” என்று இருக்கிறது. ஒரு தினம் என்ற வார்த்தை கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இல்லை.
தான் பெற்ற வரம் மற்றும் தன் தெய்வீக ஆயுதங்களின் பலம் ஆகியவற்றின் விளைவாக, அந்த ஜெயத்ரதன், தனியொருவனாகவே, பாண்டவர்களின் மொத்தப்படையையும் தடுத்து நிறுத்தினான். அவனது நாண்கயிற்றின் நாணொலியும், உள்ளங்கைகளின் தட்டொலியும் {தலத்வனியும்} பகைவரின் படையில் அச்சத்தைத் தோற்றுவித்த அதே வேளையில், உமது துருப்புகளை மகிழ்ச்சியில் நிறைத்தன. சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஏற்றுக் கொண்ட சுமையைக் கண்ட (குரு படையின்) க்ஷத்திரியர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தில் யுதிஷ்டிரனின் படை இருந்த இடத்திற்கு உரத்த ஆரவாரத்துடன் விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |