The melancholy of Yudhishthira! | Drona-Parva-Section-071 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 41)
பதிவின் சுருக்கம் : நாரதரின் விளக்கத்தால் நிறைவடைந்த சிருஞ்சயன்; சிருஞ்சயன் மகனை உயிர்மீட்டளித்த நாரதர்; அபிமன்யுவின் நற்கதியைச் சொல்லி அவனை மீட்க முடியாது என யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; தனஞ்செயனை நினைத்து வருந்திய யுதிஷ்டிரன்…
வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "(கேட்பவரின்) வாழ்நாளை அதிகரிக்க வல்லவையான இந்தப் பதினாறு {16} மன்னர்களின் புனிதமான வரலாற்றைக் கேட்ட பிறகு, மன்னன் சிருஞ்சயன் எதையும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறப்புமிக்க முனிவரான நாரதர், இப்படி அமைதியாக அமர்ந்திருந்த அவனிடம் {சிருஞ்சயனிடம்}, "ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {சிருஞ்சயா}, என்னால் உரைக்கப்பட்ட வரலாறுகளைக் கேட்டாயா? அவற்றின் கருத்துகளை நீ புரிந்து கொண்டாயா? அல்லது சூத்திர மனைவியைக் கொண்ட மறுபிறப்பாளர் {பிராமணர்} ஒருவரால் செய்யப்பட்ட சிராத்தம் போல அவை அனைத்தும் தொலைந்தனவா?" என்று கேட்டார் {நாரதர்}.
இப்படிச் சொல்லப்பட்ட சிருஞ்சயன் கூப்பிய கரங்களுடன் {நாரதரிடம்}, "ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {நாரதரே}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கிப் பெரும் வேள்விகளைச் செய்திருக்கும் பழங்காலத்தின் இந்த அரச முனிகள் அனைவரின் புகழத்தக்க அற்புதமான வரலாறுகளையும் கேட்டுச் சூரியனின் கதிர்களால் விலகிய இருளைப் போல என் துன்பமனைத்தும் அற்புதமான வகையில் மறைந்தன. நான் இப்போது என் பாவங்களனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தேன், இப்போது நான் எந்த வலியையும் உணரவில்லை {துன்பமடையவில்லை}. நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று {நாரதரிடம்} பதிலுரைத்தான் {சிருஞ்சயன்}.
நாரதர் {சிருஞ்சயனிடம்}, "உன் துன்பம் விலகியது நற்பேறாலேயே. நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. நீ கேட்கும் அனைத்தையும் நீ அடைவாய். உண்மையற்ற எதையும் நாம் சொல்வதில்லை" என்றார்.
சிருஞ்சயன் {நாரதரிடம்}, "ஓ! புனிதமானவரே {நாரதரே}, நீர் என்னிடம் நிறைவுடன் இருக்கிறீர் என்பதிலேயே நான் மகிழ்கிறேன் {நிறைவடைகிறேன்}. ஓ! புனிதமானவரே, நீர் எவனுடன் நிறைவுடன் இருக்கிறீரோ, அவனால் இங்கே அடையமுடியாதது எதுவுமில்லை" என்றான்.
நாரதர் {சிருஞ்சயனிடம்}, "வேள்வியில் கொல்லப்படும் விலங்கைப் போலக் கள்வர்களால் வீணாகக் கொல்லப்பட்ட உன் மகனைக் {சுவர்ணஷ்டீவினைக்} கடினமான நரகத்தில் இருந்து மீட்டு மீண்டும் உனக்குத் தருகிறேன்" என்று சொன்னார்.
சிருஞ்சயன் {நாரதரிடம்}, "ஓ! புனிதமானவரே {நாரதரே}, நீர் என்னிடம் நிறைவுடன் இருக்கிறீர் என்பதிலேயே நான் மகிழ்கிறேன் {நிறைவடைகிறேன்}. ஓ! புனிதமானவரே, நீர் எவனுடன் நிறைவுடன் இருக்கிறீரோ, அவனால் இங்கே அடையமுடியாதது எதுவுமில்லை" என்றான்.
நாரதர் {சிருஞ்சயனிடம்}, "வேள்வியில் கொல்லப்படும் விலங்கைப் போலக் கள்வர்களால் வீணாகக் கொல்லப்பட்ட உன் மகனைக் {சுவர்ணஷ்டீவினைக்} கடினமான நரகத்தில் இருந்து மீட்டு மீண்டும் உனக்குத் தருகிறேன்" என்று சொன்னார்.
வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பிறகு, (துயரில் வாடும் தந்தையிடம் {சிருஞ்சயனிடம்}) மனம் நிறைந்த முனிவரால் {நாரதரால்} அளிக்கப்பட்ட பிள்ளையான அந்தச் சிருஞ்சயன் மகன் {சுவர்ணஷ்டீவின்} அற்புதமான காந்தி கொண்டவனாக, குபேரனின் மகனுக்கு ஒப்பானவனுமாகத் தோன்றினான். மன்னன் சிருஞ்சயன் மீண்டும் தன் மகனைச் சந்தித்ததால் மிகவும் மகிழ்ந்தான். மேலும் அவன் புண்ணியத்தைத் தரும் பல வேள்விகளைச் செய்து அந்த வேள்விகளின் முடிவில் அபரிமிதமான வேள்விக் கொடைகளைத் தானமளித்தான்.
அந்தச் சிருஞ்சயன் மகன் {சுவர்ணஷ்டீவின்} தான் பிறந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை. அவன் எந்த வேள்வியையும் செய்யவில்லை, மேலும் அவனுக்குப் பிள்ளையும் இல்லை. துணிச்சலற்ற நிலையில், போரில் அல்லாமல் இரங்கத்தக்க வகையில் அவன் அழிந்தான். இதன் காரணமாகவே அவனை மீண்டும் உயிரோடு கொண்டு வர முடிந்தது. அபிமன்யுவைப் பொறுத்தவரை அவன் துணிச்சல்மிக்கவனாகவும், வீரம் நிறைந்தவனாகவும் இருந்தான். தன் வாழ்வின் நோக்கங்களை நிறைவு செய்த அந்தச் சுபத்திரையின் துணிச்சல் மிக்க மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளை ஆயிரக்கணக்கில் சிதறடித்து, போர்க்களத்தில் விழுந்து இந்த உலகத்தைவிட்டுச் சென்றான் [1].
[1] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, "புருஷார்த்தங்களை இழந்தவனும், பயப்படுகிறவனும், யுத்தஸன்னாஹத்தை அறியாதவனும், யாகஞ்செய்யாதவனும், குழந்தையில்லாதவனுமான அந்தச் சிருஞ்சய குமாரன் அவரால் திரும்பவும் பிழைத்தான். சூரனும், வீரனும் கிருதார்த்தனுமான அபிமன்யுவோ ஆயிரக்கணக்கான சத்துருக்களைக் கொன்று யுத்தரங்கத்தில் முன்புறத்தில் அடிக்கப்பட்டுச் சுவர்க்கத்தை அடைந்தான்" என்று இருக்கிறது
{வேறு எதனாலும்} அடைவதற்கரியதும், பிரம்மச்சரியம், ஞானம், சாத்திர அறிவு, முதன்மையான வேள்விகள் ஆகியவற்றால் அடையத்தக்கதுமான உலகங்களை உன் மகன் {அபிமன்யு} அடைந்தான். தங்கள் அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தை அடையவே எப்போதும் அறிவாளிகள் விரும்புவர். சொர்க்கத்தில் வாழ்பவர்கள் இந்த உலகத்தை விரும்ப மாட்டார்கள். எனவே, விரும்பிய எந்தப் பொருளும் அர்ஜுனன் மகனால் {அபிமன்யுவால்} அடையப்படாமல் இல்லை ஆகையால், போரில் கொல்லப்பட்டு இப்போது சொர்க்கத்தில் வசித்து வரும் அவனை {அபிமன்யுவை} மீண்டும் உலகத்திற்குக் கொண்டு வர முடியாது.
கண்களை மூடி ஆழமான சிந்தனையில் உள்ள யோகியரோ, பெரும் வேள்விகளைச் செய்தவர்களோ, பெரும் தவத்தகுதியைக் கொண்டோரோ அடையும் நிலையான இலக்கை உன் மகன் {அபிமன்யு} அடைந்துவிட்டான். மரணத்திற்குப் பிறகு புது உடலை அடைந்த அந்த வீரன் {அபிமன்யு}, அழியாத கதிர்களால் ஆன தன்னொளியுடன் ஒரு மன்னனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். உண்மையில், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவராலும் விரும்பப்படுவதும் சந்திரனின் சாரம் கொண்டதுமான தன் சொந்த உடலையே அபிமன்யு மீண்டும் அடைந்திருக்கிறான். உன் துயரத்திற்கு அவன் தகுந்தவனல்ல. இஃதை அறிந்து, அமைதியடைந்து உன் எதிரிகளைக் கொல்வாயாக. மனோபலம் உனதாகட்டும்.
ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கே நமது துயரம் தேவைப்படுகிறது, சொர்க்கத்தை அடைந்தவர்களுக்கு அது தேவைப்படாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வாழ்ந்து கொண்டிருப்போர் எவனுக்காக {இறந்து போன யாருக்காக} வருந்துகிறார்களோ, அவனது பாவங்கள் அதிகரிக்கின்றன. எனவே, விவேகியான ஒருவன், வருந்துவதைக் கைவிட்டு, (இறந்து போனவரின்) நன்மைக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன், (இறந்தவனின்) இன்பம், மகிமை மற்றும் மகிழ்ச்சியைக் குறித்தே சிந்திக்க வேண்டும். இஃதை அறிந்த ஞானியர், துயரம் வலி மிகுந்தது என்பதால் துயருறுவதில் ஈடுபடுவதில்லை. இஃதை உண்மையென அறிந்து கொண்டு எழுவாயாக! (உன் நோக்கத்தை அடைய) முயற்சிப்பாயாக! வருந்தாதே.
மரணத்தின் {மரணதேவியின்} தோற்றத்தையும், அவளது ஒப்பற்ற நோன்புகளையும், அனைத்து உயிர்களிடமும் அவள் கொண்ட பாரபட்சமற்ற நடத்தையை நீ கேட்டாய். செழிப்பு நிலையில்லாதது என்பதை நீ கேட்டாய். சிருஞ்சயனின் இறந்த போன மகன் {சுவர்ணஷ்டீவின்} மீட்கப்பட்டான் என்பதையும் நீ கேட்டாய். ஓ! கல்விமானான மன்னா {யுதிஷ்டிரா}, வருந்தாதே. அமைதி உனதாகட்டும். நான் செல்கிறேன்!" என்று சொன்ன அந்தப் புனிதமான வியாசர், அங்கேயே அப்போதே மறைந்து போனார்.
பேச்சின் தலைவரும், மேகமூண்ட ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டவரும், புத்திமான்களுள் முதன்மையானவரும், புனிதமானவருமான அந்த வியாசர் சென்றதும், யுதிஷ்டிரன், அறவழிகளில் செல்வத்தை அடைந்தவர்களும், சக்தியில் பெரும் இந்திரனுக்கே நிகரானவர்களுமான பழங்காலத்தின் பெரும் ஏகாதிபதிகளான இவர்கள் அனைவரின் வேள்வித்தகுதி மற்றும் செழிப்பைக் கேட்டதன் விளைவாக ஆறுதலை அடைந்து, அந்த ஒப்பற்ற மனிதர்களை மனப்பூர்வமாகப் பாராட்டி துன்பத்தில் இருந்து விடுபட்டான். எனினும், துக்கம் நிறைந்த இதயத்தோடு கூடிய அவன் {யுதிஷ்டிரன்}, "தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} என்ன சொல்லப் போகிறோம்?" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்" {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.
******************அபிமன்யுவத பர்வம் முற்றும்******************
ஆங்கிலத்தில் | In English |