Arjuna Vanquished Duryodhana! | Drona-Parva-Section-102 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 18)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் தாக்கிய துரியோதனன்; அர்ஜுனனின் கணைகள் துரியோதனனின் கவசத்தைத் துளைக்காதது; அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; துரியோதனன் மீது தெய்வீகக் கணைகளை அர்ஜுனன் ஏவவும் அதை வெட்டிய அஸ்வத்தாமன்; துரியோதனனைத் தேரிழந்தவனாக்கி அந்தக் கூட்டத்தில் இருந்து கிருஷ்ணனும் அர்ஜுனனும் வெளிப்பட்டது; அவர்களைக் கண்டு கோபம் கொண்ட ஜெயத்ரதனின் பாதுகாவலர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இந்த வார்த்தைகளைச் சொன்ன மன்னன் துரியோதனன், பெரும் வேகம் கொண்டவையும், உயிர்நிலைகளையே ஊடுருவவல்லவையுமான மூன்று கணைகளால் அர்ஜுனனைத் துளைத்தான். மேலும் நான்கைக் கொண்டு {நான்கு கணைகளால்} தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் துளைத்தான். மேலும் அவன் {துரியோதனன்} வாசுதேவனின் {கிருஷ்ணனின்} நடுமார்பைப் பத்து கணைகளால் துளைத்து, ஒரு பல்லத்தைக் [1] கொண்டு பின்னவனின் {கிருஷ்ணனின்} கையிலிருந்த சாட்டையைத் தரையில் வீழ்த்தினான். நிதானமாக இருந்த பார்த்தன் {அர்ஜுனன்}, ஒருக்கணத்தையும் இழக்காமல், கல்லில் கூராக்கப்பட்டவையும், அழகிய இறகுகளைக் கொண்டவையுமான பதினான்கு கணைகளை அவன் {துரியோதனன்} மீது ஏவினான். எனினும், அந்தக் கணைகள் அனைத்தையும், துரியோதனனின் கவசம் தடுத்து நிறுத்தியது. அவை கனியற்று {பலனற்றுப்} போனதைக் கண்ட பார்த்தன் கூர்முனை கொண்ட பதினான்கு கணைகளை மீண்டும் அவன் {துரியோதனன்} மீது ஏவினான். இவையும் துரியோதனனின் கவசத்தால் தடுக்கப்பட்டன.
[1] வேறொரு பதிப்பில் துரியோதனன் அர்த்தச்சந்திர பாணத்தால் கிருஷ்ணன் கையிலிருந்த சவுக்கைத் தரையில் வீழ்த்தியதாக இருக்கிறது.
பகை வீரர்களைக் கொல்பவனான அந்தக் கிருஷ்ணன் இருபத்தெட்டு கணைகளும் பலனற்றுப் போனதைக் கண்டு, அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "மலைகள் அசைவதைப் போல இதற்கு முன் காணாத ஒரு காட்சியை நான் காண்கிறேன். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் ஏவப்படும் கணைகள் பலனற்றுப் போகின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, உன் காண்டீவம் சக்தியை இழந்துவிட்டதா? உனது {கைப்} பிடியின் வலிமையும், உனது கரங்களின் பலமும் எப்போதையும் விடக் குறைந்துவிட்டதா? இது துரியோதனனுடனான இறுதிச் சந்திப்பாக ஆகாதா? ஓ! பார்த்தா, நான் உன்னிடம் கேட்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பார்த்தா, ஒரு சிறு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் துரியோதனனின் தேர் முன்பு விழும் உன் கணைகள் அனைத்தையும் கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்படுகிறேன். ஐயோ, இடியின் வலிமையைக் கொண்டவையும், எதிரிகளின் உடல்களை எப்போதும் துளைப்பவையுமான இந்த உன் பயங்கரக் கணைகள் அனைத்தும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தத் தவறுகின்றன என்றால் என்ன பேறின்மையாக {துரதிர்ஷ்டமாக} இஃது இருக்கும்?" {என்றான் கிருஷ்ணன்}.
அர்ஜுனன், "ஓ! கிருஷ்ணா, துரியோதனன் உடலில் உள்ள இந்தக் கவசம் துரோணரால் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இது போலப் பூட்டப்பட்டிருக்கும் கவசத்தை என் ஆயுதங்களால் ஊடுருவ முடியாது. ஓ! கிருஷ்ணா, இந்தக் கவசத்தில், மூன்று உலகங்களின் வலிமையும் உட்பொதிந்திருக்கிறது {மறைந்திருக்கிறது}. இதைத் துரோணர் மட்டுமே அறிவார், மனிதர்களில் சிறந்த அவரிடம் இருந்தே நானும் அதைக் கற்றேன். இந்தக் கவசமானது என் ஆயுதங்களால் துளைக்கப்படக்கூடியதல்ல. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, மகவத்தாலேயே {இந்திரனாலேயே} தன் இடியைக் {வஜ்ரத்தைக்} கொண்டு இதைப் பிளந்துவிட முடியாது. ஓ! கிருஷ்ணா, இவை அனைத்தையும் அறிந்தவனான நீ, என்னை ஏன் குழப்ப முயல்கிறாய்? ஓ! கேசவா {கிருஷ்ணா}, மூவுலகங்களிலும் நேர்ந்தவை, {அவற்றில்} இப்போது இருப்பவை, எதிர்காலத்தின் கருவறையில் இருப்பவை ஆகிய அனைத்தையும் நீ அறிவாய். உண்மையில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இவற்றை உன்னைவிடச் சிறப்பாக அறிந்தவன் வேறு எவனும் இல்லை.
ஓ! கிருஷ்ணா, துரோணரால் பூட்டப்பட்ட கவசத்துடன் இருக்கும் இந்தத் துரியோதனன், இந்தக் கவசத்தை அணிந்திருப்பதாலேயே போரில் அச்சமற்றவனாக நிற்கிறான். எனினும், ஓ! மாதவா, இந்தக் கவசத்தை அணிந்தவன் என்ன செய்ய வேண்டும் என்பதை இவன் அறியவில்லை. ஒரு பெண்ணைப் போலவே இவன் அஃதை அணிந்திருக்கிறான். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, என் கரங்களின் வலிமையையும், என் வில்லின் வலிமையையும் இப்போது பார். அத்தகு கவசத்தால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் குரு இளவரசனை {துரியோதனனை} நான் வெல்வேன்.
தேவர்களின் தலைவர் {பிரம்மன்}, இந்தப் பிரகாசமிக்கக் கவசத்தை அங்கிரசுக்குக் கொடுத்தார். பின்னவரிடம் இருந்து பிருஹஸ்பதி அதை அடைந்தார். பிருஹஸ்பதியிடமிருந்து அதைப் புரந்தரன் {இந்திரன்} அடைந்தான் [2]. தேவர்களின் தலைவன், அஃதை அணியும்போது சொல்லப்பட்ட வேண்டிய மந்திரங்களுடன் என்னிடம் கொடுத்தான். பிரம்மரால் உண்டாக்கப்பட்ட இந்தக் கவசம் தெய்வீகமானதாக இருந்தாலும், என் கணைகளால் தாக்கப்படும் இந்த இழிந்த துரியோதனன் அதனால் {அந்தக் கவசத்தால்} பாதுகாக்கப்படமாட்டான்" என்றான் {அர்ஜுனன்}.
[2] துரோண பர்வம் பகுதி 93ல் துரோணரால் சொல்லப்படும் கவச வரலாறும், இங்கே அர்ஜுனனால் சொல்லப்படும் வரலாறும் மாறுபடுகிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன் {மானவாயுத} மந்திரங்களால் சில கணைகளை ஊக்கப்படுத்தி அவற்றைத் தனது வில்லின் நாணில் பொருத்தி {வில்லை} வளைக்கத் தொடங்கினான். அப்படி அவன் {அர்ஜுனன்} வில்லின் நாணை இழுத்த போது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அனைத்து ஆயுதங்களையும் கலங்கடிக்கவல்ல ஓர் ஆயுதத்தால் அவற்றை வெட்டினான் [3]. பிரம்மத்தை உச்சரிப்பவனால் (அஸ்வத்தாமனால்} அந்தக் கணைகள் தொலைவிலிருந்து இப்படிச் செயலிழக்கச் செய்யப்பட்டதைக் கண்டவனும், வெண்ணிறக் குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், ஆச்சரியத்தால் நிறைந்து, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} "ஓ! ஜனார்த்தனா, இந்த ஆயுதத்தை இருமுறை என்னால் பயன்படுத்த முடியாது, ஏனெனில், என்னையும், என் துருப்புகளையுமே அது கொல்லும்" என்றான்.
[3] வேறொரு பதிப்பில், "கௌரவிக்கத்தக்க அர்ஜுனன் இவ்வாறு சொல்லிவிட்டுத் தீக்ஷ்ணமான கவசத்தையுடைக்கும் தன்மையுள்ள (மனுவைத் தேவதையாகக் கொண்ட) மானவாஸ்திரத்தினாலே பாணங்களை அபிமந்திரணம் பண்ணி நாண்கயிற்றில் வைத்து இழுத்தான். அர்ஜுனனாலே இழுக்கப்படுகின்றவையும் வில்லினடுவை அடைந்திருக்கின்றவையுமான அந்த அர்ஜுனனுடைய பாணங்களைத் துரோணபுத்திரர் எல்லா அஸ்திரங்களையும் அழிக்குந்தன்மையுள்ள ஓர் அஸ்திரத்தினால் அறுத்தார்" என்றிருக்கிறது.
வில்லி பாரதத்தில் இப்படியிருக்கிறது.
வீரன்விட்டன சரங்களவனொண்கவச மேலுறப்படுதலின்றி விழுகின்றநிலை,யோரிமைப்பினிலறிந்து குமரன்கையயிலோ டுரைக்கவுவமம் பெறுவிடங்கொளயி,றேரினிற்பொலிய நின்றிருகைகொண்டு நனிசீறிமெய்ப்பட வெறிந்தனனெறிந்தளவில்,வார்சிலைக்குருவின்மைந்தனது கண்டதனை வாளியிற்றுணிபடும் படி மலைந்தனனே. - வில்லி 13:42:85
பொருள் : சிறந்தவீரனான அர்ஜுனன் தொடுத்த கணைகள், துரியோதனனது ஒளியுள்ள கவசத்தின்மேல் உட்செல்லும்படி தாக்கிக் கீழ்விழும் நிலையை, ஒரு நொடிப் பொழுதிலே அறிந்து, முருகனின் கையிலுள்ள வேலாயுதத்துக்கு ஒப்பானதும், சிறப்புடையதும், விஷத்தைப் போன்றதுமான ஒரு வேலாயுதத்தைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்து தனது தேரிலே நின்று கொண்டு, துரியோதனன் மேல் மிகக்கோபித்து, அவனது உடலைத் தைக்கும்படி வீசினான். அப்படி வீசும்போது, நீண்ட வில்லுக்கு ஆசிரியனான துரோணரின் மகன் அசுவத்தாமன் அதைக் கண்டு, அவ்வேலைத் தனது அம்புகளினால் துண்டாகும்படி மலைக்கச் செய்தான்.
அதே வேளையில் துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, அந்தப் போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான ஒன்பது கணைகளால் அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} ஒவ்வொருவரையும் துளைத்தான். மேலும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தனது கணைகளைக் கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது மழையாகப் பொழிந்தான். (தங்கள் மன்னனால் ஏவப்பட்ட) கணைமாரியைக் கண்ட உமது வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அவர்கள் இசைக்கருவிகளை இசைத்து, சிங்க முழக்கங்களைச் செய்தனர்.
அப்போது அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தான். தன் கண்களைத் தன் எதிரியின் உடல் மீது செலுத்தியும், அந்த ஊடுருவப்பட முடியாத கவசத்தில் நன்கு மறைக்கப்படாத எந்த ஒரு பகுதியையும் அவன் காணவில்லை. பிறகு, மரணத்திற்கு ஒப்பானவையும் கூர்முனை கொண்டவையுமான சில கணைகளைத் தன் வில்லில் இருந்து நன்கு ஏவிய அர்ஜுனன், தன் எதிராளியின் {துரியோதனனின்} குதிரைகளையும், அதற்கடுத்த அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான். அதன் பிறகு வீரப் பார்த்தன், துரியோதனனின் வில்லையும், அவனது விரல்களில் உள்ள தோலுறைகளையும் அறுத்தான். பிறகு அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் எதிரியின் தேரைத் துண்டு துண்டாக வெட்டத் தொடங்கினான். மேலும் அவன் {அர்ஜுனன்}, கூரிய கணைகள் இரண்டால் துரியோதனனைத் தேரற்றவனாக்கினான். பிறகு அர்ஜனன், அந்தக் குருமன்னனின் உள்ளங்கைகள் இரண்டையும் துளைத்தான்.
அந்தப் பெரும் வில்லாளியானவன் {துரியோதனன்}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டுப் பெரும் துயரில் விழுவதைக் கண்ட வீரர்கள் பலர், அவனை மீட்க விரும்பி அந்த இடத்திற்கு விரைந்தனர். பல்லாயிரம் தேர்கள், ஆயுதங்களுடன் கூடிய யானைகள் மற்றும் குதிரைகள், கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான காலாட்படை வீரர்கள் எனப் பெரும் கூட்டத்தால் சூழப்பட்டதால், அவர்களின் தேரோ, அர்ஜுனன் மற்றும் கோவிந்தன் {கிருஷ்ணன்} ஆகியோர் இருந்த தேரோ அதற்கு மேலும் காணப்படவில்லை.
அப்போது அர்ஜுனன், தன் ஆயுதங்களின் வலிமையால் அந்தக் கூட்டத்தைக் கொல்லத் தொடங்கினான். நூற்றுக்கணக்கான தேர்வீரர்களும், யானைகளும் அங்கங்களை இழந்து களத்தில் வெகு விரைவாக விழுந்தனர். கொல்லப்பட்டோ, கொல்லப்படுவதாலோ அந்தச் சிறந்த தேரை அடைய அவர்கள் தவறினர். உண்மையில், அர்ஜுனன் சென்ற தேரானது, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இரண்டு மைல்கள் நீளத்திற்குப் படைகளால் முற்றுகையிடப்பட்டதால் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த விருஷ்ணி வீரன் (கிருஷ்ணன்), நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "நான் என் சங்கை முழக்கப் போகிறேன்; நீ விரைவாக உனது வில்லைப் பெரும்பலத்துடன் வளைப்பாயாக" {என்றான் கிருஷ்ணன்}. அப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனன் தன் வில்லான காண்டீவத்தைப் பெரும்பலத்துடன் வளைத்து, தன் விரல்களால் வில்லின் நாணை இழுத்து பேரோலியை உண்டாக்கி, அடர்த்தியான கணை மழைகளைப் பொழிந்து எதிரிகளைக் கொல்லத் தொடங்கினான். அதேவேளையில், புழுதியால் முகம் மறைக்கப்பட்டிருந்த கேசவன் {கிருஷ்ணன்}, தன் சங்கான பாஞ்சஜன்யத்தைப் பேரொலியுடன் மிகப் பலமாக முழக்கினான். பலமாகவோ, பலவீனமாகவோ இருந்த குருவீரர்கள் அனைவரும், அந்தச் சங்கொலியாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் கீழே தரையில் விழுந்தனர்.
அந்த மோதலில் இருந்து விடுபட்ட அர்ஜுனனின் தேரானது, காற்றால் இயக்கப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. ஜெயத்ரதனின் பாதுகாவலர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும் (அர்ஜுனனைக் கண்டு) சினத்தால் நிறைந்தனர். உண்மையில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பவர்களான அந்த வலிமைமிக்க வில்லாளிகள், பார்த்தனைத் திடீரெனக் கண்டதால், பேரொலியை எழுப்பி அவ்வொலியால் பூமியை நிறைத்தனர். அவர்களது கணைகளின் "விஸ்" என்ற ஒலி கடும் ஒலிகள் பிறவற்றோடும், அவர்களது சங்கொலிகளோடும் கலந்து ஒலித்தன. மேலும் அந்த உயர் ஆன்ம வீரர்கள் சிங்க முழக்கங்களையும் செய்தனர்.
உமது துருப்புகளால் எழுப்பப்பட்ட பயங்கர ஆரவாரத்தைக் கேட்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் சங்குகளை முழக்கினர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலைகள், கடல்கள், தீவுகள், பாதாள உலகங்கள் ஆகியவற்றைக் கொண்ட பூமாதேவி அவர்களது (சங்குகளின்) பேரொலியால் நிறைந்ததாகக் காணப்பட்டது. உண்மையில், ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலியானது திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, இருபடைகளிலும் எதிரொலித்தது. பிறகு, கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் கண்ட உமது தேர்வீரர்கள் மிகவும் அச்சமடைந்தனர். எனினும் விரைவாக மீண்ட அவர்கள் தங்கள் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். உண்மையில், உமது படையின் பெரும் தேர்வீரர்கள், மிகவும் அருளப்பட்ட மனிதர்களான அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} கண்டு, கவசம் பூண்டவர்களான அவர்கள் விரைந்தனர். இப்படி முன்வந்த காட்சி மிகவும் அற்புதமான ஒன்றாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |