The wrath of Bhima! | Asramavasika-Parva-Section-11 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : பீஷ்மர் முதலியோருக்குச் சிராத்தஞ்செய்யப் பொருள் வேண்டிய திருதராஷ்டிரன்; கொடுக்க மறுத்த பீமன்; அர்ஜுனன் கொடுக்க வேண்டும் என்று சொன்னது; அர்ஜுனனை மெச்சிய யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் கோபமாகப் பேசிய பீமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த இரவு கடந்ததும், அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு விதுரனை அனுப்பினான்.(1) பெருஞ்சக்தி கொண்டவனும், நுண்ணறிவு பெற்ற மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான விதுரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு வந்து, மனிதர்களில் முதன்மையானவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த மன்னனிடம், இந்தச் சொற்களில்,(2) "மன்னர் திருதராஷ்டிரர், காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய தொடக்கச் சடங்குகளைச் செய்ய வேண்டும். ஓ! மன்னா, கார்த்திகை மாதம் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் அவர் {திருதராஷ்டிரர்} காட்டுக்குப் புறப்பட இருக்கிறார்[1].(3) ஓ! குருக்களில் முதன்மையானவனே, அவர் உன்னிடம் இருந்து சிறிது செல்வத்தை வேண்டுகிறார். உயர் ஆன்ம கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, துரோணர், சோமதத்தன், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பாஹ்லீகர், கொல்லப்பட்ட அவருடைய அனைத்து மகன்கள் மற்றும் நலன்விரும்பிகள், தீய ஆன்மா கொண்டவனும், இழிந்தவனுமான சிந்துக்களின் ஆட்சியாளனுக்கும் {ஜெயத்ரதனுக்கும்} சிராத்தம் செய்ய விரும்புகிறார்" என்றான்.(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "திருதராஷ்டிர மஹாராஜர் வனவாஸத்திற்காகத் தீக்ஷை பெற்றிருக்கிறார். வரப்போகிற இந்தக் கார்த்திகியில் அரண்யம் செல்லப் போகிறார்" என்றிருக்கிறது. கார்த்திகி என்பதன் அடிக்குறிப்பில், "க்ருத்திகா நக்ஷத்ரம் சேர்ந்த பூர்ணிமை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்னன் கார்த்தி மாத முழு நிலவு நாளில் காட்டுக்குச் செல்லப் போகிறார்" என்றிருக்கிறது. கார்த்திகை என்பதன் அடிக்குறிப்பில், "அக்டோபர்-நவம்பர்" என்றிருக்கிறது.
விதுரனின் இந்தச் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன் மற்றும் சுருள்முடி கொண்டவனான அர்ஜுனன் ஆகிய இருவரும் அவற்றை உயர்வாக மெச்சினர்.(6) எனினும், பெருஞ்சக்தி கொண்டவனும், தணிக்க இயலாத கோபத்தைக் கொண்டவனுமான பீமன், துரியோதனனின் செயல்களை நினைவுகூர்ந்தவனாக விதுரனின் அந்தச் சொற்களை நல்லூக்கத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை. கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, பீமசேனனின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, சற்றே தன் தலையைக் கீழே தொங்கப்போட்டவாறு, மனிதர்களில் முதன்மையானவனான அவனிடம் இந்தச் சொற்களில் பேசினான்: "ஓ! பீமரே, வயதில் முதிர்ந்தவரான நமது அரசத் தந்தை காட்டுக்கு ஓய்ந்து செல்லத் தீர்மானித்திருக்கிறார்.(7-9) கொல்லப்பட்டவர்களான தமது உற்றார் உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மறுமையில் அடையும் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்காக அவர் கொடையளிக்க விரும்புகிறார். ஓ! குருகுலத்தைச் சார்ந்தவரே, உம்மால் வெல்லப்பட்டு உமக்குரியதாக இருக்கும் செல்வதை அவர் கொடையளிக்க விரும்புகிறார்.(10)
உண்மையில், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அந்த முதிர்ந்த மன்னர் பீஷ்மர் மற்றும் பிறரின் நிமித்தமாக இந்தக் கொடைகளை அளிக்க விரும்புகிறார். அதற்கு அனுமதி அளிப்பதே உமக்குத் தகும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, முன்பு நம்மால் இரந்து கேட்கப்பட்டவர், இப்போது நம்மிடம் இரந்து கேட்பது நற்பேற்றினாலேயே நேர்கிறது. காலம் கொண்டு வந்த மாற்றத்தைப் பாரும். எந்த மன்னன் முன்பு மொத்த பூமியின் தலைவனாகவும், பாதுகாவலனாகவும் இருந்தோரோ,(11,12) எவருடைய உற்றார் உறவினர் மற்றும் துணைவர்கள் பகைவர்களால் கொல்லப்பட்டனரோ, அவர் இப்போது காடுகளுக்குச் செல்ல விரும்புகிறார். ஓ! மனிதர்களின் தலைவா, கேட்கப்படும் அனுமதியைக் கொடுப்பதிலிருந்து உமது கருத்து விலக வேண்டாம்.(13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மறுப்பது புகழ்க்கேட்டையும், பாவத்தையும் கொண்டுவரும். இக்காரியத்தில் நீர், அனைவருக்கும் தலைவரும், நமது அண்ணனுமான மன்னனிடமிருந்து கற்பீராக.(14) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மறுப்பதைவிடக் கொடுப்பதே உமக்குத் தகும்" என்றான் {அர்ஜுனன்}. இவ்வாறு சொன்ன பீபத்சுவை {அர்ஜுனனை} நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மெச்சினான்.(15)
கோபவசப்பட்ட பீமசேனன், இந்தச் சொற்களில், "ஓ! பல்குனா {அர்ஜுனா}, பீஷ்மர், மன்னர் சோமதத்தர், பூரிஸ்ரவஸ், அரசமுனியான பாஹ்லீகர், உயர் ஆன்ம துரோணர் மற்றும் பிறர் அனைவரின் ஈமச்சடங்குகளுக்காக நாம் கொடையளிக்கலாம்.(16,17) நம் அன்னை குந்தி, கர்ணனுக்கான ஈமக்காணிக்கைகளை அளிப்பாள். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தச் சிராத்தங்களைத் திருதராஷ்டிரர் செய்ய வேண்டாம்.(18) இதையே நான் நினைக்கிறேன். நமது பகைவர்கள் மகிழ வேண்டாம். துரியோதனனும், பிறரும் மேலும் மேலும் படு பயங்கர நிலைக்குள் மூழ்கட்டும்.(19) ஐயோ, குலத்தில் இழிந்தவர்களான அவர்களே மொத்த பூமியையும் அழித்தவர்கள். பனிரெண்டு வருடங்கள் நீண்ட கடுங்கவலையையையும்,(20) திரௌபதிக்குத் துன்பம் நிறைந்ததாக அமைந்த ஒருவருட தலைமறைவு வாழ்வையும் உன்னால் எவ்வாறு மறக்க முடிந்தது? திருதராஷ்டிரர் நம்மிடம் கொள்ளும் இந்த அன்பு அப்போது எங்கிருந்தது?(21)
கருப்பு மான்தோலை உடுத்தி, உன் ஆபரணங்கள் அனைத்தையும் அகற்றி, பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்} அழைத்துக் கொண்டு நீ இந்த மன்னனை {யுதிஷ்திரரைப்} பின் தொடர்ந்து செல்லவில்லையா?(22) அப்போது பீஷ்மரும், துரோணரும் எங்கிருந்தனர்? சோமதத்தர் எங்கிருந்தார்? நீ பதிமூன்று வருடங்கள் காட்டு விளைச்சலை உண்டு வாழ வேண்டிருந்ததே.(23) உன்னுடைய பெரிய தந்தை, அப்போது தந்தைக்குரிய அன்புக்கண்களுடன் உன்னைப் பார்க்கவில்லையே. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பகடையாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, விதுரரிடம், "வெல்லப்பட்டதென்ன?" என்று நம் குலத்தில் இழிந்தவரும், தீய புத்தி கொண்டவருமான இவர்தான் கேட்டுக் கொண்டிருந்தார் என்பதை நீ மறந்துவிட்டாயா?" என்றான் {பீமன்}. இவ்வளவு வரை கேட்டுக் கொண்டிருந்தவனும், குந்தியின் மகனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரன், அவனை {பீமனை} அதட்டி, அமைதியாக இருக்கும்படி சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(24,25)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |