Lamentation of Yudhishthira! | Asramavasika-Parva-Section-38 | Mahabharata In Tamil
(நாரதாகமன பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் காந்தாரி மற்றும் குந்தியின் மரணத்தைக் கேட்டுப் புலம்பிய யுதிஷ்டிரன்; காட்டுத் தீயில் எரிய நேர்ந்ததற்கு வருந்தியது...
யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, "உயர் ஆன்மா கொண்டவரும், கடுந்தவங்களில் ஈடுபட்டவருமான அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரரின்} உற்றாரான நாம் அனைவரும் உயிரோடு இருக்கையில்,(1) ஓ! மறுபிறப்பாளரே {நாரதரே}, விதி இவ்வாறு நேர்ந்திருப்பதால், மனிதர்களின் கதியை ஊகிப்பது அரிதே. ஐயோ, விசித்திரவீரியரின் மகன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு எரிந்து இறப்பார் என்று யார் நினைத்தது?(2) அவர் வலிமைமிக்கக் கரங்களையும், பெருஞ்செழிப்பையும் கொண்ட நூறு மகன்களை உடையவராக இருந்தார். அந்த மன்னரே பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவராக இருந்தார். ஐயோ, அவரே காட்டுத்தியில் எரிந்து இறந்தாரே.(3) ஐயோ, அழகிய மங்கையரின் நற்கரங்களில் உள்ள பனையோலைகளால் முன்பு வீசப்பட்டவர் {திருதராஷ்டிரர்}, இப்போது, காட்டுத்தீயில் எரிந்து மரணமடைந்து கழுகுகளின் சிறகுகளால் வீசப்படுகிறார்.(4)
சூதர்கள் மற்றும் மாகதர்களின் கூட்டத்தால் ஒவ்வொரு காலையிலும் துயிலில் இருந்து எழுப்பப்பட்ட அவர் {திருதராஷ்டிரர்}, என்னுடைய பாவம் நிறைந்த செயல்களால் வெறுந்தரையில் உறங்க வேண்டியிருந்தது.(5) புகழ்பெற்றவளும், பிள்ளைகளை இழந்தவளுமான காந்தாரிக்காக நான் வருந்தவில்லை. தன் கணவனைப் போன்ற அதே நோன்புகளை நோற்று, அவனுடையதாகியிருக்கும் உலகங்களையே தானும் அடைந்திருக்கிறாள்.(6) எனினும், தன் மகன்களின் சுடர்மிக்கப் பெருஞ்செழிப்பைக் கைவிட்டுக் காட்டில் வசிக்க விரும்பிய பிருதைக்காக {குந்திக்காக} நான் வருந்துகிறேன்.(7) நமது அரசுரிமைக்கு ஐயா, நமது ஆற்றலுக்கு ஐயோ!, க்ஷத்திரிய நடைமுறைகளுகு ஐயோ!, உயிரிரோடு இருந்தாலும் உண்மையில் நாம் இறந்தவர்களே.(8)
ஓ! மேன்மையான பிராமணர்களில் முதன்மையானவரே {நாரதரே}, அரசுரிமையைக் கைவிட்டு தன் வசிப்பிடத்தைக் காட்டில் அமைத்துக் கொள்ள விரும்பிய குந்தியின் காலப் போக்கு மிக நுட்பமானது.(9) மற்றும் புரிந்து கொள்ள மிகக் கடினமானது. யுதிஷ்டிரன், பீமன், விஜயன் ஆகியோரின் தாய் ஓர் ஆதரவுமற்ற உயிரினமாவாள். இதை நினைத்து நான் கலக்கமடைந்தேன்.(10), காண்டவத்தில் அர்ஜுனன், நெருப்பின் தேவனை நிறைவடையச் செய்தது வீணே. நன்றி மறந்தவனான அவன் {அக்னி தேவன்} தனக்குச் செய்யப்பட்ட தொண்டை மறந்து தனக்குக்கு நன்மை செய்தவனின் தாயை எரித்துக் கொன்றிருக்கிறான்.(11) ஐயோ, அர்ஜுனனின் தாயை அந்தத் தேவனால் எவ்வாறு எரிக்க முடியும்? பிராமண வேடத்தைப் பூண்டு, முன்பு அர்ஜுனனிடம் உதவி வேண்டி அவன் {அக்னி தேவன்} வந்தான். நெருப்பின் தேவனுக்கு ஐயோ. பார்த்தனுடைய கணைகளின் கொண்டாடத்தக்க வெற்றிக்கு ஐயோ.(12)
ஓ! புனிதமானவரே {நாரதரே}, அந்தப் பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்} புனிதமற்றதான நெருப்புடன் கலந்ததன் மூலம் மரணமடைந்தான் என்பது பெரும் துன்பத்தை உண்டாக்கவல்ல மற்றுமொரு நிகழ்வாகத் தோன்றுகிறது. மொத்த பூமியையும் ஆண்டு, தவப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிந்தவரும், குரு குலத்தவருமான அரசமுனியை {திருதராஷ்டிரரை} மரணம் எவ்வாறு ஆட்கொள்ளும்? அந்தப் பெருங்காட்டில் புனித மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட நெருப்புகள் இருக்கின்றன. ஐயோ, புனிதமற்ற நெருப்பின் துணையை அடைந்த என் தந்தை {திருதராஷ்டிரர்} இந்த உலகில் இருந்து சென்றுவிட்டார். அந்தப் பெருங்காட்டில் மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட நெருப்புகள் இருந்தன. ஐயோ, என் தந்தை புனிதமற்ற நெருப்பின் தொடர்பைப் பெற்று இவ்வுலகில் இருந்து சென்றார்.(13,14) பிருதை {குந்தி}, வடிவம் குறைந்து, மெலிந்தவளாக மேனியெங்கும் நரம்புகள் தெரிய, அச்சத்தால் நடுங்கி, உரக்கக் கதறி அழுது, "ஓ! மகனே யுதிஷ்டிரா" என்று சொல்லி, தன்னை அந்தப் பயங்கரத் தீ அணுகுவதற்காகக் காத்திருந்திருப்பாள்.(15) மேலும் என் தாயான அவள் சுற்றிலும் பயங்கரத் தீயால் சூழப்பட்டிருந்தபோது,, "ஓ! பீமா, இந்த ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்றுவாயாக" என்று சொல்லியிருக்க வேண்டும்.(16) அவளுடைய மகன்களுக்கு மத்தியில், சகாதேவனே அவளது அன்புக்குரியவனாவான். ஐயோ, மாத்ரவதியின் அந்த வீரமகன் அவளைக் காப்பாற்றவில்லை[1]" என்றான் {யுதிஷ்டிரன்}.(17)
[1] கும்பகோணம் பதிப்பில், "இளைத்தவளும், நரம்புகள் நிறைந்தவளுமான என் தாயான குந்தியானவள் பெரிய பயம் நேர்ந்தவுடன் நடுக்கமுற்று, "அப்பனே! தர்மராஜனே" என்று என்னை அழைப்பவளும், "பீம! பயத்தினின்று காப்பாற்று" என்று அலறுகின்றவளுமாயிருந்து கொண்டு காட்டுத் தீயினால் நாற்புறங்களிலும் பற்றப்பட்டிருப்பாளென்று நினைக்கிறேன். அவளுக்கு (எல்லா)ப் புத்திரர்களையும் காட்டிலும் ஸஹதேவனிடத்தில் பிரியம் அதிகம். வீரனும் மாத்ரியின் புத்திரனுமான அவனும் இவளைவிட்டுப் பிரிந்ததேயில்லை" என்றிருக்கிறது.
மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் புலம்பல்களைக் கேட்டு அங்கே இருந்த அனைவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு அழத் தொடங்கினர். உண்மையில், அண்ட அழிவுக்காலத்தில் உள்ள உயிரினங்களுக்கு ஒப்பான அளவுக்குப் பாண்டுவின் மகன்கள் ஐவரும் துயரால் பீடிக்கப்பட்டிருந்தனர்.(18) அழுது கொண்டிருந்த அந்த வீரர்களின் புலம்பல் ஒலிகள் அந்த அரண்மனையின் அகன்ற அறைகளை நிறைத்து அங்கிருந்து தப்பித்து ஆகாயத்தையே துளைத்தன" {என்றார் வைசம்பாயனர்}.(19)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |