Where is Govinda? | Udyoga Parva - Section 68 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 28) {யானசந்தி பர்வம் - 22}
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது; கிருஷ்ணனுடைய சக்கரத்தின் மகிமை; கிருஷ்ணனின் மேன்மை; கிருஷ்ணன் இருக்குமிடம்; அண்டத்தின் தலைவன் யார் என்பன போன்றவற்றை வியாசர் மற்றும் காந்தாரியின் முன்னிலையில் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தேவர்களைப் போன்ற தங்களின் இயல்பினால் தங்களுக்குள் சரிநிகரானவர்களும், போற்றப்படும் வில்லாளிகளுமான அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தங்கள் சுயவிருப்பத்தினாலேயே தங்கள் பிறப்பை அடைந்தார்கள்.
ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அபரிமிதமான சக்தி கொண்டதும், முழுமையாக ஐந்து முழ விட்டம் கொண்டதுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சக்கரம், அதைத் தாங்கியிருப்பவர் விருப்பத்திற்கேற்ப (பெரிய அல்லது சிறிய உருவங்களில்) எதிரி மீது வீசவல்லதாகவும், மாயை சார்ந்ததாகவும் இருக்கிறது.
தனது பிரகாசத்தால் எப்போதும் அப்பட்டமான உண்மையாக இருக்கும் அது {அந்தச் சக்கரம்}, குருக்களின் {கௌரவர்களின்} கண்களுக்குத் தெரியாததாக இருக்கிறது; பலத்தையோ, பலவீனத்தையோ உறுதி செய்வதில் அந்தச் சக்கரம், பாண்டவர்களுக்குச் சிறந்த அடித்தளத்தைக் கொடுக்கிறது.
உண்மையில், பெரும் பலம் கொண்ட அந்த மதுகுலத்துக் கொழுந்து {கிருஷ்ணன்}, வல்லமைமிக்க நரகன், சம்பரன், கம்சன் மற்றும் சேதிகள் தலைவன் (சிசுபாலன்) ஆகியோரை விளையாட்டுத்தனமாகவும், முயற்சியற்ற வகையிலும் வீழ்த்தினான்.
தெய்வீகத்தன்மையும், அனைத்துக்கும் மேன்மையான ஆன்மாவும் கொண்டவனும், ஆண்களில் மேன்மையானவனுமான அவன் {புருஷோத்தமனான கிருஷ்ணன்} விரும்பினால், பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து கொள்வதற்காக நீர் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்கிறீர். அவை அனைத்தையும் இப்போது சுருக்கமாகக் கேளும். தராசின் ஒரு தட்டில் முழு அண்டத்தையும், மறு தட்டில் ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} வைத்தால், அண்டத்தைவிட ஜனார்த்தனனே எடை அதிகமானவனாக இருப்பான்.
ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விரும்பினால் அண்டத்தைச் சாம்பலாக்கிவிடுவான். ஆனால் முழு அண்டமும் சேர்ந்தாலும் ஜனார்த்தனனை சம்பலாக்க முடியாது.
எங்கெல்லாம் உண்மை நிறைந்திருக்கிறதோ, எங்கெல்லாம் அறம், அடக்கம், எளிமை ஆகியன இருக்கின்றனவோ அங்கெல்லாம் கோவிந்தன் {கிருஷ்ணன்} இருப்பான். கிருஷ்ணன் எங்கிருப்பானோ, அங்குதான் வெற்றியும் இருக்க முடியும்.
அனைத்து உயிர்களின் ஆன்மாவும், ஆண்களில் மேன்மையானவனுமான {புருஷோத்தமனுமான} ஜனார்த்தனனே {கிருஷ்ணனே}, பூமி, ஆகாயம், சொர்க்கம் முழுமையையும் விளையாட்டாக வழிநடத்துகிறான். பாவத்திற்கு அடிமையாக இருக்கும் உமது தீய மகன்கள் அனைவரையும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, வெடித்துச் சிதற வைக்க விரும்புகிறான். தெய்வீகப் பண்புகள் கொண்ட அந்தக் கேசவனே {கிருஷ்ணனே}, தனது ஆன்மசக்தியால் காலச்சக்கரத்தையும், அண்டத்தின் சக்கரத்தையும், யுகச்சக்கரத்தையும் தொடர்ச்சியாகச் சுழல வைக்கிறான்.
காலம், மரணம், அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய இந்த அண்டம் ஆகியவற்றுக்கு அந்த மகத்தானவன் {கிருஷ்ணன்} மட்டுமே தலைவன் என்பதை உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். அந்தப் பெரும் துறவியான ஹரி {கிருஷ்ணன்}, இந்த முழு அண்டத்திற்குமே தலைவனாக இருப்பினும், வயல்களை உழும் எளிமையான தொழிலாளி {உழவன்} போலத் தன்னை உழைப்புக்கு {செயலுக்கு [அ] கர்மம் செய்வதற்கு} உட்படுத்திக் கொள்கிறான். உண்மையில், தனது மாயையின் உதவி கொண்டு கேசவன் அனைவரையும் ஏமாற்றுகிறான். எனினும், அவனை {கிருஷ்ணனை} அடைந்த மனிதர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவதில்லை" என்றான் {சஞ்சயன்}.