Duryodhana, seek refuge with Kesava? | Udyoga Parva - Section 69 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 29) {யானசந்தி பர்வம் - 23}
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனை அடைவது எப்படி என்று சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; கிருஷ்ணனைத் தஞ்சமடையும்படி துரியோதனனிடம் திருதராஷ்டிரன் சொன்னது; துரியோதனன் மறுப்பது; காந்தாரி துரியோதனனைக் கண்டிப்பது; கிருஷ்ணனை அடையும் வழிகளைச் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, அண்டத்தின் உயர்ந்த தலைவனாக {மஹாதேவனாக} மாதவனை {கிருஷ்ணனை} எப்படி உன்னால் அறிய முடிகிறது? என்னால் ஏன் அவனை {கிருஷ்ணனை} அப்படி அறிய முடியவில்லை? ஓ! சஞ்சயா, இதை எனக்குச் சொல்" என்றான்.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ மன்னா {திருதராஷ்டிரரே} கேளும். உமக்கு ஞானமில்லை {பக்தியில்லை}, எனக்கோ எனது ஞானம் குறையவில்லை. ஞானமில்லாமல், அறியாமை எனும் இருளில் மூழ்கி இருக்கும் ஒருவனால், கேசவனை {கிருஷ்ணனை} அறிய முடியாது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திரள், நுட்பம் மற்றும் காரணம் ஆகியவற்றின் சங்கமமே மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்} என்றும்; அனைத்தையும் படைத்தவன் அவனே, ஆனால் படைக்கப்படாதவன் {சுயம்பு} அவன்; தெய்வீகமானவன் அவன், அவனிலிருந்தே அனைத்தும் எழுகின்றன, அவனிடமே அனைத்தும் திரும்பிச் சேர்கின்றன என்றும் எனது அறிவின் துணை கொண்டு நான் அறிகிறேன்" என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} நீ கொண்டுள்ள நம்பிக்கையின் {பக்தியின்} இயல்பு எப்படிப்பட்டது? திரள், நுட்பம் மற்றும் காரணம் ஆகியவற்றின் சங்கமமே மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்} என்று எதன் {எந்த நம்பிக்கையின்} விளைவாக அறிகிறாய்?" என்று கேட்டான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் அருளப்பட்டிரும். (உலக இன்பங்களோடு அடையாளப்படுத்தப்படும்) மாயைக்கு நான் எவ்வித மதிப்பும் அளிப்பதில்லை. (நோன்புகள், அவனிடம் {கிருஷ்ணனிடம்} நம்பிக்கையில்லாத வேலை மற்றும் ஆத்ம தூய்மை போன்ற) பயனற்ற அறங்களை நான் எப்போதும் பயில்வதுமில்லை. நம்பிக்கையால் ஆத்மாவின் தூய்மையை அடைந்து, சாத்திரங்களில் இருந்து நான் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} அறிந்து கொண்டேன்" என்றான்.
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, ரிஷிகேசன் என்றும் அழைக்கப்படும் ஜனார்த்தனனின் {கிருஷ்ணனுடைய} பாதுகாப்பை நீ நாடுவாயாக. ஓ! குழந்தாய் {துரியோதனா}, சஞ்சயன், நாம் நம்பத்தகுந்த நண்பர்களில் ஒருவனாவான். கேசவனை {கிருஷ்ணனைத்} தஞ்சமடைவாயாக" என்றான்.
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, "தேவகியின் தெய்வீக மகன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனோடு நட்பில் ஒன்றுபட்டு மனிதவகையைக் கொல்லப்போகிறான் என்றாலும் கூட, என்னால் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} செல்ல முடியாது" என்றான்.
திருதராஷ்டிரன் {காந்தாரியிடம்}, "ஓ! காந்தாரி, தீய மனம் கொண்ட இந்த உனது மகன் {துரியோதனன்} பேரிடரில் மூழ்கத் தீர்மானித்திருக்கிறான். பொறாமையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த வீணன் {துரியோதனன்}, தன்னைவிட மேன்மையான அனைவரின் வார்த்தைகளையும் புறந்தள்ளுகிறான்" என்றான்.
காந்தாரி {துரியோதனனிடம்}, "முதிர்ந்தோரின் கட்டளைகளை அலட்சியம் செய்யும் பேராசை கொண்ட இழிந்தவனே {துரியோதனா}, உனது தந்தையையும், என்னையும் கைவிட்டுவிட்டு, செழிப்பையும் வாழ்வையும் விட்டுவிட்டு, எதிரிகளின் மகிழ்ச்சியை மேம்படுத்தி, என்னை ஆழ்ந்த துயரில் ஆழ்த்துகிறாயே. ஓ! மூடா {துரியோதனா}, பீமசேனனால் அடிக்கப்பட்டு, புழுதியை {மண்ணை} நீ கடிக்கும்போது, உனது தந்தையின் வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்" என்றாள்.
வியாசர், "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, நான் சொல்வதைக் கேள். ஓ! திருதராஷ்டிரா, கிருஷ்ணனின் அன்புக்குப் பாத்திரமாக நீ இருக்கிறாய். சஞ்சயனை உனது தூதனாக நீ கொண்டிருக்கிறாய். அவன் {சஞ்சயன்} உனது நன்மைக்கு உன்னை வழிநடத்துவான். பழமையானவனும், மேன்மையானவனுமான ரிஷிகேசனை {கிருஷ்ணனை} அவன் {சஞ்சயன்} அறிவான். அவன் சொல்வதை நீ கவனமாகக் கேட்டாயானால், உன் தலைக்கு மேலே தொங்கும் பெரும் ஆபத்திலிருந்து அவன் {சஞ்சயன்} உன்னை நிச்சயம் காப்பான். ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரா}, கோபத்துக்கும் இன்பத்துக்கும் ஆட்படும் மனிதர்கள் பல்வேறு வலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
தங்கள் சுய உடைமைகளோடு மனநிறைவு கொள்ளாதவர்கள், விருப்பங்களுடனும் பேராசைகளுடனும் இருப்பதால் அறிவை இழந்து, குருடனால் வழிநடத்தப்படும் {மற்றொரு} குருடன் (குழிகளில் விழுவதைப்} போலத் தங்கள் சொந்த செயல்களின் விளைவாகவே மரணத்திற்கு ஆட்படுகிறார்கள். ஞானிகள் நடக்கும் (பிரம்மத்துக்கு வழிநடத்தும்) பாதை ஒன்றே. அந்தப் பாதையை நோக்கில் கொள்ளும் மேன்மையானவர்கள், மரணத்தை வென்று, அதன் மூலமே இலக்கை {முக்தியை} அடைகிறார்கள்" என்றார் {வியாசர்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, முக்தி {விடுதலை} எனதாகும் வகையில், ரிஷிகேசனை {கிருஷ்ணனை} அடையும் பயங்கரமற்ற பாதையைக் குறித்து எனக்குச் சொல்வாயாக" என்றான்.
சஞ்சயன், "கட்டுப்பாடற்ற மனம் கொண்ட ஒரு மனிதன், ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} அறிய எந்த வழிகளும் இல்லை. புலன்களை அடக்காதவன் செய்யும் வேள்விகளும் முடிவை {முக்தியை} அடையும் எந்த வழிகளையும் காட்டாது. தூண்டப்பட்ட புலன்களுக்கு உகந்த பொருட்களைத் துறக்க ஆன்ம ஒளியாலேயே இயலும்; ஆன்ம ஒளி மற்றும் ஊறிழையாமை {அஹிம்சை} ஆகிய இரண்டும் உண்மை ஞானத்தில் இருந்து உதிப்பவை என்பதில் ஐயமில்லை.
எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மால் முடிந்த அளவு கடுமையாக உமது புலன்களை அடக்கத் தீர்மானிப்பீராக; உண்மை ஞானத்தில் இருந்து உமது புத்தி தடம் மாறாதிருக்கட்டும்; அதை {புத்தியைச்} சூழ்ந்திருக்கும் உலகளாவிய மயக்கங்களை உமது இதயத்தில் இருந்து விலக்குவீராக. கற்ற அந்தணர்கள், இந்தப் புலனடக்கத்தையே உண்மை ஞானம் என்று விளக்குகிறார்கள். இந்த ஞானமே, கற்ற மனிதர்கள் தங்கள் இலக்கை {முக்தியை} அடைவதற்கான பாதையாக இருக்கிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புலன்களை அடக்காத மனிதர்களால் கேசவனை {கிருஷ்ணனை} அடைய முடியாது. புலன்களை அடக்கிய ஒருவனே, சாத்திர அறிவினாலும், யோக ஈர்ப்பின் இன்பத்தினாலும் விழிப்புணர்வடைந்து ஆன்ம அறிவை விரும்புகிறான்" என்றான் {சஞ்சயன்}.