Both Victory and Defeat are losses! | Udyoga Parva - Section 72b | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –2)
பதிவின் சுருக்கம் : வறுமை ஒரு மனிதனை எந்நிலைக்கெல்லாம் தள்ளுகிறது; வறுமையும் மரணமும்; விழிப்படைபவன் எப்படிச் செழிப்படைகிறான்? அறத்திற்கு நாணத்தின் பங்களிப்பு; உறவினர்களைக் கொல்வது பாவமே; க்ஷத்திரிய வகையின் இழிதன்மை; போர்த்தொழில் பாவகரமானது; வென்றவனும் தோற்றவனும் இழப்பையே சந்திக்கின்றனர்; போரினால் ஆவது ஒன்றுமில்லை என்பன போன்றவற்றை யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் சொல்வது...
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தான், "வன்முறையுடன் ஒரு மனிதனின் செல்வத்தைத் திருடுபவர்கள், அவனைத் திருடுவது மட்டுமல்ல, அவனது அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றையும் அழிக்கின்றனர். வறுமையால் பீடிக்கப்படும் சில மனிதர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; பிறர் நகரங்களை விட்டு விலகி கிராமங்களுக்குச் செல்கின்றனர், பிறரோ காட்டுக்கே சென்றுவிடுகிறார்கள்; மேலும் சிலரோ தங்கள் வாழ்வை அழித்துக் கொண்டு பிச்சைக்காரர்களாகிவிடுகிறார்கள் {they become religious mendicants}. சிலர் {பறிபோன} அந்தச் செல்வத்தின் காரணமாகப் பைத்தியக்காரர்களாகி விடுகிறார்கள்; பிறர் செல்வத்திற்காகப் பகைவர்களுக்கு அடங்கி அவர்களின் கீழ் வாழ்கிறார்கள்; மேலும் பலர், பிறருக்குத் தங்களை அடிமையாக்கிக் கொள்கிறார்கள்.
ஒரு மனிதனின் வறுமை, மரணத்தைவிடத் துயர்நிறைந்ததாகும். ஏனெனில், அறத்திற்கும், இன்பத்திற்கும் காரணமாக இருப்பது அந்தச் செல்வமே. ஒரு நபரின் இயற்கை மரணம் பெரிதாக மதிக்கப்படுவதில்லை. ஏனெனில், அதுவே அனைத்து உயிர்களின் நிலையான பாதையாகும். உண்மையில், படைக்கப்பட்ட உயிரினங்களில் எதுவும் இதை மீற முடியாது. ஓ! கிருஷ்ணா, முன்பொரு சமயம் பெரும் செழிப்போடு இருந்து, ஆடம்பரமாக வளர்க்கப்பட்டு, அந்தச் செழிப்பை இழந்தவன் அடையும் துன்பத்தைப் போலப் பிறப்பில் இருந்தே ஏழையாக இருக்கும் ஒரு மனிதன் பெரிதான துன்பத்தை அடைவதில்லை. தனது சொந்த தவறால் துயரில் விழுந்த ஒரு மனிதன் இந்திரனோடு சேர்ந்த தேவர்களையும் தன்னையும் பழித்துக் கொள்கிறான். [1]
[1] தேவர்களைப் பழிக்கிறான். தன்னைப் பழித்துக் கொள்வதில்லை என்பதே இங்குச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அப்படித்தான் வேறு பதிப்புகளில் இருக்கின்றன. ஆனால் இங்கே "Having through his own fault fallen into distress, such a person blameth the very gods with Indra and his own self. " என்றே கங்குலி சொல்கிறார்.
உண்மையில், முழுமையான சாத்திரங்களின் அறிவுகூட அவனது வலிகளைத் தணிக்க இயலாமல் தோல்வியுறுகின்றன. சில நேரங்களில் அவன் தனது பணியாட்களிடம் கோபம் கொள்கிறான். சில நேரங்களிலோ அவன் தனது நலன் விரும்பிகளுக்குக் கூடத் தீமை செய்துவிடுகிறான். தொடர்ச்சியாகக் கோபத்துக்குள்ளாகி, தனது புலனறிவை இழந்து, அறிவு மறைக்கப்பட்டுத் தீச்செயல்களைப் புரிகிறான். தனது பாவம் நிறைந்த தன்மையால், அத்தகு மனிதன், சங்கரத்துக்குப் {சாதிக் கலப்புக்குப்} பங்களிக்கிறான். சங்கரம் என்பது நரகத்திற்கு இட்டுச் செல்வதாகும். அதுவே {சாதிக் கலப்பே} பாவம் நிறைந்த செயல்களில் முதன்மையானதுமாகும்.
காலத்தில் அவன் விழிப்படையச் செய்யப்படவில்லையெனில், ஓ! கிருஷ்ணா, அவன் நரகத்திற்குச் செல்வது நிச்சயம். உண்மையில், ஞானம் மட்டுமே அவனை விழிப்படையச் செய்யவல்லது. ஞானக்கண்ணை மீண்டும் பெற்றால், அவன் காக்கப்படுவான். ஞானம் மீட்கப்பட்டால், அவன் சாத்திரங்களில் தனது கவனத்தைச் செலுத்துவான். சாத்திரங்களின் கவனிப்பு, அவனது அறத்திற்கு உதவுகிறது. பிறகு, நாணமே அவனது சிறந்த ஆபரணமாகிறது. நாணமுடையவன் பாவத்திற்கு எதிராக ஒரு வெறுப்பை அடைகிறான். அவனது செழிப்பு அதிகரிக்கிறது; செழிப்பை அடைந்தவன் உண்மையில் மனிதனாகிறான்.
எப்போதும் அறத்திற்கு அர்ப்பணிப்போடு இருந்து, மனதைத் தனது கட்டுக்குள் வைத்து, சிந்தித்த பிறகு செயல்படும் ஒருவன், அறமற்றதை {மறத்தை} ஒருபோதும் செய்வதில்லை. மேலும் அவன் எந்தவித பாவகரச் செயலிலும் ஒருபோதும் ஈடுபடுவதில்லை. நாணமும் அறிவும் அற்ற ஒருவன் ஆணுமல்லாமல் பெண்ணுமல்லாதவனாக இருக்கிறான். சூத்திரனைப் போல, அவன் அறத்தகுதியை ஈட்ட இயலாதவனாக இருக்கிறான். நாணமுடையவன், தேவர்களையும், பித்ருக்களையும், ஏன் தனது சுயத்தையும் கூட நிறைவுகொள்ளச் செய்கிறான். இதனால் அவன் மோட்சத்தை அடைகிறான். உண்மையில், இதுவே நல்ல மனிதர்கள் அனைவரின் உயர்ந்த குறிக்கோளுமாகும்.
ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, இவை அனைத்தையும் என்னிடம் உனது கண்களாலேயே கண்டிருக்கிறாய். நாட்டை இழந்து நாங்கள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தது நீ அறியாததல்ல. (எங்களுடையதாயிருந்த) செழிப்பை {செல்வங்களை} நியாயப்படி நாங்கள் கைவிட முடியாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நாங்களும் கௌரவர்களும் சமாதானத்துடன் ஒன்றுபட்டு, எங்கள் செழிப்பை அமைதியாக அனுபவிப்பதே எங்கள் முதல் முயற்சியாக இருக்கும்.
இல்லையென்றால், ஓ! கிருஷ்ணா, எங்களுடன் உறவு கொண்ட இழிவான எதிரிகளை இரத்தம் சிந்த வைத்து அழித்து வெல்வது என்பது கடுமையான செயல்களிலும் மோசமானது என்றாலும், கௌரவர்களில் இழிந்தவர்களைக் கொன்று, அந்தப் பகுதிகளை மீட்க வேண்டியிருக்கும். எண்ணற்ற உறவினர்களையும், எண்ணற்ற மரியாதைக்குரிய மூத்தவர்களையும் இத்தரப்பிலோ, அத்தரப்பிலோ நாங்கள் கொண்டிருக்கிறோம். இவர்களையெல்லாம் கொல்வது பெரும் பாவமே ஆகும். எனவே, போரில் என்ன நன்மை இருக்கிறது?
ஐயோ, அத்தகு பாவகரச் செயல்கள் க்ஷத்திரிய வகையின் கடமைகளாக இருக்கின்றனவே! இந்த இழிந்த {க்ஷத்திரிய} வகையிலல்லவா நாங்கள் எங்கள் பிறப்பை அடைந்திருக்கிறோம். அச்செயல்கள் பாவகரமாக இருந்தாலும், அறம்சார்ந்ததாக இருந்தாலும், ஆயுதமேந்தும் தொழிலைத் தவிர வேறு தொழில் எங்களுக்கு நிந்திக்கத்தக்கதே. ஒரு சூத்திரன் பணி செய்கிறான்; ஒரு வைசியன் வணிகத்தால் வாழ்கிறான்; பிராமணன் (பிச்சை எடுப்பதற்காக) மரப்பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறான், நாங்களோ {க்ஷத்திரியர்களோ} படுகொலையால் வாழ்கிறோம்!
மீனானது {மற்றொரு} மீனை உண்டு வாழ்கிறது; ஒரு நாய் {மற்றொரு} நாயை இரையாகக் கொள்கிறது; அதே போல ஒரு க்ஷத்திரியன் {மற்றொரு} க்ஷத்திரியனைக் கொல்கிறான்! ஓ! தாசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, ஒவ்வொருவரும் தனது வினோதமான அறத்தை எப்படிப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பார். ஓ! கிருஷ்ணா, போர்க்களங்களில் கலி எப்போதும் இருக்கிறான்; சுற்றிலும் உயிர்கள் கொல்லப்படுகின்றன. கொள்கை மூலம் கட்டுப்படுத்தப்படும் பலம் தூண்டப்படுகிறது என்பது உண்மையே; இருப்பினும் வெற்றியும் தோல்வியும் போட்டியாளர்களின் விருப்பங்களால் ஆவதில்லையே.
உயிரினங்களின் உயிர்களும் அவற்றின் விருப்பங்களைச் சாராமலே இருக்கின்றன. ஓ! யது குலத்தில் சிறந்தவனே {கிருஷ்ணா}, அதுஅதற்கான நேரம் அமையவில்லையெனில், இன்பமோ, துன்பமோ ஒருவனைச் சாராது. சில நேரங்களில் ஒரு மனிதன் பலரைக் கொல்கிறான், சில நேரங்களில் பலர் ஒன்றாகக் கூடி ஒருவனைக் கொல்கின்றனர். ஒரு கோழை, ஒரு வீரனைக் கொல்லலாம், புகழற்ற ஒருவனும் கூடப் புகழ்வாய்ந்த ஒரு வீரனைக் கொன்றுவிடலாம். இருதரப்பும் வெல்ல முடியாது. அதே போல, இரண்டும் தோற்கவும் முடியாது. எனினும், இருதரப்பின் இழப்பும் சமமாக இருக்கலாம்.
புறமுதுகிட்டு ஓடுபவன், தனது உயிர் மற்றும் புகழ் ஆகிய இரண்டையும் இழக்கிறான். எனினும், அனைத்துச் சூழ்நிலைகளிலும், போர் என்பது பாவமே. அடுத்தவனை அடிக்கும் எவன் தானே அடிபடாமல் இருக்கிறான்? ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அடிப்பட்ட மனிதனைப் பொறுத்தவரை, வெற்றியும் தோல்வியும் சமமானதே. தோல்வி என்பது மரணத்தைக் காட்டிலும் வேறில்லை. ஆனால், ஓ! கிருஷ்ணா, தோற்றவனின் இழப்பைவிட வென்றவனின் இழப்பு குறைந்ததில்லை. தானே கொல்லப்படவில்லை ஆயினும், தனது அன்பிற்குரிய ஒருவனையோ, வேறு ஒருவனையோ அவனது பகைவர்கள் கொல்ல நேரிடும். ஓ ஐயா {கிருஷ்ணா}, அதனால், அந்த மனிதன் தனது பலத்தை இழந்து, தனது மகன்களையும், சகோதரர்களையும் தன் முன்னிலையில் காணாத அவன், ஓ! கிருஷ்ணா, தன் வாழ்வையே வெறுக்கிறான்.
அமைதியாக, பணிவாக, அறம்சார்ந்தவனாக, கருணையுள்ளவனாக இருப்பவர்களே, போர்க்களங்களில் பொதுவாகக் கொல்லப்படுகிறார்கள். அதேவேளையில், தீயவர்களோ தப்பிவிடுகிறார்கள். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, ஒருவன் தனது எதிரிகளைக் கொன்ற பிறகும் கூட, வருத்தம் அவனது இதயத்தைப் பீடிக்கிறது. எதிரிகளில் பிழைப்பவன் தொல்லை கொடுக்கிறான். ஏனெனில், அப்படிப் பிழைத்திருப்பவன், ஒரு படையைத் திரட்டி, பிழைத்திருக்கும் வெற்றியாளனை அழிக்கை முயல்கிறான். சச்சரவை முடிக்கும் நம்பிக்கையில் ஒருவன் தனது எதிரியை அழிக்க அடிக்கடி முயல்கிறான். இப்படியே வெற்றி பகையை உண்டாக்கிறது. தோற்றவனோ சோகத்துடன் வாழ்கிறான்" என்றான் {யுதிஷ்டிரன்}.