"I will go to the Kurus" said Krishna! | Udyoga Parva - Section 72c | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –1)
பதிவின் சுருக்கம் : பகை நிறைந்தவன் புகழ்கேட்டை அடைகிறான்; ஒரு தரப்பு முற்றாக அழிந்தால்தான் பகை ஒழியும்; முற்றாக ஒரு தரப்பை அழிக்கும் செயல் கொடூரமானது; நாட்டைத் துறந்து அடையப்படும் அமைதி மரணத்திற்கு ஒப்பானது; நாயின் சண்டையோடு மனிதர்களின் சண்டையை ஒப்பிட்டுக் கிருஷ்ணனிடம் சொல்லும் யுதிஷ்டிரன், தான் திருதராஷ்டிரனை மதிப்பதாகவும், ஆனால் அவன் தன் மகன் மீது கொண்ட பாசத்தால் தனது வணக்கத்தை ஏற்கமாட்டான் என்றும் சொல்வது; கிருஷ்ணனே தங்களுக்கு உற்ற தோழன் என்றும் சொல்வது; இவற்றையெல்லாம் கேட்ட கிருஷ்ணன் தானே கௌரவர்களிடம் தூது செல்வதாகச் சொல்வது; அதில் தனக்கு விருப்பம் இல்லை என்று யுதிஷ்டிரன் சொல்வது; நோக்கம் நிறைவேறாவிட்டாலும், தான் செல்வது எவ்வகையிலும் நன்மையையே விளைவிக்கும் என்று கிருஷ்ணன் சொல்வது; யுதிஷ்டிரன் சம்மதிப்பது...
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தான், "அமைதி நிறைந்தவன், வெற்றி மற்றும் தோல்வி குறித்த எண்ணங்களையெல்லாம் துறந்து மகிழ்ச்சியாக உறங்குகிறான். அதேவேளையில், பகையால் தூண்டப்பட்டவனோ, பாம்புடன் ஒரே அறையில் உறங்குவதைப் போல, கவலை நிறைந்த இதயத்துடன் எப்போதும் துக்கத்துடனேயே உறங்குகிறான். அழிப்பவன் மிக அரிதாகவே புகழை வெல்கிறான். மறுபுறம், அத்தகு மனிதன், அனைவரின் மதிப்பீட்டின்படி நிலைத்த புகழ் கேட்டை {அபகீர்த்தியை} அடைகிறான். நீண்டகாலம் பாராட்டப்படும் பகைமை ஒழிவதில்லை; ஏனெனில், எதிரியின் குடும்பத்தில் ஒருவன் உயிரோடு இருந்தாலும், அவனுக்குக் கடந்த காலத்தை விவரிக்க உரை நிகழ்த்துபவர்கள் {கதைசொல்லிகள்} எப்போதும் தேவையில்லை.
ஓ! கேசவா {கிருஷ்ணா}, பகையைப் பகையால் சமன் செய்ய எப்போதும் முடியாது; மறுபுறம், தெளிந்த நெய்யால் தூண்டப்படும் நெருப்பு போல, பகை தூண்டிவிடப்படுகிறது. எனவே, ஒரு தரப்பு நிர்மூலமடையாமல் சமாதானத்தை எட்ட முடியாது {அமைதி ஏற்படாது}. ஏனெனில், ஒரு தரப்பு மற்றொரு தரப்பின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கான {அந்த மற்றொரு தரப்பின்} குறைகளை எப்போதும் கண்டுபிடிக்கும். குறைகாண்பதில் ஈடுபடுபவர்கள் இந்தத் தீயொழுக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். {குறை காண்பது தீயொழுக்கமே}.
தன் சொந்த ஆற்றல் குறித்த ஒருவனின் தன்னம்பிக்கை அவனது இதயத்தின் ஆழத்தில் குணப்படுத்த முடியாத நோயாக இருந்து தொல்லை கொடுக்கிறது. அதை உடனே கைவிடவில்லை என்றாலோ, {அம்மனிதனுக்கு} மரணம் ஏற்படவில்லை என்றாலோ, அங்கே அமைதி ஏற்பட முடியாது.
ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பகைவரை அவர்களது வேர் வரை அழிப்பது, பெரும் செழிப்பெனும் வடிவில் நல்ல விளைவுக்கு வழிவகுத்தாலும், அத்தகு செயல் மிகவும் கொடூரமானதே. நாங்கள் நாட்டைத் துறப்பதால் அடையப்படும் அமைதி, மரணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எதிரியின் வடிவமைப்பு மற்றும் எங்களது அப்பட்டமான அழிவு ஆகியவற்றின் விளைவால் ஏற்படும் அந்த நாடு இழப்பு, எங்கள் மரணத்தையே குறிக்கிறது. நாங்கள் எங்கள் நாட்டையும் கொடுக்க விருப்பவில்லை, எங்கள் குலம் அழிவதைக் காணவும் விரும்பவில்லை.
எனவே, இந்தச் சூழ்நிலையில், அவமானத்தின் மூலம் கூட முன்னதாகவே பெறப்படும் சமாதானம் சிறந்ததாகவே இருக்கும். போரை விரும்பாமல், அனைத்து வழிகளிலும் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும் இவர்களின் சமரசங்கள் தோல்வியில் முடிந்தால், போர் தவிர்க்க முடியாததாக ஆகும். அதன் பிறகு வீரத்தை வெளிப்படுத்தும் நேரம் வரும். உண்மையில், சமரசம் தோற்றால், பயங்கர விளைவுகளே பின்தொடரும்.
கற்றோர், இவையனைத்தையும் நாய்ச்சண்டையில் கவனித்திருக்கின்றனர். முதலில், வாலாட்டுதல், பிறகு குரைத்தல், பிறகு பதிலுக்குக் குரைத்தல், பிறகு வலம் வருதல், பிறகு பற்களைக் காட்டுதல், பிறகு திரும்பத் திரும்ப உறுமுதல், கடைசியாகச் சண்டையிடுதல். ஓ! கிருஷ்ணா, அத்தகு சண்டையில், தனது எதிரியை வீழ்த்தும் வலிய நாய், பின்னதன் {வீழ்ந்த நாயின்} இறைச்சியை எடுத்துக் கொள்ளும். சரியாக மனிதர்களின் வழக்கிலும் இதே தான் நடக்கிறது. எந்தவித வித்தியாசமும் இல்லை. சக்திவாய்ந்தவர்கள், எப்போதும் பணிந்து நிற்கும் பலவீனர்களிடம் சச்சரவுகளைத் தவிர்த்து, அவற்றை அலட்சியம் செய்ய வேண்டும். தந்தை, மன்னன், வயது முதிர்ச்சியால் மதிக்கத்தக்கவர்கள் ஆகியோர் எப்போதும் மரியாதைக்குகந்தவர்கள் ஆவர். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர், எங்கள் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவரே. ஆனால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் தனது மகன் மீது கொண்ட பாசம் பெரிதாக இருக்கிறது. தனது மகனுக்குக் {துரியோதனனுக்குக்} கீழ்ப்படியும் அவர் {திருதராஷ்டிரர்}, நமது வணக்கத்தை மறுதலிப்பார். ஓ! கிருஷ்ணா, இச்சந்தர்ப்பத்தில் எது சிறந்ததென நீ நினைக்கிறாய்?
ஓ! மாதவா, எங்கள் பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டையும் நாங்கள் எவ்வாறு பாதுகாக்க முடியும்? ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, மனிதர்களில் முதன்மையானவனே, இக்கடினமான விவகாரத்தை உன்னைத் தவிர வேறு யாருடன் நாங்கள் ஆலோசிக்க முடியும்? ஓ! கிருஷ்ணா, எங்களிடம் அன்பாகவும், எங்கள் நன்மைக்கு முயல்பவனாகவும், அனைத்து செயல்படுவழிகளையும் அறிந்தவனாகவும், உண்மையை {சத்தியத்தை} நன்கு அறிந்தவனாகவும் உன்னைப்போல வேறு எந்த நண்பன் எங்களுக்கு இருக்கிறான்?" என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, நீதிமானான யுதிஷ்டிரனிடம், "உங்கள் இருவருக்காகவும் {பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்காவும்}, நான் குருக்களின் {கௌரவர்களின்} சபைக்குச் செல்வேன். உங்கள் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல் என்னால் அமைதியை எட்ட முடியுமென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் பலன்களைத் தரவல்ல தகுதியுடைய ஒரு பெரும் அறச்செயல் எனதாகும். குருக்கள் {கௌரவர்கள்}, கோபத்தால் எரிந்து கொண்டிருக்கும் ஸ்ருஞ்சயர்கள், பாண்டவர்கள், திருதராஷ்டிரர்கள், ஏன், உண்மையில் இந்த முழு உலகையும் கூட மரண வலையில் இருந்து காத்தவனாவேன்" என்று பதிலுரைத்தான் {கிருஷ்ணன்}.
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "நீ துரியோதனனுக்கு நல்லதை அறிவுறுத்தினாலும், உனது வார்த்தைகளுக்கு ஏற்ப அவன் செயல்படவே மாட்டான். குருக்களிடம் {கௌரவர்களிடம்} நீ செல்வதை நான் விரும்பவில்லை. துரியோதனனின் ஆணைக்குக் கீழ்ப்படியும் இவ்வுலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரும் அங்கே கூடியிருக்கிறார்கள். ஓ! கிருஷ்ணா, நீ அவர்களுக்கு மத்தியில் செல்வதை நான் விரும்பவில்லை. உனக்கு ஏதாவது குறைவு {அங்கே} உண்டாகுமானால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, இன்பம் என்ன? அதன்மூலமாகக் {உனக்கு ஏற்படும் குறைவால் எங்களுக்குக்} கிடைக்கும் தெய்வீகத்தன்மையும், தேவர்களின் அரசுரிமையும் கூட எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது" என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} பாவம் நிறைந்த தன்மையை நான் அறிவேன். ஆனால், அங்கே செல்வதால், பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரின் பழிச்சொல்லிலிருந்தும் நாம் தப்புவோம். சிங்கத்தின் முன்னிலையில் பிற விலங்குகளைப் போல, பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும் கூடி வந்தாலும் கூட, கோபத்தில் இருக்கும் என்னிடம் போரில் நிலைத்து நிற்க முடியாது. அவர்கள் எனக்கு ஏதாவது தீங்கைச் செய்தார்களெனில், நான் குருக்கள் அனைவரையும் எரித்துவிடுவேன். இதுவே எனது நோக்கம். ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, அங்கே நான் செல்வது கனியற்றதாகாது. ஏனெனில், நமது நோக்கம் நிறைவேறவில்லை என்றாலும் கூட, நாம் அனைத்துப் பழிகளில் இருந்தும் தப்பலாம்" என்றான் {கிருஷ்ணன்}.
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! கிருஷ்ணா, நீ விரும்புவதைச் செய். நீ அருளப்பட்டிரு. குருக்களிடம் {கௌரவர்களிடம்} செல். வெற்றியோடும், செழிப்போடும் நீ திரும்பவதைக் காண்பேன் என நான் நம்புகிறேன். ஓ! தலைவா {கிருஷ்ணா}, பரதனின் மகன்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடனும், மனநிறைவுடனும் ஒன்றாகச் சேர்ந்து வாழும்படிக்குக் குருக்களிடம் சென்று அமைதியை நிலைநாட்டுவாயாக. நீ எங்களுக்குச் சகோதரனும், நண்பனுமாவாய். பீபத்சுவைப் {அர்ஜுனனைப்} போல, நீ எனது அன்புக்குரியவனுமாவாய். உன்னிடம் இருக்கும் எங்களுக்கான ஆர்வத்தைப் புறக்கணிக்க மாட்டோம். உன்னிடம் நாங்கள் அவ்வளவு நெருக்கத்தைக் கொண்டுள்ளோம்.
நீ எங்களையும் அறிவாய், எங்கள் பகைவரையும் அறிவாய். எங்கள் காரியங்கள் என்ன என்பதை நீ அறிவாய், என்ன பேச வேண்டும் என்பதையும் நீ அறிவாய். ஓ! கிருஷ்ணா, எங்களுக்கு நன்மை தரக்கூடிய வார்த்தைகளை நீ சுயோதனனிடம் {துரியோதனனிடம்} பேசுவாயாக. (வெளிப்படையான) பாவத்தாலோ, வேறு எந்தப் பிற வழிகளிலோ அமைதி நிறுவப்பட்டாலும், ஓ! கேசவா {கிருஷ்ணா}, நமது நன்மைக்கு வழிகோலும் வார்த்தைகளையே பேசுவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.