Aryaka's grandson Sumukha! | Udyoga Parva - Section 103 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –32)
பதிவின் சுருக்கம் : மாதலிக்கு நாரதர் நாகலோகத்தைச் சுற்றிக் காட்டி விளக்கியது; வாசுகியின் பெருமை மற்றும் தன்மை, நாகர்களின் தன்மைகள், மற்றும் நாகர்களில் புகழ்பெற்றவர்களின் பெயர்கள் குறித்தும் மாதலிக்கு நாரதர் சொன்னது; நாகன் சுமுகன் தனது மகளுக்குத் தகுந்தவனாக இருப்பான் என மாதலி சொன்னது; சுமுகன் பற்றி நாரதர் மாதலிக்கு உரைப்பது...
நாரதர் {மாதலியிடம்} சொன்னார், "நீ காணும் இது, தேவர்கள் தலைவனின் {இந்திரனின் தலைநகரமான} அமராவதியை ஒத்திருக்கும் நகரங்களில் முதன்மையான நகரமாகும். இந்நகரம் போகவதி என்ற பெயரால் அறியப்படுகிறது. இது நாகர்கள் மன்னன் வாசுகியால் ஆளப்படுகிறது. கடும் தவங்களில் முதன்மையான தவத்தின் விளைவாகப் பெரும்பரப்புடன் கூடிய பூமிதேவியைத் தாங்க இயன்ற அந்தச் சேஷன் {வாசுகி} இங்கே வசிக்கிறான். அவனது உடல் வெண்மலையைப் போன்றதாகும். தெய்வீக ஆபரணங்களைப் பூண்டவனான அவனுக்கு {வாசுகிக்கு} ஆயிரம் {1000} தலைகள் உண்டு. நெருப்புத் தழல்கள் போன்ற சுடர்மிக்க நாக்குகளைக் கொண்ட அவன் {வாசுகி} பெரும்பலம் கொண்டவனாவான்.
சுரசையின் மகன்களும், பல்வேறு வடிவங்கள் கொண்டவர்களும், விதவிதமான ஆபரணங்களைப் பூண்டவர்களும், ரத்தினங்கள் {நாகரத்தினம்}, சுவஸ்திகா {சுவஸ்திகாரேகை}, {காரேகை}, வட்டங்கள் {சக்ரரேகை}, நீர்ப்பாத்திரங்கள் {கமண்டலுரேகை} ஆகிய குறிகளைத் தாங்கியவர்களுமான எண்ணிலடங்கா நாகர்கள் இங்கே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சிலர் ஆயிரம் தலைகளுடனும், சிலர் ஐநூறுடனும் {500}, சிலர் மூன்று {3} தலைகளுடனும் இருக்கின்றனர். சிலர் இரண்டும் {2}, சிலர் ஐந்து {5} தலைகளும் கொண்டுள்ளனர். சிலர் ஏழு {7} முகங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் மலைகளை நிகர்த்த பெரும் உடல்களுடன் பூமியில் நீண்டு கிடக்கின்றனர். பல ஆயிரங்களாகவும், பத்து லட்சங்களாகவும், பத்து கோடிகளாகவும் அவர்கள் இருக்கிறார்கள். உண்மையில், ஒரே குலத்தைச் சேர்ந்த அவர்களை எண்ணவே முடியாது. எனினும், அவர்களில் புகழ்பெற்ற ஒரு சிலரின் பெயர்களை நான் சொல்கிறேன் கேள்.
வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், காளீயன், நகுஷன், {கம்பளன்}, அஸ்வதரன், பாக்யகுண்டன், மணி, அபூரணன், ககன், வாமனன், எலபத்திரன், குகுரன், குகுணன், ஆர்யகன், நந்தகன், கலசன், போதகன், கலிலாஸகன், பிஞ்சரகன், ஐராவதன், சுமனோமுகன், ததிமுகன், சங்கன், நந்தன், உபநந்தகன், ஆப்தன், கோடரகன், சிகி, நிஷ்தூரகன், தித்திரி, ஹஸ்திபத்திரன், குமுதன், மயிலப்பிண்டகன், பத்மர்கள் இருவர், புண்டரீகன், புஷ்பன், முத்கரபர்ணகன், கரவீரன், பீதரகன், ஸம்விருத்தன், விருத்தன், பீண்டாரன், பில்வபத்ரன், மூஷிகாதன், சிரீஷகன், திலீபன், சங்க-சீர்ஷன், ஜியோதிஷகன், அபராஜிதன், கௌரவ்யன், திருதராஷ்டிரன், குஹுரன், கிருசகன், விரஜஸ், தாரணன், சுபாகு, முகரன், ஜயன், பிதிரன், அந்தன், விசுண்டி, விரஸன், சுரஸன் ஆகியோரே அவர்கள். காசியபர் மகன்களில் இன்னும் பலரும் இவர்களும் இருக்கின்றனர். ஓ! மாதலி, நீ தேர்ந்தெடுக்கும் வகையில் இங்கே யாராவது இருக்கிறார்களா என்று பார்?" என்றார் {நாரதர்}.
கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "அதேவேளையில், மாதலி, அருகே ஓரிடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நபரைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பேசுவதை நாரதர் நிறுத்தியதும், மனநிறைவு கொண்ட அந்தத் தெய்வீகத் தேரோட்டி {மாதலி} அந்த முனிவரிடம் {நாரதரிடம்}, "கௌரவ்யன் வம்சாவளியைச் சார்ந்த ஆர்யகனின் முன்பு நின்று கொண்டிருப்பவனும், காந்தியுள்ளவனும், அழகும் இளமையும் பொருந்தியவனுமான இந்த இனியவன் எக்குலத்தைச் சார்ந்தவன்? இவனுடைய தந்தையும் தாயும் யார்? எந்த நாகக் குலத்தைச் சேர்ந்தவன் இவன்? உண்மையில், பெரிய கொடிக்கம்பம் {த்வஜம்} போன்றிருக்கும் இவன் எந்த வம்சாவளியைச் சேர்ந்தவன்? இவனது புத்திக்கூர்மை, பொறுமை, அழகு, இளமை ஆகியவற்றின் விளைவால், ஓ! தெய்வீக முனிவரே {நாரதரே}, எனது இதயம் அவன்பால் ஈர்க்கப்படுகிறது. இந்த இளைஞனே என் {மகள்}குணகேசிக்குச் சிறந்த கணவனாக இருப்பான்" என்றான் {மாதலி}.
கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "சுமுகன் என்று அழைக்கப்படும் நாகனைப் பார்த்து மாதலி அடைந்த மனநிறைவைக் கண்ட நாரதர், அவனுடைய பெருமையையும், பிறப்பையும் செய்கைகளையும் தெரிவித்தார். அவர் {நாரதர் மாதலியிடம்}, "ஐராவதனின் குலத்தில் பிறந்த இந்த நாகர்களின் இளவரசன் சுமுகன் என்ற பெயர் கொண்டவனாவான். இவன் ஆர்யகனுக்குப் பிடித்தமான பேரனும், வாமனனின் மகளுடைய மகனும் ஆவான். ஓ! மாதலி, இந்த இளைஞனின் {சுமுகனின்} தந்தை, சிகுரன் என்று அழைக்கப்பட்ட நாகனாவான். சமீபத்தில்தான் அவன் {சிகுரன்} வினதையின் மகனால் {கருடனால்} கொல்லப்பட்டான்" என்றார் {நாரதர்}.
இதைக்கேட்ட மாதலி மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். பிறகு நாரதரிடம் பேசிய அந்தத் தேரோட்டி {மாதலி}, "ஓ! ஐயா, நாகர்களில் சிறந்த இவன் {சுமுகன்}, எனது மருமகனாவதற்கு மிகவும் ஏற்றவனாக இருக்கிறான். அவனை அடைய ஒரு முயற்சி செய்யும். ஏனெனில், ஓ! முனிவரே, நான் எனது அன்புக்குரிய மகளை {குணகேசியை} இந்த நாகனுக்குக் கொடுக்கும் நினைப்பே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதே" என்றான் {மாதலி}.