Hansika supports the southern quarter! | Udyoga Parva - Section 102 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –31)
பதிவின் சுருக்கம் : மாதலிக்கு நாரதர் ரசாதலத்தைச் சுற்றிக் காட்டி விளக்கியது; சுரபி, சுரூபை, ஹம்சிகை, சுபத்ரை, சர்வகாமதுகை போன்ற பசுக்களையும், பாற்கடலைச் சுற்றி வசிக்கும் பேனபர்கள் என்ற முனிவர்களைக் குறித்தும் மாதலிக்கு நாரதர் சொன்னது...
நாரதர் {இந்திரனின் தேரோட்டி மாதலியிடம்} சொன்னார், "நான் இப்போது இருக்கும் இடம் ரசாதலம் என்று அழைக்கப்படுகிறது. இது பூமிக்கு அடியில் ஏழாவது அடுக்காக இருக்கிறது. அமிர்தத்தில் இருந்து பிறந்தவளும், பசுக்கள் அனைத்திற்கும் தாயானவளுமான சுரபி {காமதேனு} இங்கே வசிக்கிறாள். பூமியில் உள்ள சிறந்த பொருட்களின் சாரத்தால் {பூமியின் சாரமான புலம் முதலியவற்றில் உண்டான ஆறு ரசங்களின் சாரத்தால்} அவள் எப்போதும் பாலைத் தருகிறாள். (பேசப்பட்டுவரும்) ஆறு வெவ்வேறு வகையான சுவைகளின் சாரத்தில் இருந்து எழுந்த அது {பால்}, அற்புத சுவை கொண்டதாக இருக்கிறது. அமிர்தத்தைக் குடித்து நிறைந்து, சிறந்த பொருட்களைக் கக்கும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} வாயில் இருந்து பழங்காலத்தில் எழுந்தவள் இந்தக் களங்கமற்ற சுரபியாவாள்.
இவளது பாலின் ஒரு தாரை மட்டுமே, பூமியில் விழுந்தது. அதுவே, தற்போது புனிதமானதாகவும், அற்புதமானதாகவும் அறியப்படும் "பாற்கடலை" உண்டாக்கியது. அந்தக் கடலின் விளிம்புகள். மலர்களின் கச்சையை {மலர்மாலையை} ஒத்திருக்கும் வெண்ணுரையால் எப்போதும் மூடப்பட்டிருக்கின்றன. நுரையைக் குடிப்பவர்கள் {பேனபர்கள்} என்ற பெயரில் அறியப்படும் சிறந்த தவசிகள், அந்த நுரையை மட்டுமே உண்டு இந்தக் கடலைச் சுற்றி வசிக்கின்றனர். ஓ! மாதலி, அந்த நுரையைத் தவிர வேறு எதையும் உண்டு வாழாததால், அவர்கள் நுரையைக் குடிப்பவர்கள் {பேனபர்கள்} என்று அழைக்கப்படுகிறார்கள் [1]. கடுமையான தவங்களில் ஈடுபடும் அவர்களைக் கண்டு தேவர்களும் அஞ்சுவார்கள் என்று அறியப்படுகிறது.
[1] நுரை எனும் பேனத்தைக் குடிப்பவர்கள், ஆதலால், இம்முனிவர்கள் பேனபர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
ஓ! மாதலி, அவளிடம் {சுரபியிடம்} இருந்து, நான்கு திக்குகளைத் தாங்கும் நான்கு பிற பசுக்களும் பிறந்தன. எனவே அவர்கள் திக்குகளைத் தாங்குபவர்கள் என்று (திக்பலி என்று) அழைக்கப்படுகிறார்கள். சுரபியிடம் பிறந்து கிழக்குத் திசையைத் தாங்குபவள் சுரூபை {Surupa} என்று அழைக்கப்படுகிறாள். தென்திசையைத் தாங்குபவள் ஹம்சிகை {Hansika} என்று அழைக்கப்படுகிறாள். ஓ! மாதலி, வருணனால் ஆளப்படும் மேற்குத் திசையைத் தாங்கும் அண்ட வடிவு கொண்ட ஒப்பற்ற பசு, சுபத்ரை என்ற பெயரால் அறியப்படுகிறாள். அறம் சார்ந்த பகுதியை {தர்மம் சார்ந்த பகுதியை} உள்ளடக்கியதும், பொக்கிஷங்களின் தலைவன் குபேரன் பெயரால் அழைக்கப்படுவதுமான வட திசை, சர்வகாமதுகை என்ற பெயருடைய பசுவால் தாங்கப்படுகிறது.
அசுரர்களோடு சேர்ந்த தேவர்கள், மந்தரமலையை மத்தாகக் கொண்டு, கடலின் நீரைக் கடைந்து, வருணி எனும் மது, லட்சுமி {என்றழைக்கப்படும் செழிப்பு மற்றும் அருளின் தேவி), அமிர்தம், குதிரைகளின் இளவரசன் உச்சைஸ்ரவம், ரத்தினங்களில் சிறந்த கௌஸ்துபம் ஆகியவற்றை அடைந்தனர். ஓ! மாதலி, இந்த அருமையான பொருட்களைத் தந்த அந்த நீர் {பாற்கடலின் நீர்} இந்த நான்கு பசுக்களின் பால் கலந்தவையே ஆகும்.
சுரபியைப் பொறுத்தவரை, அவள் தரும் பால் சுவாகாவில் {சுதை = நாகர் உணவு} வாழ்பவர்களுக்குச் சுவாகாவாவும், சுவாதாவில் {சுவதை = பிதிரர் [பிதிர் தேவதை] உணவு} வாழ்பவர்களுக்குச் சுவாதாவாவும், அமிர்தத்தில் {தேவர் உணவு} வாழ்பவர்களுக்கு அமிர்தமாகவும் ஆகிறது. பழங்காலத்தில் ரசாதலத்தில் வாழ்ந்தவர்களால் பாடப்பட்ட ஈரடிச் செய்யுளொன்றைக் கல்விமான்கள் இந்த உலகத்தில் உரைப்பதை இன்னும் கேட்க முடிகிறது. "நாகர்கள் பகுதியிலோ, சொர்க்கத்திலோ, விமானத்திலோ, திரிபிஸ்தபத்திலோ இருப்பவர்கள் கூட ரசாதலவாசிகள் போல இன்பமாக இருப்பதில்லை" என்பதே அந்த ஈரடிச் செய்யுளாகும்.