Garuda described the north! | Udyoga Parva - Section 111 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –40)
பதிவின் சுருக்கம் : வடக்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது...
கருடன் {முனிவர் காலவரிடம்} சொன்னான், "ஓ! அந்தணா, ஒருவன் இங்கே முக்தி அடைவதால் இந்தத் திசை பாவத்தில் இருந்து அவனைக் காக்கிறது. இதற்காகவே இத்திசை சக்திவாய்ந்தது (உத்தாரணம் = தீங்கிலிருந்து மீட்டல் = uttarana) என்பதற்காகவே இத்திசை வடக்கு (உத்தரம்) என்று அழைக்கப்படுகிறது. ஓ! காலவா, செல்வங்கள் அனைத்தின் வசிப்பிடம் இங்கே கிழக்காகவும் மேற்காகவும் வடக்கில் நீண்டு கிடப்பதால், சில சமயங்களில் இந்த வடக்குப் பகுதி மத்திய பகுதி (மத்திமம்) என்றும் அழைக்கப்படுகிறது.
ஓ! இருபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} காளையே {காலவா}, இந்தப்பகுதியே அனைத்துக்கும் மேன்மையானது. இனிமையற்றவர்களோ, கட்டற்ற உணர்வுகள் கொண்டவர்களோ, அநீதிமிக்கவர்களோ இங்கே வாழ இயலாது. இங்கேதான், பதரி என்று அழைக்கப்படும் ஆசிரமத்தில், நாராயணனின் சுயமான கிருஷ்ணனும், மனிதர்களில் மேன்மையான ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, (படைப்பாளனான) பிரம்மனும் நித்தியமாக வசிக்கிறார்கள். {நரன், நாராயணன், பிரம்மன் ஆகியோர் வசிக்கின்றனர்}.
இங்கே, இமயத்தின் மார்பில், யுகத்தின் முடிவில், நெருப்பு போன்ற பெரும் பிரகாசத்துடன் மகேஸ்வரன் சுடர்விட்டு எரிகிறான். புருஷனாக {காலப் புருஷனாக}, அவன் பிராக்ருதியுடன் (அண்டத்தின் தாயுடன்) விளையாடிக் கொண்டிருக்கிறான். நரன் மற்றும் நாராயணனைத் தவிர முனிவர்களின் பல்வேறு வர்க்கங்களாலோ, வாசவனைத் {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, சித்தர்களாலோ காணமுடியாதவனாக அவன் {அந்த சிவன்} இங்கே இருக்கிறான். மாயையால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும், ஆயிரம் தலைகளும், ஆயிரம் கால்களும் கொண்ட நித்தியமான விஷ்ணு மட்டுமே {நரன் மற்றும் நாராயாணனைத் தவிர்த்து} அவனைக் காண முடியும்.
இங்கேதான் மறுபிறப்பாள வகை {அந்தண வகை} முழுவதற்கும் அரசனாகச் சந்திரன் நியமிக்கப்பட்டான். ஓ! பிரம்மத்தை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {காலவா}, இங்கேதான் கங்கையைத் தனது தலைக்குள் முதலில் ஏற்றிய மஹாதேவன் {சிவன்}, பிறகு, (புனித ஓடையாக) சொர்க்கத்தில் இருந்து மனிதர்களின் உலகில் அவளை {கங்கையை} விழ வைத்தான். இங்கேதான் (உமா) தேவி, மகேஸ்வரனை (தனது தலைவனாக அடைய) அடையும் தனது விருப்பத்தால் கடும் தவம் செய்தாள். இந்தப் பகுதியில்தான் காமன், (சிவனின்) கோபம், இமயம், உமை ஆகிய அனைவரும் ஒன்றாகிப் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.
இங்கேதான், கயிலாயத்தின் மார்பில், ஓ! காலவா, ராட்சசர்கள், யக்ஷர்கள் மற்றும் கந்தர்வர்களை ஆள குபேரன் நிறுவப்பட்டான். இந்தப் பகுதியில்தான் (அந்தக் குபேரனின் நந்தவனமான) சித்திரரதம் இருக்கிறது. இங்கேதான் வைகனசர்களின் {என்ற முனிவர்களின்} ஆசிரமம் அமைந்திருக்கிறது.
ஓ! இருபிறப்பாளர்களில் காளையே {காலவா}, இங்கேதான் மந்தாகினி என்றழைக்கப்படும் தெய்வீக ஓடையும், மந்தர மலையும் காணப்படுகின்றன. ராட்சசர்களால் எப்போதும் பாதுகாக்கப்படும் சௌகந்த கனகம் என்று அழைக்கப்படும் நந்தவனம் இங்கேதான் இருக்கிறது. இங்கேதான் புசுமையான புல்லால் மூடப்பட்டிருக்கும் பல சமவெளிகளும், வாழைமரக் காடுகளும், சொதனகங்கள் என்று அழைக்கப்படும் தெய்வீக மரங்களும் இருக்கின்றன. இந்தப் பகுதியில்தான் ஓ! காலவா, தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், எப்போதும் விருப்பப்படி விளையாடுபவர்களுமான சித்தர்களின் வசிப்பிடங்கள் இருக்கின்றன. அவற்றில் இன்பத்திற்கான அனைத்துவிதமான பொருட்களும் நிறைந்திருக்கும்.
இங்கேதான் ஏழு முனிவர்களையும் {சப்தரிஷிகளையும்} அருந்ததியையும் காண முடியும். இங்கே தான் சுவாதி நட்சத்திரக்கூட்டத்தைக் காண முடியும். இங்கேதான் அது {சுவாதி நட்சத்திரம்} முதலில் காட்சியில் எழுகிறது {கண்ணுக்குத் தெரிகிறது}. இந்தப் பகுதியில் தான் பெரும்பாட்டனான பிரம்மன் யக்ஞத்தின் அருகில் {வேள்வி பொருந்திய வடிவில்} வசிக்கிறான். இந்தப் பகுதியில் தான் சூரியன், சந்திரன் மற்றும் பிற ஒளியுடல்கள் {நட்சத்திரங்கள், கோள்கள்} சுழல்வது தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.
ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, இந்தப் பகுதியில்தான், ஒப்பற்றவர்களும், உண்மை பேசுபவர்களுமான, தர்மர்கள் என்ற பெயரில் அறியப்படும் முனிவர்கள் கங்கையின் ஊற்றுக்கண்ணைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முனிவர்களின் தோற்றம், உருவத்தின் தன்மைகள், தவநோன்புகளை யாரும் அறிய மாட்டார்கள். அவர்களால் சுயமாகத் தங்கள் விருப்பத்தின் பேரில் படைக்கப்படுவதும், விருந்தோம்பலுக்காக வழங்கப்படுவதும், பரிமாறப்பட்டு, பயன்படுத்தப்படுவதுமான ஆயிரம் உணவு வகைகளின் தயாரிப்பு {அனைவருக்கும்} புதிராகவே இருக்கின்றன. ஓ! காலவா, இந்த முனிவர்களால் {தர்மர்களால்} பாதுகாக்கப்படும் இடத்தைக் கடக்க முயல்பவர்கள், ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே, அழிவார்கள் என்பது நிச்சயம். ஓ! அந்தணர்களில் காளையே {காலவா}, தெய்வீகமான நாராயணன் மற்றும் ஜிஷ்ணு என்று அழைக்கப்படும் நித்தியமான நரனைத் தவிர வேறு யாராலும் இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியைக் கடக்க முடியாது.
ஐலவிலனின் (குபேரனின்) வசிப்பிடமான கயிலாய மலைகள் இந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. வித்யுத்பிரபைகள் என்று அறியப்படும் பத்து அப்ரசஸ்களின் தோற்றம் இங்கேதான் நிகழ்ந்தது. ஓ! அந்தணா {காலவா}, (அசுர மன்னனான) பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் உலகை அளந்த விஷ்ணு, இந்த வடக்குப் பகுதி முழுமையையும் அளந்தான். அதனால் இந்த இடம் விஷ்ணுபாதம் என்று அழைக்கப்படுகிறது. அச்சந்தர்ப்பத்தில் அது விஷ்ணுவின் கால்தடம் என்றும் அழைக்கப்பட்டது.
ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, இங்கே, இந்தப் பகுதியில் உள்ள உசிரவிஜம் என்று அழைக்கப்படும் இடத்தில், தங்கத் தடாகத்தின் அருகில், மன்னன் மருத்தன், ஒரு வேள்வியைச் செய்தான். இங்கேதான் இமயம் தன்னிடம் உள்ள தங்கச்சுரங்கங்களை ஒப்பற்ற மறுபிறப்பாள முனிவரான ஜிமுதருக்குத் வெளிக்காட்டியது. அந்த ஜிமுதர் அந்தச் செல்வங்கள் அனைத்தையும் அந்தணர்களுக்கே கொடுத்தார். அவற்றைக் கொடுத்த பிறகு, அந்தப் பெரும் முனிவர், அவர்கள் அனைவரிடமும், அவை {அந்தத் தங்கங்கள்} தன் பெயராலே அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதுமுதல், அந்தச் செல்வங்கள் ஜைமுத தங்கம் என்ற பெயரால் அறியப்படுகின்றன.
இங்கே, இந்தப் பகுதியில்தான், ஓ! பாரதர்களில் காளையே [1], ஓ! காலவா, தினமும் காலையிலும் மாலையிலும், லோகபாலகர்கள், "எந்த நபரின் எந்தக் காரியத்தை நாம் பார்க்கலாம்?" என்று பிரகடனம் செய்து கொள்கின்றனர். இதற்காகவும், இன்னும் பிற சம்பவங்களுக்காகவும், ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, வடக்குப் பகுதி மற்ற பகுதிகள் அனைத்தையும் விட மேன்மையானதாக இருக்கிறது. இந்தப் பகுதி அனைத்திலும் மேன்மையானது (உத்தரம்) என்பதாலேயே, இது வடக்கு (உத்தரம்) என்று அழைக்கப்படுகிறது. ஓ! ஐயா, இப்படியே நான் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து திசைகளையும் உனக்கு விவரித்துவிட்டேன். எந்தப் பகுதியை நோக்கி நீ செல்ல விரும்புகிறாய்? ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, பூமியின் அனைத்துப் பகுதிகளையும் உனக்குக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்" என்றான் {கருடன்}.
[1] அந்தணர் ஒருவர், பாரதர்களில் காளையே என்று அழைக்கப்படுவதை அநேகமாக இங்கேதான் காண்கிறோம் என நினைக்கிறேன்.