Garuda and Galava met Yayati | Udyoga Parva - Section 114 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –43)
பதிவின் சுருக்கம் : கருடன் தனது நண்பனான யயாதி குறித்துக் காலவரிடம் சொன்னது; காலவரை யயாதியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து, காலவர் கேட்கும் குதிரைகளைத் தானமாகக் கொடுக்கும்படி யயாதியிடம் கேட்டது....
நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு, சிறகு படைத்த உயிரினங்களில் முதன்மையானவனான கருடன், உற்சாகமற்றிருந்த காலவரிடம், "பூமிக்கடியில் அக்னியினால் உண்டாக்கப்பட்டு, வாயுவினால் சோதிக்கப்படுவதாலும், பூமியே ஹிரண்மயமாயிருக்கிறது என்று சொல்லப்படுவதாலும், அந்தச் செல்வம் {தங்கம்} ஹிரண்யம் என்று அழைக்கப்படுகிறது. அந்தச் செல்வமே {தங்கமே} உலகத்தைத் தாங்கி வாழ்வை நிலைக்க வைக்கிறது. எனவே, அது தனம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தனை சேவைகளுக்காகவே அந்தத் தனம் {செல்வம்}, ஆதியில் இருந்து மூவுலகிலும் நிலைத்திருக்கிறது. குபேரனின் கையிருப்பை அதிகரிக்கும்பொருட்டு, பூரட்டாதியும் உத்திரட்டாதியும் கூடிய வெள்ளிக்கிழமையில் அக்னி தனது விருப்பத்தின் ஆணையால் செல்வத்தை உண்டாக்கி மனிதர்களிடம் அளித்தான். பூமிக்கடியில் இருக்கும் அந்தச் செல்வம் அஜைகபாதர்கள் மற்றும் அஹிர்ப்புதனியர் என்று அழைக்கப்படும் தேவர்களாலும், குபேரனாலும் காக்கப்படுகிறது. எனவே, ஓ! அந்தணர்களில் காளையே {காலவா}, அடைவதற்கு அரிதான அது மிக அரிதாகவே அடையப்படுகிறது. செல்வமில்லாமல், நீ வாக்குறுதியளித்திருக்கும் குதிரைகளை அடைவது இயலாது. எனவே, அரச முனிவர்களின் குலத்தில் பிறந்திருப்பவனும், தனது குடிமக்களை ஒடுக்காதவனுமான ஏதாவது ஒரு மன்னனிடம் {செல்வத்தை} இரந்து கேட்டு நமது நோக்கத்தில் வெற்றியடைவாயாக.
சந்திர குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் எனது நண்பனாக இருக்கிறான். நாம் அவனிடம் செல்வோம். ஏனெனில், பூமியில் உள்ளோர் அனைவரை விடவும், அவனே பெரும் செல்வத்தைக் கொண்டிருக்கிறான். அந்த அரச முனி யயாதி என்ற பெயரால் அறியப்படுகிறான். அவன் நகுஷனின் மகனுமாவான். அவனது ஆற்றல் கலங்கடிக்கப்பட முடியாததாக இருக்கிறது. நேரடியாக நீ கேட்டு, நானும் அதை நிர்பந்தித்தால், நாம் கேட்பதை அவன் {யயாதி} கொடுப்பான். ஏனெனில், பொக்கிஷத்தலைவனான குபேரன் கொண்டுள்ளதற்கு நிகரான அளவு அபரிமிதமான செல்வத்தை அவன் {யயாதி} கொண்டிருக்கிறான். ஓ! கற்றவனே, இப்படியே கொடையை ஏற்று, உனது ஆசானின் கடனை அடைப்பாயாக" என்றான் {கருடன்}.
இப்படியே பேசிக்கொண்டு, என்ன செய்யப்பட வேண்டும் என்பதைச் சிந்தித்த கருடனும் காலவனும், பிரதிஷ்டானம் என்று அழைக்கப்படும் தனது தலைநகரில் இருந்த மன்னன் யயாதியிடம் சேர்ந்தே சென்றனர். விருந்தோம்பலுடன் அவர்களை வரவேற்ற அந்த மன்னன் {யயாதி} அவர்களுக்கு அற்புதமான ஆர்கியாவையும், அவர்களது பாதங்களைக் கழுவி கொள்ள நீரையும் கொடுத்தான். பிறகு அந்த மன்னன் அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டான்.
அதன்பேரில் கருடன், "ஓ! நகுஷனின் மகனே {யயாதி}, காலவன் என்று அழைக்கப்படும் இந்தத் தவக்கடல் எனது நண்பனாவான். ஓ! ஏகாதிபதி, இவன் {காலவன்} விஸ்வாமித்ரரிடம் பல்லாயிரம் வருடங்களாகச் சீடனாக இருந்தான். இந்தப் புனித அந்தணன் {காலவன்}, தான் செல்ல விரும்பும் இடத்திற்கு விடைகொடுத்து விஸ்வாமித்ரரால் அனுப்பப்பட்ட போதும், அந்நேரத்தில் தனது ஆசானிடம், தனது குருதட்சணையைக் கொடுத்துவிட்டுச் செல்வதாகச் சொன்னான்.
இவனது ஏழ்மையை அறிந்து கொண்ட விஸ்வாமித்ரர் இவனிடம் {காலவனிடம்} எதையும் கேட்கவில்லை. ஆனால் இந்த அந்தணன் {காலவன்} மீண்டும் மீண்டும் கல்விக் கட்டணத்தைக் குறித்துச் சொன்னதும், சற்றே கோபப்பட்ட அந்த ஆசான் {விஸ்வாமித்திரர்}, "நல்ல வம்சாவளியைக் கொண்டதும், சந்திரப் பிரகாசம் கொண்டதும், ஒரு காதில் மட்டும் கருப்பு நிறம் கொண்டதுமான எண்ணூறு {800} குதிரைகளை எனக்குக் கொடு. ஓ! காலவா, நீ உனது ஆசானுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இதையே நீ கொடுப்பாயாக", என்று சொல்லிவிட்டார். இப்படியே தவத்தைச் செல்வமாகக் கொண்ட விசுவாமித்ரர் இவனிடம் கோபத்தில் சொல்லிவிட்டார்.
அதனால், இந்த அந்தணர்களில் காளை {காலவன்} பெரும் துயரத்தில் இருக்கிறான். தனது ஆசானின் {விஸ்வாமித்ரரின்} ஆணையை நிறைவேற்ற முடியாததால், இப்போது உனது பாதுகாப்பை நாடி வந்திருக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {யயாதி}, அவற்றை உன்னிடம் இருந்து பிச்சையாகப் பெற்று, மீண்டும் மகிழ்ச்சியை அடைந்து, தனது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய கடனை அடைத்து, தன்னை இவன் தவநோன்புகளுக்கு அர்ப்பணித்துக் கொள்வான்.
எனவே, அரச முனியாக இருக்கும் உனக்கு, தான் கொண்டிருக்கும் தவச் செல்வத்தில் ஒரு பகுதியைக் கொடுப்பதால், அவ்வகைச் செல்வத்தில் மேலும் செல்வந்தனாக இந்த அந்தணன் உன்னை ஆக்குவான். ஓ! மனிதர்களின் தலைவா, ஒரு குதிரையின் உடலில் எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ, ஓ! பூமியின் ஆட்சியாளா, அவ்வளவு அருள் உலகங்களையும், ஒரு குதிரையைக் கொடுப்பவன் அடைவான். இவன் {காலவன்} உன்னிடம் கொடை பெறுவதற்குத் தகுதியுடையவன் ஆவான். எனவே, சங்குக்குள் சேகரிக்கப்பட்ட பாலைப் போல உனது கொடை இந்த நேரத்தில் அவனுக்கு அமையட்டும்" என்றான் {கருடன்}.