"Call these tresses to thy mind" said Draupadi! | Udyoga Parva - Section 82 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –11)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் வார்த்தைகளைத் துரியோதனன் கேட்க மாட்டான் என்றும்; நாட்டைக் கொடுக்காத துரியோதனனிடம் சமாதானம் பேசுவது தகாது என்றும்; கொல்லத்தக்கவர்களைக் கொல்லாதிருப்பதும் பாவமே என்றும்; கிருஷ்ணனும் பாண்டவர்களும் உயிரோடு இருக்கும்போதே தனக்கு அவமதிப்பு நிகழ்ந்தது என்றும்; அதைச் செய்த துச்சாசனனின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்றும் திரௌபதி சொன்னது; அர்ஜுனனின் வில்திறத்தையும், பீமனின் பலத்தையும் இகழ்ந்து கிருஷ்ணனிடம் திரௌபதி சொன்னது; திரௌபதிக்கு நீதி செய்வதாகக் கிருஷ்ணன் உறுதியளித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அறமும் பொருளும் நிறைந்த மன்னரின் {யுதிஷ்டிரரின்} அமைதிநிறைந்த வார்த்தைகளைக் கேட்டவளும், பெரும் துயரத்தில் இருந்தவளும், நீண்ட கூந்தலுடையவளும், மன்னன் துருபதனின் மகளுமான கிருஷ்ணை {திரௌபதி}, சகாதேவனையும், வலிமைமிக்கத் தேர் வீரனான சாத்யகியையும் புகழ்ந்தபடி, சாத்யகியின் அருகில் அமர்ந்திருந்த மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினாள்.
பீமசேனன் சமாதானம் அறிவிப்பதைக் கண்ட அந்தப் புத்திசாலிப் பெண் {திரௌபதி}, துயரம் மேலிட, கண்கள் குளமாக, "ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, ஓ! நீதிமானே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தனது ஆலோசகர்களுடன் கூடிய திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்களின் மகிழ்ச்சியை எப்படி ஏமாற்றுகரமாகத் திருடினான் என்பதை நீ அறிவாய். ஓ! தாசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, தனிப்பட்ட முறையில் மன்னரால் {திருதராஷ்டிரரால்} சஞ்சயனுக்குச் சொல்லப்பட்ட செய்தியை நீ அறிவாய்.
பதிலுக்குச் சஞ்சயனிடம் சொல்லப்பட்ட அனைத்தையும் நீ கேட்டாய். ஓ! பெரும் பிரகாசம் உடையவனே {கிருஷ்ணா}, "அவிஸ்தலம், விருகஸ்தலம், மாகந்தி, வாரணாவதம் மற்றும் ஐந்தாவதாக ஏதாவது ஒன்று என ஐந்து கிராமங்கள் மட்டும் எங்களுக்குக் கொடுக்கப்படட்டும்" என்ற வார்த்தைகளே சொல்லப்பட்டன. ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துரியோதனனுக்கும், அவனது ஆலோசகர்களுக்கும் உன்னால் சொல்லப்பட வேண்டியது என்று முன்னர்ச் சொல்லப்பட்ட செய்தி இதுவே.
ஆனால், ஓ! கிருஷ்ணா, ஓ! தாசார்ஹ குலத்தவனே, அடக்கமும், அமைதிக்கான ஆவலும் உடைய யுதிஷ்டிரரின் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி சுயோதனன் {துரியோதனன்} நடக்கமாட்டான். ஓ! கிருஷ்ணா, நாட்டைக் கொடுக்காமல் சமாதானத்தை அடைய துரியோதனன் விரும்பினால், அத்தகு சமாதானத்தைச் செய்து கொள்ள அங்குச் செல்ல வேண்டிய தேவையே இல்லை. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, கோபத்துடன் இருக்கும் திருதராஷ்டிரரின் படையை எதிர்கொள்ளச் சிருஞ்சயர்களுடன் கூடிய பாண்டவர்கள் இயன்றவர்களே. அவர்கள் {கௌரவர்கள்} சமரசக் கலைகளுள் எதற்கும் உடன்படாமல் இருக்கிறார்கள் என்றால், இனியும் அவர்களுக்கு நீ கருணை காட்டுவது முறையாகாது.
ஓ! கிருஷ்ணா, தன் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் ஒருவன், சமரசத்தின் மூலமாகவோ, கொடைகளின் மூலமாகவோ சமாதானத்துக்கு உடன்படாத தன் எதிரிகளைக் கடுமையாக நடத்த வேண்டும். எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்ட அச்யுதா {கிருஷ்ணா}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் உதவியைப் பெற்ற நீ, கடுமையான தண்டனைக்குத் தகுந்த அவர்களை விரைவாகத் தண்டிக்க வேண்டும். உண்மையில், அது பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} நன்மை செய்ததாகவே ஆகும். உனக்கும் அது புகழைக் கொடுக்கும். ஓ! கிருஷ்ணா, சாதிக்கப்பட்டால், அதுவே க்ஷத்திரிய குலம் முழுமைக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கும்.
பேராசை கொண்டிருப்பவன் க்ஷத்திரியனாக இருப்பினும், பிராமணனைத் தவிர வேறு எந்த வகையைச் சார்ந்தவனாக இருப்பினும், பாவம் நிறைந்த அவன், க்ஷத்திரிய வகைக்கான கடமைகளில் உண்மையாக இருக்கும் ஒருவனால் நிச்சயம் கொல்லத்தக்கவனே ஆவான். ஓ! ஐயா, பிற வகையைச் சேர்ந்த அனைவருக்கும் பிராமணர்களே ஆசான்களாக இருப்பதாலும், அனைத்தையும் பகிர்ந்து கொள்வதில் முதலாக இருப்பதாலும் பிராமணர்கள் இதில் தவிர்க்கப்படலாம்.
ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சாத்திரங்கள் அறிந்த நபர்கள், கொல்லத்தகாதவர்களைக் கொல்வது பாவம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். எனவே, கொல்லத்தக்கவர்களைக் கொல்லாதிருப்பதும் அதற்கு நிகரான பாவமே.
ஆகவே, ஓ! கிருஷ்ணா, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் படைகளோடு சேர்ந்து, உன்னைப் பாவம் அண்டாதவாறு செயல்படுவாயாக. உன் மீதுள்ள அதீத நம்பிக்கையாலேயே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சொன்னதையே நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, என்னைப் போன்ற பெண் இந்தப் பூமியில் வேறு எவள் இருக்கிறாள்? வேள்விப் பீடத்தில் உதித்தவள் நான், மன்னன் துருபதரின் மகள் நான். ஓ! கிருஷ்ணா, உனது அன்பிற்குரிய நண்பனான திருஷ்டத்யும்னனின் தங்கை நான். திருமணத்தின் மூலமாக அஜமீட குலத்துப் பெண்ணாகவும், ஒப்பற்ற பாண்டுவின் மருமகளாகவும் ஆனவள் நான். காந்தியில் ஐந்து இந்திரர்களுக்கு ஒப்பான பாண்டு மகன்களின் ராணி நான். இந்த ஐந்து வீரர்களால் {பாண்டவர்களால்}, ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்கத் தேர்வீரர்களான ஐந்து மகன்களைப் பெற்றேன். அபிமன்யுவைப் போன்றே அவர்களும் உனக்குத் தார்மீக அடிப்படையில் கட்டுண்டவர்களே.
இப்படிப்பபட்ட நான், ஓ! கிருஷ்ணா, நீ வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, தலைமுடியைப் பற்றிச் சபைக்கு இழுத்து வரப்பட்டு, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} கண் முன்பாகவே அவமதிக்கப்பட்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டு மகன்களும், பாஞ்சாலர்களும், விருஷ்ணிகளும் உயிரோடு இருக்கும்போதே, அந்த இழிந்தவர்களால் சபையின் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டு, அடிமையைப் போல நடத்தப்பட்டேன். இதைக் கண்டும் பாண்டவர்கள் அனைவரும் கோபப்படாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். அப்போதே நான் உன்னை என் இதயத்தால் {மனதால்} அழைத்தேன்.
ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, "என்னைக் காப்பாற்று, ஓ! என்னைக் காப்பாற்று" என்று சொல்லி {உன்னை} அழைத்தேன். பிறகு ஒப்பற்ற மன்னரும், எனது மாமனாருமான திருதராஷ்டிரர், என்னிடம், "ஓ! பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, ஏதாவது வரம் கேள். நீ எனது கையால் வரங்களையும், ஏன் மரியாதையையும் கூடப் பெறத் தகுந்தவளாவாய்" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட நான், "தேர்கள் மற்றும் ஆயுதங்களுடன் பாண்டவர்கள் விடுதலை பெற்றவர்களாகட்டும்" என்று கேட்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அதனால் பாண்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், காட்டுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது இந்தச் சோகங்கள் அனைத்தையும் நீ அறிவாய். ஓ! தாமரை போன்ற கண்களை உடையவனே {கிருஷ்ணா}, இந்தத் துயரில் இருந்து எனது கணவர்கள், உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய என்னைக் காப்பாயாக. ஓ! கிருஷ்ணா, தார்மீக அடிப்படையில் நான் பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரர் ஆகிய இருவருக்கும் மருமகளாவேன். அப்படியிருந்தும், நான் வலுக்கட்டாயமாக அடிமையாக்கப்பட்டேன். ஓ! கிருஷ்ணா, அந்தத் துரியோதனன் இந்தக் கணம் வரை உயிரோடு இருக்கிறான், பார்த்தரின் {அர்ஜுனரின்} விற்திறத்திற்கு ஐயோ, பீமசேனரின் பலத்திற்கு ஐயோ. உனது கைகளாலான எந்த உதவிக்காவது நான் தகுந்தவளென்றால், உனக்கு என் மீது ஏதாவது கருணை இருந்தால், ஓ! கிருஷ்ணா, உனது கோபம் திருதராஷ்டிரர் மகன்கள் மீது திரும்பட்டும்" என்றாள் {திரௌபதி}
திரௌபதி துகிலுரித்தல் சம்பவம் குறித்து இங்கே ஏதும் குறிப்பில்லை.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்னதும், தாமரை இதழ்களைப் போன்ற பெரியதும் கருமையானதுமான கண்களைக் கொண்ட அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, கண்ணீரால் குளித்தாள். சுருள் முனை கொண்டதும், அடர்நீல நிறம் கொண்டதும், அனைத்து நறுமணப் பொருட்களால் நறுமணமூட்டப்பட்டதும், அனைத்து மங்கலக்குறிகளைக் கொண்டதும், பின்னலாகக் கட்டப்பட்டிருந்தாலும், பெரும்பாம்பு போலப் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருந்ததுமான தனது கூந்தலைத் தன் இடது கையில் பற்றிக் கொண்டு, பெண் யானையைப் போல நடந்து, தாமரைக் கண் கிருஷ்ணனை அணுகி, "எதிரியுடன் சமாதானம் கொள்ள ஆவலாய் இருக்கும் தாமரைக் கண் கொண்டவனே {கிருஷ்ணா}, நீ எந்தச் செயலைச் செய்தாலும், துச்சாசனனின் முரட்டுக் கைகளால் பற்றப்பட்ட இந்தக் கூந்தலை நினைத்துச் செயல்படுவாயாக!
ஓ! கிருஷ்ணா, பீமரும், அர்ஜுனரும் சமாதானத்திற்கு ஏங்கும் அளவிற்குத் தாழ்ந்தவர்கள் ஆனார்கள் என்றால், போர்க்குணமிக்கத் தனது மகன்களுடன் வயது முதிர்ந்த எனது தந்தை {துருபதர்} எனக்காகப் போர்க்களத்தில் பழி தீர்ப்பார். ஓ! மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பெரும் சக்தி கொண்ட எனது ஐந்து மகன்களும் அபிமன்யுவைத் தங்கள் தலைமையில் கொண்டு, கௌரவர்களுடன் போரிடுவார்கள். துச்சாசனின் கரிய கைகள் அவனது உடலில் இருந்து அறுக்கப்பட்டு, அணுக்களாக நொறுங்காமல் என்னுடைய இதயத்துக்கு என்ன அமைதி கிடைக்கும்?
எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் போன்ற எனது கோபத்தை என் இதயத்தில் மறைத்துக் கொண்டு, நல்ல காலங்களை எதிர்பார்த்து, நீண்ட பதிமூன்று {13} வருடங்களை நான் கழித்திருக்கிறேன். இப்போதோ பீமரின் சொற்களெனும் கணைகளால் துளைக்கப்பட்ட எனது இதயம் உடையும் நிலையில் இருக்கிறது. ஏனெனில், பீமர் இப்போது அறநெறியின் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார்" என்றாள் {திரௌபதி}. கண்ணீரால் தடைபட்ட குரலுடன் இவ்வார்த்தைகளைச் சொன்ன நீண்ட கண்களையுடைய கிருஷ்ணை {திரௌபதி}, அதிரவைக்கும் விம்மல்களோடும், கண்ணத்தில் உருண்டோடும் கண்ணீரோடும் உரக்க அழத்தொடங்கினாள். திரண்டு உருண்ட இடையைக் கொண்ட அந்த மங்கை {திரௌபதி}, நெருப்பு நீர் போலச் சூடாகச் சிந்திய கண்ணீரால் தனது நெருக்கமான ஆழமான மார்பகத்தை நனைக்கத் தொடங்கினாள்.
வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, அவளுக்கு {திரௌபதிக்கு} ஆறுதல் தரும் வார்த்தைகளில் பேசினான். "ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, பாரதக் குலத்தின் மங்கையர், நீ அழுவதைப் போலவே அழுவதை, நீ விரைவில் காண்பாய். ஓ! மருட்சியுடையவளே {திரௌபதி}, உறவினர்களும், நண்பர்களும் கொல்லப்பட்ட நிலையில் அவர்கள் உன்னைப் போலவே அழுவார்கள். ஓ! மங்கையே {திரௌபதி}, நீ யாரிடம் கோபம் கொண்டிருக்கிறாயோ, அவர்களின் உறவினர்களும் வீரர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள் {என்று நினைத்துக் கொள்}. யுதிஷ்டிரரின் கட்டளையின் பேரிலும், பீமர், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களுடனும், விதிக்கு ஏற்புடைய வகையில், படைப்பாளனால் விதிக்கப்பட்ட அனைத்தையும் நான் சாதிப்பேன்.
அவர்களுக்கான நேரம் வந்துவிட்டது. திருதராஷ்டிரரின் மகன்கள் எனது வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கவில்லையெனில், நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகும்படி, கீழே பூமியில் அவர்கள் விழுவது நிச்சயம். இமய மலைகள் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்ளலாம், பூமியானவள் தன்னை நூறு துண்டுகளாகப் பிளந்து கொள்ளலாம். கோடிக்கணக்கான நட்சத்திரங்களுடன் கூடிய வானம் விழுந்து போகலாம், ஆனால் எனது வார்த்தைகள் பொய்க்காது. உனது கண்ணீரை நிறுத்து. ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, தங்கள் எதிரிகளைக் கொன்று, செழிப்பால் மகுடம் சூட்டப்பட்டவர்களாக நீ உனது கணவர்களை விரைவில் காண்பாய் என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.