"Bind Duryodhana" said Krishna! | Udyoga Parva - Section 128 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –57)
பதிவின் சுருக்கம் : துரியோதனனை நிந்தித்த கிருஷ்ணன், பாண்டவர்களுக்கு அவன் செய்த தீமைகளைச் சுட்டிக் காட்டியது; சமாதானம் செய்யவில்லையெனில் துரியோதனனைக் கௌரவர்களே கட்டிப் போட்டுப் பாண்டவர்களிடம் ஒப்படைப்பார்கள் என்று துரியோதனனிடம் துச்சாசனன் சொன்னது; கௌரவச்சபையை விட்டு துரியோதனன் வெளியேறியது; குலத்தின் நன்மைக்காகத் துரியோதனனைக் கட்டி பாண்டவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சமாதானத்தை நிறுவுவதே நல்லது எனக் கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கோபத்தில் சிவந்த கண்களுடன் இருந்த தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, (ஒரு கணம்) சிந்தித்து, குருக்களின் சபையில் இருந்த துரியோதனனிடம், "வீரர்களின் படுக்கையை நீ விரும்புகிறாயா? அதை உன் ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்த்து நிச்சயமாக நீ அடைவாய். (சிறிது காலம்) காத்திரு, இதைத் தொடர்ந்து பெரும் அழிவு வரப்போகிறது. ஓ! சிறு புத்தி கொண்டவனே {துரியோதனா}, நீ பாண்டவர்களுக்கு எக்குற்றமும் இழைக்கவில்லை என்றா கருதுகிறாய்? (கூடியிருக்கும்) ஏகாதிபதிகளே அதைத் தீர்மானிக்கட்டும்.
ஓ! பாரதா {துரியோதனா}, உயர் ஆன்ம பாண்டவர்களின் செழிப்பைக் கண்டு வருந்திய நீ, சூதாட்டப் போட்டி குறித்துத் திட்டமிட்டு, சுபலனின் மகனுடன் {சகுனியுடன்} சேர்ந்து சதி செய்தாய். ஓ! ஐயா, அறம்சார்ந்தவர்களும், நேர்மையானவர்களும், மேன்மையானவர்களுமான உனது சொந்தங்களால் {பாண்டவர்களால்}, கபடமுள்ள சகுனி போல எப்படி (வேறுவகையில்) தீச்செயலில் ஈடுபட முடியும்?
ஓ! பெரும் அறிவுடையவனே {துரியோதனா}, நல்லோரின் அறிவையும் சூதாட்டம் திருடிவிடும், மேலும், தீயோரைப் பொறுத்தவரையில், பிளவும், கொடிய விளைவுகளுமே அதிலிருந்து {சூதாட்டத்தில் இருந்து} எழும். நீதிமிக்க நடத்தை கொண்டோரிடம் கலந்தாலோசியாமல், உன் பொல்லாத ஆலோசகர்களைக் {அமைச்சர்களைக்} கொண்டு சூதாட்டப் போட்டியின் வடிவில் பெரும் ஆபத்துக்கான அந்தப் பயங்கர ஊற்றுக்கண்ணை நீயே திட்டமிட்டு உற்பத்தி செய்தாய்.
ஒரு சகோதரனின் மனைவியை அவமதிக்கவோ, அல்லது சபைக்கு இழுத்து வந்து, திரௌபதியை நோக்கி நீ பயன்படுத்திய மொழிகளைப்போல அவளிடம் {சகோதரனின் மனைவியிடம்} பேசவோ இயன்றவன் உன்னைப் போல வேறு எவன் இருக்கிறான்? உன்னதமான பெற்றோரைக் கொண்டவளும், அற்புதமான நடத்தை கொண்டவளும், தங்கள் உயிரைவிட அன்புக்குரியவளுமான பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} பட்டத்து ராணியை {திரௌபதியை} நீ இப்படியே {மேற்சொன்னது போலவே} நடத்தினாய்.
எதிரிகளைத் தண்டிப்பவர்களான குந்தியின் மகன்கள் காட்டுக்குப் புறப்பட்ட போது, அவர்களது சபையில் துச்சாசனன் என்ன வார்த்தைகளைச் சொன்னான் என்பதைக் கௌரவர்கள் அனைவரும் அறிவார்களே.
எப்போதும் தங்கள் நடத்தையில் சரியாக இருப்பவர்களும், பேராசையால் கறைபடியாதவர்களும், அறம்பயில்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், நேர்மையானவர்களுமான தனது சொந்தங்களிடமே, இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள இயன்றவன் {உன்னைத் தவிர} வேறு எவன் இருக்கிறான்?
கர்ணன், துச்சாசனன் மற்றும் நீ ஆகியோர், இதயமற்றவர்களும், இழிவானவர்களும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொழியையே திரும்பத்திரும்பப் பேசினீர்கள்.
பாண்டுவின் மகன்கள் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களது தாயோடு {குந்தியோடு} சேர்த்து வாரணாவதத்தில் வைத்து அவர்களை உயிருடன் எரிக்க நீ மிகுந்த சிரமப்பட்டாய். எனினும், அந்த உனது முயற்சி வெற்றியால் மகுடம் சூட்டப்படவில்லை. {உனது அந்த முயற்சி பலிக்கவில்லை}. அதன் பிறகு, தங்கள் தாயுடன் கூடிய பாண்டவர்கள், ஏகசக்கரம் எனும் நகரில், ஓர் அந்தணன் வீட்டில், நீண்ட நாள் மறைந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உனது திட்டமிடல்கள் ஒன்றும் வெற்றியடையவில்லை எனினும், விஷம், பாம்புகள், கயிறுகள் என எல்லா வழிகளிலும் நீ பாண்டவர்களை அழிக்க முயன்றிருக்கிறாய். இப்படிப்பட்ட உணர்வுகளுடன், அவர்களிடம் இவ்வளவு வஞ்சகமாக நடந்து கொண்ட நீ, அந்த உயர் ஆன்ம பாண்டவர்களுக்கு எதிராக எக்குற்றத்தையும் நீ செய்யவில்லை என்று எப்படிச் சொல்கிறாய்?
ஓ! பாவியே {துரியோதனா}, அவர்கள் உன்னிடம் இரந்து {கெஞ்சிக்} கேட்டாலும், அவர்களது தந்தை வழி பங்கான நாட்டை அவர்களுக்குக் கொடுக்க நீ விரும்பவில்லை. செழிப்பை எல்லாம் இழந்து, நீ கீழே கிடத்தப்பட்ட பிறகே, அவர்களுக்கு அதைக் கொடுப்பாய்.
இதயமற்றவன் போலப் பாண்டவர்களுக்கு எண்ணிலடங்கா குற்றங்களை இழைத்துவிட்டு, அவர்களிடம் வஞ்சகமாக நடந்து கொண்டு, வேறுவகையான ஆடையில் {தோற்றத்தில்} தோன்ற இப்போது முயல்கிறாய்.
உனது பெற்றோர், பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரால் மீண்டும் மீண்டும் சமாதானம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும், ஓ! மன்னா {துரியோதனா}, நீ இன்னும் சமாதானத்தைச் செய்து கொள்ளவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கும் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவருக்கும் சமாதானத்தால் உண்டாகும் பயன் பெரியதாகும். எனினும், அமைதி, உனக்குத் தன்னைப் பரிந்துரைக்கவில்லை. {அமைதியை நீ விரும்பவில்லை}. இதில் புத்தி குறைவைக் காட்டிலும் வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
உனது நண்பர்களின் வார்த்தைகளை மீறிய நீ, உனது நன்மைக்கான எதையும் எப்போதும் அடைய முடியாது. ஓ! மன்னா {துரியோதனா}, நீ செய்யப்போகும் செயல், பாவம் நிறைந்ததும் மதிப்பற்றதுமாகும்" என்றான் {கிருஷ்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது, பழியுணர்ச்சி கொண்ட துரியோதனனிடம் பேசிய துச்சாசனன், குருக்களுக்கு மத்தியில் இவ்வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! மன்னா {துரியோதனரே}, நீர் விருப்பத்துடன் பாண்டவர்களிடம் சமாதானம் செய்து கொள்ளவில்லை எனில், உம்மைக் (உமது கையையும் காலையும்) கட்டி, நிச்சயம் கௌரவர்களே அந்தக் குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} ஒப்படைத்துவிடுவார்கள். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனரே}, பீஷ்மர், துரோணர் மற்றும் உமது (சொந்த) தந்தை ஆகியோர், விகர்த்தனன் மகனையும் {கர்ணன்}, உம்மையும், மற்றும் என்னையும் சேர்த்து, நம் மூவரையும், பாண்டவர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள்" என்றான் {துச்சாசனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தீயவனும், வெட்கங்கெட்டவனும், கீழ்ப்படியாதவனும், மரியாதை தெரியாதவனும், வீணனுமான சுயோதனன் {துரியோதனன்}, தனது தம்பியின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, பெரும்பாம்பு போலப் பெருமூச்சுவிட்டு, கோபத்தால் தனது இருக்கையை விட்டு எழுந்து, விதுரன், திருதராஷ்டிரன், பெரும் மன்னனான பாஹ்லீகன், கிருபர், சோமதத்தன், பீஷ்மர், துரோணர், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஆகியோரையும், ஏன், உண்மையில் அவர்கள் {அங்கிருந்தவர்கள்} அனைவரையும் அவமதிக்கும் வகையில் சபையை விட்டு வெளியேறினான் {துரியோதனன்}. அந்த மனிதர்களில் காளையானவன் {துரியோதனன்}, சபையை விட்டு வெளியேறுவதைக் கண்ட, அவனது தம்பி {துச்சாசனன்}, அவனது அனைத்து ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் அனைத்து மன்னர்கள் ஆகியோர் அவனைப் {துரியோதனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.
கோபத்தில் எழுந்து தனது தம்பிகளுடன் சபையை விட்டு வெளியேறிய துரியோதனனைக் கண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், "அறம் மற்றும் பொருள் ஆகியவற்றைத் தள்ளிவிட்டு கோபத்தின் தூண்டுதலைப் பின்பற்றுபவனுடைய எதிரிகள், அவன் விரைவில் துன்பத்தில் மூழ்குவதைக் கண்டு மகிழ்கிறார்கள். திருதராஷ்டிரனின் இந்தத் தீய மகன் {துரியோதனன்}, (தனது நோக்கங்களை அடைய) உண்மையான வழிகளை அறியாதவனும், தனது ஆட்சியுரிமையை வீணடிக்கும் மூடனும், கோபம் மற்றும் பேராசையின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிபவனுமாவன். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, க்ஷத்திரியர்கள் அனைவரின் {அழிவு} நேரமும் வந்துவிட்டதை நான் காண்கிறேன். ஏனெனில், அந்த மன்னர்கள் அனைவரும் மாயையால் தங்கள் ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} துரியோதனனைப் பின்பற்றிச் செல்கிறார்களே" என்றார் {பீஷ்மர்}.
பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் சக்திகளை உடையவனுமான தாமரைக் கண்ணனான தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் (இன்னும் அங்கே) இருந்தோரிடம், "குரு குல முதியவர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக்கும் இதுவும் ஒரு பெரிய அத்துமீறலே. ஏனெனில், அவர்கள் {குரு குலத்தின் பெரியோர்}, அரசுரிமையின் இன்பத்தில் திளைக்கும் அந்தத் தீய மன்னனைப் {துரியோதனனைப்} பலவந்தமாகப் பிடித்துக் கட்டிப் போடவில்லையே.
எதிரிகளைத் தண்டிப்பவர்களே, இதைச் செய்ய நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். இது செய்யப்பட்டால் {துரியோதனன் கட்டப்பட்டால்}, அது நல்ல பலனைக் கொடுக்கக்கூடும். பாவமற்றவர்களே, உண்மையில், உங்கள் சம்மதத்தின் விளைவால், நான் சொல்வதை நீங்கள் ஏற்றால், ஓ! பாரதர்களே, நான் பேசும் வார்த்தைகள் விரைவில் நல்ல விளைவுகளை உண்டாக்கும்.
முதிய போஜ மன்னரால் {உக்ரசேனரால்} தவறாக நெறிபடுத்தப்பட்ட அவரது தீய மகன் {கம்சன்}, தனது தந்தையின் அரசுரிமையை, அவரது வாழ்நாளிலேயே பறித்துக் கொண்டு, மரணத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டான். உண்மையில், உக்ரசேனரின் மகனான கம்சன் தனது உறவினர்கள் அனைவராலும் கைவிடப்பட்டு, சொந்தங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய என்னால், ஒரு பெரும் மோதலில் கொல்லப்பட்டான். எங்கள் சொந்தங்களுடன் கூடிய நாங்கள், ஆஹுகரின் மகனான உக்ரசேனருக்கு உரிய மரியாதையைச் செலுத்தி, போஜர்களின் அரசைப் பெருக்குபவரான அவரை {உக்ரசேனரை மீண்டும்} அரியணையில் நிறுவினோம். யாதவர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகிய அனைவரும், அவர்களது முழு இனத்திற்காகவும், கம்சன் என்ற தனி மனிதனைக் கைவிட்டு, செழிப்பையும், மகிழ்ச்சியையும் அடைந்தார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்களும் அசுரர்களும் போருக்காக அணிவகுத்து, ஆயுதங்களை உயர்த்திய போது, அனைத்து உயிரினங்களின் தலைவனான பரமேஷ்டின் {பிரம்மா} (நம்மிடையே உள்ள இந்த வழக்கிற்கும் பொருந்தும்படி) இப்படியே சொன்னான். உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உலகத்தில் வசித்தோர் அனைவரும் இரு கட்சிகளாகப் பிரிந்து, கொல்லப்படும்போது, தெய்வீகமானவனும், அண்டம் தோன்ற புனிதக் காரணனுமான அந்தப் படைப்பாளன் {பிரம்மன்}, {தனக்குள்} "{இந்தப் போரில்} தானவர்களுடன் கூடிய அசுரர்களும் தைத்தியர்களும் வீழ்த்தப்படுவார்கள். ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள் மற்றும் தேவலோகவாசிகள் வெல்வார்கள். உண்மையில், தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும், கந்தர்வர்களும், நாகர்களும், ராட்சசர்களும் இந்தப் போரில் கோபத்தால் ஒருவரை ஒருவர் கொல்வார்கள்" என்றான் {என்று நினைத்தான்}.
இப்படி நினைத்தவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவனுமான பரமேஷ்டின் {பிரம்மா}, தர்மனை {தர்மதேவனை} நோக்கி, "தைத்தியர்களையும், தானவர்களையும் கட்டிப்போட்டு, அவர்களை வருணனிடம் ஒப்படைப்பாயாக" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தர்மன், பரமேஷ்டினின் {பிரம்மனின்} கட்டளையின் பேரால் தைத்தியர்களையும் தானவர்களையும் கட்டி வருணனிடம் ஒப்படைத்தான். நீர்நிலைகளின் தலைவனான வருணன், தர்மனின் {யமனின்} பாசக்கயிராலும், தன்னுடைய பாசக் கயிறாலும் அந்தத் தானவர்களைக் கட்டி, கடலின் ஆழங்களில் அவர்களை வைத்துக் கவனமாகப் பாதுகாத்தான்.
அதே வழியில் துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் சகுனி, துச்சாசனன் ஆகியோரைக் கட்டி பாண்டவர்களிடம் ஒப்படைப்பீராக. ஒரு குடும்பத்துக்காக, தனிப்பட்ட ஒருவனைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமத்திற்காக, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம். ஒரு மாகாணத்திற்காக {நாட்டிற்காக}, ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம். இறுதியாக, ஒருவனின் சுயத்துக்காக, முழுப் பூமியையும் தியாகம் செய்யலாம். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் கட்டிப் போட்டு, பாண்டவர்களுடன் சமாதானம் செய்வீராக. ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, உம் நிமித்தமாக க்ஷத்திரிய குலம் முழுமையும் கொல்லப்படாதிருக்கட்டும்" என்றான் {கிருஷ்ணன்}".