Can you sieze Krishna? | Udyoga Parva - Section 130 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –59)
பதிவின் சுருக்கம் : காந்தாரியின் சொற்களைக் கேளாத துரியோதனன் மீண்டும் சபையை விட்டு வெளியேறுவது; தன் நண்பர்களுடன் சேர்ந்து கிருஷ்ணனைக் கைப்பற்றத் துரியோதனன் தீர்மானித்தது; இதை அறிந்த சாத்யகி சபையில் இருந்த கிருஷ்ணன், திருதராஷ்டிரன் மற்றும் விதுரனிடம் அச்சதியைக் குறித்துச் சொன்னது; துரியோதனனை அழைத்த திருதராஷ்டிரன் அவனைக் கண்டித்தது; கிருஷ்ணனின் மகிமையைச் சொன்ன விதுரன் துரியோதனனை நிந்தித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தனது தாயால் {காந்தாரியால்} சொல்லப்பட்ட பயனுள்ள வார்த்தைகளை அலட்சியம் செய்த துரியோதனன், கோபத்தால் அந்த இடத்தைவிட்டு அகன்று, தீய மனிதர்களின் முன்னிலைக்குச் சென்றான். சபையை விட்டு வெளியேறிய அந்தக் குரு {கௌரவ} இளவரசன் {துரியோதனன்}, பகடையில் பெரும் அறிவுடையவனும், சுபலனின் அரச மகனுமான சகுனியுடன் ஆலோசிக்கத் தொடங்கினான்.
துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் சகுனி ஆகியோரும், நான்காவதாகத் துச்சாசனனும் சேர்ந்து அடைந்த தீர்மானம் இதுவே. "செயலில் வேகமான இந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மன்னர் திருதராஷ்டிரருடனும், சந்தனுவின் மகனுடனும் {பீஷ்மருடனும்} சேர்ந்து, முதலில் நம்மைக் கைப்பற்ற {சிறைபிடிக்க} முயல்வான். எனினும், விரோச்சனன் மகனைப் {பலியைப்} பலவந்தமாகக் கைப்பற்றிய இந்திரனைப் போல, மனிதர்களில் புலியான இந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைப்} நாம் பலவந்தமாகக் கைப்பற்றுவோமாக.
இந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பிடிபட்டதைக் கேட்கும் பாண்டவர்கள், நம்பிக்கையை இழந்து, விஷப்பற்கள் உடைந்த பாம்புகளைப் போல முயற்சி செய்யும் திறன் அற்றவர்கள் ஆவார்கள்.
உண்மையில், இந்த வலிமைமிக்கவனே {கிருஷ்ணனே}, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் பாதுகாத்து, அவர்களுக்குத் தஞ்சம் அளிக்கிறான். வேண்டியவற்றை அளிப்பவனும், சாத்வதர்கள் அனைவரிலும் காளையுமான இவன் {கிருஷ்ணன்} பிடிபட்டால், சோமகர்களுடன் கூடிய பாண்டவர்கள் மனம் தளர்ந்து, எந்த முயற்சியையும் செய்யும் திறனற்றவர்கள் ஆவார்கள். எனவே, திருதராஷ்டிரரின் கதறல்களை அலட்சியம் செய்து, செயல்வேகமுள்ள இந்தக் கேசவனைக் {கிருஷ்ணனை} நாம் இங்கேயே பிடித்து வைப்போம். பிறகு எதிரியுடன் போரிடலாம்" {என்றே அந்த நால்வரும் தீர்மானித்தனர்}.
தீய ஆன்மாக்களை உடைய அந்தப் பாவிகள், இந்தப் பாவகரத் தீர்மானத்தை அடைந்த பிறகு, இதயக் குறிப்புகளைப் படிக்கும் திறன் கொண்டவனும், உயர்ந்த புத்திக்கூர்மை கொண்டவனுமான சாத்யகி விரைவில் இதைக் குறித்து அறிந்தான். அந்த அறிவின் காரணமாக, அவன் {சாத்யகி}, ஹிருதிகனின் மகனுடன் (கிருதவர்மனுடன்) சேர்ந்து, விரைந்து சபையைவிட்டு வெளியேறினான்.
சாத்யகி கிருதவர்மனிடம், "துருப்புகளை விரைவில் அணிவகுப்பாயாக. கவசம் பூண்டு, உனது துருப்புகளைப் போருக்கு அணிவகுத்து, உழைப்பால் {முயற்சியால்} களைத்துப் போகாத கிருஷ்ணனிடம் இவ்விஷயத்தை நான் சொல்லும் வரை, சபையின் வாசலில் காத்திருப்பாயாக" என்றான். இதைச் சொன்ன அந்த வீரன் {சாத்யகி}, மலைக்குகைக்குள் நுழையும் சிங்கம் போல மீண்டும் சபைக்குள் நுழைந்தான். (முதலில்) அவன் உயர் ஆன்ம கேசவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பிறகு திருதராஷ்டிரனிடமும், பிறகு விதுரனிடமும் இந்தச் சதியைக் குறித்துச் சொன்னான்.
இந்தத் தீர்மானத்தைக் குறித்துச் சொன்ன அவன் {சாத்யகி} {பரிகாசச் சிரிப்பைச்} சிரித்தவாறே, "அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைக் கருதும் நல்லோரால் அங்கீகரிக்கப்படாத ஒரு செயலை, இந்தத் தீய மனிதர்கள், இங்கே செய்ய நினைக்கிறார்கள். ஒன்றாகக் கூடி இருப்பவர்களும், பாவம் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், மூடர்களும், ஆசை மற்றும் கோபத்தின் ஆளுகைக்குள் இருப்பவர்களுமான இந்த இழிந்தவர்கள், செய்யக்கூடாத செயலொன்றை கோபம் மற்றும் பேராசையால் இங்கே செய்யப் போகிறார்கள். சுடர்மிகும் நெருப்பைத் தங்கள் ஆடைகளால் கைப்பற்ற நினைக்கும் பிள்ளைகளைப் போலவும், மூடர்களைப் போலவும், தாமரைக் கண்ணனை {கிருஷ்ணனைக்} கைப்பற்ற {கைது செய்ய}, சிறுமதி படைத்தவர்களும் இழிந்தவர்களுமான அவர்கள் விரும்புகிறார்கள்" என்றான் {சாத்யகி}.
சாத்யகியின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் முன்னறிதிறனைக் கொண்டவனுமான விதுரன், குருக்களுக்கு மத்தியில் இருந்த வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரனிடம், "ஓ! மன்னா, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரின் நேரமும் வந்து விட்டது. ஏனெனில், உண்மையில் தங்களால் முடியாதெனினும், பெரும் புகழ்க்கேட்டைத் தரும் செயலைச் செய்ய அவர்கள் முனைந்துள்ளார்கள். ஐயோ, ஒன்றாகச் சேர்ந்திருக்கும் அவர்கள் {கௌரவர்கள்}, வாசவனின் {இந்திரனின்} தம்பியை வீழ்த்தவும், இந்தத் தாமரைக் கண்ணனைக் {கிருஷ்ணனைக்} கைப்பற்றவும் விரும்புகிறார்களே.
உண்மையில், இந்த மனிதர்களில் புலியிடம் {கிருஷ்ணனிடம்}, இந்த ஒப்பற்றவனிடம், தடுக்கப்பட முடியாதவனிடம் மோதினால், சுடர்மிகும் நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல அவர்கள் அழிந்தே போவார்கள். அவர்கள் {கௌரவர்கள்} அனைவரும் ஒற்றுமையுடன் போரிட்டாலும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விரும்பினால், யானை மந்தையை விரட்டும் கோபம் நிறைந்த சிங்கத்தைப் போல, அவர்களை யமனுலகுக்கே அனுப்ப முடியும். எனினும், இவன் {கிருஷ்ணன்}, அத்தகு பாவம் நிறைந்ததும், கண்டிக்கத்தக்கதுமான ஒரு செயலை எப்போதும் செய்ய மாட்டான். மனிதர்களில் சிறந்தவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான இவன் {கிருஷ்ணன்}, அறத்தில் இருந்து எப்போதும் வழுவ மாட்டான்" என்றான் {விதுரன்}.
விதுரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பிறர் சொல் கேட்கும் நல்ல அறிவுடையோருக்கு மத்தியில், தனது கண்களைத் திருதராஷ்டிரன் மீது செலுத்திய கேசவன் {கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவர்கள் வன்முறையின் மூலம் என்னைத் தண்டிக்க விரும்பினால், என்னை அவர்கள் தண்டிக்க அனுமதியும். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நான் அவர்களைத் தண்டிப்பதைப் பொறுத்தவரையில், கோபமடைந்திருக்கும் அவர்கள் அனைவரையும் தண்டிக்கவே நானும் விரும்புகிறேன். எனினும், பாவம் நிறைந்த, கண்டிக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்ய மாட்டேன்.
பாண்டவர்களின் உடைமைகள் மீது ஆசை கொண்ட உமது மகன்கள், தங்கள் சொந்த உடைமைகளை இழக்கப் போகிறார்கள். இத்தகு செயலைச் செய்ய அவர்கள் விரும்பினால், யுதிஷ்டிரரின் நோக்கம் இந்நாளிலேயே (எளிதில்) நிறைவேறிவிடும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவர்களையும், இவர்களைத் தொடர்ந்து வருவோரையும் கைப்பற்றி, அவர்களைப் பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நான் ஒப்படைத்துவிடுவேன்.
அடைவதற்குக் கடினமானது என்று எனக்கு என்ன இருக்கிறது? எனினும், ஓ!பெரும் ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே}, கோபத்திலும், பாவம் நிறைந்த புரிதலாலும் மட்டுமே முன்னெழும் அது போன்ற கண்டிக்கத்தக்க செயல் எதையும் உமது முன்னிலையில் நான் செய்ய மாட்டேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் விரும்பவது போலவே நடக்கட்டும். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரும் அதைச் செய்வதற்கு நான் அனுமதி அளிக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.
(கேசவனின்) இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், விதுரனிடம், "அரசுரிமையில் மிகுந்த ஆசை கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான துரியோதனனை, அவனது நண்பர்கள், ஆலோசகர்கள், தம்பிகள் மற்றும் தொண்டர்களோடு விரைவாக இங்கே அழைத்து வா. உண்மையில், அவனைச் சரியான பாதைக்குக் கொண்டு வர முடியுமா என்று மற்றும் ஒரு முறை நான் பார்க்கப் போகிறேன்" என்றான்.
திருதராஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்ட க்ஷத்ரி {விதுரன்}, விருப்பமில்லாத துரியோதனனை, அவனது தம்பிகளோடு, {துரியோதனனைப் பின்பற்றும்} மன்னர்கள் சூழ மீண்டும் ஒருமுறை அழைத்து வந்தான். பிறகு, கர்ணன், துச்சாசனன் மற்றும் அந்த மன்னர்கள் அனைவராலும் சூழப்பட்ட துரியோதனனிடம் மன்னன் திருதராஷ்டிரன், "ஓ! பாவங்களைத் திரட்டும் இழிந்தவனே {துரியோதனா}, இழிவான செயல்களைச் செய்யும் மனிதர்களை உனது கூட்டாளிகளாகக் {நண்பர்களாகக்} கொண்டிருக்கும் நீ, பாவம் நிறைந்த நண்பர்களுடன் கூடி, புகழுக்குக் கேட்டைத் தரும் செயலைச் செய்ய முயல்கிறாய். சிறுமதி படைத்த நீ, உனது குலத்திற்கும் புகழ்க்கேட்டை விளைவிக்கிறாய். நல்லோரால் அங்கீகரிக்கப்படாததும், உண்மையில் அடைய முடியாததுமான இந்த இழிவான செயலை உன்னைப் போன்ற ஒருவனால் மட்டுமே முயற்சிக்க முடியும்.
பாவம் நிறைந்த கூட்டாளிகளுடன் இணைந்து, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், தவிர்க்கப்பட முடியாதவனுமான இந்த ஒப்பற்றவனையா நீ {கைப்பற்றி} தண்டிக்க விரும்புகிறாய்? சந்திரனைப் பெற விரும்பும் குழந்தையைப் போல, ஓ! மூடா, வாசவனால் {இந்திரனால்} தலைமை தாங்கப்படும் தேவர்களே தங்கள் பலம் முழுமையும் வெளிப்படுத்தினாலும் சாதிக்க முடியாத ஒரு காரியத்தையா நீ முயல்கிறாய்? கேசவன் {கிருஷ்ணன்}, தேவர்களாலும், மனிதர்களாலும், கந்தர்வர்களாலும், அசுரர்களாலும் உரகர்களாலும் கூடப் போரில் எதிர்க்கப்பட முடியாதவன் என்பதை நீ அறிவாயா? காற்றை, எவன் கைகளாலும் பிடிக்க முடியாததைப் போல, சந்திரனை, எந்தக் கையும் அடைய முடியாததைப் போல, பூமியை, எவன் தலையாலும் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல, கேசவனை {கிருஷ்ணனை} பலத்தினால் பிடிக்க உன்னால் முடியாது" என்றான் {திருதராஷ்டிரன்}.
திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, துரியோதனன் மீது தனது கண்களைச் செலுத்திய விதுரன், அந்தப் பழியுணர்ச்சி கொண்ட திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, எனது இந்த வார்த்தைகளை இப்போது கேட்பாயாக. துவிதன் என்ற பெயரால் அறியப்பட்ட குரங்குகளில் முதன்மையானவன் ஒருவன், வலிமைமிக்கக் கற்களின் மழையால், சௌபத்தின் வாயில்களில் கேசவனை {கிருஷ்ணனை} மறைத்தான். மாதவனைப் {கிருஷ்ணனைப்} பிடிக்க விரும்பி, தனது ஆற்றல் மற்றும் உழைப்பு அனைத்தையும் பயன்படுத்தினான். எனினும் அவனால் {துவிதனால்} இவனை {கிருஷ்ணனைப்} பிடிக்க முடியவில்லை. இவனையா நீ பலத்தினால் பிடிக்க முயல்கிறாய்?
சௌரி {கிருஷ்ணன்} பிராக்ஜோதிஷத்திற்குச் {பிராக்ஜோதிஷ நாட்டிற்குச்} சென்ற போது, தானவர்கள் அனைவருடன் கூடிய நரகனால் {நரகாசூரனால்}, அங்கே இவனைப் பிடிப்பதில் வெல்லமுடியவில்லை. இவனையா நீ பலத்தினால் பிடிக்க முயல்கிறாய்? போரில் அந்த நரகனைக் கொன்று (அவனது நகரத்தில் இருந்து) ஆயிரம் {1000} கன்னிகைகளைக் கொண்டு வந்து, அவர்கள் அனைவரையும் விதிப்படி இவன் {கிருஷ்ணன்} மணந்தான்.
நிர்மோசனம் என்ற நகரத்தில், சுருக்குக் கயிறுகளுடன் கூடிய வலிமைமிக்க ஆறாயிரம் {6000} அசுரர்கள் இவனைப் பிடிப்பதில் தோல்வியுற்றனர். இவனையா நீ பலத்தினால் பிடிக்க முயல்கிறாய்? குழந்தையாக இருந்த போதே, இவன் பூதனையையும், பறவைகளின் வடிவில் வந்த அசுரர்கள் இருவரையும் கொன்றான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, (தொடர்ச்சியான மழையில் இருந்து) பசுக்களைக் காப்பதற்காக, (தனது சுண்டு விரலில்) இவன் {கிருஷ்ணன்} கோவர்த்தன மலைகளைத் தூக்கிப் பிடித்தான்.
அரிஷ்டன், தேனுகன், பெரும் பலம் கொண்ட சாணூரன், அஸ்வராஜன், தீமை செய்பவனான கம்சன் ஆகியோரையும் இவனே {கிருஷ்ணனே} கொன்றான். ஜராசந்தன், வக்ரன் {வக்தரன்}, வலிமையான சக்தி படைத்த சிசுபாலன் ஆகியோரும் மற்றும் {இவனிடம்} போரிட்ட பாணன் என்பவனும், இன்னும் எண்ணற்ற மன்னர்களும் இவனால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அளவிலா வலிமை கொண்ட இவன் {கிருஷ்ணன்}, மன்னன் வருணனையும், பாவகனையும் (அக்னியையும்) வீழ்த்தியிருக்கிறான். (தெய்வீக மலர் என்று அழைக்கப்படும்) பாரிஜாதத்தைத் (தேவலோகத்தில் இருந்து) கொண்டு வந்த நிகழ்வின் போது சச்சியின் தலைவனையும் {இந்திரனையும்} இவன் வீழ்த்தியிருக்கிறான். கடலின் ஆழத்தில் மிதந்து கொண்டிருந்த போது, இவன் {கிருஷ்ணன்} மது என்பவனையும், கைடபன் என்பவனையும் கொன்றான். மற்றும் ஒரு பிறவியில் இவன் ஹயக்ரீவனையும் (குதிரைக் கழுத்துடையவனையும்) [1] கொன்றான்.
[1] வேதத்தைத் திருடிக் கொண்டு போனமையால் கொல்லப்பட்டவன் ஹயக்ரீவன்.
யாவையும் செய்பவன் இவனே {கிருஷ்ணனே}, ஆனால் யாதாலும் இவன் செய்யப்பட்டவன் இல்லை. இவனே சக்திகள் அனைத்தின் காரணமாக இருக்கிறான். சௌரி {கிருஷ்ணன்} விரும்பும் எதையும், எந்த முயற்சியும் இன்றியே சாதித்துக் கொள்வான். பயங்கர ஆற்றல் கொண்ட இந்தப் பாவமற்ற கோவிந்தன் {கிருஷ்ணன்} அழிவில்லாதவன் என்பதை நீ அறியாயா?
கடும் விஷம் கொண்ட சீற்றம் மிகுந்த பாம்பைப் போன்ற இவன், முடிவிலா சக்தியின் ஊற்றுக்கண்ணாவான். வலிய கரங்களும் களைப்பிலா உழைப்பும் {முயற்சியும்} கொண்ட கிருஷ்ணனிடம் வன்முறையைக் கையாள முயலும் நீ, நெருப்பில் விழும் பூச்சி போல உனது தொண்டர்களுடன் சேர்ந்து அழிந்து போவாய்" என்றான் {விதுரன்}".