Karna you are a Pandava! | Udyoga Parva - Section 140 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –69)
பதிவின் சுருக்கம் : கர்ணனிடம் கிருஷ்ணன், அவன் குந்தியின் மகன் என்பதைச் சொல்வது; பாண்டவர்களுடன் சேருமாறும், நாட்டின் மன்னனாக ஆகுமாறும் கிருஷ்ணன் கர்ணனிடம் சொன்னது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, சேவகர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரின் மத்தியிலும், கர்ணனைத் தனது தேரில் அழைத்துக் கொண்டு மதுசூதனன் {கிருஷ்ணன்} (நமது நகரத்தை விட்டு) வெளியே சென்றான். பகைவீரர்களைக் கொல்பவனான அந்த அளக்கமுடியாத ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} என்ன சொன்னான்? அந்தச் சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} கோவிந்தன் {கிருஷ்ணனிடம்} பேசிய சமரச வார்த்தைகள் என்ன? ஓ! சஞ்சயா, மழைக்காலத்தின் போது, புதிதாய் எழுந்த மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்ட கிருஷ்ணன் கர்ணனிடம் பேசிய வார்த்தைகள் மென்மையானவையா? கடுமையானவையா? அதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "அளவிடமுடியாத ஆன்மா கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்} ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சொன்னதும், இதயத்துக்கு இனிமையானதும், நன்மையானதும், உண்மையானதும், அறத்திற்கு இசைவானதும், ஏற்புடையதும், மிரட்டல் மற்றும் மென்மை ஆகிய இரண்டும் கலந்ததுமான அந்த வார்த்தைகளைச் சரியான வரிசையில் நான் சொல்வதை நீர் கேட்பீராக" என்றான் {சஞ்சயன்}.
வாசுதேவன் {கிருஷ்ணன் கர்ணனிடம்} சொன்னான், "ஓ! ராதையின் மகனே {கர்ணா}, வேதங்களை முழுதாய் அறிந்த பல அந்தணர்களை நீ வழிபட்டிருக்கிறாய். குவிந்த கவனத்துடன், மனதில் பொறாமையின்றி {பல சந்தர்ப்பங்களில்) நீ அவர்களிடம் உண்மையை {சத்தியத்தைக்} குறித்து விசாரித்திருக்கிறாய். எனவே, ஓ! கர்ணா, வேதங்கள் சொல்லும் நித்தியமானவை என்ன என்பதை நீ அறிவாய். சாத்திரங்களின் நுணுக்கமான தீர்மானங்களையும் நீ முழுமையாக அறிந்திருக்கிறாய்.
'ஒரு கன்னிகைக்கும், அந்தக் கன்னிகையை மணந்த தங்கள் தந்தைக்கும் காநீகன், சகோடன் என்று இருவகையான மகன்கள் பிறக்கிறார்கள்' என்று சாத்திரங்களை நன்கு அறிந்தோர் சொல்கின்றனர். ஓ! கர்ணா, நீயும் இவ்வழியிலேயே பிறந்திருக்கிறாய். {சாத்திரங்களை அறிந்தோர், ஒரு கன்னிகைக்குப் பிறக்கும் காநீகன் மற்றும் சகோடன் என்ற இருவகைப் பிள்ளைகளுக்கு, அந்தக் கன்னிகையை மணந்தவனே தந்தை என்று சொல்கிறார்கள்}. எனவே, தார்மீக அடிப்படையில் நீயும் பாண்டுவின் மகனே. வா, சாத்திரங்களின் கூற்றுப்படி நீ மன்னனாவாயாக. உனது தந்தையின் {பாண்டுவின்} வழியில் பிருதையின் {குந்தியின்} மகன்களையும் {பாண்டவர்களையும்}, தாயின் வழியில் விருஷ்ணிகளையும் {சொந்தங்களாகக்} கொண்டவன் நீ. ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, இந்த இருவரையும் உனக்குச் சொந்தமானவர்களாக நீ அறிவாயாக.
இப்போதே என்னுடன் வந்து, ஓ! ஐயா, யுதிஷ்டிரர் பிறப்புக்கு முன்பே குந்திக்குப் பிறந்தவன் நீ என்பதைப் பாண்டவர்கள் அறியச் செய்வாயாக. சகோதரர்களான ஐந்து பாண்டவர்கள், திரௌபதியின் மகன், சுபத்திரையின் ஒப்பற்ற மகன் {அபிமன்யு} ஆகிய அனைவரும் உனது பாதத்தைத் தழுவுவார்கள் {உனது காலைப் பிடிப்பார்கள்}. பாண்டவக் காரணத்திற்காகக் கூடியிருக்கும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரும் கூட உனது பாதத்தைத் தழுவுவார்கள்.
ராணிகளும், இளவரசிகளும், (நீர் நிரம்பிய} பொன், வெள்ளி மற்றும் மண் குடங்களையும், இனிமையான மூலிகைகளையும், அனைத்து வகையிலான விதைகளையும், ரத்தினங்களையும் கொடிகளையும் உன்னை நிறுவுவதற்காக {உனக்கு மன்னனாக முடிசூட்டுவதற்காக} கொண்டு வரட்டும். ஆறாம் காலத்தில், திரௌபதி (மனைவியாக) உன்னிடம் வருவாள். ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவரும், அந்தணர்களில் சிறந்தவருமான தௌமியர், (புனித) நெருப்பீல் தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாக ஊற்றட்டும். நான்கு வேதங்களை அதிகாரப்பூர்வமானதாகக் கருதும் (பாண்டவர்களுக்குப் புரோகிதர்களாகச் செயல்படும்) அந்தணர்கள் உன்னை {மன்னனாக} நிறுவுவதற்கான சடங்கைச் செய்யட்டும். வேதச் சடங்குகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவரான பாண்டவர்களின் குடும்பப் புரோகிதரும் {தௌமியரும்}, மனிதர்களில் காளைகளும் சகோதரர்களுமான பாண்டுவின் ஐந்து மகன்களும், திரௌபதியின் ஐந்து மகன்களும், பாஞ்சாலர்களும், சேதிகளும், நானும் கூடி இந்த முழு உலகத்தின் தலைவனாக உன்னை நிறுவுவோமாக.
நீதிமிக்க ஆன்மா கொண்டவரும், கடும் நோன்புகள் கொண்டவருமான தர்மனின் மகன் யுதிஷ்டிரர், உனது பட்டத்து இளவரசராக இருந்து, உனக்குக் கீழே நாட்டை ஆளட்டும். தனது கைகளில் வெண்சாமரம் கொண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரர், ஒரே தேரில் உனக்குப் பின்னே இருக்கட்டும். உனது முடிசூட்டு முடிந்ததும், குந்தியின் மற்றொரு மகனான பலமிக்கப் பீமசேனன், உனது தலைக்கு மேலே வெண்குடையைப் பிடிக்கட்டும். உண்மையில் அப்போது, நூற்றுக்கணக்கான கிண்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், புலித் தோல்களால் பக்கங்கள் மூடப்பட்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமான உனது தேரை அர்ஜுனன் ஓட்டுவான். அப்போது, நகுலன், சகாதேவன், திரௌபதியின் ஐந்து மகன்கள், பாஞ்சாலர்கள், பலமிக்கத் தேர்வீரனான சிகண்டி ஆகியோர் உனக்குப் பின்னே வருவார்கள்.
அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவருடன் கூடிய நானும் உனக்குப் பின்னே நடந்து வருவேன். உண்மையில், தாசார்ஹர்கள் மற்றும் தசார்ணர்கள் அனைவரும், ஓ! மன்னா {கர்ணா}, உனது உறவினர்களின் கணக்கில் எண்ணப்படுவார்கள். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கர்ணா}, உனது தம்பிகளான பாண்டவர்களுடனும், யபங்கள் {ஜபங்கள்}, ஹோமங்கள், பல்வேறு வகைகளிலான மங்கலச் சடங்குகள் ஆகியவை உனது மதிப்பிற்காகச் செய்யப்படட்டும். திராவிடர்கள், குந்தளர்கள், ஆந்திரர்கள், தாலசரர்கள், சூசுபர்கள், வேணுபர்கள் ஆகியோர் உனக்கு முன்பு {பரிவாரங்களாக} நடந்து செல்லட்டும்.
சூதர்களும், மாகதர்களும், எண்ணிலடங்கா துதிப்பாடல்களைப் பாடி உன்னைப் புகழட்டும். "வசுசேணனுக்கு {கர்ணனுக்கு} வெற்றி என்று பாண்டவர்கள் அறிவிக்கட்டும். சந்திரனைச் சூழ்ந்திருக்ககும் நட்சத்திரங்களைப் போலப் பாண்டவர்களால் சூழப்பட்டு நீ நாட்டை ஆள்வாயாக. ஓ! குந்தியின் மகனே {கர்ணா}, குந்தியையும் மகிழ்ச்சியடையச் செய்வாயாக. உனது நண்பர்கள் மகிழட்டும், உனது எதிரிகள் துயருறட்டும். இந்த நாளில் உனக்கும், உனது தம்பிகளான பாண்டுவின் மகன்களுக்கும் {பாண்டவர்களுக்கும்} இடையில் சகோதர ஒற்றுமை உண்டாகட்டும்" என்றான் {கிருஷ்ணன்}."