Karna's back got hot by the sun ! | Udyoga Parva - Section 144 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –73)
பதிவின் சுருக்கம் : விரும்பியது ஈடேறாமல் செல்லும் கிருஷ்ணனைச் சுட்டிக்காட்டி குந்தியிடம் வருந்திய விதுரன்; குந்தி மனதிற்குள் அடைந்த தீர்மானம்; கங்கைக் கரையில் தனது துதிகளைச் செய்து கொண்டிருந்த கர்ணன்; கர்ணனைக் காண குந்தி சென்றது; குந்தியைக் கண்ட கர்ணன் ஆச்சரியம் அடைந்தது ...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனின் (அமைதிக்கான) வேண்டுதல்கள் தோல்வியில் முடிந்த பிறகு, அவன் {கிருஷ்ணன்} குருக்களிடம் இருந்து பாண்டவர்களிடம் புறப்பட்டுச் சென்ற போது, பிருதையை {குந்தியை} அணுகிய க்ஷத்ரி {விதுரன்} துயரத்துடன், "ஓ! வாழும் பிள்ளைகளின் தாயே {குந்தியே}, எனது விருப்பம் எப்போதும் சமாதானமே என்பதையும், என்னதான் நான் அடித்தொண்டையில் இருந்து கதறினாலும், சுயோதனன் {துரியோதனன்} எனது வார்த்தைகளைக் கேட்கவில்லை என்பதையும் நீ அறிவாய்.
சேதிகள், பாஞ்சாலர்கள், கேகயர்கள், பீமன், அர்ஜுனன், கிருஷ்ணன், யுயுதானன் மற்றும் இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைத் தனது கூட்டாளிகளாகக் கொண்டிருந்தும், மன்னன் யுதிஷ்டிரன் இன்னும் உபப்லாவ்யத்திலேயே தங்கியிருக்கிறான். தனது சொந்தங்களிடம் தான் கொண்ட பாசத்தால், பெரும்பலத்தைக் கொண்டிருந்தும் பலவீனமான மனிதனைப் போல நீதியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். வயதில் முதிர்ந்திருந்தாலும், இங்கே இருக்கும் திருதராஷ்டிரர் சமாதானத்தை எட்டாமல், தனது பிள்ளைகள் மேல் கொண்ட கர்வத்தால், பாவம் நிறைந்த பாதையில் நடக்கிறார்.
ஜெயத்ரதன், கர்ணன், துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோருடைய தீமையின் விளைவால் சொந்தங்களுக்குள்ளே வேற்றுமை {உட்பூசல்} உண்டாகப்போகிறது. நீதிமிக்க ஒருவனிடம் நீதியற்று நடந்து கொள்பவர்கள், அந்தப் பாவத்தின் விளைவுகளை விரைவில் காண்பார்கள். இவ்வழியில் நீதியைத் துன்புறுத்தும் குருக்களைக் காணும் எவன்தான் வருந்தமாட்டான்? சமாதானத்தை எட்ட முடியாமல் திரும்பும் கேசவனைக் {கிருஷ்ணனைக்} கண்டதும், பாண்டவர்கள் நிச்சயம் போருக்குத் தயாராவார்கள். அதன்பேரில், குருக்களின் பாவம், வீரர்களின் அழிவுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தையும் நினைத்துக் கொண்டிருப்பதால், பகலும் இரவும் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை" என்றான் {விதுரன்}.
குந்தி பிள்ளைகளின் {பாண்டவர்களின்} நோக்கங்கள் ஈடேறுவதை எப்போதும் விரும்பும் விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட அவள் {குந்தி}, துன்பத்தால் பெருமூச்சுவிடத் தொடங்கித் தனக்குள், "எதன் பொருட்டுச் சொந்தங்களுக்குள் இந்தப் பெரும்படுகொலை நேரப்போகிறதோ அந்தச் செல்வத்துக்கு ஐயோ. {அந்த செல்வத்தை நிந்திக்க வேண்டும்}. உண்மையில், இந்தப் போரில் நண்பர்களாக இருப்பவர்கள் தோல்வியை அடையப்போகிறார்கள். பாண்டவர்கள், சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் யாதவர்கள் அனைவரும் கூடி, பாரதர்களுடன் {கௌரவர்களுடன்} போரிடுவதைவிடப் பெரிய துயர் ஏது? போரில் நான் குற்றத்தையே காண்கிறேன்.
(மறுபுறம்) நாம் போரிடவில்லையெனில் வறுமையும், அவமானமும் நமதாகும். ஏழையைப் பொறுத்தவரை, (அவனுக்கு) மரணமே நன்மை. (மறுபுறம்) ஒருவன் தனது சொந்தங்களையே அழிப்பது வெற்றியாகாது. இதை நினைக்கையிலேயே எனது இதயத்தில் துயர் பெருகுகிறது. சந்தனுவின் மகனான பாட்டன் {பீஷ்மர்}, வீரர்களில் முதன்மையானவரான ஆசான் (துரோணர்), கர்ணன் ஆகியோர் துரியோதனனின் பக்கத்தில் இருந்து எனது அச்சத்தை அதிகரிக்கின்றனர். ஆசானான துரோணர், தனது மாணாக்கர்களுக்கு எதிராக எப்போதும் விருப்பத்துடன் போர் புரியமாட்டார். பாட்டனைப் {பீஷ்மரைப்} பொறுத்தவரை, அவர் {பீஷ்மர்} பாண்டவர்களிடம் சிறு பாசத்தையாவது கொண்டிருக்க மாட்டாரா?
பாவம் நிறைந்த கர்ணன் மட்டுமே, தனது அறிவின் மயக்கத்தாலும், தீய துரியோதனனால் வஞ்சக வழியை எப்போதும் பின்பற்றுவதாலும், பாண்டவர்களை வெறுக்கிறான். பாண்டவர்களுக்குத் தீங்கிழைப்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்தக் கர்ணன் மிகவும் சக்தி வாய்ந்தவனாகவும் இருக்கிறான். இதுவே என்னை இப்போது எரித்துக் கொண்டிருக்கிறது. அவன் {கர்ணன்} மனநிறைவு கொள்ளும் வகையில், இன்று நான் அவனிடம் சென்று உண்மையை வெளிப்படுத்தி, பாண்டவர்களின்பால் அவனது {கர்ணனின்} இதயத்தை ஈர்க்க முயற்சிக்கப் போகிறேன்.
{குந்தியாகிய} நான் எனது தந்தையான குந்திபோஜனின் அரண்மனையில் உள்ள அந்தப்புரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, என்னிடம் மனநிறைவு கொண்ட புனிதரான துர்வாசர், {தேவர்களை} அழைக்கும் {வழிபாட்டு} வடிவங்கள் அடங்கிய மந்திரங்களை வரமாக எனக்கு அளித்தார்.
நம்பிக்கையான செவிலியால் பாதுகாக்கப்பட்டு, பணிப்பெண்களால் சூழப்பட்டிருந்த நான், {இயற்கையாகப்} பெண்கள் கொண்டிருக்கும் மனநிலையின் விளைவாகவும், வயதில் முதிராத பெண்ணான எனது இயல்பாலும் மீண்டும் மீண்டும் ஆலோசித்து, எந்த நிந்தனையும் அடையாமல் இருப்பது எப்படி? என் தந்தையின் {வளர்ப்பு தந்தை குந்திபோஜனின்} மரியாதையைப் பராமரிப்பது எப்படி? விதியை மீறும் குற்றம் எதையும் செய்யாமல் நற்பேறை அடைவது எப்படி? என்று சிந்தித்தேன். அந்த மந்திரங்களின் பலம் அல்லது பலவீனத்தையும், அந்த அந்தணரின் {துர்வாசரின்} வார்த்தைகளில் உள்ள சக்தியையும், நடுங்கும் இதயத்துடன் நீண்ட நேரம் சிந்தித்தேன்., இறுதியாக, அந்த அந்தணரை {துர்வாசரை} நினைவு கூர்ந்து அவரை {துர்வாசரை} வணங்கினேன். அவரிடம் {துர்வாசரிடம்} பெற்ற மந்திரத்தால் உண்டான பெரும் ஆவலாலும் அறியாமையாலும், எனது கன்னிப்பருவத்தில் நான் சூரிய தேவனை அழைத்தேன்.
எனவே, கன்னிப்பருவத்தில் எனது கருவறையில் தாங்கப்பட்ட அவன், தனது தம்பிகளுக்கு நிச்சயம் ஏற்புடையதும், நன்மையானதுமான எனது வார்த்தைகளுக்கு ஏன் கீழ்ப்படிய மாட்டான்?" என்று நினைத்தாள். இதே போலச் சிந்தித்த குந்தி, ஓர் அற்புத தீர்மானத்தை அடைந்தாள். தீர்மானத்தை அடைந்த அவள் {குந்தி}, பகீரதன் பெயரால் அழைக்கப்படும் புனித ஓடைக்குச் சென்றாள். கங்கைக்கரையை அடைந்த பிருதை {குந்தி}, பெரும் கருணை கொண்டவனும், உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான தனது மகன் {கர்ணன்}, வேத மந்திரங்களை உரைப்பதைக் கேட்டாள்.
கிழக்கு முகமாக, கரங்களை உயர்த்திக் கர்ணன் நின்று கொண்டிருந்தபோது, ஆதரவற்ற குந்தி, தான் கொண்ட காரியத்தின் நிமித்தம், {கர்ணனது} துதிகள் நிறைவடையக் காத்திருந்தாள். விருஷ்ணி குலத்து மங்கையும், குருக்கள் வீட்டு மனைவியுமான அந்த மங்கை {குந்தி}, சூரியனின் வெப்பத்தால் தாக்கப்பட்டு, வாடிய தாமரைமலர் மாலையைப் போலக் காணப்பட்டாள். இறுதியாக, கர்ணனின் மேலாடை கொடுத்த நிழலில் அவள் {குந்தி} நின்றாள்.
மாறாத நோன்புகளைக் கொண்ட கர்ணன், தனது முதுகு சூரியக் கதிர்களால் வெப்பமடையும்வரை தனது துதிகளைச் சொல்லிக் கொண்டிருந்தான் [1]. {துதிகள் முடிந்ததும்} திரும்பிய அவன் {கர்ணன்}, குந்தியைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான். அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தியும், செருக்கும் கொண்டவனுமான அந்த விகர்த்தனன் மகன் விருஷன் {கர்ணன்} அவளைக் {குந்தியை} முறையான வடிவில் குவிந்த கரங்களால் வணங்கிய பிறகு பேசத் தொடங்கினான்."
[1] காலையில் கிழக்கு முகமாகப் பார்த்துத் துதித்துக் கொண்டிருப்பவனின் முதுகில் சூரியன் சுடவேண்டும் என்றால், அவன் நடுப்பகல் வரை துதிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். மாறாத நோன்புகள் என்ற சொற்களும் இருப்பதால், அவன் தினமும் இப்படித் துதித்துக் கொண்டிருக்கிறான் என்றாகிறது.