"Karna, you are my son!" said Kunti ! | Udyoga Parva - Section 145 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –74)
பதிவின் சுருக்கம் : குந்தி வந்த நோக்கத்தைக் கர்ணன் கேட்பது; கர்ணன் தனது மகனே என்று குந்தி கர்ணனிடம் சொல்வது; பாண்டவர்களுடன் சேர்ந்திருக்குமாறு கர்ணனிடம் குந்தி கேட்பது ...
கர்ணன் {குந்தியிடம்} சொன்னான், "ராதைக்கும், அதிரதருக்கும் மகனான நான் கர்ணன் ஆவேன். ஓ! மங்கையே, நீ எதற்காக இங்கு வந்தாய்? நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்வாயாக" என்றான் {கர்ணன்}.
அதற்குக் குந்தி {கர்ணனிடம்}, "நீ ராதையின் மகனில்லை; குந்தியின் மகனாவாய். அதிரதனும் உனது தந்தையில்லை. ஓ! கர்ணா, நீ சூத வகையில் பிறந்தவனில்லை. நான் சொல்வதை நம்புவாயாக. நான் கன்னிகையாக இருந்தபோது, நீ என்னால் ஈன்றெடுக்கப்பட்டாய். முதலில், உன்னைக் கருவறையில் சுமந்தவள் நானே. ஓ! மகனே {கர்ணா}, நீ குந்திராஜனின் அரணன்மனையில் பிறந்தாய். ஓ! ஆயுதம் தாங்குபவர் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணா}, ஓ! கர்ணா, அனைத்தையும் காணச் செய்பவரும், ஒளியால் சுடர்விடுபவரும், தெய்வீகமானவருமான சூரியனே, என்னிடம் உன்னைப் பெற்றார்.
ஓ! வெல்லப்பட இயலாதவனே, ஓ! மகனே {கர்ணா}, (இயற்கையான) காது குண்டலங்களுடனும், (இயற்கையான} கவசத்துடனும், சுடர்மிகும் அழகுடனும், எனது தந்தையின் வசிப்பிடத்தில் என்னால் நீ ஈன்றெடுக்கப்பட்டாய். உனது தம்பிகளை அறியாத நீ, அறியாமையின் காரணமாகத் திருதராஷ்டிரர் மகனுக்குச் {துரியோதனனுக்குச்} சேவகம் செய்வது முறையாகாது. ஓ! மகனே, அதிலும் குறிப்பாக உனக்கு {உன்னைப் போன்ற ஒருவனுக்கு} அது முறையாகாது.
ஓ! மகனே, மனிதர்களின் கடமைகளை உறுதி செய்கையில், ஒருவனின் தந்தையும், (தான் பெற்ற பிள்ளையிடம்) முழுப் பாசத்தையும் காட்டும் தாயும் எக்காரியத்தில் மனநிறைவு கொள்கின்றனரோ, அதுவே கடமைகள் அனைத்திலும் உயர்ந்ததாகும் {அறப்பயனாகும்}. அர்ஜுனனால் முன்பு அடையப்பட்டதான யுதிஷ்டிரனின் செழிப்பை, பேராசையின் காரணமாகத் தீயவர்கள் பறித்துக் கொண்டார்கள். திருதராஷ்டிரர் மகன்களிடம் இருந்து மீண்டும் பறித்து, அந்தச் செழிப்பை நீ அனுபவிப்பாயாக.
கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான ஒற்றுமையைக் குருக்கள் இன்று காணட்டும். சகோதரப் பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் {கர்ணனான} உன்னையும், உனது தம்பியையும் {அர்ஜுனனையும்} காணும் அந்தத் தீயவர்கள் உனக்குத் தலைவணங்கட்டும். ராமனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} அழைக்கப்படுவது போல, கர்ணனும், அர்ஜுனனும் {இவ்வுலகத்தால்} அழைக்கப்படட்டும். நீங்கள் இருவரும் ஒன்றுசேர்ந்தால், இவ்வுலகில் அடையமுடியாததுதான் எது?
ஓ! கர்ணா, தம்பிகளால் சூழப்பட்டிருக்கும் நீ, பெரும் வேள்வி மேடையில் தேவர்களால் சூழப்பட்ட பிரம்மனைப் போலப் பிரகாசிப்பாய் என்பதில் ஐயமில்லை. அனைத்து அறங்களையும் கொண்ட நீ, எனது உறவினர்கள் அனைவரிலும் முதல்வன் {மூத்தவன்} ஆவாய். சூதனின் மகன் என்ற அடைமொழி உன்னைப் பற்றாதிருக்கட்டும். பெரும் சக்தி கொண்ட நீ பார்த்தனாவாய்" என்றாள் {குந்தி}.