"The speech of Drona, Vidura and Gandhari! | Udyoga Parva - Section 148 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –77)
பதிவின் சுருக்கம் : குருக்களின் நாடு பாண்டுவுக்கு எப்படி உரிமையானது என்றும், அதன் காரணமாக யுதிஷ்டிரனுக்குத் தார்மீக அடிப்படையில் எப்படி உரிமையானது என்றும் துரோணர், விதுரன் மற்றும் காந்தாரி ஆகியோர் துரியோதனனுக்கு எடுத்துரைத்ததைக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "பீஷ்மர் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பேசுவதற்கு எப்போதும் தகுதிவாய்ந்தவரான துரோணர், (கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில், {யுதிஷ்டிரரான} உமக்கு நன்மையான வார்த்தைகளைத் துரியோதனனிடம் பேசினார். அவர் {துரோணர் துரியோதனனிடம்}, "ஓ! ஐயா {துரியோதனா}, பிரதீபரின் மகன் சந்தனு, தனது குலத்தின் நன்மைக்கு அர்ப்பணிப்புடன் இருந்ததைப் போலவும், பீஷ்மர் என்று அழைக்கப்படும் தேவவிரதன் தனது குலத்தின் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருந்ததைப் போலவும், உண்மைக்கு {சத்தியத்திற்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தவனும், தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தவனும், அறம் சார்ந்தவனும், அற்புத நோன்புகளைக் கொண்டவனும், அனைத்துக் கடமைகளிலும் கவனத்துடன் இருந்தவனும், குருக்களின் மன்னனுமான அந்த அரசன் பாண்டுவும் தனது குலத்தின் நன்மையில் அர்ப்பணிப்புடனேயே இருந்தான்.
(தான் கொண்ட உரிமையின் படி) குரு குலத்தைத் தழைக்க வைத்த அவன் {பாண்டு}, பெரும் ஞானம் கொண்ட தனது அண்ணன் திருதராஷ்டிரனுக்கும், தனது தம்பி க்ஷத்ரிக்கும் (விதுரனுக்கும்) அரசாட்சியைக் கொடுத்தான். மங்காப் புகழ் கொண்ட அரியணையில் இந்தத் திருதராஷ்டிரனை அமர்த்திய, குருகுலத்தின் அந்த அரச மகன் {பாண்டு}, அதன்பிறகு, தன் இரு மனைவியருடன் காட்டுக்குச் சென்றான். மனிதர்களில் புலியான விதுரன், பெரும் பணிவுடன், திருதராஷ்டிரனுக்குக் கீழ் தன்னை அமர்த்திக்கொண்டு, பனைமரத்தின் இளங்கிளை ஒன்றால் சாமரம் வீசிக் கொண்டு, இவனிடம் {திருதராஷ்டிரனிடம்} அடிமையைப் போலக் காத்திருக்கத் தொடங்கினான் {பணிவிடை செய்யத் தொடங்கினான் இந்த விதுரன்}.
பிறகு, ஓ! ஐயா {துரியோதனா}, குடிமக்கள் அனைவரும் பாண்டுவிடம் எப்படிப் பணிந்து நடந்தார்களோ, அப்படியே மன்னன் திருதராஷ்டிரனிடமும், அன்றிலிருந்து பணிந்து நடந்து வருகிறார்கள். பகை நகரங்களை வெல்பவனான பாண்டு, திருதராஷ்டிரனிடமும், விதுரனிடமும் நாட்டைக் கொடுத்துவிட்டு உலகம் முழுவதும் சுற்றினான். எப்போதும் உண்மைக்கு {சத்தியத்துக்கு} அர்ப்பணிப்புடன் இருக்கும் விதுரன், நிதி, தானம், (நாட்டின்) சேவகர்களை மேற்பார்வையிடுதல், அனைவருக்கும் உணவிடுதல் ஆகிய துறைகளின் {நிதி மற்றும் உள்துறை ஆகியவற்றின்} அதிகாரத்தை {திருதராஷ்டிரர் ஆட்சியில்} எடுத்துக் கொண்டான். அதே வேளையில், பகை நகரங்களை வெல்பவரான பெரும் சக்தி கொண்ட பீஷ்மரோ, மன்னர்களிடம் போர், அமைதி, தேவையானவற்றைச் செய்தல், அல்லது பரிசுகளை நிறுத்தி வைத்தல் போன்ற துறைகளை {வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைகளை} மேற்பார்வையிட்டார். பெரும் பலம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன் அரியணையில் இருக்கும்போது, உயர் ஆன்ம விதுரன் அவன் {திருதராஷ்டிரன்} அருகிலேயே இருந்தான்.
திருதராஷ்டிரனின் குலத்தில் பிறந்த நீ, குடும்பத்துக்குள் பிளவைக் கொண்டு வர எப்படித் துணிந்தாய்? உனது சகோதரர்களிடம் (பாண்டவர்களிடம்) ஒற்றுமையாக இருந்து, இன்பத்துக்கான அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பாயாக. ஓ! மன்னா {துரியோதனா}, கோழைத்தனத்தாலோ {ஏழ்மையாலோ}, செல்வத்துக்காகவோ நான் இதை உன்னிடம் சொல்லவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பீஷ்மர் எனக்குக் கொடுத்த செல்வத்தையே நான் அனுபவிக்கிறேன்; நீ கொடுத்ததை அல்ல. ஓ! மன்னா {துரியோதனா}, எனது வாழ்வாதாரத்திற்கான வழிகளை நான் உன்னிடம் பெற விரும்பவில்லை. {நான் பீஷ்மரால் கொடுக்கப்பட்டதில் மனம் நிறைகிறேன். உன்னால் கொடுக்கப்பட்டதை விரும்பவில்லை}. எங்கே பீஷ்மர் இருக்கிறாரோ, அங்கேதான் இந்தத் துரோணன் இருப்பான். பீஷ்மர் உன்னிடம் சொன்னதைச் செய்வாயாக. ஓ! எதிரிகளை வாட்டுபவனே {துரியோதனா}, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, பாதி நாட்டைக் கொடுப்பாயாக. ஓ! ஐயா {துரியோதனா}, உன்னிடம் போலத்தான், நான் அவர்களுக்கும் ஆசானாகச் செயல்பட்டேன். உண்மையில், அஸ்வத்தாமன் எப்படியோ, அப்படியே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனும் எனக்கு ஆவான். உணர்ச்சி மிக்கப் பேச்சினால் {ஆவதென்ன?} என்ன பயன் ஏற்படும்? நீதி எங்கே இருக்கிறதோ, அங்கேதான் வெற்றி இருக்கும்" என்றார் {துரோணர்}.
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "அளக்கமுடியாத சக்தி கொண்ட துரோணர் இதைச் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் அறம்சார்ந்த விதுரர், தனது பெரியப்பாவை {பீஷ்மரை} நோக்கித் திரும்பி, அவரது முகத்தைப் பார்த்தார். பிறகு விதுரர் {பீஷ்மரிடம்}, "ஓ! தேவவிரதரே {பீஷ்மரே}, நான் பேசும் இவ்வார்த்தைகளைக் கேட்பீராக. அழியும் தருவாயில், இந்தக் குரு குலம் உம்மால் மீட்கப்பட்டது. இதன் காரணமாகவே நீர் எனது இப்போதைய புலம்பல்களில் வேறுபடுகிறீர். {புலம்புகிறவனான எனது வார்த்தைகளை அலட்சியம் செய்கிறீர்}. இந்த நமது குலத்தின் களங்கமும், காமத்தால் உணர்வுகளை இழந்தவனும், நன்றி மறந்தவனும், தீயவனும், பேராசைக்கு அடிமையானவனுமாக இந்தத் துரியோதனன் இருந்தாலும், அவனது {துரியோதனனின்} விருப்பங்களையே நீர் பின்தொடர்கிறீர். அறம் மற்றும் பொருளை மேற்கொள்பவரான தனது தந்தையின் {திருதராஷ்டிரரின்} கட்டளைகளை மீறிவரும் துரியோதனனின் செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் குருக்கள் தாங்கத்தான் வேண்டும். ஓ! பெரும் மன்னா {பீஷ்மரே}, குருக்கள் அழியா வண்ணம் செயல்படுவீராக.
ஓவியம் படைக்கும் ஓவியனைப் போல, ஓ! மன்னா {பீஷ்மரே}, நானும், திருதராஷ்டிரரும் உயிர்பெறக் காரணமாக இருந்தவர் நீரே. உயிரினங்களைப் படைத்த படைப்பாளனே {பிரம்மனே}, அவற்றை மீண்டும் அழிக்கிறான். அவனைப் {பிரம்மனைப்} போலவே செயல்படாதீர். உமது கண் முன்பாகவே உமது குலம் அழிவதைக் கண்டு, அதை அலட்சியம் செய்யாதீர். எனினும், நெருங்கி வரும் உலகளாவிய படுகொலையின் விளைவால், உமது அறிவை இழந்துவிட்டீரெனில் {உமக்கு புத்தி கெட்டுவிட்டதெனில்}, என்னையும், திருதராஷ்டிரரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் செல்வீராக. இல்லையெனில் {புத்தி கெடவில்லையெனில்}, தனது அறிவை வஞ்சித்துக் கொள்ளும் இந்தத் தீய துரியோதனனை இன்றே கட்டிப் போட்டு, பாண்டுவின் மகன்களுடன் இந்த நாட்டை ஆண்டு, அதைச் சுற்றிலும் பாதுகாப்பீராக. ஓ! மன்னர்களில் புலியே {பீஷ்மரே}, எண்ணிப் பாரும். பாண்டவர்கள், குருக்கள், மற்றும் அளவற்ற சக்தி கொண்ட பிற மன்னர்கள் ஆகியோரின் பெரும் படுகொலைகள் நம்முன்னே இருக்கின்றன" என்றார் {விதுரர்}.
துயரால் நிரம்பி வழிந்த இதயத்துடன் இருந்த விதுரர் இதைச் சொல்லி நிறுத்தினார். இக்காரியம் குறித்துச் சிந்தித்த அவர் {விதுரர்}, மீண்டும் மீண்டும் பெருமூச்சு விடத் தொடங்கினார்.
பிறகு, ஒரு முழு இனமே அழிவுக்குள்ளாகப்போவதை அறிந்து எச்சரிக்கை அடைந்த மன்னன் சுபலனின் மகள் {காந்தாரி}, மிகுந்த சீற்றத்துடன், கூடியிருந்த மன்னர்கள் முன்னிலையில், தீய இதயம் கொண்ட கொடூரனான துரியோதனனிடம், அறம் மற்றும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னாள். அவள் {காந்தாரி துரியோதனனிடம்}, "பாவம் நிறைந்த நீ, உன் ஆலோசகர்களின் ஆதரவோடு செய்த குற்றங்களை அறிக்கையிடப் போகும் (எனது) வார்த்தைகளை, இந்த அரசச் சபையில் இருக்கும் மன்னர்கள் அனைவரும் மற்றும் இந்தச் சபையின் பிற உறுப்பினர்களான மறுபிறப்பாள முனிவர்களும் {பிராமணர்களும்} கேட்கட்டும்.
குருக்களின் நாடு முறையான வகையில், அடுத்தடுத்து அனுபவிக்கப்படுகிறது {ஆளப்படுகிறது}. இதுவே எப்போதும் நமது குலத்தின் வழக்கமுமாகும். நீயோ, பாவம் நிறைந்த ஆன்மாவோடும், அதீதத் தீச்செயல்களைச் செய்து கொண்டும், குரு நாட்டை நீதியற்ற வகையில் அழிக்க முற்படுகிறாய். பெரும் முன்னறிதிறம் கொண்ட விதுரனைத் (தனது ஆலோசகராக) தன் கீழே கொண்டிருக்கும் திருதராஷ்டிரர் இந்த நாட்டை உடைமையாகக் கொண்டிருக்கிறார். இந்த இருவரையும் கடந்து, ஏன் அறியாமையால் அரசாட்சியின் மேல் இப்போது பேராசை கொள்கிறாய்?
பீஷ்மர் உயிரோடிருக்கையில், உயர் ஆன்ம மன்னன் {திருதராஷ்டிரன்}, க்ஷத்ரி {விதுரன்} ஆகிய இருவரும் கூட, அவருக்கு {பீஷ்மருக்கு} அடங்கியே நடக்க வேண்டும். உண்மையில், தான் ஏற்ற நீதியின் விளைவால், மனிதர்களில் முதன்மையானவரும், கங்கையின் பிள்ளையுமான உயர் ஆன்ம பீஷ்மர் ஆட்சியுரிமையை விரும்பவில்லை.. இதன்காரணமாக, இந்த வெல்லப்பட முடியாத நாடு பாண்டுவுக்கு உடைமையானது. எனவே, அவனது {பாண்டுவின்} பிள்ளைகளே இன்று {அதற்கு} தலைவர்களாவர் {எஜமானர்களாவர்}; வேறு எவனும் அல்ல. தங்கள் தந்தைவழி உரிமையால், இந்தப் பரந்த நாடு, பாண்டவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கும் என முறையான வரிசையில் உரிமையானதாகும்.
உயர்ந்த ஆன்மாக் கொண்டவரும், குருக்களின் அறிவுநிறைந்த தலைவரும், உண்மையை உறுதியுடன் கடைப்பிடிப்பவருமான தேவவிரதர் {பீஷ்மர்} என்ன சொல்கிறாரோ, அதன் படி இந்த மன்னனும் {திருதராஷ்டிரரும்}, விதுரனும், பெரும் நோன்புகள் கொண்ட பீஷ்மரின் கட்டளையின் பேரில், அதையே அறிக்கையிட்டபடி {பறைசாற்றியபடி}, நமது குலத்தின் வழக்கத்தை நோற்று, உரிய வகையில் நமது நாட்டை ஆளட்டும். இதுவே (இந்தக் குலத்தின்) நலன்விரும்பிகள் செயல்பட வேண்டிய முறையாகும். தர்மனின் மகனான யுதிஷ்டிரன், அறத்தை முதன்மையாகக் கொண்டு, மன்னன் திருதராஷ்டிரரால் வழிகாட்டப்பட்டு, சந்தனுவின் மகனால் {பீஷ்மரால்} தூண்டப்பட்டு, குருக்களின் இந்த நாட்டைச் சட்ட முறைமைகளின்படி அடைந்து, நீதியுடன் நீண்ட வருடங்கள் ஆளட்டும்" என்றாள் {காந்தாரி}."