அரிமா சங்கத்தின் நினைவுப்பரிசு |
அதேவேளையில் எனது நண்பரும், விக்ரம் அச்சக உரிமையாளருமான திரு.சீனிவாசன் அவர்கள், ஒரு சுழற்சங்கத்தின் புத்தகங்களை வடிவமைத்துத் தரமுடியுமா என்று என்னிடம் கேட்டார். நான் செய்து தருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன். மொத்தம் 10 புத்தகங்கள். முதலில் ஒரு புத்தகத்தை மட்டும் எனது அலுவலகத்திலேயே மேலோட்டமாக வடிவமைத்து பிழைதிருத்ததிற்காகவும் ஒரு முன்னோட்டத்திற்காகவும் அந்தச் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். அதில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.
நான் வடிவமைக்கும்போது எனது அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையான படி அப்புத்தகத்தை அமைத்துக் கொள்ள அச்சங்கத்தின் நிர்வாகிகள் விரும்பினார்கள். எனது அலுவலகமோ சிறியது. ஏசியிலேயே இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு எனது அலுவலகம் மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். எனவே, நான் எனது நண்பர் ஜெயவேலன் அவர்களைத் தொடர்பு கொண்டு, மேற்கண்ட தகவலைச் சொல்லி, அண்ணா நகரில் இருக்கும் அவரது நண்பர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களின் அலுவலகத்தில் வைத்து நான் அப்புதகங்களை வடிவமைத்துக் கொடுக்கலாமா என்று கேட்டேன்.
நண்பர்கள் திரு.ஜெயவேலனும், திரு.சீனிவாசனும் கூடப் புத்தகங்களை வடிவமைக்கக் கொடுத்திருக்கும் அந்தச் சங்கத்தின் உறுப்பினர்களே.
அண்ணா நகரில் உள்ள அந்த அலுவலகத்தில் வைத்தே புத்தகங்களை வடிவமைக்க ஆரம்பித்தோம். இந்த வேலையிலேயே நான் கவனமாக இருந்தேன். காலையில் அண்ணா நகர் சென்றால், இரவில்தான் திருவொற்றியூரில் இருக்கும் எனது இல்லத்திற்கு வரவேண்டிய நிலை இருந்தது. வீட்டிற்கு வந்ததும் மஹாபாரதம் மொழிபெயர்ப்பைச் செய்வேன். இப்படியிருக்கையில் வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்கள் இணைய இணைப்பு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்த பகுதிகளைக் கூட இணையத்தில் பதிவேற்ற முடியவில்லை. எனவே, எனது தனிப்பட்ட மின்னஞ்சல்களைச் சரி பார்க்க என்னால் முடியவில்லை.
இந்நிலையில் ஆர்கே திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இதை நான் கவனிக்கவில்லை. 29ந்தேதி புத்தகங்களின் வடிவமைப்புப் பணிகள் நடந்து கொண்டு இருக்கையில் அப்புத்தகங்களை வடிவமைக்கக் கொடுத்த சுழற்சங்கத்தின் நிர்வாகிகள், முட்டுக்காட்டில் தாங்கள் நடத்த இருக்கும் பயிலரங்கில் என்னைக் கலந்து கொள்ளச் சொன்னார்கள். தங்கள் சங்கத்தைக் குறித்து நான் புரிந்து கொள்வதற்கு அது ஏதுவாக இருக்கும் என்றும் சொன்னார்கள்.
சுழற்சங்கப் பயிலரங்கில் |
பயிலரங்கும் கூடியது. பயிலரங்கை நடத்தியவர்கள் தங்கள் சங்கத்தின் சேவைகளையும், அது எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதையும், அச்சங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்றும் சொல்லி புதிய உறுப்பினர்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சிகள் அனைத்தும் சுவாரசியமாக இருந்தன. உணவு இடைவேளையின் போது, நண்பர் ஜெயவேலனிடம் நான், அரிமா சங்கத்தில் இருந்து ஒரு போனும் வரவில்லை. ஒருவேளை நிகழ்ச்சி ரத்தாகியிருக்குமோ என்று கேட்டேன். அப்படியெல்லாம் நாமே ஊகிக்க முடியாது, நீங்களே ஒருமுறை தொலைபேசியில் கேட்டுவிடுங்களேன் என்று அவர் சொன்னார். மாலை 4 மணியிருக்கும், என் கைபேசியில் நான் பதிந்து வைத்திருந்த எண்ணில் தொடர்பு கொண்டேன். "சார் நான் எத்தனை மணிக்கு வர வேண்டும்" என்று நான் கேட்டேன். மறுமுனையில் பேசியவர், "சார், இன்னிக்கு வர வேண்டாம். நான் திங்கட்கிழமை உங்களைத் தொடர்பு கொள்கிறேன்" என்றார். சரி நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது போல என்று நினைத்து அந்தப் பயிலரங்கின் நிகழ்ச்சியிலேயே மூழ்கிப் போனேன். காலையில் இருந்து சார்ஜ் செய்யாததால் எனது கைபேசி ஆஃப் ஆகிவிட்டது.
சுழற்சங்கப் பயிலரங்கில் |
மயிலை, ஆர்கே கன்வென்சன் (Arkay Convention Center) சென்டரை நாங்கள் அடையும்போது மணி எட்டாகிவிட்டது. வழியெங்கும் ஆர்கே அவர்களும், திரு.கஸ்தூரிரங்கன் அவர்களும் நாங்கள் எவ்விடம் வந்திருக்கிறோம் என்பதை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் இருவரும் எங்களுக்காக மாடியில் இருந்த அந்த மையத்தின் கீழேயே காத்திருந்தார்கள்.
ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் அரிமா சங்கக் கூட்டத்தில் |
தான் தொடங்கிய கிரிக் இன்ஃபோ வலைத்தளம் குறித்து அவர் பேசிக் கொண்டிருந்தார். சுவாரசியமாக இருந்தது. உண்மையில், திரு.பத்ரிசேஷாத்ரி அவர்கள் இலவசமாக அளித்திருக்கும் என்.எச்.எம். ரைட்டர் இல்லையென்றால் முழுமஹாபாரத மொழிபெயர்ப்பைச் செய்ய நான் மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும். மகாபாரத மொழிபெயர்ப்பை ஆரம்பிப்பதற்கு முன்னால், எனக்குப் பொழுதுபோக்கே என்.எச்.எம்க்குத் தேவையான xml கோப்புகளை என் தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வதுதான். TAM99 மற்றும் தட்டச்சு முறைப்படியாகத் தட்டெழுதத் தெரியாத நண்பர்களுக்காக, அவர்கள் வைத்திருக்கும் எழுத்துருவுக்கு ஏற்ற வகையிலை Phonetic முறையில் XML-ஐ மாற்றி அமைத்து அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். பத்ரி எவ்வளவு எளிதாகச் சுவாரசியம் குறையாமல் பேசுகிறார். நம்மைப் பேசச் சொல்வார்களே, நாம் என்ன பேசப் போகிறோம் என்றே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நினைவிலேயே மேடையின் அருகே திரும்பிப் பார்த்தால், எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா அவர்கள் அமர்ந்திருக்கிறார். அதிர்ந்து, "வணக்கம் சார்" என்றேன். அவர் அதை ஆமோதிக்கும் வண்ணம் கைசைத்தார். தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறோமே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் மணித்துளிகளும் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தது. பத்ரி அவர்கள் பேசி முடித்துவிட்டார். அறிவிப்பாளர் என்னை அறிமுகப்படுத்திவிட்டு பேசவும் அழைத்து விட்டார்.
அரிமா கூட்டத்தில் பேசும்போது... |
ஒவ்வொருவராகக் கேள்வி கேட்க, நானும் எனக்குத் தெரிந்த பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். கேள்விகளுக்கிடையில் நமது வலைப்பூவில் வெளியாகும் ஆடியோ மற்றும் காணொளிகளைக் குறித்தும் கேட்டது அம்முயற்சியின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இடையில் பத்ரி அவர்களும், சாரு அவர்களும் கேள்வி கேட்டது மகிழ்ச்சியையும், எனக்கு ஒரு தைரியத்தையும் அளித்தது. ஏதோ ஒருவாறு பேசி
அமர்ந்தேன்.
சாரு அவர்களிடம் காசோலை பெறும்போது அருகில் பத்ரி அவர்கள் |
திரு.சாருநிவேதிதா அவர்கள் பேசும்போது... |
நிகழ்ச்சி முடிந்ததும் உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். ஆனால் நண்பர்கள் முட்டுக்காட்டில் காத்திருப்பார்கள் என்று சொன்னதும், சரி சென்று வாருங்கள் என்றார்கள். உணவருந்தும் இடத்தில் ஒருவர் பாயசமாவது சாப்பிடுங்கள் என்றார். நாங்கள் மூவரும் பாயசம் அருந்திவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டோம்.
காரில் முட்டுக்காட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையில், நண்பர் சீனிவாசன் அவர்கள், "சார் பெருமையா இருக்கு சார். வெட்டி வேலை செஞ்சுட்டு இருக்கீங்கனு நான் எத்தனையோ தடவ சொல்லியிருக்கேன். ஆனால், இன்னிக்கு உங்களுக்குக் கிடச்ச மரியாதை! உங்கள ஒருமுறை கூட யாரும் பாத்ததில்ல. இருந்தாலும், எல்லாரும் உங்ககிட்ட எவ்வளவு அன்பா நடந்துகிட்டாங்க. இந்த வேலைய எக்காரணம் கொண்டும் விட்டுடாதீங்க" என்றார்.
அரிமா சங்கத்தின் ஆர்கே திரு. A.S.இராமக்கிருஷ்ணன் மற்றும் திரு.கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும், திரு.சாரு நிவேதிதா, திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும் மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
என் உடன் இருந்த நண்பர்கள் ஜெயவேலன், மற்றும் விக்ரம் அச்சக சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி. இவர்கள் இருவர் இல்லையென்றால், அரிமா சங்கத்தின் அன்றைய கூட்டத்திற்குச் சென்றிருக்க முடியாது.