The answer received by Duryodhana! | Udyoga Parva - Section 164 | Mahabharata In Tamil
(உலூகதூதாகமன பர்வம் – 4)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன், யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன், விராடன், துருபதன், சிகண்டி, திருஷ்டத்யும்னன் ஆகியோர் துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் சொன்ன வார்த்தைகள்; இறுதியாக மீண்டும் ஒருமுறை யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட உலூகன், யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுத் துரியோதனனிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொல்வது; துச்சாசனன், கர்ணன், சகுனி ஆகியோரை அழைத்த துரியோதனன் படைகளை அணிவகுக்கும்படி ஏவியது; கர்ணனின் கட்டளையின் பேரில் படை அணிவகுக்கப்படுவது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துரியோதனனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் புகழ் கொண்டவனுமான குடகேசன் {அர்ஜுனன்}, மிகச் சிவந்த கண்களுடன் அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனைக் {உலூகனைக்} கண்டான். மேலும் கேசவனைப் {கிருஷ்ணனைப்} பார்த்து, தனது பெரும் கரங்களை உயரத்தூக்கி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, "எவன் தனது சொந்த பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைத்து, அவர்களுடன் அச்சமற்றறு போரிடுவானோ அவனே ஆண்மகனாகச் சொல்லப்படுகிறான். எனினும், பிறரின் பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைக்கும் புகழற்ற ஒரு க்ஷத்திரியன், தனது இயலாமையின் விளைவாக, மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான். பிறரின் பலத்தை நம்பி இருக்கும் நீ (ஓ! துரியோதனா), கோழையாக இருந்து கொண்டு, ஓ! மூடா, உனது எதிரிகளை நிந்திக்கிறாய்.
எது நன்மையோ, அதையே இதயப் பூர்வமாகச் செய்பவரும், தனது ஆசைகள் அனைத்ததையும் கட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரும் அறிவுடையவருமான க்ஷத்திரியர்கள் அனைவரிலும் முதிர்ந்தவரை (பீஷ்மரை) உனது துருப்புகளின் தலைவராக நிறுவி கொண்டு, நிச்சய மரணத்திற்கு அவரை {பீஷ்மரை} ஆட்படுத்தி, தற்புகழ்ச்சியில் {பிதற்றலில்} நீ ஈடுபடுகிறாய்! ஓ! தீய புரிதல் கொண்டவனே, (இதைச் செய்வதில் இருக்கும்) உனது நோக்கத்தை, ஓ! உனது குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். கருணையால், பாண்டுவின் மகன்கள், கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கொல்லமாட்டார்கள் என்று நினைத்தே நீ அப்படிச் செய்திருக்கிறாய். எனினும், ஓ! திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, யாரின் பலத்தை நம்பி நீ இத்தகு தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாயோ அந்தப் பீஷ்மரை வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் முதலில் நான் கொல்வேன் என்று அறிவாயாக!" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக.}
ஓ! சூதாடியின் மகனே {உலூகா}, (இங்கிருந்து) பாரதர்களிடம் சென்று, திருதராஷ்டிரர் மகனான துரியோதனனை அணுகி, அர்ஜுனன் சொன்னான் என்று அவனிடம் {துரியோதனனிடம்}, "அப்படியே ஆகட்டும். இந்த இரவு கடந்ததும், கடும் ஆயுத மோதல் ஏற்படப்போகிறது. உண்மையில், தோற்காத வலிமை கொண்டவரும், உண்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவருமான பீஷ்மர், "சிருஞ்சயர்கள் மற்றும் சால்வேயர்களின் படையை நான் கொல்வேன். இதுவே எனது பணியாகட்டும். துரோணரைத் தவிர்த்து இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் என்னால் கொல்ல முடியும். எனவே, பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தை ஊக்குவிக்காதிருப்பாயாக!" என்ற இவ்வார்த்தைகளைக் குருக்களுக்கு மத்தியில் வைத்து {துரியோதனனான} உன்னிடம் சொல்லியிருக்கிறார்!
இதன்காரணமாக, ஓ! துரியோதனா, நீ பாண்டவர்கள் துயரில் மூழ்கிவிட்டார்கள், நாடு நமதே என்று கருதுகிறாய். இதனால் நீ செருக்கால் நிறைந்திருக்கிறாய். எனினும், உன்னிடமே இருக்கும் ஆபத்தை நீ காணவில்லை. எனவே, முதலில் நான் குருக்களில் மூத்தவரான பீஷ்மரை உனது கண்களுக்கு முன்பாகவே கொல்வேன்! (நாளை) சூரியன் முளைக்கையில், தேர்களுடனும் கொடிக்கம்பங்களுடனும் கூடிய துருப்புகளின் தலைமையில் நின்று, தனது உறுதிமொழிகளில் உறுதியாய் இருக்கும் உனது படைகளின் தலைவரைக் காப்பாயாக. உனது புகலிடமாக இருக்கும் அவரை {பீஷ்மரை}, உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே, எனது கணைகளால் கீழே வீழ்த்துவேன். நாளை விடிந்ததும், எனது கணைகளால் மூடப்பட்டிருக்கும் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்டு, பிதற்றலில் {தற்புகழ்ச்சியில்} ஈடுபடுவதால் என்ன நடக்கும் என்பதைச் சுயோதனன் {நீ} அறிவான்{ய்}.
ஓ! சுயோதனா {துரியோதனா}, குறுகிய பார்வை கொண்டவனும், அநீதிமிக்கவனும், எப்போதும் விதண்டாவாதம் செய்பவனும், தீய புரிதல் கொண்டவனும், நடத்தையில் கொடூரனுமான உனது தம்பி துச்சாசனனைக் குறித்து, சபைக்கு மத்தியில், கோபத்தில் பீமசேனர் சொன்னது நிறைவேறுவதை வெகுவிரைவில் நீ காண்பாய். மாயை, செருக்கு, கோபம், திமிர்த்தனம், பிதற்றல், இரக்கமற்றத்தனம், சுடு சொற்கள் மற்றும் செயல்கள், நீதியில் ஏற்படும் வெறுப்புணர்வு, பாவம் நிறைந்த தன்மை, அடுத்தவரைத் தவறாகப் பேசுதல், வயதில் முதிர்ந்தோரின் ஆலோசனைகளை மீறுதல், சாய்ந்த பார்வை மற்றும் அனைத்து வகைத் தீமைகளின் பயங்கர விளைவுகளை நீ விரைவில் காண்பாய்.
ஓ! மனிதருள் இழிந்தவனே, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டிருக்கும் நான் கோபப்பட்டால், ஓ! மூடா, வாழ்விலோ, நாட்டிலோ உனக்கு எப்படி ஆசையுண்டாகும்? பீஷ்மரும், துரோணரும் அமைதிப்படுத்தப்பட்ட பிறகு, சூதனின் மகன் {கர்ணன்} வீழ்த்தப்பட்ட பிறகு, வாழ்க்கை, நாடு மற்றும் மகன்கள் மீது நீ நம்பிக்கையற்றவனாவாய். பீமசேனர் கொடுக்கும் மரண அடியால், உனது தம்பிகளும் மகன்களும் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டு, ஓ! சுயோதனா {துரியோதனா}, நீ உனது தவறான செய்கைகள் அனைத்தையும் நினைவு கூர்வாய்" என்று துரியோதனனிடம் சொல்வாயாக. ஓ! சூதாடியின் மகனே {உலூகா}, இரண்டாம் முறை நான் சூளுரைக்கமாட்டேன் என்றும் அவனிடம் சொல்வாயாக. இவை யாவும் நடைந்தேறும் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்", என்றான் {அர்ஜுனன்}
{பிறகு, யுதிஷ்டிரன் உலூகனிடம்} [1], "ஓ! உலூகா, இங்கிருந்து செல்லும் நீ, ஓ! ஐயா, சுயோதனனிடம் {துரியோதனனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. உன் வெளிச்சத்தில் {உனது நடத்தையைக் கொண்டு} எனது நடத்தையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது உனக்குத் தகாது. உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது, எனது நடத்தைக்கும், உனது நடத்தைக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிவாயாக! பூச்சிகளுக்கும், எறும்புகளுக்குக் கூட நான் தீங்கை விரும்ப மாட்டேன். எனவே, எனது சொந்தங்களுக்கு என்னால் எப்போதும் தீங்கை விரும்பமுடியுமா என்பதைக் குறித்து நான் என்ன சொல்ல? ஓ! ஐயா, அதற்காகவே நான் உன்னிடம் வெறும் ஐந்து கிராமங்களை மட்டும் கேட்டேன்! ஓ! தீய புரிதல் கொண்டவனே {துரியோதனா}, உன்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய பேரிடரை நீ ஏன் காணாமல் இருக்கிறாய்? காமத்தால் {ஆசையால்} சூழப்பட்ட ஆன்மா கொண்ட நீ, உனது புரிதலில் {அறிவில்} உள்ள குறைபாட்டின் காரணமாகவே வீம்புகளில் ஈடுபடுகிறாய். அதன் {அறிவில் உள்ள குறைப்பாட்டின்} காரணமாகவே நீ வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன நன்மையான வார்த்தைகளை ஏற்க மறுக்கிறாய். அதிகப் பேச்சுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? உனது நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து (எங்களுக்கு எதிராகப்} போரிடுவாயாக!" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}. ஓ! சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனக்குத் தீங்கானதையே எப்போதும் செய்யும் அந்தக் குரு இளவரசனிடம் {துரியோதனனிடம்}, "உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன; அவற்றின் பொருளும் புரிந்து கொள்ளப்பட்டது. உன் விருப்பப்படியே {அனைத்தும்} நடக்கட்டும்" என்று (இந்த வார்த்தைகளையும்) சொல்வாயாக" {என்று [உலூகனிடம்] சொன்னான் [யுதிஷ்டிரன்]}.
[1] கங்குலியில் இங்கே அர்ஜுனன் தனது பேச்சைத் தொடர்ந்து செல்வதாகக் காணப்படுகிறது. ஆனால் வேறு பதிப்புகளில் யுதிஷ்டிரன் பேசுவதாக வருகிறது. கங்குலியில் கூட அடுத்து தொடர்ந்து வரும் சொற்கள் யுதிஷ்டிரனுக்கே மிகவும் பொருந்துகின்றன. எனவே, இங்கே கங்குலியில் இருந்து நாம் மாறுபட்டு யுதிஷ்டிரன் பேசுவதாகவே கொள்கிறோம். அதுவே சரியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}, ஓ! மன்னனின் மகனே {திருதராஷ்டிரரே}, பிறகு, பீமசேனன் மீண்டுமொருமுறை இவ்வார்த்தைகளைச் சொன்னான். பீமன் {உலூகனிடம்}, "ஓ! உலூகா, தீய மனம் கொண்டவனும், வஞ்சகம் நிறைந்தவனும், அநீதிமிக்கவனும், பாவத்தின் வடிவானவனும், கபடம் நிறைந்தவனும், தீய நடத்தை மிக்கவனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} எனது இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. {பீமன் துரியோதனனிடம்}, "ஓ! மனித வகையில் இழிந்தவனே {துரியோதனா}, கழுகின் வயிற்றிலோ {கழுகுக்கு இரையாகவோ}, ஹஸ்தினாபுரத்திலோ நீ வசிக்க வேண்டியிருக்கும். சபைக்கு மத்தியில் ஏற்ற உறுதி மொழியை நான் நிறைவேற்றப்போவது நிச்சயம்.
போரில் துச்சாசனனைக் கொன்று, அவனது ஆக்கை இரத்தத்தைக் குடிப்பேன் என்று நான் உண்மையின் {சத்தியத்தின்} பேரில் உறுதியேற்கிறேன். உனது (மற்ற) தம்பிகளையும் கொல்லும் நான், உனது தொடைகளையும் நொறுக்குவேன். ஓ! சுயோதனா {துரியோதனா}, அபிமன்யு எப்படி (இளைய) இளவரசர்கள் அனைவரையும் கொல்வானோ, அப்படியே நான் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் அழிப்பவனாவேன். எனது செயல்களால், நான் உங்கள் அனைவரின் மனமும் நிறையும்படி செய்வேன்!! மீண்டும் ஒருமுறை என்னைக் கேட்பாயாக. ஓ! சுயோதனா {துரியோதனா}, இரத்த சம்பந்தமுள்ள உன் தம்பிகள் அனைவரோடு உன்னையும் கொல்லும் நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் பார்வையில், மகுடம் தரித்த உனது தலையை எனது காலால் மிதிப்பேன்!" என்று {உலூகனிடம்} சொன்னான் {பீமசேனன்}.
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு நகுலன் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {நகுலன் உலூகனிடம்} "ஓ உலூகா, திருதராஷ்டிரர் மகனும், குரு குலத்தோனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, அவன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும், அவற்றின் பொருளும் கேட்கப்பட்டன என்றும், {நகுலன் துரியோதனனிடம்} "ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீ எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நான் செய்வேன்" என்றும் சொல்வாயாக" என்றான் {நகுலன்}.
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சகாதேவனும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னான். {சகாதேவன் > உலூகனிடம்/துரியோதனனிடம்} "ஓ! சுயோதனா {துரியோதனா}, நீ விரும்பியவாறே அனைத்தும் நடக்கும்! ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, எங்கள் துன்பங்களைக் கண்டு நீ எப்படி இப்போது இன்பத்தில் பிதற்றுகிறாயோ {தற்புகழ்ச்சி பேசுகிறாயோ}, அப்படியே உனது பிள்ளைகள், சொந்தங்கள், ஆலோசகர்கள் ஆகியோருடன் நீ வருந்த வேண்டியிருக்கும்" என்றான் {சகாதேவன்}.
வயதால் மதிக்கத்தக்க விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரும் உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். "அறம் சார்ந்த ஒரு மனிதனுக்கு அடிமையாக இருப்பதும் எங்கள் விருப்பமே! எனினும், நாங்கள் அடிமைகளா, எஜமானர்களா என்பதும், யார் ஆண்மை உள்ளவன் என்பதும் நாளை தெரிந்துவிடும்" என்றனர்.
அவர்களுக்குப் பின் சிகண்டி இந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். {சிகண்டி > உலூகனிடம்/ துரியோதனனிடம்}, "பாவ நிறைவுக்கு எப்போதும் அடிமையாக இருக்கும் மன்னன் துரியோதனனிடம் நீ இவ்வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். "ஓ! மன்னா {துரியோதனா}, போரில் என்னால் விளையும் கடுஞ்செயலைக் காண்பாயாக! போரில் வெற்றி உறுதி என்று யாரை நம்பி நீ நினைக்கிறாயோ, அந்த உனது பாட்டனை {பீஷ்மரை}, அவரது தேரில் வைத்தே நான் கொல்வேன். பீஷ்மரின் அழிவுக்காகவே உயர் ஆன்ம படைப்பாளனால் {பிரம்மனால்} நான் படைக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் பீஷ்மரை உறுதியாகக் கொல்வேன்" என்றான் {சிகண்டி}.
இதன் பிறகு, திருஷ்டத்யும்னனும், சூதாடி மகனான உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {திருஷ்டத்யும்னன் > உலூகனிடம்/ துரியோதனனிடம்} "இளவரசன் சுயோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. "துரோணரை, அவரது நண்பர்கள் மற்றும் தொண்டர்களோடு சேர்த்து நான் கொல்வேன். எவனும் எப்போதும் செய்யாத செயலை நான் செய்வேன்" என்று {உலூகனிடம்} சொன்னான் {திருஷ்டத்யும்னன்}.
மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் ஒருமுறை கருணை நிறைந்த இந்த உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னான், {யுதிஷ்டிரன் > உலூகனிடம்/ துரியோதனனிடம்} "ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எனது சொந்தங்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. ஓ! தீய புரிதல் கொண்டோனே {துரியோதனா}, உனது தவறால் இவை யாவும் நிகழப்போவது நிச்சயமே. (என்னைச் சுற்றி இருக்கும்) இவர்கள் அனைவரும் செய்யும் பெரும் சாதனைகளின் நிறைவுக்கு, நான் நிச்சயம் அனுமதி அளிக்க வேண்டும். ஓ! உலூகா, தாமதமில்லாமல் இங்கிருந்து போ. அல்லது இங்கேயே இருப்பாயாக. ஓ! ஐயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. நாங்களும் உனது உறவினர்களே" என்றான் {யுதிஷ்டிரன்}.
பிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுக் கொண்ட உலூகன், அங்கிருந்து துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகன், தான் கேட்டதனைத்தையும் கவனமாக மனதில் தாங்கி, அவன் {உலூகன்} எங்கிருந்து வந்தானோ, அந்த இடத்திற்கே திரும்பினான். அங்கே வந்த அவன் {உலூகன்}, அர்ஜுனன் குற்றஞ்சாட்டிய அனைத்தையும் பழிவுணர்ச்சி கொண்ட துரியோதனனிடம் முழுமையாகச் சொன்னான். ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, அவன் {உலூகன்}, மாறாப்பற்றுடன் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நகுலன், விராடன், துருபதன், ஆகியோரது வார்த்தைகளையும், சகாதேவன், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரது வார்த்தைகளையும், (அதன் தொடர்ச்சியாக) கேசவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பேசப்பட்ட வார்த்தைகளையும் சொன்னான்.
அந்தச் சூதாடி மகனின் {சகுனி மகன் உலூகனின்} வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான துரியோதனன், ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோரை அழைத்து, அவர்களது துருப்புகளையும், அவர்களது கூட்டாளிகளின் துருப்புகளையும், (கூடியிருக்கும்) மன்னர்கள் அனைவரையும், பிரிவுகளாக அணிவகுத்து, சூரிய உதயத்துக்கு முன் {அடுத்த நாள்} போருக்குத் தயாராக இருக்கும்படி செய்யக் கட்டளையிட்டான். பிறகு கர்ணனால் அறிவுறுத்தப்பட்ட தூதர்கள், தங்கள் தேர்களிலும், ஒட்டகங்களிலும், பெண் குதிரைகளிலும், பெரும் வேகம் கொண்ட நல்ல குதிரைகளிலும் விரைந்து ஏறி, முகாம்களின் ஊடாக விரைந்து சவாரி செய்தனர். "நாளை சூரிய உதயத்திற்கு முன் (உங்களை) அணிவகுத்துக் கொள்ளுங்கள்" என்ற கர்ணனின் கட்டளையால் அவர்கள் {துருப்புகளும் மன்னர்களும்} வரிசையாக அணிவகுத்தனர்." என்றான் {சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.