The pandava army moved! | Udyoga Parva - Section 165 | Mahabharata In Tamil
(உலூகதூதாகமன பர்வம் – 5)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் தனது படையைப் போருக்குப் புறப்படச் செய்தது; பாண்டவத் தரப்பின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எதிரிப்படையின் வீரர்களை முறையே பிரித்துக் கொடுத்த திருஷ்டத்யும்னன்; அபிமன்யுவின் மேன்மை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உலூகனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னன் தலைமையிலான படையையும், பிறரையும் புறப்படச் செய்தான். திருஷ்டத்யும்னனால் கட்டளையிடப்பட்டவையும், பயங்கரமானவையும், பூமியைப் போன்றே அசைக்க முடியாதவையும், பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரால் வழிநடத்தப்பட்டவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்களால் காக்கப்பட்டவையும், காலாட்படை, யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகிய நால்வகைப் படைகள் உள்ளடங்கியவையுமான அந்தப் பரந்த படை அசையாப் பெருங்கடலுடன் ஒப்பிடத்தக்கதாக இருந்தது. அந்தப் பரந்த படையின் தலைமையில், வலிமையான வில்லாளியும், பாஞ்சாலர்களின் இளவரசனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், துரோணரைத் தனது எதிரியாகப் பெற விரும்பியவனுமான திருஷ்டத்யும்னன் இருந்தான்.
அந்தத் திருஷ்டத்யும்னன், எதிரி படையின் குறிப்பிட்ட போர்வீரர்களுக்கு எதிராக நிறுத்துவதற்காக {தனது படையில் இருந்து) போராளிகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினான். தனது தேர் வீரர்களிடம் அவர்களது பலம் மற்றும் துணிவுக்குத் தகுந்த வகையில் உத்தரவுகளை அவன் கொடுக்கத் தொடங்கினான். சூதனின் மகனுக்கு (கர்ணனுக்கு) எதிராக அர்ஜுனனையும், துரியோதனனுக்கு எதிராகப் பீமனையும், சல்லியனுக்கு எதிராகத் திருஷ்டகேதுவையும், கௌதமரின் மகனுக்கு (கிருபருக்கு) எதிராக உத்தமௌஜசையும், கிருதவர்மனுக்கு எதிராக நகுலனையும், சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு (ஜெயத்ரதனுக்கு) எதிராக யுயுதானனையும் {சாத்யகியையும்} நிற்குமாறு அவன் {திருஷ்டத்யும்னன்} கட்டளையிட்டான்.
பீஷ்மருக்கு எதிராக நிற்பதற்காகப் படையின் முன்னணியில் சிகண்டியை நிற்கத்தூண்டினான். சகுனிக்கு எதிராகச் சகாதேவனையும், சலனுக்கு எதிராகச் சேகிதானனையும், திரிகார்த்தர்களுக்கு எதிராகத் திரௌபதியின் ஐந்து மகன்களையும் நிற்கக் கட்டளையிட்டான். (கர்ணனின் மகனான) விருஷசேனனுக்கும், எஞ்சிய பிற மன்னர்கள் அனைவருக்கும் எதிராகச் சுபத்திரையின் மகனை (அபிமன்யுவை) நிற்கத் தூண்டினான். ஏனெனில், போரில் அர்ஜுனனைவிட மேன்மையானவனாக அபிமன்யுவை அவன் {திருஷ்டத்யும்னன்} கருதினான்.
இப்படியே தனது போர்வீரர்களைத் தனித்தனியாகவும், குழுவாகவும் பிரித்தவனும், சுடர்விடும் நெருப்பின் நிறம் கொண்டவனுமான அந்த வலிமைமிக்க வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, துரோணரைத் தனது பங்காக வைத்துக் கொண்டான். துருப்புகளின் தலைவர்களுக்குத் தலைவனும், வலிமைமிக்கவனும், புத்திசாலி வில்லாளியுமான திருஷ்டத்யும்னன், தனது துருப்புகளை முறையாக அணிவகுக்கச் செய்து, உறுதியான இதயத்துடன் போருக்காகக் காத்திருந்தான். பாண்டவர்களின் போராளிகளை மேற்குறிப்பிட்டபடி அணிவகுக்கச் செய்து, பாண்டு மகன்களின் வெற்றியை அடைவதற்காகப் போர்க்களத்தில் குவிந்த மனதுடன் {மனதை ஒருநிலைப் படுத்திக்} காத்திருந்தான்.
*********உலூகதூதாகமன பர்வம் முற்றிற்று*********