Lakshmana, the son of Duryodhana! | Udyoga Parva - Section 167 | Mahabharata In Tamil
(ரதாதிரதசங்கியான பர்வம் – 2)
பதிவின் சுருக்கம் : காம்போஜ மன்னன் சுதக்ஷிணன், மஹிஷ்மதியின் மன்னன் நீலன், அவந்தியின் மன்னர்கள் விந்தன் மற்றும் அனுவிந்தன், திரிகார்த்தத்தின் ஐந்து இளவரசர்கள், துரியோதனனின் மகன் லக்ஷ்மணன், துச்சாசனின் மகன் லட்சுமணன், தண்டதாரன், கோசல மன்னன் பிருஹத்பலன், கிருபர் ஆகியோர் கௌரவப்படையில் வகிக்கும் படிநிலை குறித்து பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது...
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் என் கருத்தின்படி ஒரு தனி ரதனுக்கு {Ratha} {ரதிக்னன்} இணையானவன். உனது நோக்கத்தின் வெற்றியை விரும்பும் அவன் {சுதஷிணன்}, போர்க்களத்தில் எதிரியுடன் போரிடுவது உறுதி. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, போர்க்களத்தில் இருக்கும் இந்திரனுக்கு இணையாக உனக்காக உழைக்கும் தேர்வீரர்களில் சிங்கமான இவனது ஆற்றலை கௌரவர்கள் காண்பார்கள். இந்த மன்னனின் {சுதக்ஷிணனின்} தேர்ப்படையைப் பொறுத்தவரை, கடும் செயலூக்கத்துடன் அடிப்பவர்களான அந்தக் காம்போஜர்கள், ஒரு பெரிய பகுதியை மூடும் வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போன்றவர்களாவர்.
நீலக் கவசம் தரித்திருப்பவனும், மஹிஷ்மதி (மாகாணத்தில்) இருந்து வந்திருப்பவனுமான நீலன், உனது ரதர்களில் ஒருவன் ஆவான். அவனது தேர்ப்படையைக் கொண்டு அவன் {நீலன்} பெரிய அழிவை ஏற்படுத்துவான். ஓ! குழந்தாய் {துரியோதனா}, அவனுக்குச் சகாதேவனிடம் பகைமை இருக்கிறது.
போரில் சாதித்தவர்களும், கடும் சக்தி மற்றும் ஆற்றலைக் கொண்டவர்களும், அவந்தியை {அவந்தி நாட்டைச்} சேர்ந்தவர்களுமான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகிய இருவரும் அற்புதமான ரதர்களாகக் கருதப்படுகிறார்கள். மனிதர்களில் வீரர்களான இந்த இருவரும், தங்கள் கையில் இருந்து விடப்பட்ட கதாயுதங்கள், நாராசம், தோமரம், வாள், ஈட்டிகளால் உனது எதிரியின் துருப்புகளை எரிப்பார்கள். இரு (யானைகளை) தலைவர்களைப் போல, தங்கள் கூட்டத்துடன் விளையாடி, போருக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் அந்த இளவரசர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, யமனைப் போலவே போர்க்களத்தில் உலவுவார்கள்.
திரிகார்த்தத்தின் ஐந்து (அரசச்) சகோதரர்களும், எனது கருத்தின்படி, ரதர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாவார்கள். (நன்கு அறியப்பட்ட) விராட நகர் சம்பவத்தின் போது, பிருதையின் {குந்தியின்} மகன்கள் அவர்களுடன் பகைமை கொண்டார்கள். ஓ! மன்னா {துரியோதனா}, உயர்ந்த அலைகளைக் கொண்ட கங்கையின் ஓடையைக் கலக்கும் பெரும் மகரங்களைப் போல, போர்க்களத்தில் பார்த்தர்களின் அணியைக் கலங்கடிப்பார்கள். ஓ! மன்னா {துரியோதனா}, சத்தியரதனைத் (தங்களில்) மூத்தவனாகக் கொண்ட அவர்கள் {திரிகார்த்தத்தின் சகோதரர்கள்} ஐவரும் ரதர்களாவர் {ரதிக்னர்கள்}. வெள்ளைக்குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் செல்பவனும், பாண்டுவின் மகனான பீமனின் தம்பி {அர்ஜுனன்}, பூமியின் மன்னர்கள் அனைவரையும் அடக்கியபோது, தங்களுக்கும் தீங்கிழைத்ததை நினைவு கூரும் அவர்கள் {திரிகார்த்தத்தின் சகோதரர்கள்}, ஓ! பாரதா {துரியோதனா}, போர்க்களத்தில் தங்கள் வீரத்தை நிச்சயம் காட்டுவார்கள். பாண்டவர்கள் பக்கம் உள்ள வில்லாளிகளின் தலைவர்களான பல மகாரதர்களையும், க்ஷத்திரியத் தலைவர்களையும் அவர்கள் நிச்சயம் கொல்வார்கள்.
{துரியோதனா} மனிதர்களில் புலிகளான உனது மகன் லக்ஷ்மணன், துச்சாசனனின் மகன் ஆகிய இருவரும் போரில் புறமுதுகிடாதவர்களாவர்.. இளமையின் துவக்கத்தில், மென்மையான உறுப்புகளுடனும், பெரும் சுறுசுறுப்புடனும் இருக்கும் அந்த இளவரசர்கள் இருவரும் போர்களை அறிந்தவர்களாகவும், அனைவரையும் தலைமைதாங்க இயன்றவர்களாகவும் இருக்கிறார்கள். குருக்களில் புலிகளான அந்த இரு தேர்வீரர்களையும், நம்மிடம் இருக்கும் ரதர்களில் சிறந்த இருவர் என நான் நினைக்கிறேன். க்ஷத்திரிய வகைக் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அந்த இரு வீரர்களும் பெரும் சாதனைகளைப் புரிவார்கள்.
ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, தண்டதாரன் ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். தனது சொந்த வீரர்களால் பாதுகாக்கப்படும் அவன், போர்க்களத்தில் உனக்காகப் போரிடுவான்.
பெரும் வேகமும், ஆற்றலும் கொண்டவனும், கோசலத்தின் ஆட்சியாளனுமான மன்னன் பிருஹத்பலன், ஓ! ஐயா, எனது கருத்தின்படி, ஒரு ரதனுக்கு இணையானவனாவான். ஆயுதங்களில் கடுமை கொண்ட இந்த வலிமைமிக்க வில்லாளி, தார்தராஷ்டிரர்களின் நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்து, தனது நண்பர்களை மகிழ்வூட்டும்படி, போர்க்களத்தில் பலமாக உழைப்பான்.
சரத்வானின் மகனான கிருபர், ஓ! மன்னா, தேரணி தலைவர்களின் தலைவராவார் {அதிரதராவார்}. அன்புக்குரிய உயிரையோ துச்சமாக மதிக்கும் அவர் {கிருபர்} உனது எதிரிகளை எரிப்பார். சரத்வான் என்று வேறு பெயரில் அழைக்கப்பட்டவரும், பெரும் தவசியும், ஆசானுமான கௌதமருக்கு நாணற்கட்டில் பிறந்த அவர் {கிருபர்}, கார்த்திகேயனை {முருகனைப்} போன்றே வெல்லப்பட முடியாதவராவார். பல்வேறு ஆயுதங்களையும், விற்களையும் தரித்த சொல்லப்படாத வீரர்களையும் எரிக்கும் அவர் {கிருபர்}, ஓ! ஐயா, சுடர்மிகும் நெருப்பு போலப் போர்க்களத்தில் உலவி வருவார்" என்றார் பீஷ்மர்.