"Pandya is a maharatha!" said Bhishma! | Udyoga Parva - Section 172 | Mahabharata In Tamil
(ரதாதிரதசங்கியான பர்வம் – 7)
பதிவின் சுருக்கம் : சிகண்டி, திருஷ்டத்யும்னன், திருஷ்டத்யும்னனின் மகனான க்ஷத்ரதர்மன், திருஷ்டகேது, ஜெயந்தன், அமிதௌஜஸ், கேகயத்தின் ஐந்து சகோதரர்களான காசிகன், சுகுமாரன், நீலன், சூரியதத்தன், மித்ராஸ்வன் என்று அழைக்கப்படும் சங்கன் ஆகியோர், வார்த்தக்ஷேமி, சித்திராயுதன், சேகிதானன், சத்யத்ருதி, வியாக்ரதத்தன், சந்திரசேனன், சேனவிந்து, காசியன், துருபதனின் மகனான சத்யஜித், பாண்டிய மன்னன், த்ருடதன்வான், சிரேணிமத், வசுதானன் ஆகியோர் பாண்டவர்களின் படையில் இருக்கும் படிநிலையையும், அவர்களின் தகுதிகளையும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது...
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "எதிரி நகரங்களை அடக்குபவனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான சிகண்டி, ஓ! மன்னா {துரியோதனா}, எனது மதிப்பீட்டின்படி யுதிஷ்டிரனின் ரதர்களில் முதன்மையானவர்களில் ஒருவனாவான். தனது பழைய பாலினத்தை விட்ட அவன், ஓ! பாரதா {துரியோதனா}, உனது துருப்புகளுடன் போரிட்டு பெரும் புகழை அடைவான். தன் உதவிக்குப் பாஞ்சாலர்களும், பிரபதரர்களும் அடங்கிய பெரும் எண்ணிக்கையிலான துருப்புகளைக் கொண்டிருக்கிறான். அந்தத் தேர்ப்படைகளைக் கொண்டு அவன் {சிகண்டி} பெரும் செயல்களைச் செய்வான்.
யுதிஷ்டிரனின் படை அனைத்துக்கும் தலைவனும், துரோணரின் சீடனான வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {துரியோதனா}, எனது மதிப்பீட்டின்படி ஓர் அதிரதனாவான். போரில் எதிரிகள் அனைவரையும் துன்புறுத்தும் அவன் {திருஷ்டத்யும்னன்}, அண்டத்தின் அழிவின் போது உலவும் பினகைதாங்கியான தெய்வத்தைப் {சிவனைப்} போல, தனியொருவனாகவே போர்க்களத்தில் உலவுவான். அவனது {திருஷ்டத்யும்னன்} தேர்ப்பிரிவுகள் {எண்ணிக்கையில்} பலவாக இருப்பதால், போரில் அவை கடலைப் போலவோ, தேவர்களைப் போலவோ இருப்பதாகப் பெரும் வீரர்களும் பேசுவார்கள்.
திருஷ்டத்யும்னனின் மகனான க்ஷத்ரதர்மனோ, முதிரா வயதுடையவனாகவும், ஆயுதங்களில் போதிய பயிற்சி இல்லாதவனாகவும் இருப்பதால், எனது மதிப்பீட்டின்படி, ஓ! மன்னா {துரியோதனா}, அவன் பாதி ரதனே ஆவான் {அர்த்தரதனே ஆவான்}.
{சிசுபாலனின் மகனும், வீரனும், சேதி நாட்டு மன்னனும், பெரிய வில்லை உடையவனும், பாண்டவர்களுக்குச் சம்பந்தியுமான திருஷ்டகேது எனது மதிப்பீட்டின்படி மகாரதனாவான். ஓ! பாரதா {துரியோதனா}, துணிச்சல் மிக்கவனான இந்தச் சேதி நாட்டு மன்னன், தன் மகனோடு சேர்ந்த மகாரதர்கள் செய்யும் பெருஞ்செயல்களை எளிதில் செய்துவிடுவான்}. [1]
[1] இந்தப் பத்தி கங்குலியில் இல்லை.
பாஞ்சாலர்களுக்கு மத்தியில் இருக்கும் துணிச்சல்மிக்க வீரர்களான ஜெயந்தன், அமிதௌஜஸ் மற்றும் பெரும் தேர்வீரனான சத்யஜித் ஆகிய அனைவரும், ஓ! மன்னா, உயர் ஆன்மா கொண்ட மகாரதர்கள் ஆவர். ஓ! ஐயா, அவர்கள் அனைவரும் போரில் சினங்கொண்ட யானைகளைப் போலப் போரிடுவார்கள்.
பெரும் ஆற்றலைக் கொண்ட இருவரான அஜன் மற்றும் போஜன் ஆகிய இருவரும் மகாரதர்கள் ஆவர். பெரும் வலிமையைக் கொண்ட இந்த வீரர்கள் இருவரும் பாண்டவர்களுக்காகப் போரிடுவார்கள். ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் இந்த இருவரும் பெரும் கைவேகத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் போர்முறைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் நல்ல திறமை பெற்றவர்களாகவும், ஆற்றலில் உறுதி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
வீழ்த்துவதற்குக் கடினமானவர்களும், இரத்தச் சிவப்பு கொடிகளைக் கொண்டவர்களுமான {கேகயத்தின்} க்ஷத்திரிய வீரர்கள் ஐவரும் ரதர்களில் முதன்மையானோராவர். காசிகன், சுகுமாரன், நீலன், சூரியதத்தன், மித்ராஸ்வன் என்று அழைக்கப்படும் சங்கன் ஆகிய அனைவரும் எனது மதிப்பீட்டின் படி ரதர்களில் முதன்மையானோர் ஆவர். போருக்குத் தகுந்த அனைத்துத் தகுதிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும், ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஓ! மன்னா {துரியோதனா}, வார்த்தக்ஷேமி, எனது மதிப்பீட்டின்படி மகாரதனாவான்.
மன்னன் சித்திராயுதன் எனது மதிப்பீட்டின்படி, சிறந்த ரதர்களில் ஒருவனாவான். மறுபுறம், போரில் அவன் {சித்திராயுதன்} ஒரு சொத்தாகவும், கிரீடம் சூடியவனிடம் (அர்ஜுனனிடம்) அர்ப்பணிப்புடன் இணைந்தவனாகவும் இருக்கிறான்.
வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மனிதர்களில் புலிகளுமான சேகிதானன் மற்றும் சத்யத்ருதி ஆகியோர் பாண்டவர்களிடம் உள்ள சிறந்த ரதர்களில் இருவர் என்பது எனது மதிப்பீடாகும்.
வியாக்ரதத்தனும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சந்திரசேனனும், ஓ! பாரதா {துரியோதனா}, பாண்டவர்களிடம் உள்ள சிறந்த ரதர்களில் இருவர் என நான் நினைப்பதில் சந்தேகமில்லை.
வேறுபெயரில் குரோதஹந்திரி என்று அழைக்கப்படும் சேனவிந்து, ஓ! மன்னா {துரியோதனா}, வாசுதேவனுக்கும், பீமசேனனுக்கும் இணையானவன் என்று கருதப்படுபவனாவான். போரில் அவன் {சேனவிந்து}, உனது வீரர்களிடம் பெரும் ஆற்றலுடன் போரிடுவான். உண்மையில், என்னையும், துரோணரையும் கிருபரையும் எப்படி நீ மதிப்பாயோ, அப்படி உன்னால் மதிக்கத் தகுந்தவன் இந்த மன்னர்களில் சிறந்தவனாவான்.
மனிதர்களில் சிறந்தவனும், புகழுக்குத் தகுந்தவனுமான காசியன் {காசி நாட்டு மன்னன்} ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பெரும் கைவேகம் கொண்டவனாவான். உண்மையில், பகை நகரங்களை அடக்கும் அவன் ஒரு ரதனுக்கு இணையானவன் என்று என்னால் அறியப்படுகிறான்.
துருபதனின் மகனும், வயதில் இளையவனும், போரில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்துபவனுமான சத்யஜித், எட்டு ரதர்களுக்கு இணையானவனாகக் கருதப்பட வேண்டும். உண்மையில் திருஷ்டத்யும்னனுக்கு இணையான அவன் ஓர் அதிரதனாவான். பாண்டவர்களின் புகழைப் பரப்ப விரும்பும் அவன் {சத்யஜித்} பெரும் செயல்களைச் செய்வான்.
பாண்டவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனும், பெரும் வீரம் கொண்டவனும், வலிய சக்தி கொண்ட வில்லாளியுமான பாண்டிய மன்னன், பாண்டவர்களுக்கு மற்றுமொரு பெரும் ரதனாக {மகாரதனாக} இருக்கிறான். [2]
[2] இதே இடத்தில், வேறு பதிப்பில், "அன்பு கொண்டவனும், துணிவுமிக்கவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனும், பாண்டவர்களின் சுமையைத் தாங்குபவனுமான இந்தப் பாண்டிய மன்னன் மற்றும் ஒரு மகாரதனாவான்" என்று வருகிறது.
வலிமைமிக்க வில்லாளியான திருடதன்வான் பாண்டவர்களின் மற்றும் ஒரு மகாரதனாவான்.
ஓ! பகை நகரங்களை அடக்குபவனே {துரியோதனா}, குருக்களில் முதன்மையானோரான சிரேணிமத் {சிரேணிமான்} மற்றும் மன்னன் வசுதானன் ஆகிய இருவரும் எனது மதிப்பீட்டின்படி அதிரதர்களாவர்" என்றார் {பீஷ்மர்}.