Saikhavatya consoled Amva! | Udyoga Parva - Section 177 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 4)
பதிவின் சுருக்கம் : சால்வனின் நகரத்தை விட்டு வெளியே வந்த அம்பை தன் நிலை குறித்து ஆலோசிப்பது; இந்நிலைக்குத் தானே காரணம் என்று முதலில் நினைப்பது; பிறகு தனது துன்பம் அனைத்துக்கும் பீஷ்மரே காரணம் என்று நினைப்பது; இதை நினைத்துக் கொண்டே ஓர் ஆசிரமத்திற்குச் சென்ற அவள், அங்கிருந்த தவசிகளிடம் தன் வரலாறு அனைத்தையும் நுணுக்கமாகச் சொல்வது; அந்தணரான சைகாவத்யர் அவளைத் தேற்றியது...
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "நகரத்தைவிட்டு வெளிவந்த அம்பை {கீழ்க்கண்ட} இவ்வகையிலேயே துயரத்துடன் ஆலோசித்தாள். அவள் {அம்பை}, "இந்த முழு உலகிலும், இத்தகு துன்பகரமான அவல நிலையை அடைந்த ஓர் இளம்பெண் எவளும் இல்லை! ஐயோ, நண்பர்களை இழந்த நான், சால்வனாலும் நிராகரிக்கப்பட்டேனே! சால்வனை எதிர்பார்த்த என்னைத் தனது நகரைவிட்டு செல்ல பீஷ்மன் அனுமதித்ததால், யானையின் பெயரைக் கொண்ட அந்த நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} என்னால் திரும்ப முடியாது! யாரை நான் பழிப்பது? என்னையா? வெல்லப்பட முடியாத பீஷ்மனையா? அல்லது சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்த எனது முட்டாள் தந்தையையா?
உண்மையில், அஃது என் தவறே! அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, சால்வனிடம் செல்ல பீஷ்மனின் தேரில் இருந்து நான் ஏன் குதித்திருக்கக்கூடாது? அறிவற்றவள்போல நான் அதைத் தவிர்த்ததன் கனியாலேயே {விளைவாகவே} நான் இப்படித் துன்புற்றிருக்கிறேன். பீஷ்மன் சபிக்கப்படட்டும்! ஆற்றலை வரதட்சணையாகக் கொண்டு, கருத்தில் கொள்ள (அனுப்பப்படும்) பெண்ணைப் {வேசியைப்} போல, என்னை அனுப்ப ஏற்பாடு செய்தவனும், மூடப் புத்தி கொண்டவனுமான எனது இழிந்த தந்தையும் சபிக்கப்படட்டும்! {இந்நிலைக்குக் காரணமான} நானும் சபிக்கப்படட்டும்! மன்னன் சால்வனும் சபிக்கப்படட்டும்! என்னைப் படைத்தவனும் சபிக்கப்படட்டும்! யாவரின் தவறால் எனக்கு இந்தப் பேரிடர் நேர்ந்ததோ அவர்கள் அனைவரும் சபிக்கப்படட்டும்!
மனிதர்கள் தங்களுக்கு விதிக்கபட்டதிலேயே எப்போதும் துன்புறுகிறார்கள். எனினும், எனது தற்போதைய துன்பத்திற்குக் காரணம் சந்தனுவின் மகனான பீஷ்மனே; எனது துயரத்திற்கான காரணம் அவனே என்பதால், தவத்தினாலோ, போரினாலோ தற்போதைய எனது பழியுணர்வை நான் அவன் {பீஷ்மன்} மீது விழச்செய்ய வேண்டும். ஆனால், போரில் பீஷ்மனை வெல்ல முயற்சி செய்யக்கூடிய மன்னன் எவன்தான் இருக்கிறான்?" என்று நினைத்தாள்.
இதைத் தீர்மானித்த அவள் {அம்பை}, அந்த நகரத்தை விட்டு வெளியேறி, அறச்செயல்கள் செய்யும் உயர் ஆன்ம தவசிகளின் ஆசிரமத்திற்குச் சென்றாள். அந்தத் தவசிகள் சூழ அந்த இரவு அங்கேயே தங்கினாள். ஓ! பாரதா {துரியோதனா}, இனிய புன்னகை கொண்ட அந்த மங்கை {அம்பை}, தான் கடத்தப்பட்டது, சால்வனால் நிராகரிக்கப்பட்டது ஆகியவற்றையும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, தனக்கு நேர்ந்த அனைத்தையும் நுணுக்கமான தகவல்களுடன் அந்தத் துறவிகளிடம் சொன்னாள்.
அந்த ஆசிரமத்தில் கடும் நோன்புகளைக் கொண்டவரும் நன்கு அறியப்பட்டவருமான அந்தணர் ஒருவர் வாழ்ந்தார்; அவரது பெயர் சைகாவத்யர் [1] ஆகும். உயர்வகைத் தவத்தகுதி கொண்ட அவர் {சைகாவத்யர்}, சாத்திரங்களிலும், ஆரண்யகங்களிலும் {வேத விளக்கங்களிலும்} ஆசானாக இருந்தார். பெரும் தவத்தகுதி கொண்ட அந்தத் தவசியான சைகாவத்யர், துயுருற்றிருந்த அந்தக் கன்னிகையிடம் {அம்பையிடம்}, துயரத்தில் பெரிதும் அழுதுகொண்டிருந்த அந்தக் கற்புடைய பெண்ணிடம் {அம்பையிடம்}, "இஃது அப்படியே இருப்பினும், ஓ! அருளப்பட்ட மங்கையே {அம்பையே}, (வனத்தில் உள்ள) ஓய்வில்லங்களில் {தபோவனங்களில்} வசித்து, தவங்களில் ஈடுபட்டு வரும் உயர் ஆன்ம தவசிகளால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார் {சைகாவத்யர்}.
[1] சைகாவத்யர் என்பதற்கு, வைதீக காரியங்களான அக்னியின் காரியங்களில் மிகப் பற்றுடையவர் என்று பொருளாகும்.
எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்த மங்கை அவரிடம் {அம்பை சைகாவத்யரிடம்}, "என்னிடம் கருணை காட்டப்படட்டும்; உலகைத் துறந்த நான், வனவாழ்வையே விரும்புகிறேன். நான் தவத்துறவுகளில் கடுமையானவற்றைப் பயில்வேன். எனது முந்தைய வாழ்வில் அறியாமையால் நான் செய்தப் பாவங்களின் கனியே இப்போது நான் அனுபவிக்கும் துன்பம் என்பது நிச்சயம். சால்வனால் நிராகரிக்கப்பட்டதையும் அவமதிக்கப்பட்டதையும் அறிந்து துயருற்றவளான நான் எனது உறவினர்களிடம் திரும்பிச் செல்ல முயல மாட்டேன்! பாவங்கள் கழுவப்பட்டவரும், எனக்குத் தேவனைப் போன்றவருமான நீர், தவத்துறவை எனக்கு அறிவுறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! ஓ..., என்னிடம் கருணை காட்டப்படட்டும்" என்றாள் {அம்பை}.
இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தவசி {சைகாவத்யர்}, சாத்திரங்களில் இருந்து உதாரணங்களையும் காரணங்களையும் சொல்லி அந்தக் கன்னிகைக்கு {அம்பைக்கு} ஆறுதல் கூறினார். இப்படி அவளைத் தேற்றிய அவர் {சைகாவத்யர்}, பிற அந்தணர்களுடன் கூடி அவள் விரும்பியதைச் செய்வதாக உறுதியளித்தார்" என்றார் {பீஷ்மர்}.