Salwa rejected Amba! | Udyoga Parva - Section 176 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 3)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் அனுமதி பெற்ற அம்பை, சால்வனிடம் சென்றது; அங்கு அவனால் அவள் நிராகரிக்கப்பட்டது; அம்பை சால்வனிடம் மன்றாடியது; பீஷ்மர் மீது கொண்ட அச்சத்தால் தான் அவளை மறுப்பதாக சால்வன் அம்பையிடம் சொல்லி போ... போ.. என்று அவளை அவசரப்படுத்தியது; அம்பை துயரத்துடன் சால்வனின் நகரத்தில் இருந்து வெளியேறியது...
சால்வனும் அம்பையும் |
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "பிறகு நான் இக்காரியத்தைக் காந்தவதி என்றும் அழைக்கப்பட்ட (எனது தாயான) காளியிடமும் {சத்தியவதியிடமும்), எங்கள் ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} அனைவரிடமும், புரோகிதர்கள் மற்றும் சிறப்புப் புரோகிதர்கள் ஆகியோரிடமும் வைத்த பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, அந்தக் கன்னிகையரில் மூத்தவளான அம்பையைப் புறப்பட அனுமதித்தோம். என்னால் அனுமதிக்கப்பட்ட அந்தக் கன்னிகை {அம்பை}, சால்வர்களின் ஆட்சியாளன் நகருக்குச் சென்றாள். அவள் தனது துணைக்கு, முதிர்ந்த அந்தணர்கள் பலரைக் கொண்டிருந்தாள். மேலும் அவள் தனது சொந்த செவிலியாலும் பின்தொடரப்பட்டாள்.
(ஹஸ்தினாபுரத்திற்கும், சால்வனின் நகரத்திற்கும் இடைப்பட்ட) முழு தூரத்தையும் கடந்து பயணம் செய்த அவள் {அம்பை}, மன்னன் சால்வனை அணுகி, "ஓ! வலிமைமிக்க கரங்களைக் கொண்டவரே, ஓ! உயர் ஆன்மா கொண்டவரே {சால்வரே}, நான் உம்மை எதிர்பார்த்து வந்திருக்கிறேன்" என்றாள். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்தச் சால்வர்களின் தலைவன் சிரித்துக் கொண்டே அவளிடம் {சால்வன் அம்பையிடம்}, "ஓ! அழகிய நிறம் கொண்டவளே {அம்பையே}, இன்னொருவனுக்குத் திருமணம் செய்யப்பட இருந்த உன்னை மனைவியாக அடைய இனியும் நான் விரும்பவில்லை. எனவே, ஓ அருளப்பட்டவளே {அம்பையே}, இங்கிருந்து நீ பீஷ்மனின் முன்னிலைக்குச் செல்வாயாக. பீஷ்மனால் பலவந்தமாகக் கடத்தப்பட்ட உன்னை இனியும் நான் விரும்பவில்லை.
உண்மையில், பீஷ்மன், மன்னர்களை வீழ்த்தி உன்னைக் கடத்திச் செல்கையில் நீ அவனுடன் {பீஷ்மனுடன்} உற்சாகமாகவே சென்றாய். பூமியின் மன்னர்கள் அனைவரையும் அவமானப்படுத்தி வீழ்த்தி, பீஷ்மன் உன்னைக் கவர்ந்து சென்றதாலும், நீ இன்னொருவனுக்குத் திருமணம் செய்யப்பட இருந்தவள் என்பதாலும், நான் இனியும் உன்னை மனைவியாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அறிவின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவனும், பிறருக்கு வழிகாட்டும் விதிகளைச் சமைப்பவனுமான என்னைப் போன்ற மன்னன் ஒருவனால், இன்னொருவனுக்குத் திருமணம் செய்யப்பட இருந்த ஒரு பெண்ணை (தனது இல்லத்துக்குள்) எப்படி அனுமதிக்க முடியும்? ஓ! அருளப்பட்ட மங்கையே {அம்பையே}, நேரத்தை வீணாகக் கழிக்காமல், நீ எங்கு செல்ல விரும்புகிறாயோ அங்கே செல்வாயாக" என்றான் {சால்வன்}.
ஓ! மன்னா {துரியோதனா}, அவனது {சால்வனது} வார்த்தைகளைக் கேட்ட அம்பை, காம தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்டு சால்வனிடம், "அப்படிச் சொல்லாதீர், ஓ! பூமியின் தலைவா {சால்வரே}, ஏனெனில் அது அப்படி இல்லை. ஓ! எதிரிகளை வாட்டுபவரே, பீஷ்மரால் கடத்தப்பட்ட போது, நான் மகிழ்ச்சியாக இல்லை! நாளெல்லாம் நான் அழுது கொண்டிருந்த போது, மன்னர்கள் அனைவரையும் கலங்கடித்தபடி பலவந்தமாக அவர் {பீஷ்மர்} என்னைத் தூக்கிச் சென்றார். ஓ! சால்வர்களின் தலைவரே, உம்முடன் பிணைப்புடன் இருக்கும் அப்பாவிப் பெண்ணான என்னை ஏற்றுக் கொள்வீராக! (ஒருவனிடம்) பிணைப்புடன் இருப்பவர்களை (அவன்) கைவிடுவது, சாத்திரங்களில் மெச்சப்படுவதில்லை.
போரில் இருந்து பின்வாங்காதவரான கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} வேண்டிக்கொண்டு, இறுதியாக அவரது {பீஷ்மரது} அனுமதியைப் பெற்றே நான் உம்மிடம் வந்தேன். உண்மையில், வலிமைமிக்க கரங்களைக் கொண்ட பீஷ்மர், ஓ! மன்னா {சால்வரே}, என்னை விரும்பவில்லை! (இக்காரியத்தில்) அவரது செயல்பாடு, அவரது தம்பிக்காகவே {விசித்திரவீரியனுக்காகவே} செய்யப்பட்டது என்று நான் கேள்விப்பட்டேன். என்னுடன் ஒரே சமயத்தில் கடத்தப்பட்ட அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய என் தங்கையர் இருவரும், ஓ! மன்னா {சால்வரே}, கங்கையின் மைந்தரால் {பீஷ்மரால்}, அவரது தம்பி விசித்திரவீரியனுக்கு அளிக்கப்பட்டார்கள்.
ஓ! சால்வர்களின் தலைவா, ஓ! மன்னர்களில் புலியே {சால்வரே}, உம்மைத் தவிர நான் வேறு யாரையும் கணவனாக நினைத்ததில்லை என்று என் தலையைத் தொட்டு சத்தியம் செய்கிறேன். ஓ! பெரும் மன்னா {சால்வரே}, இன்னொருவருக்கு திருமணம் செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்து நான் உம்மிடம் வரவில்லை. ஓ! சால்வரே, எனது ஆன்மாவின் மீது உண்மையாக ஆணையிட்டு, நான் உம்மிடம் உண்மையையே சொல்கிறேன். ஓ! பெரிய கண்களை உடையவரே, இன்னொருவருக்குத் திருமணம் செய்யப்பட வேண்டாதவளாக, உமது அருளை விரும்பி, தனது சொந்த விருப்பத்தில் உம்மிடம் வந்திருக்கும் கன்னிகையான என்னை ஏற்றுக் கொள்ளும்" என்றாள் {அம்பை}.
என்னதான் அவள் இதே வகையில் பேசினாலும், ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, பாம்பு தனது சட்டையைக் கைவிடுவது போல, காசி ஆட்சியாளனின் மகளை {அம்பையைச்} சால்வன் நிராகரித்தான். இதுபோன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி ஆவலோடு வேண்டப்பட்டாலும், அந்தச் சால்வர்களின் தலைவன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்தப் பெண்ணை {அம்பையை} ஏற்றுக்கொள்ளும் எந்த ஆவலையும் வெளிப்படுத்தவில்லை.
பிறகு, அந்தக் காசி ஆட்சியாளனின் மூத்த மகள் {அம்பை}, கோபத்தால் நிறைந்து, கண்ணீரால் குளித்த கண்களுடன், கண்ணீராலும், துயரத்தாலும் தடைப்பட்ட குரலுடன் {அம்பை சால்வனிடம்}, "உம்மால் கைவிடப்படும் நான், ஓ! மன்னா {சால்வரே}, எங்கே போனாலும், நீதிமான்கள் எனக்குப் பாதுகாவலர்களாக இருப்பார்கள். ஏனெனில், உண்மை அழிவற்றதாகும்" என்றாள் {அம்பை}.
இப்படியே, ஓ! குருகுலத்தோனே {துரியோதனா}, அந்தச் சால்வர்களின் தலைவன், தன்னிடம் இம்மொழியில் பேசியவளும், மென்மையாக அழுதுகொண்டிருந்தவளுமான அந்தக் கன்னிகையை நிராகரித்தான். "போ... போ..." என்ற வார்த்தைகளே சால்வன் அவளிடம் மீண்டும் மீண்டும் சொன்ன வார்த்தைகளாக இருந்தது. "ஓ! அழகிய இடை கொண்டவளே {அம்பையே}, நான் பீஷ்மனை அஞ்சுகிறேன். நீயோ பீஷ்மனின் கைதி" என்று அவன் {சால்வன்} சொன்னான். தொலைநோக்குப் பார்வையாற்ற அந்தச் சால்வனால் இப்படிச் சொல்லப்பட்ட கன்னிகை, பெண் அன்றில் {பறவையைப்} போல அழுது கொண்டே, துயரத்துடன் அவனது {சால்வனின்} நகரத்தை விட்டு வெளியேறினாள்.