"Victory is certain!" said Arjuna! | Bhishma-Parva-Section-021 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 9)
பதிவின் சுருக்கம் : கௌரவப் படையைக் கண்ட யுதிஷ்டிரன் கவலை கொண்டது; தனது வருத்தத்தை அர்ஜுனனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்கு நம்பிக்கை அளிப்பது ஆகியவற்றைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போருக்குத் தயாராகத் தார்தராஷ்டிரப் படை பரந்திருப்பதைக் கண்ட குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் கவலைக்கு ஆளானான். பீஷ்மரால் அமைக்கப்பட்ட ஊடுருவ முடியாத {பிளக்கப்பட முடியாத} அணிவகுப்பை {வியூகத்தைக்} கண்டு, அதை உண்மையிலேயே ஊடுருவ முடியாது என்று கருதிய மன்னன் {யுதிஷ்டிரன்}, நிறம் மங்கி அர்ஜுனனிடம், "ஓ! வலிய கரங்களைக் கொண்ட தனஞ்சயா {அர்ஜுனா}, பாட்டனைத் {பீஷ்மரைத்} தங்கள் (தலைமைப்) போராளியாகக் கொண்ட தார்தராஷ்டிரர்களுடன் களத்தில் போரிடுவதற்கு எப்படி நாம் இயன்றவர்களாவோம்? அசைக்கமுடியாததும், பிளக்கப்படமுடியாததுமான இந்த அணிவகுப்பு {வியூகம்}, எதிரிகளை வாட்டுபவரும், எல்லையில்லா மகிமை கொண்டவருமான பீஷ்மரால், சாத்திரங்களில் உள்ள விதிகளின் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஓ! எதிரிகளை வாட்டுபவனே {அர்ஜுனா}, நமது துருப்புகள் {தங்கள் வெற்றியில்} சந்தேகம் கொண்டுள்ளன. உண்மையில், இந்த வலிமைமிக்க வியூகத்தின் முன்னால் வெற்றி எப்படி நமதாகும்?" என்று {அர்ஜுனனிடம்} கேட்டான் {யுதிஷ்டிரன்}.
இப்படிச் சொல்லப்பட்ட எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையைக் கண்டு துயரத்தில் மூழ்கியிருந்த பிருதையின் {குந்தியின்} மகன் யுதிஷ்டிரனுக்கு இவ்வார்த்தைகளில் பதிலளித்தான். அவன் {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அனைத்து குணங்களையும் கொண்ட பலரைச் சிறு எண்ணிக்கையிலான போர்வீரர்களால் எப்படி வீழ்த்த முடியும் என்பதைக் கேட்பீராக. எந்தத் தீய குணமும் அற்றவராக நீர் இருக்கிறீர்; எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் உமக்கு வழிமுறைகளைச் சொல்கிறேன்.
பீஷ்மர், துரோணர் ஆகிய இருவரும் அறிந்ததை முனிவர் நாரதரும் அறிவார். பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நிகழ்ந்த போது. இந்திரனுக்கும் மற்றும் பிற தேவர்களுக்கும் இதற்கான வழிமுறைகளைப் பெரும்பாட்டனே {பிரம்மனே} குறிப்பிட்டிருக்கிறார் {என்று நாரதர் சொல்லியிருக்கிறார்}.
"வெற்றியை விரும்புவோர், உண்மை {சத்தியம்}, இரக்கம் {கருணை}, நீதி மற்றும் உழைப்பால் வெல்வதைப் போலப் பலத்தாலோ, ஆற்றலாலோ வெல்வதில்லை. {வெல்ல விரும்புவோர், உண்மையாலும், கொடுமையற்ற தன்மையாலும், அறத்தாலும், உழைப்பாலும் எப்படி வெல்கிறார்களோ, அவ்வாறு பலத்தாலும் சக்தியாலும் வெல்வதில்லை}. நீதி மற்றும் அநீதியை வேறுபடுத்திப் பார்த்து, பேராசை என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு, ஆணவமற்ற உழைப்பைக் கொண்டு போரிடுவீராக. ஏனெனில், நீதி {அறம்} எங்கிருக்கிறதோ அங்கேதான் வெற்றி இருக்கும்" {என்றான் பிரம்மன்}. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, {இதன் காரணமாகவே}, (இந்தப்) போரில் நமது வெற்றி உறுதி என்பதை அறிவீராக.
உண்மையில், நாரதர் சொன்னபடியே, "கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ, அங்கே வெற்றி இருக்கும்", வெற்றி என்பது கிருஷ்ணனின் இயல்பாக {இயற்கையாக} இருக்கிறது. {கிருஷ்ணனிடமே வெற்றி இருக்கிறது}. உண்மையில் அது {வெற்றி} மாதவனையே {கிருஷ்ணனையே} பின்தொடர்கிறது. வெற்றி எப்படி அவனது குணங்களில் ஒன்றோ, அப்படியே பணிவும் அவனது மற்றொரு குணமாக இருக்கிறது. கோவிந்தன் {கிருஷ்ணன்} எல்லையில்லா ஆற்றலைக் கொண்டவனாவான். அளவிலா எதிரிகளுக்கு மத்தியிலும் அவன் {கிருஷ்ணன்} வலியில்லாமல் இருக்கிறான். ஆண் மக்களில் {புருஷர்களில்} அவனே மிகவும் நிலைத்தவனாவான் {நித்தியமானவனாவான்}. எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றியும் இருக்கும்.
கலங்கடிக்கப்பட முடியாத ஆயுதங்களாலும் அழிக்கப்பட முடியாதவனான அவன் {கிருஷ்ணன்}, பழங்காலத்தில் ஹரியாகத் தோன்றி, தேவர்களிடமும், அசுரர்களிடமும் உரத்த குரலில், "உங்களில் யார் வெற்றி பெறுவார்கள்?" என்று கேட்டான். வெற்றிக் கொள்ளப்பட்டவர்கள் கூட, "கிருஷ்ணனை {அதாவது ஹரி என்ற நாராயணனை} முன்னிலையில் கொண்டு நாங்கள் வெல்வோம்" என்றனர் [1]. அந்த ஹரியின் கருணையாலேயே, சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்கள் மூவுலகங்களையும் அடைந்தனர். எனவே, அண்டத்தின் அரசுரிமையைக் கொண்டவனான அந்தத் தேவர்களின் தலைவனே [2] உமது வெற்றியை விரும்புகிறான் எனும்போது, உமது சோகத்திற்கான சிறு காரணத்தையும் என்னால் காண இயலவில்லை" என்றான் {அர்ஜுனன்}.
[1] "முன்னணியில் நிற்பவனாகக் கிருஷ்ணனை ஏற்றுக் கொண்டோ, அல்லது அவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தோ தேவர்கள் வென்றார்கள் என்பதே இங்கே பொருள். Anu Krishna என்பது உண்மையில், "கிருஷ்ணனுக்குப் பின்னால்" அல்லது "கிருஷ்ணனை முன்னணியாகக் கொண்டு" அல்லது "கிருஷ்ணனின் தலைமையை ஏற்று" என்ற பொருளைத் தரும். எனவே, மேற்கண்ட பொருளைக் கொண்டிருக்கும் வங்க உரை, மேன்மையானது என்பது இங்கே தெளிவு. பம்பாய் உரையில் Katham Krishna என்றிருக்கிறது. இது பின்பற்றப்பட்டால், "ஓ! கிருஷ்ணா, நாம் எப்படி வெல்வோம்?" என்று பொருளைத் தரும். இவ்வழியில் பதிலளிப்போர் எப்படி வெற்றியடைவார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் இந்தப் பதில் பணிவைச் சுட்டுகிறது. ஆனால் பணிவே வெற்றியின் ஒரே அவசியத் தேவையல்ல. அல்லது பணிவு என்பதே வெற்றியின் முக்கியச் சாதனம் என்றும் இங்கே போதிக்கப்படவில்லை" என்கிறார் கங்குலி.[2] சில பதிப்புகளில் இங்கே இந்திரன் என்றும் சிலவற்றில் விஷ்ணு {நாராயணன்} என்றும் இருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |