Hymn of Durga said by Arjuna! | Bhishma-Parva-Section-023 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 11)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனிடம் துர்க்கையைத் துதிக்கச் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனன் துர்க்கையம்மனுக்குச் செய்த துதி; அர்ஜுனனின் துதிக்குச் செவிசாய்ந்த துர்க்கை அர்ஜுனனுக்கு, வெற்றியை அருளியது; துர்க்கைத்துதியின் பலன்கள்; துரியோதனாதிகளின் அறியாமை ஆகியவற்றைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரிட அணுகும் தார்தராஷ்டிரப் படையைக் கண்ட கிருஷ்ணன், அர்ஜுனனின் நன்மைக்காக இவ்வார்த்தைகளைச் சொன்னான்.
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (திட்டமிட்டு) பகைவர்களை வீழ்த்த, போருக்கு முன்னதாக, துர்க்கையைத் துதிப்பாயாக" என்றான் {கிருஷ்ணன்}."
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "போருக்கு முன்னதாகப் பெரும் புத்திக்கூர்மையுடைய வாசுதவேனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன் அர்ஜுனன், தனது தேரில் இருந்து இறங்கி, குவிந்த கரங்களுடன் பின் வரும் துதியைக் சொன்னான்.
அர்ஜுனன், "ஓ! யோகிகளின் தலைவியே, உன்னை நான் வணங்குகிறேன். ஓ! பிரம்மனுக்கு ஒப்பானவளே {பிரம்மஸ்வரூபிணியே}, ஓ! மந்தர வனத்தில் வசிப்பவளே, ஓ! பலவீனத்திற்கும், சிதைவுக்கும் அப்பாற்பட்டவளே, ஓ! காளி, ஓ! கபாலனின் {சிவனின்} மனைவியே, ஓ! கருப்பு மற்றும் பழுப்பு நிறம் கொண்டவளே {துர்க்கையே}, உன்னை நான் வணங்குகிறேன்.
ஓ! பக்தர்களுக்கு நன்மைகளை அளிப்பவளே, உன்னை நான் வணங்குகிறேன். ஓ! மகாகாளி, ஓ! அண்டத்தை அழிப்பவனின் {சிவனின்} மனைவியே, உன்னை நான் வணங்குகிறேன். ஓ! பெருமை மிக்கவளே, ஓ! ஆபத்துகளில் இருந்து காப்பவளே, ஓ! மங்கலக் குணங்கள் அனைத்தையும் கொண்டவளே.
ஓ! காத்ய குலத்தில் உதித்தவளே, ஓ! மரியாதைமிக்க வழிபாட்டுக்குத் தகுந்தவளே, ஓ! கடுமையானவளே, ஓ! வெற்றியைக் கொடுப்பவளே, ஓ! வெற்றியே ஆனவளே {வெற்றியின் உருவமே, ஜெயஸ்வரூபிணி}, ஓ! மயில்தோகைகளைக் கொடியாகக் கொண்டவளே, ஓ! அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளே, ஓ! மிகக் கொடிய சூலத்தை {சூலம் ஆயுதத்தைத்} தாங்குபவளே, ஓ! வாளும், கேடயமும் ஏந்தியவளே, ஓ! மாட்டிடையர்த் தலைவனின் {கிருஷ்ணனின்} தங்கையே, ஓ! மூத்தவளே, மாட்டிடையன் நந்தன் குலத்தில் பிறந்தவளே!
ஓ! எருமையின் {மகிஷாசுரனின்} குருதியில் எப்போதும் மகிழ்பவளே, ஓ! குசிக குலத்தில் பிறந்தவளே, ஓ! மஞ்சளாடை உடுத்தியவளே, ஓ! ஓநாய் முகத்தை ஏற்று அசுரர்களை விழுங்கியவளே [1], போரை விரும்பும் உன்னை நான் வணங்குகிறேன். ஓ! உமையே, சகம்பரி {சகம்பரனின் மகளே}, ஓ வெண்ணிறம் கொண்டவளே {மகேஸ்வரஸ்வரூபிணி}, ஓ! கருநிறம் கொண்டவளே {வாசுதேவஸ்வரூபிணி}, ஓ! கைடபனாசுரனைக் கொன்றவளே, ஓ! மஞ்சள் கண்களை உடையவளே, ஓ! பல்வேறு கண்களைக் கொண்டவளே, ஓ! புகையின் நிறம் {தூம்ரவர்ணம்} கொண்ட கண்களை உடையவளே, உன்னை நான் வணங்குகிறேன்.
[1] "இதில் தோன்றும் பல பெயர்களை ஒழுங்கமைப்பதிலும், தொடர்ந்து வரும் சுலோகங்களிலும் நான் நீலகண்டரையே பின்பற்றியிருக்கிறேன். எனினும், சந்தேகத்திற்கிடமான சொற்பிறப்பியலைக் {இலக்கணத்தைக்} கொண்டிருக்கும் பெயர்களையும், மிகவும் பொதுவாக வழங்கப்படும் பெயர்களையும் நான் அப்படியே இட்டிருக்கிறேன் {தக்க வைத்திருக்கிறேன்}" என்கிறார் கங்குலி.
ஓ! வேதங்களும், சுருதிகளும், உயர்ந்த அறமும் ஆனவளே, ஓ! வேள்வியில் ஈடுபடும் அந்தணர்களுக்கு நன்மையைச் செய்பவளே, ஓ! கடந்த காலத்தின் அறிவை {ஞானத்தைக்} கொண்டவளே, ஜம்பூத்வீபத்தின் {நாவலந்தீவின்} நகரங்களில் கட்டப்பட்டுள்ள புனிதமான வசிப்பிடங்களில் {கோவில்களில்} எப்போதும் வசிப்பவளே, உன்னை நான் வணங்குகிறேன்.
அறிவியல்களில் பிரம்ம அறிவியலானவளே {வித்தைகளில் பிரம்ம வித்தையானவளே}, உயிரினங்களின் விழிப்பில்லா உறக்கமே {மகா நித்திரையே}, ஓ! ஸ்கந்தனின் {முருகனின்} தாயே, ஓ! ஆறு (உயர்ந்த) குணங்களைக் கொண்டவளே, ஓ! துர்க்கையே, ஓ! அடைய முடியாத பகுதிகளில் {காட்டில்} வசிப்பவளே, சுவாகா என்றும், சுவதை என்றும், கலை என்றும், காஷ்டை என்றும், வேதங்கள் மற்றும் வேதாந்த அறிவியலின் தாயான சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் நீயே விளக்கப்படுகிறாய்.
உள் ஆன்மத் தூய்மையுடன் {பரிசுத்தமான மனத்தினால்} நான் உன்னைத் துதிக்கிறேன். ஓ! பெரும் தேவியே {மகாதேவியே}, உனது அருளால் போர்க்களத்தில் எப்போதும் வெற்றி என்னைச் சந்திக்கட்டும். அச்சம் தரும் அடைய முடியாத இடங்களிலும், கடினமான இடங்களிலும் {பயங்கரமான துர்க்கங்களிலும்}, உனது வழிபாட்டாளர்களின் {பக்தர்களின்} வசிப்பிடங்களிலும், பாதாள லோகத்திலும் நீ எப்போதும் வசிக்கிறாய். போரில் எப்போதும் தானவர்களை வீழ்த்துபவள் நீயே.
(அனைத்து உயிர்களின்) அதிலம் {உணர்வற்ற நிலை} {ஜம்பினி-ஆலஸ்யம்}, உறக்கம் {மோஹினி-நித்திரை}, மாயை, அடக்கம் {ஹ்ரீ-லஜ்ஜை}, அழகு ஆகியவை நீயே. அந்தி {சந்தியை} நீயே, நாள் நீயே, சாவித்ரி நீயே, தாயும் நீயே. மனநிறைவு {துஷ்டி} நீயே, வளர்ச்சி {புஷ்ணி} நீயே, ஒளியும் {தைரியம்} நீயே. சூரியனையும் சந்திரனையும் தாங்கி அவற்றை ஒளிரச் செய்பவள் நீயே. வளமானவர்களின் வளமை {செழிப்பு} நீயே. சித்தர்கள் மற்றும் சாரணர்களால் தியானத்தில் {சமாதி நிலையில்} காணப்படுபவள் நீயே" என்றான் {என்று துர்க்கையைத் துதித்தான் அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} பக்தியை (பக்தியின் அளவைப்) புரிந்து கொண்டவளும், மனிதர்களுக்கு எப்போதும் அருள்பாலிப்பவளுமான துர்க்கை, கோவிந்தனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் ஆகாயத்தில் தோன்றி, இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.
அந்தத் தேவி {துர்க்கை - அர்ஜுனனிடம்}, "ஓ! பாண்டவா {அர்ஜுனா}, குறுகிய காலத்தில் நீ உனது எதிரிகளை வெற்றி கொள்வாய். ஓ! ஒப்பற்றவனே {அர்ஜுனா}, (மேலும்) நீ நாராயணனையே உனது துணைவனாகக் கொண்டிருக்கிறாய். எதிரிகளால் வீழ்த்தப்பட இயலாதவனாக நீ இருக்கிறாய். ஏன் வஜ்ரந்தாங்கியாலும் {இந்திரனாலும்} கூட உன்னை வீழ்த்த இயலாது" என்றாள்.
இதைச் சொன்ன அந்த வரமருளும் தேவி {துர்க்கை}, விரைவில் மறைந்துபோனாள். எனினும், வரத்தைப் பெற்றவனான குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வெற்றி அடைந்தவனாகவே தன்னைக் கருதி, அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தனது சிறந்த தேரில் ஏறிக் கொண்டான். ஒரே தேரில் அமர்ந்த கிருஷ்ணனும் அர்ஜுனனும் தங்கள் தெய்வீகச் சங்குகளை ஊதினர்.
விடியலில் எழுந்து இந்தத் {மேற்கண்ட துர்க்கைத்} துதியை உரைக்கும் மனிதனுக்கு, யக்ஷர்கள், ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களிடம் இருந்து எப்போதும் அச்சமில்லை. அவனுக்கு எந்த எதிரியும் இல்லை; பாம்புகள், கொடுக்குகள் மற்றும் பற்களைக் கொண்ட விலங்குகள் ஆகியவை அனைத்திடம் இருந்தும் மற்றும் மன்னர்கள் ஆகியோரிடம் இருந்தும் அவனுக்கு அச்சமென்பதே கிடையாது. அனைத்து சச்சரவுகளிலும் அவன் வெல்வான்; தனது கட்டுக்கள் அனைத்திலும் இருந்து அவன் விடுபடுவான். சிரமங்கள் அனைத்தில் இருந்தும், திருடர்களிடம் இருந்தும் விடுபட்டு, போரில் எப்போதும் வெற்றி பெற்று, செழிப்பின் தேவியை அவன் எப்போதும் வெல்வான் என்பது உறுதியாகும். உடல்நலம் மற்றும் பலத்தோடு அவன் நூறு வருடங்கள் வாழ்வான்.
பெரும் அறிவைக் கொண்ட வியாசரின் அருளால் இவை அனைத்தையும் நான் அறிந்தேன். மரண வலையில் சிக்கிய உமது தீய மகன்கள் {துரியோதனாதிகள்}, அறியாமையின் காரணமாக, அவர்களை, நரன் என்றும், நாராயணன் என்றும் அறியாமல் இருக்கிறார்கள். மேலும் மரண வலையில் சிக்கியிருக்கும் அவர்கள், இந்த நாட்டின் {முடிவு} முடிவுக்காலம் நெருங்கிவிட்டதையும் அறியாதிருக்கிறார்கள்.
துவைபாயனர் {வியாசர்}, நாரதர், கண்வர், பாவமற்ற ராமர் {பரசுராமர்} ஆகிய அனைவரும் உமது மகனைத் {துரியோதனனைத்} தடுத்தார்கள். ஆனால் அவனோ {துரியோதனனோ} அவர்களது வார்த்தைகளை ஏற்கவில்லை. எங்கு நீதியிருக்கிறதோ {அறமிருக்கிறதோ} அங்கே புகழும், அழகும் இருக்கும். எங்கே பணிவு இருக்கிறதோ, அங்கே செழிப்பும் புத்திக்கூர்மையும் {அறிவும்} இருக்கும். எங்கே நீதி இருக்கிறதோ, அங்கே கிருஷ்ணன் இருப்பான்; எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றி இருக்கும்" என்றான் {சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |