"Kripa, Salya, Yudhishthira! | Bhishma-Parva-Section-043c | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 01)
பதிவின் சுருக்கம் : துரோணரிடம் இருந்து அகன்றதும் யுதிஷ்டிரன் கிருபரிடம் சென்று, அவரிடம் அனுமதியும் ஆசியும் பெறுவது; பிறகு சல்லியனிடம் சென்று அவனது அனுமதியையும், ஆசியையும் யுதிஷ்டிரன் பெறுவது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "பரத்வாஜரின் அறிவுடைய மகனின் {துரோணரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆசானுக்கு {துரோணருக்கு} மரியாதை செலுத்திவிட்டு, சரத்வானின் மகனை {கிருபரை} நோக்கி முன்னேறினான் (யுதிஷ்டிரன்). ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பேச்சில் வல்லவனான யுதிஷ்டிரன், கிருபரை வணங்கி, அவரை வலம் வந்து, பெரும் வீரம் கொண்ட அந்த வீரரிடம் {கிருபரிடம்} இவ்வார்த்தைகளைப் பேசினான்.
யுதிஷ்டிரன் {கிருபரிடம்}, "ஓ! ஆசானே {கிருபரே}, உமது அனுமதியைப் பெற்று, பாவமீட்டாமல் நான் போரிடுவேன். உம்மால் அனுமதிக்கப்பட்டு, ஓ பாவமற்றவரே {கிருபரே}, நான் (என்) எதிரிகள் அனைவரையும் வீழ்த்துவேன்" என்றான்.
கிருபர் {யுதிஷ்டிரனிடம்}, "போரிடத் தீர்மானித்த பிறகு, (இப்படி) நீ என்னிடம் வந்திருக்க மாட்டாயென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முற்றான உனது தோல்விக்கு நான் உன்னைச் சபித்திருப்பேன். மனிதன் செல்வத்திற்கு அடிமையாக இருக்கிறான். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது உண்மையே. கௌரவர்களின் செல்வத்தால் நான் கட்டப்பட்டிருக்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அவர்கள் சார்பாகவே போரிட வேண்டும். இதுவே என் கருத்து. எனவே, "போரைத் தவிர நீ என்ன விரும்புகிறாய்?" என்று ஓர் அலியைப் போலக் கேட்கிறேன்" என்றார் {கிருபர்}.
யுதிஷ்டிரன் {கிருபரிடம்}, "ஐயோ, எனவேதான், ஓ! ஆசானே {கிருபரே} நான் உம்மைக் கேட்கிறேன். எனது வார்த்தைகளைக் கேளும்" என்றான். இதைச் சொன்ன அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} மிகவும் கலங்கி உணர்வற்றுப் போய் அமைதியாக நின்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "எனினும், அவன் சொல்ல நினைத்ததைப் புரிந்து கொண்ட கௌதமர் {கிருபர்} அவனிடம் மறுமொழியாக, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா} நான் கொல்லப்பட முடியாதவன். போரிட்டு வெற்றியை அடைவாயாக. உனது வருகையால் நான் மனம் நிறைந்தேன். (படுக்கையில் இருந்து) தினமும் எழுந்ததும், நான் உனது வெற்றிக்காகவே வேண்டுவேன். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்" என்றார் {கிருபர்}.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌதமரின் {கிருபரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவருக்கு உரிய மரியாதையை வழங்கிய மன்னன் {யுதிஷ்டிரன்}, மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} இருந்த இடத்திற்கு முன்னேறினான். சல்லியனை வணங்கி அவனை வலம் வந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, வெல்லப்பட முடியாத அந்த வீரனிடம் {சல்லியனிடம்}, தனது நன்மைக்கான இந்த வார்த்தைகளைப் பேசினான்.
யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, "ஓ! வெல்லப்பட முடியாதவரே {சல்லியரே}, உமது அனுமதியைப் பெற்று, பாவமீட்டாமல் நான் போரிடுவேன். ஓ! மன்னா {சல்லியரே}, உம்மால் அனுமதிக்கப்பட்டு, வீரமிக்க (என்) எதிரிகளை நான் வீழ்த்துவேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, "போரிடத் தீர்மானித்த பிறகு, (இப்படி) நீ என்னிடம் வந்திருக்க மாட்டாயென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போரில் தோல்வியுற நான் உன்னைச் சபித்திருப்பேன். நான் (உன்னிடம்) மனம் நிறைந்தேன். (உன்னால்) மதிக்கவும் பட்டேன். நீ விரும்பியவாறே நடக்கட்டும். நான் உனக்கு அனுமதியளிக்கிறேன், போரிட்டு வெற்றியை அடைவாயாக. ஓ! வீரா {யுதிஷ்டிரா}, சொல். உனது தேவை என்ன? நான் உனக்கு என்ன தர வேண்டும்? இந்தச் சூழ்நிலையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போரைத் தவிர என்ன நீ விரும்புகிறாய்? மனிதன் செல்வத்துக்கு அடிமையாக இருக்கிறான். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது உண்மையே. ஓ! மருமகனே {யுதிஷ்டிரா}, கௌரவர்களின் செல்வத்தால் நான் கட்டப்பட்டிருக்கிறேன். இதன் காரணமாகவே, "நீ விரும்பும் ஆசையை நான் நிறைவேற்றுவேன்" என்று ஓர் அலியைப் போலப் பேசுகிறேன். போரைத் தவிர, நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டான் {சல்லியன்}.
யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, "ஓ! மன்னா {சல்லியரே}, எனக்குப் பெரும் நன்மை எதுவோ அதைத் தினமும் நினைப்பீராக. உமது விருப்பப்படியே நீர் எதிரிக்காகப் போரிடுவீராக. நான் வேண்டும் வரம் இதுவே" என்றான் {யுதிஷ்டிரன்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, "இந்தச் சூழ்நிலையில், ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, நான் உனக்கு என்ன உதவியைச் செய்ய முடியும் என்பதைச் சொல்வாயாக? நான் நிச்சயமாக (உனது) எதிரிக்காகவே போரிடுவேன். ஏனெனில், கௌரவர்கள் தங்கள் செல்வத்தைக் கொண்டு என்னை அவர்கள் தரப்பாக்கிக் கொண்டார்கள் [1].
[1] இங்கே, பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரைப் போலப் பெற்ற ஊதியங்களால் சல்லியன் கௌரவர்களிடம் கட்டப்படவில்லை. ஆனால் ரகசியமாகத் துரியோதனன் ஏற்பாடு செய்த வரவேற்பினாலேயே அவன் தன் சகோதரியின் {மாத்ரியின்} மகன்கள் மற்றும் அவர்களின் மாற்றந்தாய் மகன்களுக்கு எதிராகக் கௌரவர்களுக்கு உதவி செய்வதாகத் தாராளமாக ஒப்புக் கொண்டான் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி.
யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, "ஓ! சல்லியரே, (போருக்கான) ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது, என்னால் வேண்டப்பட்டதே, அதுவே எனது வரமாகும். சூத மகனின் (கர்ணனின்) சக்தி போரில் உம்மால் குறைக்கப்பட வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, இந்த உனது விருப்பம் நிறைவேறும். செல்வாயாக. உனது விருப்பப்படி போரிடுவாயாக. உனது வெற்றியை நான் கவனித்துக் கொள்கிறேன் [2]" என்றான்.
[2] வேறு பதிப்புகளில் "உன் விஷயத்தில் இந்த வார்த்தைகளை உறுதி கூறுகிறேன்" என்றே சல்லியன் முடிக்கிறான். மூலத்தில் என்ன உள்ளது என்பது இங்கே ஆய்வுக்குரியது.
ஆங்கிலத்தில் | In English |