Chitrasena escaped from Bhima! | Bhishma-Parva-Section-086 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 44)
பதிவின் சுருக்கம் : அபிமன்யுவுக்குத் துணையாக வந்த அர்ஜுனன்; பீஷ்மரைக் கொன்று சபதத்தை நிறைவேற்றும்படி சிகண்டியிடம் சொன்ன யுதிஷ்டிரன்; சிகண்டியின் ஆற்றல்; ஜெயத்ரதனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; பீமனின் கதாயுதத்துக்குத் தப்பி ஓடிய சித்திரசேனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "{சுசர்மன் மற்றும் அவனுக்குத் துணையாக நின்ற பிற மன்னர்களின்} அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிதிபட்ட பாம்பைப் போல நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி, தன் தொடர்ச்சியான கணைகளின் பெரும் சக்தியால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் விற்களை வெட்டினான். அந்தப் போரில் பலம் நிறைந்த ஏகாதிபதிகளின் விற்களை ஒருக்கணத்தில் வெட்டிப் போட்ட உயர் ஆன்ம அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை அழிக்க விரும்பி, ஒரே நேரத்தில் தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.
இப்படி இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட அவர்களில் சிலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தத்தில் மூழ்கி களத்தில் விழுந்தனர். சிலர் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டனர், மேலும் சிலர் தலை அறுபட்டனர். இன்னும் சிலர் கவசங்கள் பிளந்து, உடல்கள் சிதைந்து மாண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட அவர்களில் பலர், பூமியில் விழுந்து ஒன்றாக அழிந்தனர்.
போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசர்களைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, {அந்த இடத்தை நோக்கித்} தன் தேரில் முன்னேறி வந்தான். கொல்லப்பட்ட போராளிகளின் பின் பக்கத்தைப் பாதுகாத்த தேர்வீரர்களில் முப்பத்திரண்டு {32} பேரும் பார்த்தன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். பார்த்தனை {அர்ஜுனனைச்} சூழ்ந்த அவர்கள் அனைவரும், உரத்த நாணொலி கொண்ட தங்கள் விற்களை வளைத்து, மலைச்சாரலில் நீரை பெருமளவில் பொழியும் மேகங்களைப் போல, அடர்த்தியான கணை மழையை அவன் {அர்ஜுனன்} மீது பொழிந்தனர்.
அந்தப் போரில், கணைமாரியால் பீடிக்கப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, எண்ணெயில் தோய்த்த {தோய்த்துக் கூராக்கப்பட்ட} அறுபது {60} கணைகளால் பின்புறத்தைப் பாதுகாத்தவர்களான அவர்கள் அனைவரையும் {யமனுலகு} அனுப்பி வைத்தான். அந்த அறுபது தேர்வீரர்களையும் வீழ்த்திய ஒப்பற்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சியால் இதயம் நிறைந்தான் {மனக்களிப்படைந்தான்}. அம்மன்னர்களின் படைகளையும் கொன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, {அடுத்து} பீஷ்மரைக் கொல்ல விரைந்தான்.
வலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் நண்பர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, தனக்கு முன்னணியில் பல (பிற) மன்னர்களையும் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக அவனிடம் விரைந்து வந்தான். ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி முன்னேறும் அந்தப் போராளிகளைக் கண்ட, சிகண்டியின் தலைமையிலான பாண்டவ வீரர்கள், அர்ஜுனனின் தேரைப் பாதுகாக்க விரும்பி, கூர் தீட்டப்பட்ட ஆயுதங்களைக் கைகளில் கொண்டு முன்னேறினர்.
திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடன் {சுசர்மனுடன்} தன்னை நோக்கி முன்னேறிவரும் அந்தத் துணிச்சல்மிக்கவர்களைக் கண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளின் மூலம் அந்தப் போரில் அவர்களைச் சிதைத்தான். பிறகு, பீஷ்மரை அணுக விரும்பிய அந்தப் புகழ் பெற்ற வில்லாளி {அர்ஜுனன்}, துரியோதனனையும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலைமையிலான பிற மன்னர்களையும் கண்டான். பெரும் சக்தியுடன் போரிட்டு, பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பிய அவ்வீரர்களை ஒரு கணத்தில் தடுத்தவனும், பெரும் வீரம் கொண்டவனும், அளவிலா ஆற்றல், மிகுந்த பலம், பெரும் மனவுறுதி ஆகியவற்றைக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், துரியோதனன், ஜெயத்ரதன் மற்றும் பிறரை தவிர்த்துவிட்டு, கையில் வில் மற்றும் அம்புடன் அந்தப் போரில் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி இறுதியில் முன்னேறினான்.
கடும் ஆற்றல், அளவிலா புகழ் ஆகியவற்றைக் கொண்ட உயர் ஆன்ம யுதிஷ்டிரனும், கோபத்தால் தூண்டப்பட்டு, தனது பங்காக ஒதுக்கப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளனைப் {சல்லியனைப்} [1] போரில் தவிர்த்துவிட்டு, பீமன் மற்றும் மாத்ரி மகன்களின் {நகுலன் மற்றும் சகாதேவனின்} துணையுடன், சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கிப் போரிடுவதற்காக விரைவாகச் சென்றான். ஒன்றாகக் கூடியிருந்த பாண்டு மகன்கள் அனைவராலும் போரில் தாக்கப்பட்டாலும், போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவரும், கங்கை மற்றும் சந்தனுவின் உயர் ஆன்ம மகனுமான அவர் {பீஷ்மர்}, சற்றேனும் நடுங்கவில்லை.
[1] பீஷ்ம பர்வம் பகுதி 84ல் சகாதேவனால் வீழ்த்தப்பட்ட சல்லியன் மூர்ச்சை தெளிந்து யுதிஷ்டிரனைப் போரில் சந்திக்கிறான். எனினும் யுதிஷ்டிரன், சல்லியனைத் தவிர்த்துச் செல்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம்.
கடும்பலமும், பெரும் சக்தியும், இலக்கில் உறுதியும் கொண்ட மன்னன் ஜெயத்ரதன், போரில் முன்னேறி, தன் சிறந்த வில்லைக் கொண்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரின் விற்களையும் [2] பலத்துடன் வெட்டி வீழ்த்தினான். கோபம் தூண்டப்பட்டவனும், ஒப்பற்றவனுமான துரியோதனன், தன் நிலை குறித்த கோபத்தில், நெருப்பின் சுடர்களுக்கு ஒப்பான கணைகளால் யுதிஷ்டிரன், பீமசேனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்}, பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோரைத் தாக்கினான். மேலும், கிருபர், சலன், சித்திரசேனன் ஆகியோரின் கணைகளாலும் துளைக்கப்பட்ட பாண்டவர்கள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) ஒன்று சேர்ந்திருந்த தைத்தியர்களின் கணைகளால் துளைக்கப்பட்ட தேவர்களைப் போலக் கோபத்தால் எரிந்து கொண்டிருந்தனர்.
[2] இங்கே அர்ஜுனன் இல்லை முந்தைய பத்திகளிலேயே அர்ஜுனன் ஜெயத்ரதனையும், துரியோதனனையும் தவிர்த்துவிட்டுச் செல்கிறான் என்பதை நினைவில் கொள்க. காண்டீவம் இங்கே வீழவில்லை.
சந்தனு மகனால் {பீஷ்மரால்} ஆயுதம் வெட்டப்பட்டு ஓடிக்கொண்டிருந்த சிகண்டியைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன் கோபத்தால் நிறைந்தான் [3]. அப்போரில் சிகண்டியிடம் கோபத்துடன் பேசிய அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, "உன் தந்தையின் முன்னிலையில் என்னிடம், "உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பிரகாசமிக்கச் சூரியனின் நிறத்தைக் கொண்ட என் கணைகளால் நான் கொல்வேன். உண்மையாகவே நான் இதைச் சொல்கிறேன்" என்று அப்போது நீ சொன்னாய். அஃதே உனது உறுதிமொழியாகும். தேவவிரதரை {பீஷ்மரை} நீ போரில் கொல்லாத வரை, உனது உறுதிமொழியை நிறைவேற்றாதவனாகவே நீ இருப்பாய். ஓ! வீரா {சிகண்டியே}, நிறைவேறா உறுதிமொழியைக் கொண்டவனாக இராதே.
[3] சிகண்டியின் ஆயுதத்தைப் பீஷ்மர் வெட்டியிருக்கிறார் என்றால், அவனுடன் போரிட்டாரா? அல்லது அவன் ஏவிய ஆயுதத்தை மட்டும் வெட்டினாரா? என்பது தெரியவில்லை.
உனது அறம், குலம், புகழ் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வாயாக. பயங்கர மூர்க்கம் கொண்ட பீஷ்மர், கடும் சக்தி கொண்ட தனது எண்ணற்ற கணைகளால் எனது படைகளை எரித்து, காலனைப் போல ஒரு கணத்தில் அனைத்தையும் அழிப்பதைப் பார். உனது வில்லறுபட்டு, போரைத் தவிர்த்துவிட்டு, சந்தனுவின் அரசமகனால் {பீஷ்மரால்} வீழ்த்தப்பட்டு, உனது சொந்தங்களையும் சகோதரர்களையும் கைவிட்டுவிட்டு நீ எங்கே செல்லப் போகிறாய்? இஃது உனக்குத் தகாது. அளவற்ற ஆற்றலைக் கொண்ட பீஷ்மரையும், முறியடிக்கப்பட்டு ஓடும் நமது படையையும் கண்டு, ஓ துருபதன் மகனே {சிகண்டியே}, நீ அச்சப்படுகிறாய் என்பது உறுதியே. அதனாலேயே உன் முகத்தின் நிறம் மங்கியிருக்கிறது. ஓ! வீரா {சிகண்டியே}, இந்தப் பயங்கரப் போரில் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஈடுபட்டிருக்கிறான் என்பது உனக்குத் தெரியவில்லையே. ஓ! வீரா {சிகண்டியே}, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நீ, பீஷ்மரைக் கண்டு இன்று ஏன் அஞ்சுகிறாய்? [4]" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
[4] இந்த இடத்தில் தான் ஏற்றிருக்கும் பம்பாய் உரை ajnayamanas cha என்று சொல்வதாகவும், வங்காள உரை தவறானதாகத் தெரிகிறது என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு ஒரு பதிப்பில் இந்த இடத்தில்: "நன்றாகத் தொடங்கப்பட்டிருக்கிற பெரும் போரில் வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்} பின்புறம் நிற்கையிலே, பூமியில் பீஷ்மரை விடப் புகழ் பெற்றவனான நீ எப்படிப் பயத்தை இப்பொழுது பாராட்டலாம்?" என்று இருக்கிறது. இந்தத் தென்னகப் பதிப்பும் தவறானதாவே இருக்கக்கூடும்.
பலமான காரணத்துடன் கூடியதாக {நியாயமானதாக} இருந்தாலும் கடுமையுடன் இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்ம சிகண்டி, அவற்றை நல்ல ஆலோசனையாகக் கருதி, பீஷ்மரைக் கொல்வதில் தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டான். பீஷ்மர் மீது பாய்வதற்காக அப்போரில் பெரும் மூர்க்கத்துடன் சிகண்டி முன்னேறிக் கொண்டிருந்தபோது, கலங்கடிப்பதற்குக் கடினமான பயங்கர ஆயுதங்களால் சல்லியன் அவனைத் தடுக்கத் தொடங்கினான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட அந்தத் துருபதன் மகன் {சிகண்டி}, அண்ட அழிவு நேரத்தின்போது சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்று பிரகாசத்துடன் (இப்படிக்) காட்சியளித்த அந்த ஆயுதங்களைக் (ஆக்னேயாஸ்திரங்களைக்} கண்டு கிஞ்சிற்றும் குழம்பவில்லை,.
தனது கணைகளால் அந்த அயுதங்களைத் தடுத்த வலிமைமிக்க வில்லாளியான சிகண்டி, அசையாமல் அங்கேயே நின்றான். பிறகு, (சல்லியனின் அந்த நெருப்பு போன்ற ஆயுதங்களை [அந்த ஆக்னேயாஸ்திரங்களைக்]) கலங்கடிப்பதற்காக, மற்றொரு ஆயுதமான கடுமையான வருண ஆயுதத்தை {வருணாஸ்திரத்தை} அவன் {சிகண்டி} எடுத்தான். பின்னர், ஆகாயத்தில் நின்றிருந்த தேவர்களும், பூமியில் இருந்த மன்னர்களும் என அனைவரும், சல்லியனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கும் சிகண்டியின் வருண ஆயுதத்தைக் கண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில், உயர் ஆன்மா கொண்ட வீர பீஷ்மர், பாண்டுவின் மகனும், ஆஜமீட குலத்தவனுமான மன்னன் யுதிஷ்டிரனின் பலவண்ணங்களிலான கொடிமரத்தையும், வில்லையும் அந்தப் போரில் வெட்டி வீழ்த்தினார்.
அதன் பேரில், அச்சத்தில் மூழ்கியிருக்கும் யுதிஷ்டிரனைக் கண்டு, தனது வில்லையும் கணைகளையும் போட்டுவிட்டு, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமசேனன், அந்தப் போரில் கால்நடையாகவே ஜெயத்ரதனை நோக்கி விரைந்தான். பிறகு, ஜெயத்ரதன், யமதண்டம் போன்றவையும், கூர் முனை கொண்டவையுமான ஐநூறு {500} பயங்கரக் கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கிக் கையில் கதாயுதத்துடன் இப்படி மூர்க்கமாக விரைந்து வரும் பீமசேனனை அனைத்துப் புறங்களிலும் இருந்தும் துளைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்தவனும், மூர்க்கமானவனுமான விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்த இதயத்துடன், ஆரட்டாவில் [5] பிறந்தவையான சிந்துக்கள் மன்னனின் {ஜெயத்ரதனின்} குதிரைகள் அனைத்தையும் அப்போரில் கொன்றான்.
[5] அரேபியாவுக்குச் சற்றே வடக்கே, தென்கிழக்கு ஈராக்கில் உள்ள ஓர் இடமாகும் இந்த ஆரட்டா. கர்ண பர்வம் பகுதி 45லும் குறிப்பிடப்படும் இது கள்வர்களின் இடமாகச் சொல்லப்படுகிறது. இந்த இடம் சுமேரிய இலக்கியங்களில் அதிகம் குறிப்பிடப்படுகிறது. தொன்மங்களுக்கு வெளியே இந்த நகரத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளேதும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
அதன்பிறகு, பீமசேனன் நடந்து வருவதைக் கண்டவனும், நிகரற்ற ஆற்றலைக் கொண்டவனும், தேவர்கள் தலைவனை {இந்திரனைப்} போன்றவனுமான உமது மகன் (சித்திரசேனன்), அவனுக்கு {பீமனுக்கு} மரணத்தைக் கொடுப்பதற்காக உயர்த்திய ஆயுதங்களுடன் அவனை {பீமனை} நோக்கித் தன் தேரில் விரைந்தான். பீமனும், கையில் கதாயுதத்துடன் முழங்கிக் கொண்டே, உரக்கக் கத்திய படி அவனை {சித்திரசேனனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். யமதண்டத்தைப் போன்றிருந்த அந்த உயர்த்திப் பிடிக்கப்பட்ட கதாயுதத்தைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், (தங்களுக்கு மத்தியில்) அது பாய்வதைத் தவிர்க்க விரும்பி, துணிச்சல் மிக்க உமது மகனை {சித்திரசேனனைக்} கைவிட்டுவிட்டு ஓடினார்கள் [6].
[6] வேறு ஒரு பதிப்பில் இந்த இடம் வேறு மாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு: "பீமன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக மயக்கமுற்ற ஜெயத்ரதன், போரிடுவதை நிறுத்தி, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரைவிட்டுவிட்டுச் சகுனியுடன் சேர்ந்து குருமன்னன் {துரியோதனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான். பிறகு, பீமனும் விரைவாக முழங்கிக் கொண்டு ஜெயத்ரதனை அச்சுறுத்திக் கதாயுதத்துடன் எதிர்த்தான். யமதண்டம் போன்ற அந்தக் கதாயுதம் பீமனால் தூக்கப்பட்டதைத் கண்ட அந்தக் கௌரவர்கள் அனைவரும், நெருங்கியதும், நன்றாக அடிப்பதும், அதிபயங்கரமானதும், புத்தி மயக்கத்தை ஏற்படுத்துவதுமான அந்தப் போரில் கதாயுதத்தின் உக்கிரப் பாய்ச்சலை விலக்க எண்ணி, உமது மகனை {சித்திரசேனனை} விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்" என்று இருக்கிறது. கங்குலியை விட இந்த வர்ணனைத் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.
புலனுணர்வைக் குழப்புவதும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான (மனிதர்களின்) அந்த நொறுங்கலில் {போரில்}, தன்னை நோக்கி வரும் கதாயுதத்தைச் கண்டாலும், சித்திரசேனன் தனது புலனுணர்வுகளை இழக்கவில்லை. பளபளக்கும் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்ட அவன் {சித்திரசேனன்} தனது தேரைக் கைவிட்டுவிட்டு, மலைமுகட்டின் மேல் இருந்து குதிக்கும் சிங்கத்தைப் போல (தன் வாகனத்தில் இருந்து) கீழே தரையில் குதித்துக் காலாட்படை வீரனானான்.
அதே வேளையில் அந்த அழகிய தேரின் மேல் விழுந்த அந்தக் கதாயுதம், குதிரைகள் மற்றும் தேரோட்டியுடன் கூடிய அந்த வாகனத்தையே {தேரையே} அந்தப் போரில் அழித்து, ஆகாயத்தில் இருந்து பூமியில் தளர்ந்து விழும் சுடர்மிக்க ஓர் எரிநட்சத்திரத்தைப் போலப் பூமியில் விழுந்தது {கதாயுதம்}. அற்புதம் நிறைந்த அந்த உயர்ந்த சாதனையை {சித்திரசேனன் தப்பியதைக்} கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்தன. அவை {அந்தத் துருப்புகள்} அனைத்தும் ஒன்றாகக் கூடி அந்தப் போர்க்களத்தில் பெருமுழக்கம் செய்தன. மேலும் வீரர்கள் அனைவரும் (தாங்கள் என்ன கண்டார்களோ, அதற்காக) உமது மகனை {சித்திரசேனனை} பாராட்டினார்கள்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |